அப்படியிருக்க, தமக்கையிடம் அந்த உடுப்பைக் கொடுப்பாளா ஒருத்தி!
இவன் இப்படிக் குழம்பியிருக்க கைபேசி கிணுகிணுத்தது. அவளோ! கோபமும் எரிச்சலும் மண்டிக்கிடந்த உள்ளம் அவளாக இருக்கும் என்றது. அதுபார்த்தால் அவன் அம்மா.
அவர் என்ன சொல்வாரென்று தெரியாதா? விடிந்த இந்தக் கொஞ்ச நேரத்தில் இதோடு நான்காவது முறை! எடுக்கவில்லையோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வாகனமோட்டுகையில் எடுத்துக் கொண்டேயிருப்பார்.
“ம்மா சொல்லுங்க!” எடுத்துக் காதில் வைக்கவும் மறுபுறம் படபடக்கவும் சரியாகவிருந்தது.
“பச்! திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல வேணுமாம்மா? அதெல்லாம் நான் கவனமா இருப்பன், தேவையெண்டா நீங்க சொன்னபடி இன்னொரு ட்ரைவர் ஏற்பாடு செய்யிறன், நேர வந்து எல்லாம் சொல்லுறன் மா! இப்ப நேரமில்ல, இரவுக்கு எடுக்கிறன். ப்ளீஸ் மா!” கெஞ்சிக் கொஞ்சி அவன் வைக்கவும், “நீ சாப்பிடேல்லையா? நாதன் அங்கிள் எங்க எண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.” மதி வரவும் சரியாக இருந்தது.
“பச்! பசிக்கேல்ல…விடு!” நகர முயன்றவனைப் பிடித்து நிறுத்திவிட்டு முறைத்தான் மதி.
“நீ சரியில்ல வேந்தன். இப்ப என்ன புதுப் பிரச்சனை?”
“ஒண்டுமில்ல விடு!”
“இல்ல ஏதோ இருக்கு. அந்தப்பிள்ளையும் ஒண்டும் சாப்பிடேல்லை. சொல்லு, கதைக்காமல் பேசாமல் பார்வையாலயே சண்டை போடுற அளவுக்கு நெருக்கம் போல!”
“விடுடா…நீ வேற. சாப்பிடேல்லையா அவள்?” நடக்கத் தொடங்கியிருந்தான்.
“என்ன நடந்தது எண்டு சொல்லன்டா.”
“நேற்று நான் வாங்கிக் குடுத்த…” தொடங்கி, “கவி அந்த உடுப்போட முன்னால வந்திருக்க எனக்கு எப்பிடி இருந்திச்சு தெரியுமாடா?” என்றான் ,கோபத்தோடு.
“ஓ!” இழுத்தான் மதி.
“ஒருவேள அக்கா தங்கச்சி தானே, ஆசையில கேட்டு மாறிப் போட்டிருக்கலாம்.” சொல்லவும் செய்தான்.
“அதெப்படிடா? கேட்டா இவள் குடுப்பாளோ!? இப்ப அவள் வாங்கித் தந்ததை நான் போட்டிருக்கிறன் தானே? நீ ஆசைப்பட்டுக் கேட்டால் தந்திருவனா என்ன?”
முறைத்தான் மதி. “அந்தளவுக்கு ஆகிப்போச்சு! கண்டதும் காதல் எண்டா அதெல்லாம் வெறும் நடிப்பு எண்டு கூட சிலர் சொல்லியிருக்கீனம், எனக்கு நல்லா நினைவிருக்கு வேந்தன். உனக்கு அதேதும் நினைவிருக்கா என்ன?” கேலியோட கேட்டு வேந்தனிடம் முறைப்பை வாங்கிக்கொண்டான்.
“மனுசர் ஏதோ இதில இருக்க உனக்குக் கடி!” கதைத்தபடி உணவுக்கூடம் வந்திருந்தார்கள்.
அங்கேயோ, காலையுணவுக்கான பணத்தைச் செலுத்துவதில் மும்முரமாக நின்றனர், நாதனும் மாறனும்.
“அங்கிள் என்ன நீங்க எவ்வளவு சொன்ன பிறகும்.” என்று சென்ற மதி, நாதனை அப்பால் நகர்த்த முனைந்தான்.
“இல்ல தம்பி நேற்றும் இப்பிடித்தான் நீங்க, இது சரியில்ல. வாங்குங்கோ.” என்றார் நாதன்.
“சொன்னால் கேளுங்கோ அங்கிள், நேற்று வேந்தன் தந்த ட்ரீட், இண்டைக்கு எங்கட யாழ் ட்ராவல்ஸ் தன்ர கஸ்டமருக்குத் தாறது. அப்பத்தானே அடுத்த முறையும் இங்க வருவீங்க.” சொல்லிக்கொண்டே நாதனை வெளியில் நடத்திக்கொண்டு வந்துவிட்டான், இழுக்காத குறையாக.
“வேந்தன் எங்க போயிட்டீங்க சாப்பிடேல்லையா?” மாறன் கேட்க, “அம்மாட கோல்…அதுதான். நீங்க எல்லாரும் வடிவா சாப்பிட்டாச்சா? நான் ஒரு பத்து நிமிசத்தில வாறன்.” என்றபடி, தனக்கு ஒரு டோஸ்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தவன், மறந்தும் இலக்கியாவைப் பார்க்க முனையவில்லை. அவள் செயலை அந்தளவுக்கு இலகுவாக எடுக்க முடியவில்லை.
இலக்கியா அங்குதான் நின்று கொண்டிருந்தாள். பசித்தும் உண்ண முடியவில்லை. அதையும் இதையும் சொல்லிச் சமாளித்துவிட்டு எழுந்தவள் விசுக்கென்று கோபத்தோடு சென்றவன் எங்கே என்றுதான் பார்த்துக்கொண்டிருந்தாள். வந்தவன் அவளைக் கடந்து சென்றும் ஏனென்றும் பார்க்கவில்லை. அருகில் வந்து கொண்டிருந்த மதி தான் நட்போடு முறுவலித்துவிட்டுச் சென்றிருந்தான்.
வேந்தனின் கோபம் புரிந்தாலும், அப்படி யாராவது பரிசாகக் கிடைத்த ஒன்றை வேண்டுமென்றே, அதுவும் விரும்புகின்றவன் ஆசையாக வாங்கித் தந்ததை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்று யோசிக்க வேணாமா என, அவனில் தான் கோபம் உண்டாயிற்று! தான் வாங்கிக் கொடுத்த டீ சேர்ட்டை மாற்றிவிட்டு வந்திடுவானோவென்ற பதற்றமும் இருந்தது தான், அப்படியொரு சிறுபிள்ளை வேலையை அவன் செய்யவில்லை.
“அப்ப தம்பி சாப்பிட்டுட்டு வரட்டும் நாம வாகனத்துக்கு போவமே” நாதன் நகர, “ஓம் அங்கிள் போங்கோ வாறன்.” என்றான், வேந்தன்.
“நீங்க அவசரப்பட வேணாம் தம்பி, இப்பத்தானே ஏழுமணி.” என்ற நாதனைத் தொடர்ந்தார்கள் மற்றவர்கள். கடைசியாகப் பின்தங்கி நின்ற இலக்கியா, ‘சொறி வேந்தன், நான் ஒண்ணும் வேணுமெண்டே அக்காட்ட குடுக்கேல்ல. கோவிக்க வேணாம்.’ குறுஞ்செய்தியைத் தட்டி விட்டிருந்தாள்.


