ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோர நகரமாக அமைந்துள்ள தலைநகரம், அம்மதியப்பொழுதிலும் மிக்க இரம்மியத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது.
நேர்த்தியான கம்பீரமிக்க அழகோடிருந்த வோசிங்டன் நகரை, மிக்க சுறுசுறுப்பாகக் காண்பித்தது, சாரி சாரியாக வலம் வந்து கொண்டிருந்த உல்லாசப்பயணிகள் கூட்டம். அவர்களோடு இவர்களும் இணைந்துகொண்டார்கள்.
‘வோசிங்டன் மொனமன்ட்’ அருகில் சென்று பார்த்துவிட்டே பஸ் எடுக்கலாம் என்ற முடிவில் சென்றவர்கள், வெண்மஞ்சள் நிறத்தில் 555 அடியுயரத்தில் வானுயர்ந்த நீண்டிருந்த அப்பளிங்கு நினைவுத்தூபியை வியப்போடுதான் பார்த்தார்கள்.
“பார்த்தா மாபிள் போல இருந்தாலும் மார்பிள், கிரனைட் அதோட ப்ளூ ஸ்டோன் எல்லாம் சேர்த்துக் கட்டினதிது!” வியப்போடு சொன்னாள், இலக்கியா. அவளுள், காலையிலிருந்து மனத்தில் ஒட்டிநின்ற சுணக்கம் எரிச்சலெல்லாம் விலகி, உற்சாகநிலை தானாகவே தொத்தியிருந்தது.
“இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமெரிக்காவுக்கு இன்றியமையாத ஒரு தொடக்கமாக இருந்த அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வோஷிங்டன் பற்றி, அவரிட மகத்துவத்த நினைவு கூறுர வகையில நிறுவப்பட்ட தூபி இது!” அருகில் நின்று அத்தூபியைப் பார்த்தவாறே சொன்னது, வேந்தனே தான்.
சடக்கென்று திரும்பி முறைத்தாள், இலக்கியா. “அது எங்களுக்கும் தெரியும்.” வெடுக்கென்று சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்து வந்துவிட்டாள்.
அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்க்கவில்லை. முறைப்பும் சிடுசிடுப்பும் இன்னும் அப்படியேயிருக்க, ‘பக்கத்தில நிண்டு நான் சொன்னதிண்ட மிச்சம் சொல்லுறாராம்.’ மனதுள் திட்டிக்கொண்டேதான் நகர்ந்து நின்றாள்.
அவள் கோபமுணர்ந்தாலும் அவள் புறமே திரும்பாது நின்றான், வேந்தன். என்னதான் என்றாலும் அந்த உடையோடு கவியைப் பார்க்கையில் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதிருக்கே!
“சரி சரி எண்ணுற்றிச் சொச்ச நடுப்பகுதியில் கட்டத்தொடங்கி எப்ப முடிஞ்சிது எண்டெல்லாம் கூகிள்ள பாருங்க.” பகிடிபோல சொல்லிக்கொண்டே, “அங்க நேர எதிரில வைட் கவுஸ் தெரியுது.” தூபிக்கு நேரே வடக்கில் சுட்டிக்காட்டினாள், கவி.
இப்படியே கலகலத்தபடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பாதையைக் கடந்து சுற்றுலாப் பேரூந்தில் ஏறிக்கொண்டார்கள்.
இலக்கியா, ராஜியின் பிள்ளைகளோடு முதல் ஆளாக மேல்தட்டில் பின் வரிசையில் சென்றமர்ந்துவிட்டாள்.
‘Hop-on Hop-Off Tours’ அடையாளமாக ஒவ்வொருவருக்கும் மணிக்கூடு போன்றதொரு செம்மஞ்சள் நிறப்பட்டியைக் கொடுத்திருந்தார்கள்.
கடைசியாக ஏறி வந்த நாதனும் வேந்தனும், “கையில கட்டிக்கொள்ளுங்க, நாம இந்த பஸ்சில இருந்து இறங்கிட்டு, பிறகு இன்னொரு ‘Hop-on Hop-Off Tours’ ல ஏற இதுதான் அடையாளம்.” பட்டிகளை எல்லோருக்கும் கொடுத்தார்கள்.
