“அதெல்லாம் சரிதான், எண்டாலும் எங்கட மன ஆதங்கம் உனக்கு விளக்காதடி. வெள்ளை மாளிகைக்கு போகக் கிடைக்குமா எண்டு கூட நான் ஒரு நாளும் நினைச்சதில்ல. பேப்பர்ல பார்த்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை எண்டு மனசில வச்சது, அதுவும் பொது அறிவுக்காக. நாட்டுப்பிரச்சனையின்ட புண்ணியம் வெளிநாடுகளுக்கு வந்து இதையெல்லாம் பார்க்கிறம்.” மறைக்க முடியாத வருத்தத்தோடு சொன்னார் சுகுணா.
“அது எண்டா சரியக்கா.” அஜியும் சேர்ந்து கொண்டாள்.
“இதைச் சந்தோசமா சொல்லுறிங்களா இல்ல…” கிண்டலாக இழுத்தாள், கவி.
“என்னத்தச் சந்தோசம்! கதைச்சுப் பிரயோசனம் இல்ல விடுங்க. என்னதான் எண்டாலும் இந்தப் பிரச்சினைகள் வராமல் இருந்திருந்தா நாம நாம நம்மட சொந்த இடங்களிலதானே இருந்திருப்பம். படிக்க வேலைக்கு எண்டு கொஞ்சச் சனம் வெளிக்கிட்டு இருக்கும், அவ்வளவும் தான்.”
“அம்மா இப்ப இதுக்கா இங்க வந்தம், வாங்க கெதியா!” தாயை இழுத்தாள், இலக்கியா. அவள் விழிகள் கலங்கிக் கிடந்ததை அவதானித்தான், வேந்தன்.
“இல்ல, இந்தப் பயணம் வெளிக்கிட்டதில இருந்து என்ர மனசுக்க இதுதான். எத்தின சனத்திண்ட உயிர்கள், இளம்பிள்ளைகள் வாழ்க்க எல்லாம் போனதுதான் மிச்சம்!” சுகுணா விடாது அங்கலாய்க்க, தாயைப் பிடித்திருந்த கரத்தை விட்டுவிட்டு ஒதுங்கி நடந்தாள் இலக்கியா. அவள் கரமுயர்ந்து கலங்கிப் போன விழிகளைத் துடைப்பதைக் கண்ட கவி, தாயின் கரத்தை இறுக்கப் பற்றினாள்.
“அம்மா! இப்ப இந்த அலட்டல விட்டுட்டு வந்த வேலையப் பாப்பமா?” அவள் சொன்ன விதத்தில் மூத்தமகளைப் பார்த்த சுகுணா அதன் பிறகு வாய் திறக்கவில்லை.
“இலக்கி…” தங்கையை நோக்கி விரைந்து அவள் கரத்தைப் பற்றியிழுத்தபடி பின்புறம் வெள்ளை மாளிகை தெரிய நின்றுகொண்ட கவி, “வேந்தன் சின்ன ஹெல்ப், எங்கள ஒரு ஃபோட்டோ!” தன் புகைப்படக்கருவியை நீட்டினாள்.
வாங்கிக் கொண்டவன் பார்வை இலக்கியாவில். அவள் இமைகள் கண்ணீரில் நனைந்து கிடந்தன என்றாலும் உதடுகளில் முறுவலைப் பூச முயன்றும் கொண்டிருந்தாள்.
தமக்கை தோளில் கைபோட்டுப் பிடித்தவண்ணம் எதையோ குசுகுசுக்க, ” இல்லக்கா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.” அவள் சொன்னது இவன் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.
“அண்ணா எங்களையும் சேர்த்து…” ஓடிவந்து இலக்கியாவின் மறுபுறம் ஆரூரன் நிக்க, சிறுவர்களிருவரும் கவினும் ஓடி வந்து சேர்ந்துகொண்டார்கள்.
அடுத்தடுத்து பெரியவர்கள் வந்து நிற்கவும் கலகலப்பும் திரும்பியிருந்தது.
“வேந்தன் அண்ணா, நீங்களும் சேர்ந்து நிண்டு செல்ஃபி எடுங்கோ!” ஆரூரன்.
“ம்ம் சரிதான்.” எடுத்துவிட்டு நடந்தவர்கள் வெள்ளை மாளிகையைச் சுற்றிப்பார்த்து பலவிதமான கோணங்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள்.
