அவன் கைபேசியை எடுத்தால் தானே! பார்வை மட்டும் முன்னால் மேசையிலிருந்து ஒலியெழுப்பிய கைபேசிக்குச் சென்றவேகத்தில் வெடுக்கென்று மறுபுறம் திரும்பியதைக் கண்டாள்.
“என்ன நிக்கிறயம்மா வா.” சுகுணா அழைத்த பின்னாலும் எப்படி நிற்க முடியும்? சென்றுவிட்டாள்.
பத்து நிமிடங்களுக்குப் பின், காஃபி கப்போடு மதியோடு கதைத்துக்கொண்டே வந்தான், வேந்தன்.
“கவனம் வேந்தன், தேவையெண்டா எப்பவும் இன்னொரு ட்ரைவர் ஏற்பாடு செய்யலாம் சரியா?” வாகனத்தை நெருங்கியிருந்தார்கள். மதி இப்படிச் சொன்னதும் நின்று முறைத்தான், வேந்தன்.
“பச்! சொன்னால் கேள் வேந்தன்.” மதி தொடங்க, “நீ இந்தக் கதய விடமாட்டியா?” அடிக்குரலில் வேந்தன் கடிந்துகொண்டது திறந்திருந்த யன்னல் வழியாக உள்ளிருந்தவர்களுக்குக் கேட்கவே செய்தது.
“சரி என்னவோ செய்! ஒவ்வொருநாளும் கோல் பண்ண மட்டும் மறக்காத! எனக்கும் வீட்டுக்கும்.” என்ற மதி அன்போடு அணைத்து விடுவிக்க, தலையாட்டியபடியே சாரதியாசனத்தில் ஏறிக்கொண்டான்.
முன்னிருக்கையில் இருந்த நாதன் இறங்கி, “தம்பி எங்கட வீட்டில் நிண்டதுபோல ரெண்டு நாளும் தங்கியிருந்தம். எல்லாத்துக்கும் மிகப்பெரிய நன்றி!” மதியின் கரங்களை பற்றிக்கொண்டு சொன்னார்.
“இதையே எத்தின தடவை சொல்வீங்க அங்கிள். உங்களை எல்லாம் சந்திச்சதில எனக்கும் நல்ல சந்தோசம்.” என்றானவன்.
“கனடா வந்தா கட்டாயம் வீட்ட வாங்கோ!” மதியிடம் விடைபெற்றுக்கொண்டார் நாதன். மாறனும் சுகுணாவும் அதையே சொல்லி நன்றியோடு விடைபெற்றுக் கொண்டார்கள்.
“கட்டாயம், வீட்டில எல்லாரையும் கூட்டிக்கொண்டே வருவன் அங்கிள்.” என்றவன், மின்னலாக யன்னலோரமிருந்த இலக்கியாவைப் பார்த்துவிட்டு வேந்தனைப் பார்த்துச் சிரித்து வைத்தான்.
அதுவரை அவர்களை பார்த்துக்கொண்டிருந்த இலக்கியா, சட்டென்று இயர்போனை மாட்டிக்கொண்டு கைபேசியில் குனிந்து கொண்டாள்.
‘அது ஒரு கொம்பேறி மூக்கன் எண்டா இந்தாள் வெளிக்கிட முதல் நம்மள மாட்டி விட்டுரும் போல!’ அவளுக்கு நெஞ்சிடித்தது.
ஒருவாறு வாகனம் புறப்பட்டுப் போக்குவரத்தில் கலந்தது.
“வோஷிங்டன் போக எப்பிடியும் நாலு நாலரை மணித்தியாலம் வேணும் என்ன தம்பி?” நாதன் கேட்க, “ஓம் அங்கிள் பன்னிரண்டுக்கு முதல் போயிரலாம்.” என்றவன், “அங்கயும் பஸ் டூர் தானே?” தொடர்ந்து கேட்டப்படி வாகனத்தைச் செலுத்தினான்.
“ஓம், ஆனா வைட் ஹவுஸ், பொட்டானிகல் கார்டின், ஏயர் அண்ட் ஸ்பேஸ் மியூசியம் மூண்டு இடமும் இறங்கிப் போய்ப் பார்க்க வேணும்.” பின்னாலிருந்த கவி.