வேந்தன் தம்மை நோக்கி வருவதை பார்த்த இலக்கியா வெளியே முகம் திருப்பிவிட்டாள்.
அருகிலிருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு, “டோய்!” அவள் தலையில் அந்தப் பட்டியால் அடித்துவிட்டு காத்து நின்றான், வேந்தன். அவளோடு பொருது போட அவனுக்கு மட்டும் என்ன ஆசையா! அவள் செய்த வேலைக்கு இந்தளவுக்கு கோபிக்கவில்லையேல் அவன் என்ன மனிதன்?
அருகிலமர்ந்த சிறுவர்களுக்கு வேந்தனின் செய்கை ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. வேந்தனை இந்த நான்கு நாட்களாகத்தானே தெரியும். அவர்களின் பார்வையுணர்ந்து முறுவலித்த வேந்தன், “உங்கட அக்கா என்ன கண்ணைத் திறந்து கொண்டே தூங்குறாவோ!” அடிக்குரலில் சீண்டினான்.
இலக்கியா சண்டைக்குச் சிலிர்ப்புவாளே என்று அவர்கள் எதிர்பார்க்க, அவளோ திரும்பவேயில்லை.
“தாங்கோ அண்ணா, நான் குடுக்கிறன்.” கைநீட்டினாள், சிறுமி.
இவர்களின் பேச்சுக்குரலில் அவர்களுக்கு முதல் வரிசையில் அமர்ந்திருந்த கவி திரும்பிப்பார்த்து, “இலக்கி, அதை வாங்கிட்டு விடு பார்ப்பம்.” என்றாள்.
தங்கை வேந்தனோடு மல்லுக்கு நிற்பதை அவள் அவ்வளவாக இரசிக்கவில்லை.
‘அந்தப் பெடி தன்பாட்டில் இருக்க இவள் சும்மா சும்மா சீண்டுறாள்!’ கவியின் மனதுள் இப்படியொரு எண்ணமோடியது.
“சரி, அப்ப கையை நீட்டும் கட்டி விடுறன்.” விழிகள் விசமச் சிரிப்பில் சுருங்கி நிற்க, கவியும் சிறுமிகளும் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தே இப்படிச் சொன்னான், வேந்தன்.
வெடுக்கென்று திரும்பி அவன் கரத்திலிருந்த பட்டியைப் பறித்தவள் மின்னலாகச் சுடுபார்வை பார்த்தாள்.
“இதுக்கெல்லாம் வேற ஆள் பார்க்க வேணும்.”
அவள் வாயினுள் முணுமுணுத்தது வேந்தனுக்கு மட்டுமில்ல கவிக்கும் நன்றாகவே கேட்க, நெற்றி சுருங்க இருவரையும் மாறிப் மாறிப் பார்த்தாளவள். அதைக் கவனித்த வேந்தனோ முறுவலோடு எதுவுமே நடவாத பாவனையில் முன்னால நகர்ந்து சென்று ஆரூரனருகில் அமர்ந்து விட்டான்.
கவியின் பார்வை இலக்கியில் சில கணங்கள் நிலைத்துவிட்டே திரும்பியது. ‘வேந்தன முதலே இவளுக்குத் தெரியுமோ!’ புதிதாக சிறு சந்தேகம். மீண்டும் திரும்பியவள், “இலக்கி” நகரத் தொடங்கியிருந்த வாகனத்தில் வெளிபுறத்தைப் பார்த்தபடி வீடியோ எடுக்கத் தொடங்கியிருந்தவளின் பார்வையைத் தன்புறம் திரும்பி, “உனக்கு வேந்தன முதலே தெரியுமா?” கேட்டுவிட்டாள்.
ஏற்கனவே அவர்கள் பார்ப்பது தெரிந்தும் அவன் அவ்வளவு உரிமையோடு கதைத்துச் சிரித்ததில் திடுக்கிட்டுப்போயிருந்தவள், தமக்கை இப்படிப்பட்டென்று கேட்டதும் நன்றாகவே தடுமாறிப்போனாள்.
