ரோசி கஜனின் இயற்கை – 19 – 3

மீண்டும் கவி போட்டிருந்த ஆடை அவனுள் மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியது. அக் கமரா வழியாக கடைசியாக நின்றுகொண்டிருந்த இலக்கியாவைத்தான் பார்த்தான். அவளோ சிரித்துக் கொண்டு நின்றாள்.

“தம்பி கெதியா எடுங்கோ!” என்ற நாதன் மட்டும் குறுக்கிடவில்லையோ அப்படியே முறைத்துக்கொண்டு நின்றிருப்பான்.

“இதோ அங்கிள்…” என்றவன், “இதில நிற்க அவ்வளவு கிளியரா இல்ல.” என்றபடி நகர்ந்து, “எல்லாரும் இங்க பாருங்க.” இலக்கியாவின் அருகில் சென்று நின்றுகொண்டு சொன்னான்.

அப்படி அவன் செய்ததும் கூட மிக்க இயல்பாகத்தானிருந்தது. இலக்கியாவுக்கு மட்டும் அவன் மனம் புரிந்தது என்றால் கவிக்கோ சட்டென்று ஒரு மாதிரியானது. 

‘இப்ப இவர் வேணுமெண்டே அவளுக்குப் பக்கத்தில போய் நிண்டாரோ!’ தங்கையையும் அவனையும் ஆராய்ந்தபடி நின்றாள். இருந்தும் எதையும் அனுமானிக்க முடியவில்லை.

கடகடவென்று சில படங்களைத் தட்டிவிட்டு செல்ஃபி ஸ்டிக்கை கொடுத்தவன் அவளை ஏறிடவில்லை. மனதுள் இருந்த எரிச்சல் ஏறிட வைக்கவில்லை. குடுகுடுவென்று விரைந்த நாதனோடு போய்ச்  சேர்ந்து கொண்டான்.

‘திரும்பவும் உங்களுக்கு கோவம் வந்திட்டோ!’ மின்னலாகத் தட்டிய இலக்கியாவின் விரல்கள் கண்ணீர் ஆறு ஓடும் ஸ்மைலிகளை அளவின்றித் தட்டிவிட்டுவிட்டு, “இனியும் என்னடி ஃபோனில் நோண்டிக்கொண்டு நிக்கிற?”  என்ற தமக்கையின் குரலில் விரைந்து சென்று அவளோடு இணைத்துக்கொண்டாள்.

“இலக்கி, உண்மையாவே வேந்தன முதலே தெரியாதா உனக்கு?” மீண்டும் தமக்கை கேட்டதும் மிகையாய் அதிர்ந்தாள், அவள். இதயம் வெளிவந்துவிடும் போலிருந்தது.  தமக்கையை ஏறிடாது பாதையின் மறுபுறத்தை ஆராய்ந்தாள்.

“உன்னத்தானடி, கேட்டது விளங்கேல்லையா?” கவி விடவில்லை. 

“ஆங்! என்னக்கா? பஸ் வருதா எண்டு பார்த்தன்.” நேரத்தைப் பார்த்தபடி அவள்  சொல்ல, உண்மையிலேயே தான் கேட்டது விளங்கவில்லையோ, அல்லது விளங்கியும் விளங்காதவாறு நடிக்கின்றாளா என்ற கேள்வியோடு தங்கையை உற்றுப் பார்த்தாள்,  கவி.

அச்சிறு பொழுதில் சமாளித்துவிட்டாள் இலக்கியா.

“உண்மையாவே உனக்கு வேந்தன முதலே தெரியாதோ எண்டு கேட்டன்.” அழுத்திக் கேட்டாள் கவி.

“ஏனக்கா திரும்பவும் இப்பிடிக் கேட்கிறீங்க? எனக்கு அவர எப்பிடித் தெரிய வந்திருக்கும்?” நெற்றி சுருக்கிக்கொண்டு கேட்டவள், “அக்கா என்ன விசயம்?” தமக்கையை உற்றுப் பார்க்க, உண்மையில் ஒரு மாதிரியாகிற்றுக் கவிக்கு.

“பச்! ஒண்ணுமில்லடி, என்னவோ அப்பிடி மனசுக்க பட்டிச்சு, அதுதான் கேட்டன்.” என்றவளுக்குத் தொடர்ந்து பதில் சொல்லும் தேவையின்றி பேருந்து வரவே எல்லோரும் ஏறிக்கொண்டார்கள்.

உள்ளிட்ட வேகத்தில், ‘டோய்! உங்கள முன்னமே தெரியுமா எண்டு கவிக்கா கேட்கிறா. எல்லாம் உங்களால. அதுவும் கையக் காட்டு கட்டிவிடுறன் எண்டு நீங்க சொன்னதால!’ கோப ஸ்மையிலியோடு குறுஞ்செய்தியை அனுப்பியவள் சற்றே தள்ளி நிற்பவனை முறைத்தாள்.

 என்னதான் வேறு கதைகள் வேலைகளிலிருந்தாலும் வேந்தன் பார்வை அடிக்கடி இலக்கியாவையும் உரசத் தவறுவதேயில்லையே! அவள் முறைப்பையும் விரல்கள் வேகமாக கைபேசியில் விளையாடியதையும்  கண்டவன் சட்டென்று கைபேசியைப்  பார்த்தான். அதேவேகத்தில் அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு இலக்கியாவின் முகத்திலிருந்த பதற்றம் பார்த்து முறுவலரும்பியது. அவளின் ‘டோய்’ என்றழைப்பிலிருந்த நெருக்கம் மனசிலிருந்த எரிச்சலுக்கு மருந்திட்டது.

