Skip to content
“இலக்கி ஏன் பின்னுக்கு நிக்கிற முன்னால வாவன்.” அழைத்தாள், கவி.
“நான் வீடியோ எடுக்கிறன் கா. நீங்க போங்கோ வாறன்.” என்ற இலக்கி பின்தங்க, மெல்ல, சற்றே இடைவெளி விட்டுத் தானும் பின் தங்கி விட்டான் வேந்தன். அவனுக்கு அவளோடு சிலவார்த்தைகள் சரி கதைக்க வேண்டும் போலிருந்தது.
அவனும் புகைப்படங்களும் வீடியோவும் தான் எடுத்துக்கொண்டு வந்தான். ஆனால் என்ன? முன்னால் செல்பவளின் சின்ன சின்ன அசைவுகளையும், பாவங்களையும் தன் காமராவுக்குள் பதுக்குவதில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருந்தான்.
படியேறி வளைந்து நெளிந்து சென்றது பாதை. இருமருங்கிலும் வளர்ந்திருந்த மரங்களுள் நடக்கையில் மிகக் குறுகிய பகுதியால் செல்லும் உணர்வு அவர்களுள்.
அப்படி ஓரிட வளைவில், முன்னால் சென்றவர்கள் கண்ணிலிருந்து மறைந்ததும் தான் தாமதம், எட்டி நடந்து அவளை நெருங்கியவன், “இலக்கி!” அழைத்து அவள் நடையை நிறுத்தினான்.
அவன் குரலில் தன் பெயரைக் கேட்டதும் நின்றுவிட்டாலும் முன்னால் சென்று மறைந்தவர்களைப் பார்த்துவிட்டே அவனை ஏறிட்டாள், இலக்கியா. அதற்கிடையில் அருகில் வந்திருந்தான், வேந்தன்.
அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றவனிடம், “ரியலி சொறி!” ஆரம்பிக்கையில் தொண்டை கமறி இடைஞ்சல் செய்தது. கண்கள் வேறு கலங்கித் தொலைத்தன. காலையில் அந்த உடையைப் போட்டுவிட்டுத் தானடைந்த மகிழ்வை, அன்போடு வாங்கிப் பரிசளித்தவனும் அனுபவிக்க, தான், தடைபோட்டுவிட்டதில் அவளுக்கே அவளில் வருத்தம் தான். ஆனாலும், அவளால் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?
“உண்மையாவே நான்…எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல வேந்தன். அக்கா எப்பவும் ஆசைப்பட்டுக் கேட்டாக் குடுத்திருவன். இண்டைக்குக் கேட்டோன்னா தயங்கினதுக்கே அவா…” மென்று விழுங்கியபடி தவிப்போடு அவனைப் பார்த்தாள். அவனால் தன்னிலையைப் புரிந்துகொள்ள முடியுமென்ற நம்பிக்கை அவளுள் அவ்வளவாக இல்லை. அதுவே கண்ணீர் முத்துக்களை உருட்டிவிட ஆயத்தமாகியது.
“பச்! அதை விடு! எனக்கு ஏன் அவ்வளவுக்குக் கோவம் வந்திச்சென்று உனக்கு விளங்கியிருந்தாலே போதும்.” அவள் கண்களையே பார்த்துக்கொண்டு சொல்லி கண்ணீரை கன்னத்தால் உருண்டு விழவைத்துவிட்டான், வேந்தன்.
“சொறி! உண்மையாவே சொறி!”
“விடு எண்டு சொல்லுறன் விடு!” என்றவன், “இந்தா சாப்பிடு!” கவி கொடுத்த கப் கேக் அவள் முன்னால் நீண்டிருந்தது.
“நீங்க சாப்பிடேல்லையா? எனக்கு வேணாம், நான் சாப்பிட்டுட்டன்.”
“பொய் சொல்லாத, நீ காலமையும் சாப்பிடேல்ல. பிடி சாப்பிடு!” பிய்த்து அவள் வாயில் வைத்துவிட வாங்கிக்கொண்டவள், “சொறி வேந்தன்!” வாயினுள் அடைத்துக்கொண்ட கேக்கோடு சொன்னவள், “உங்களுக்கு இந்த கலர் நல்ல வடிவா இருக்கு. பிடிச்சிருக்கா?” கேட்கையில் மீண்டும் அவள் விழிகள் கலங்கினாலும் சமாளித்துக் கொண்டாள்.
“பிடிக்காமலா போட்டனான். காலம போன வேகத்தில கழட்டி எறியத்தான் நினைச்சனான் பிற…பச் விடு!” சொல்லிக்கொண்டே அடுத்த துண்டையும் கொடுக்க முனைய, “இல்ல வேணாம் நீங்க சாப்பிடுங்க என்னட்ட இருக்கு.” அவன் வாய்க்கே திருப்பிவிட்டவளிடம், “அப்ப நாளைக்கு மற்ற செட் ரெண்டையுமே மறக்காமல் உன்ர அக்காட்ட குடு என்ன?” என்று அவன் சொன்னதும் விழிகள் சுருங்கச் சிரித்தவள், “அது கோவத்துல சொன்னது!” அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் “இலக்கி எங்கம்மா?” கவியின் குரல் இவர்கள் காதுகளை எட்டியது.