‘போச்சு!’ மனதுள் எழுந்த தடுமாற்றத்தை எப்படிக் கடந்தாளென்று தெரியாதே, “ஏனக்கா இப்பிடிக் கேட்கிறீங்க? உங்களோட தான் எனக்கும் தெரியும்.” என்றவள், மீண்டும் பார்வையை வெளிப்புறம் திருப்பிவிட்டாள்.
அவள் வலு அசட்டையாக அப்படிச் சொல்லிவிட்டாலும் பெரிதாக அதை நம்ப முடியாதிருந்தது, கவியால். வேந்தனைப் பார்த்தாள். ஆருரனோடு வெளியில் காட்டி காட்டி கதைத்தபடியிருந்தானேயொழிய திரும்பவும் இலக்கியாவைப் பார்க்கவெல்லாம் இல்லை.
‘அப்ப, சும்மா பகிடிக்கு அப்பிடிச் சொன்னாரோ!’ என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லாததால், தானும் வெளிப்புறத்தை இரசிக்க ஆரம்பித்தாள்.
அடுத்தடுத்து பல முக்கிய அருங்காட்சியகங்களைக் கடந்து வெள்ளை மாளிகை வர இறங்கிக்கொண்டார்கள்.
“மாமியையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தா சந்தோசமாப் பார்த்திருப்பா!” சுகுணா சொல்ல, “ஆரு அப்பம்மாவே! உடனே தன்ர ஊர்ப்பெருமை கதைக்க வெளிக்கிட்டிருவா! தொடங்கினா நிப்பாட்டவும் மாட்டா!” என்றாள், கவி.
“அதெண்டா உண்மதான், ஆனா அதென்ன தன்ட ஊர்? நம்மட ஊர்க்கதை எண்டு சொல்லுங்கோ!” என்ற நாதனை முறைத்தாள், கவி.
“என்னடி முறைப்பு? உண்மையைத்தானே சித்தப்பா சொல்லுறார்!” சுகுணா சொல்ல, வெள்ளைமாளிகையின் சுற்றத்தையும் அம்மாளிகையையும் இரசித்துக்கொண்டே உள்ளே நடந்தவர்கள் சொந்த ஊர் பற்றிய தர்க்கத்தையும் விட்டு வைக்கவில்லை.
“மா! நான் எப்பவும் சொல்லுவன், இந்தளவு ஊர்ப்பற்று இருக்கிறவை அங்க போயிருந்தெல்லா அந்தப் பற்றக் காட்ட வேணும். அதைவிட்டு ஆடிக்கொருக்கா ஆமாவாசைக்கொருக்கா பலநேரம் அப்பிடியும் இல்ல, லீவுக்குச் சுற்றுலாப் போயிட்டு வந்து, இங்க இருந்து சின்ன விசயத்துக்கும் ஊர்ப் பெருமை கதைச்சு என்ன பயன்?” கேலியாகவென்றாலும் கடிந்துகொண்டாள், கவி.
“அதெண்டா சரிதான். இங்க எண்டு வந்தாயிற்று, இனி அங்க போயிருந்தா உங்கட எதிர்காலம்? உங்களுக்கு அங்க சரிவராது, சுற்றுலா போயிட்டு வரத்தான் சரியா இருக்கும்.” இடையிட்டான் மாறன்.
“அப்பப் புலம்பவும் கூடாது எண்டு சொல்லுறன். அம்மாவும் அப்பம்மாவும் தான் சரியான மோசம். அப்பாவும் தான். அதுவும் தாங்க இருந்த காலத்தில இருந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு, எல்லாம் சிங்கள மயம் சைனீஸ் மயம் எண்டு பெரிய கவல. அங்க இருந்த சனமெல்லாம் வெளிநாடுகளுக்கு வந்திட்டா அப்படித்தானே நடக்கும்.” தொடர்ந்து கடித்தாள், கவி.