Skip to content
சிலநிமிடங்களில் அவர்களுக்கான பேரூந்து வரவே ஏறிக்கொண்டவர்கள் அப்படியே பார்த்து வந்து தாவரவியல் பூங்கா நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.
உள்ளே நுழைகையில், வாயகன்ற மிகப்பெரிய சீமெந்து பூந்தொட்டி, சிறுவாழைகளும் பூமரங்களுமாக கம்பீர அழகோடு நின்று வரவேற்றுக்கொண்டிருந்தது. இளையவர்கள் ஓடிச்சென்று அதனடியில் நின்று புகைப்படங்களைத் தட்டியவாறே, “எல்லாரும் வாங்கோ!” பெரியவர்களையும் அழைத்தார்கள்.
“பிள்ளைகள் இப்பவே நேரத்தப் பாருங்க, இங்க நாம ஒரு மணித்தியாலம் அப்படித்தான் நிக்கலாம்; அதுக்கேத்த மாதிரி பாருங்க; சும்மா சும்மா நிண்டு கதைச்சு மினக்கடுறதில்ல.” நாதன் நகர, “சித்தப்பா முதல் வந்து ஃபோட்டோக்கு நில்லுங்க, ஒரு நிமிசமும் ஆகாது.” ஓரெட்டில் நகர்ந்து தம்மோடு நிற்க வைத்து செல்ஃபி எடுத்தாள் இலக்கியா.
“சரி வாங்க கெதியாப் பார்ப்பம்.” சுகுணா, அஜியும் நாதனோடு சேர்ந்து முன்னால் நடக்க, “திரும்பி வரேக்க மறக்காமல் இந்தக் கட்டிடத்துக்கு முன்னால குருஃப் ஃபோட்டோ எடுக்க வேணும்.” என்றபடி நடந்தாள், இலக்கியா.
மதியபொழுதென்பதால் அங்கு போட்டிருந்த நிழற்குடைகளின் கீழிருந்த இருக்கைகள் நிறைந்திருந்தன.
வெளியிலிருந்து பார்க்கையில் மிகப்பெரிய கட்டிடமாகத் தெரிந்தது, அமெரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா. அண்ணாந்து பார்த்தபடி நுழைவாயிலால் உள்ளிட்டு நேரே முன்னிருந்த கதவைத் திறந்து முன்னேறினார்கள்.
அப்பெரிய உயரமான கன்சர்வேட்டரிக்குள் அரிய பலவகைப்பட்ட தாவர இனங்கள் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
“உள்ளும் வெளியுமாகச் சேர்த்து கிட்டத்தட்ட 29000 சதுர அடி.” கைபேசியில் தட்டி விபரம் பார்த்துச் சொன்னான், ஆரூரன்.
“உள்ளுக்கு ஃபோட்டோஸ் எடுக்கலாம் தானே?” இலக்கியா வினவ, “எடுக்கலாம், ஆனா பாக்கிற ஆட்கள டிஸ்டர்ப் பண்ணுறதுமாதிரி எடுக்க ஏலாது. ஃபோட்டோஷூட் தான் விடமாட்டினம்.” கடைசியாக நின்றவளை எட்டிப்பார்த்துச் சொன்னான், வேந்தன்.
“இந்த மரம் செடிகளப் பார்க்க நம்மட ஊர் போல இருக்கு!” சுகுணா ஆரம்பிக்க, “அம்மோய்…ப்ளீஸ்!” கெஞ்சினாள், கவி.
“உண்மையச் சொன்னா உங்களுக்கு!” என்று சொன்னாலும் அதன் பிறகு சொந்த ஊர்பற்றிய கதையை வளர்க்கவில்லை, அவர்.
“வாழ மரம்…அதுவும் குலைபோட்டிருக்கு!” விழிவிரியப் பார்த்தாள், அஜி.