“பொட்டானிகல் கார்டின், ஏயர் அண்ட் ஸ்பேஸ் மியூசியம் ரெண்டுக்கும் போறது எண்டா கஷ்டம் எண்டு நினைக்கிறன். ரெண்டுமே ஐஞ்சு ஐஞ்சரைக்குப் பூட்டிரும். அதைவிட நமக்கு நேரமும் இராது.” யோசனையோடு சொன்னான், வேந்தன்.
“அதெல்லாம் தெரியாது கட்டாயம் பார்க்கோணும் ணா!” என்ற ஆரூரன், “இலக்கியாக்கா! என்ன நீ பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிற? நீயும் தானே கட்டாயம் பார்க்க வேணும் எண்டனி!” கடைசி வரி இருக்கையில் பார்வை வெளியிலிருக்க அமர்ந்திருந்தவளை அழைத்தான்.
அவளுக்குக் கேட்டால் தானே?
திரும்பிப் பார்த்தார் சுகுணா. “காலம நல்ல சந்தோசமா வெளிக்கிட்ட பிள்ள, நீ போட்டிருந்த உடுப்பத் தா எண்டு வாங்கினயே அதுக்குப் பிறகு டல்லாகிட்டாள். இனி இந்தப் பழக்கத்த விடு கவி!” கவியைக் கடிந்து கொண்டது வேந்தன் காதுகளையும் உரசவே செய்தது. சட்டென்று ரியர் வியூ மிரரை நாடிய பார்வை அவளில் தரித்துத் திரும்பியது.
அதுவரை அவனுக்குச் சரியான கோபம், அவளைப் பார்க்கவேயில்லை. ‘சரி அப்பிடியே தமக்கை கேட்டாலும் குடுத்திருவாளோ’ இப்போதும் இப்படித்தான் எண்ணமோடியது. இருந்தாலும், அவள் அமர்ந்திருந்த விதம் மனதைத் தாக்கியது. முதல்நாள் சுறுசுறுவென்று துடிப்போடிருந்தவள் ஓய்ந்திருந்ததைப் பார்க்க முடியவில்லை. இதுவரை அவளனுப்பிய குறுஞ்செய்திகளையும் பார்க்கவில்லையே! ‘பார்த்திருக்கலாமோ!’ மனம் தடுமாறியது.
“உங்கள என்ன செய்யிறதம்மா? அவள் பேசாமல் பாட்டுக்கேட்டுக் கொண்டிருக்கிறாள், எங்க டல்லா இருக்கிறாள்? முதல் அது எனக்கும் அவளுக்கும் இடையில, நீங்க வர வேணாம் சரியோ! அவள் சந்தோசமாத்தான் தந்தவள்.” கவிக்கு, தாயில் கோபம். இப்படி எல்லோருக்கும் முன்னால் வைத்துக் கடிந்து கொண்டதை அவள் கொஞ்சமும் இரசிக்கவில்லை.
“இல்ல, நீ தரமாட்டியோ விடு எண்டு விசுக்கிக் கொண்டு போன பிறகுதான் தந்தவள்.” சுகுணா விடாது தொடர, “டி இலக்கி!” அவள் காதிலிருந்து இயர் ஃபோனை இழுத்து விட்டு முறைத்தாள், கவி.
“என்னக்கா?”
“இப்ப நீ என்ன டல்லா இருக்கிறியா?”
“ஐயோ! அப்பிடி ஆரு சொன்னது? நான் என்பாட்டில இருக்கிறன், நல்ல பாட்டு…” என்ற இலக்கியாவின் பார்வை நேரே முன்னால் பாய்ந்தது. அதே நேரம் வேந்தன் பார்வையும் அங்கிருக்க, கணங்கள் பார்வைகள் மோதிக்கொண்டன. இலக்கியா முறைப்போடு நிமிர்ந்தமர்ந்தாள்.
“வேற ஆரு, உன்ர அம்மா தான்! நான் இந்த உடுப்ப வாங்கிப் போட்டுட்டன் எண்டுதான் நீ டல்லாகிட்டயாம்.” கவி சொல்ல, மீண்டும் முன்னோக்கிப் பாய முயன்ற விழிகளை அடக்கிக்கொண்டாள், இலக்கியா. ஆனால், அவள் விழிகள் கலங்கிடவா என்றன; மூக்குக் கரித்துக்கொண்டு வந்தது.