“ஐயோ அக்கா!” வேகமாக நகர்ந்தவள், அப்படியே நின்றிருந்தவனை ஒரெட்டில் அணுகி “சொறி சொறி சொறி!” மின்னலாக அவன் கரம் பற்றிச் சொல்லிவிட்டு ஓட்டமாக முன்னேற, உதடுகளில் ஒட்டிவிட்ட முறுவலோடு தரித்து நின்றவன் சற்றே இடைவெளிவிட்டு முன்னேறினான்.
“பின்னுக்கு நிண்டு என்னடி செய்யிற? எங்களோட வந்துகொண்டே எடன்.” என்றபடி திரும்பிய கவியின் பார்வையில் இலக்கியாவின் பின்னால் வந்த வேந்தன் பட்டுவிட்டான். கணத்திலும் குறைவாக அவள் நெற்றி சுருங்கியது. தங்கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள், கவி.
“நான் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாறன் கா. நீங்க வேகமாக முன்னால போனா நான் என்ன செய்யிறது?” அப்போதும் வீடியோ எடுப்பதில் கவனமிருக்க, சொல்லிக்கொண்டே நடந்து வந்தாள், இலக்கியா.
வேந்தனும் தன்பாட்டில் புகைப்படங்கங்களைத்தான் தட்டிக்கொண்டு வந்தான், இடையிடை வைத்திருந்த அறிவுப்புப்பலகைகளையெல்லாம் நின்று வாசிப்பதைக் கண்டவள், மனதுள் மின்னலாக எழுந்த சந்தேகத்துக்குக் கொட்டுவைத்து ஓடச் செய்துவிட்டு, ‘நல்ல கற்பனை எனக்கு! இவளுக்கு இது தெரிஞ்சா என்ன உண்டு இல்ல எண்டு ஆக்குவாள்!’ தன்னுள்ளே சிரித்தபடி மீண்டும் ஒருதடவை வேந்தனைப் பார்த்தவள், தங்கையோடு கதைத்தபடி முன்னேறி, ‘வேர்ல்ட் டெசேர்ட்’ பகுதிக்கான கதவைத் திறந்து பிடித்தபடி நின்ற ஆரூரனிடம், “நீ விட்டுட்டு நட!” தான் கதவைப் பிடித்தாள்.
“இல்லக்கா நீங்க போங்க, நான் வேந்தன் அண்ணாவோடு வாறன்.” ஆரூரன் இப்படிச் சொன்னதும், “சரிதான்” முன்னால் சென்ற தங்கையோடு சேர்ந்து கொண்டாள்.
சட்டென்று பாலைவனத்தில் நுழைந்த உணர்வு தந்தது அச்சிறு பகுதி. பலவகையான கள்ளிச்செடிகள், சதைப்பற்றுள்ள தாவரப்புதர்கள், புற்கள் என்றிருந்த இடத்தை பார்த்துவிட்டு வெளித்தோட்டத்தினுள் நுழைந்து சோலையாகவிருந்த வெளிப்புறத்திலும் ஒரு சுற்று நடந்துவிட்டு, நேரம் செலவிடாது டூர் பஸ் எடுக்க விரைந்தார்கள்.
அப்போது, “இலக்கியா!” வேந்தன் அழைக்க திடுக்கிடலோடுதான் திரும்பினாள், இலக்கியா. நாதனும் மாறனும் அவனருகில் வந்துகொண்டிருக்க இளையவர்கள்தான் முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள்.
“இல்ல, எல்லாரும் நிண்டு குரூப் ஃபோட்டோ எடுக்க வேணும் எண்டனிங்க.” அதற்காகவே அழைத்தேன் என்றவைகையில் சொல்லிவிட்டு இயல்பாக நின்றானவன்.
“மறந்தே போனன், எல்லாரும் ஓடிவாங்க!” இலக்கியா செல்ல, “எவ்வளவு ஃபோட்டோக்கள் எடுத்தீங்க பிள்ளைகள்? போதாதா?” என்றார் சுகுணா.
“நேரமிருக்கு ஆன்ட்டி , நாம மியூசியம் பார்த்திட்டு கடைசி டூர் பஸ் பிடிக்கச் சரியா இருக்கும்.” சமாதானம் செய்தான் வேந்தன்.
“அதானே? இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு ஃபோட்டோவுக்கு யோசிக்கிறதா? வாங்கோ.” என்ற கவி, “வேந்தன் நீங்களும் வந்து நில்லுங்கோ! செல்ஃபி எடுக்கலாம் என்ன இலக்கி?” தங்கையிடம் கேட்டபடி சென்று நின்றுகொண்டாள்.
“ம்ம் … நீங்களே எடுங்கோ!” தன் செல்ஃபி ஸ்டிக்கை அவனிடம் கொடுக்க நகர்ந்தாள், இலக்கியா.
சட்டென்று எட்டி வாங்கி அவனிடம் கொடுத்துவிட்டு அவனருகிலேயே நின்றுகொண்டாள், கவி. அவனருகில் நிற்கவேண்டுமென்று நிற்கவில்லை. இயல்பாகத்தான் நின்றாள். புகைப்படமெடுக்க முனைந்தவனால்தான் இயல்பாகவிருக்க முடியவில்லை.
error: Alert: Content selection is disabled!!