“டோய்!” தன் பின்னால் மிக அருகில் கேட்ட குரலில் பட்டென்று திரும்பிய இலக்கி, மீண்டும் அதேவேகத்தில் திரும்பி நடையைத் தொடர்ந்தாள்.
“இலக்கி…இங்க பாரும், நான் தான் இப்பிடி முகம் திருப்ப வேணும். அது பார்த்தால் நீர்…” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னபடி அவளோடு இணைந்து நடக்க முயன்றான், வேந்தன். எல்லோரும் முன்னால்தான் போய்க்கொண்டிருந்தார்கள். என்றாலும், வெள்ளை மாளிகை வாயிலில் வைத்து இலக்கியாவின் கலங்கிவிட்ட கண்களைக் கண்டவனுக்கு, அவளோடு உடனே கதைத்துவிடவேண்டும் போலிருந்தது.
கிட்டத்தட்ட முப்பது நாற்பது நிமிடங்களாகத் தவிப்போடுதான் சுற்றித் திரிந்தான். அதுபார்த்தால் சந்தர்ப்பம் கிடைக்கும் போலவே தெரியவில்லை. கவி தன் கைப்பிடியில் அவளை இழுத்துக்கொண்டு வலம் வந்திருந்தாளே! இப்போதுதான் புகைப்படங்களைத் தட்டிப்பார்த்துக்கொண்டு முன்னால் சென்றிருந்தாள்.
அவன் கதைத்தும் இலக்கியா திரும்பி ஏறிடவில்லை.
“இலக்கி!” பட்டென்று அவள் மணிக்கட்டில் பற்ற, விசுக்கென்று ஏறிட்டவள், விழிகள் சுர்ரென்று சுரக்க, வேந்தன் தான் மிகையாகவே தடுமாறிவிட்டான். அதே வேகத்தில் பற்றிய கரத்தையும் விட்டுவிட்டான்.
“இங்க பார், நான் எவ்வளவு ஆசையா வாங்கித் தந்தன், அதுவும் முதல் முதலா. அத உன்ர அக்கா போட்டிருக்க எனக்குச் சரியான கோவம். பாக்க பாக்க விசரா இருக்கு இலக்கி. மனசுக்க ஒரு மாதிரிக்கிடக்கு அதுதான்…” அவள் முகம் பார்த்துச் சொன்னவன் பார்வை முன்னே செல்பவர்களையும் அவதானிக்காதில்லை.
“இலக்கி…” கவி அழைத்தபடி, திரும்புவதைக் கண்டுவிட்டு விலகிவிட்டான். தெளியாத முகத்தோடு அவள் முன்னேறிச் செல்வதைப் பார்த்துவிட்டுப் பின்னால் நடந்தவன் மனத்தில் கொஞ்சமும் உற்சாகமேயில்லை.
அப்போதுதான் அவள் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தான்.
‘எனக்கு ஒரு கோவமும் இல்ல, நீ முதல் கண்ணத் துட!’ பதிலுக்குக் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டே பின்தொடர்ந்தான்.
அப்படியே வெளியே வந்தவர்கள் வெள்ளைமாளிகை வாசலோரமாக பேரூந்துக்காகக் காத்திருந்தார்கள். மதிலோரமாகவும் மதில் மீதும் அணில்கள் அறம்புறமாக செல்லச் சண்டையிட்டபடி ஓடித் திரிந்ததை பார்த்தபடி அப்படியே மதிலோடு சாய்ந்து நின்றிந்தான், வேந்தன்.
எல்லோரும் பிஸ்கட், கேக் என்று உண்ணத் தொடங்கியிருந்தார்கள்.
“இந்தாங்க வேந்தன். ஏன் தனியா நிக்கிறீங்க? களைச்சிப் போனீங்களோ?” அவனிடம் கப் கேக்கை நீட்டியபடி கேட்டாள், கவி.
“இல்ல இல்ல, அப்படியேதும் இல்ல. பஸ் வருதா எண்டு பார்த்துக்கொண்டு நிக்கிறன்.” முறுவலோடு சொல்லிவிட்டு, “தாங்க்ஸ், எனக்கு ஒண்டு போதும்.” கேக்கை எடுத்தவன், “ஜூஸ் வேணுமா?” என்றவளிடம், “என்னட்ட பக் பாக்கில கிடக்கு.” என்று சொல்கையில் நாதனும் மாறனும் அவனருகே வந்து நின்றார்கள். கவி அப்பால் சென்றுவிட்டாள்.