வாழை, ஈச்சை இன்னும் ஓங்கி நின்ற மரங்களிடையே நீள வாக்கில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தொட்டி, அதில் குடைவடிவில் வழியும் நீரலங்காரம். அதனருகிலிருந்த மலர்கள் என்று வெளியில் இருந்த சூட்டுக்கு மிக இதமான வரவேற்பளித்தது அவ்விடம்.
“இங்க பாருங்க பாப்பாளி மரம்.” ஆருனின் தாய், ரதி.
அப்படியே பார்த்துக்கொண்டு, அதிலிருந்த கதவால் ‘வெஸ்ட் கலரி’யினுள் பிரவேசித்தார்கள். அங்கிருக்கும் தாவரங்களில் விபரமும் புகைப்படங்களும் இருந்த அந்தக் கூடத்தை சிலநிமிடங்களில் சுற்றிவிட்டு ‘அருகிவரும் அரியவகை’த் தாவரங்களுள்ள (Rare & Endangered) பகுதிக்குள் சென்றார்கள்.
சிறு கூடமென்றாலும் அரியவகைத் தாவரங்கள் பல, மலர்களோடு தொட்டிகளிலும் சிறு நிலங்களிமும் இடம்பிடித்திருந்தன. முறையான பராமரிப்பில் அதன் அழகு கண்ணுக்கு விருந்தளித்தது. பார்த்து இரசித்துப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டே நகர்ந்தவர்கள், அடுத்து ‘ஒர்கிட்ஸ்’ பகுதிக்குள் சென்றார்கள்.
குறுகிய பாதையோடிருந்த அச்சிறு இடம் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓர்க்கிட் மாதிரிகளைக்கொண்டதென்று அங்கு எழுதப்பட்டிருந்தது. பலர் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்க இவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
அங்கு நின்ற மரங்கள், அவற்றில் தொங்கும் வேர்கள், சலசலவென்று ஓடிய சின்னஞ்சிறு செயற்கை நீருற்று என, சிறு கானகத்துள் நுழைந்த உணர்வைத் தந்தது, அவ்விடம்.
“என்ன என்ன மரங்கள் செடிகள் எண்டிருக்கிற விளங்கங்களை நிண்டு வாசிக்க நேரம் காணாது. எல்லாம் ஃபோட்டோ எடுக்கலாம்.” என்ற இலக்கியா, அதில் மும்மரமாக நின்றவள், இப்போது, தன் பின்னால் வேந்தன் வந்துகொண்டிருப்பதையும் கவனித்தாள் தான். அருகில் கவியும் வந்ததால் திரும்பி ஏறிடவில்லை.
“பப்பாளி எவ்வளவு காச்சிருக்கு!? பனை கூட இருக்கு! ஊர்ல சும்மா சிதறிக்கிடக்கிறதுகள் எல்லாம் இங்க வளர்த்து வச்சிருக்க, நாமளும் அத்தூரமிருந்து வந்து பார்க்கிறமே!” அருகில் வரும் அஜியிடம் சொன்னார், சுகுணா.
“அம்மா ப்ளீஸ் தொடங்க வேணாம்.” மீண்டும் எச்சரிக்கைவிட்ட கவி அவர்களையும் முந்திக்கொண்டு நகர்ந்து, ‘த ட்ரொபிக்ஸ்’ என்றிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு நுழைய, மற்றவர்கள் தொடர்ந்தார்கள்.
“இவளவைகள் சும்மா வாய் திறக்க விடுகினம் இல்ல!” மகளை முறைத்தார், சுகுணா.
“அதானே? என்னதான் சொல்லுங்க எங்கட பேராதனையில உள்ள பொட்டானிகல் கார்டின அடிக்க முடியாது.” வேண்டுமென்றே இளையவர்களைச் சீண்டினாள், அஜி.
“சித்தி நாங்க அங்கயும் போயிருக்கிறமே!” சீண்டலாகச் சொன்னான், ஆரூரன்.
இப்படியே கதைத்துக்கொண்டு அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்லும் படியால் மேலே ஏறினார்கள்.
error: Alert: Content selection is disabled!!