‘கேட்டா  சொல்லுறதுக்கு என்ன? நான் சொல்லவோ!’ தானும் தட்டிவிட்டு அருகில் நின்ற ஆருரனோடும் கவியோடும் வெகு மும்முரமாக எதையோ கதைத்தவனை என்ன செய்வதென்று முறைப்போடு பார்த்து நின்றாளவள். இருந்தாலும், தமக்கையின் பார்வை தங்களை அளவிடுவதைக் கண்டவளால் வேந்தனைப் பார்க்கவே மிகுந்த தயக்கமாக இருந்தது. வேந்தனுக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லையே! கவி பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவன் அவளை பார்த்தானோ என்றுணர்ந்தாள் இலக்கியா. 

 ‘எவ்வளவோ சொல்லியாச்சு அக்காவுக்கு வந்த சந்தேகம் மற்றவேக்கும் வர எவ்வளவு நேரமாகும்! இந்தப் பயணத்தில இது எல்லாம் தேவையா?’  தன்னுள் கேட்டுக்கொண்டவள் தன்னைத்தான் கட்டுப்படுத்த முடிவெடுத்தாள். கவினையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு அஜியோடு சேர்ந்துகொண்டாள்.

அடுத்து எல்லோரும் இறங்கி ‘ஏயர் அன்ட்ஸ் பேஸ் மியூசியத்தினுள்’ நுழைந்தார்கள்.

“உலகத்தின்ட மிகப்பெரிய விமானம் மற்றும் விண்கலங்களின் மாதிரிகளைக் கொண்டுள்ள மியூசியம் இது!” சந்தோசமாகச் சொன்னான் ஆரூரன். அவன் ஆசையே இவர்களை இப்போது இங்கு அழைத்து வந்ததும். 

“ஓம், அதோட விண்வெளி வரலாறு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கான மையமாகவும் இது இருக்கு.” வேந்தனும் சேர்ந்துகொண்டான்.

அவர்கள் இருவரும் முன்னால் செல்ல பின்தொடர்ந்தவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்றார்கள். சற்று முன்னர் தாவரவியல் பூங்காவில் இயற்கையோடு வலம் வந்தார்களென்றால், இதுவோ, மனிதர்களின் அறிவின் படிப்படியான வளர்ச்சியையும் சாதனைகளையும் தன்னகத்தே கொண்டு ஆச்சரியம் கொள்ள வைத்தது.

அடுத்து வந்த இரு மணித்தியாலங்கள் எப்படிப்போனதென்று தெரியாது எல்லாம் பார்த்து, புகைப்படங்கள் எடுத்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரமிருந்தா நல்லம்.” என்று முனங்கிய ஆரூரனையும் இழுத்துக்கொண்டு வரவும் கடைசி டூர் பஸ் வரவும் சரியாக இருந்தது.

“இந்த ட்ரிப் நாங்க உங்கள கூட்டிக்கொண்டு வந்து காட்டுறது பிள்ளைகள். எங்களால முடிஞ்சது இது. நீங்க உங்கட காலில நிண்டோன்ன வடிவாத் திட்டமிட்டுட்டு இன்னொருமுறைக்கு வந்து ஆறுதலா ஒவ்வொரு இடத்திலும் தங்கி இருந்து எல்லாம் பாருங்கோவன்.” எல்லோருக்கும் பொதுவாகச் சொன்னபடி பேரூந்தில் ஏறினார், நாதன்.

“சரி சரி, அப்படி வரேக்க உங்களையும் கூட்டிக்கொண்டு வாறம் சித்தப்பா, கவலைப்படாதீங்க!” இளையவர்களில் ஒருத்தி சொல்ல, “அப்பவும் வேந்தனுக்குத்  தான் வேலை; எங்களோட  வரவேணும் வேந்தன்.” என்றாள் கவி. இந்த சில நாட்களில் வாகனத்தின் சாரதி நான் அதை மட்டும் பார்த்துவிட்டுப் போகின்றேன் என்றில்லாது குடும்பத்திலொருவனாக,  எல்லாம் பார்த்துப் பார்த்து முன்னின்று செய்வதில் எல்லோர் போலவும் கவிக்கும்  அவனில் நல்ல மரியாதை தோன்றியிருந்தது. 

“நிச்சயம், எப்பவும் யாழ் ட்ராவல்ஸ் உங்களுக்காக காத்திருக்கும்.” என்றானவன்.

“ஏதோ இவரே சொந்தமா வச்சு நடத்திறது போல சொல்லுற வேகத்தப் பாருங்கோவன்.” இலக்கியா சொல்ல, சட்டென்று திரும்பிய வேந்தன், “நீங்க இவ்வளவு பெரிய குடும்பம் வாடிக்கையாளராக வாறது எண்டால்  நான் ஒரு பஸ் சொந்தமா வாங்கி விடுவன். என்ன சொல்லுறீங்க நாதன் அங்கிள்?” என்றான், கொடுப்புக்குள் நகைத்தபடி.

“அதுவும் நல்ல ஐடியா தம்பி! எத்தனை நாளைக்கு இன்னொரு இடத்தில் வேலை செய்யிறது?” 

“ம்ம் …யோசிப்பம் அங்கிள்.” கதைப்படியே இறங்கியவர்கள், “இனிச்  சாப்பாடு தான்.” ஒன்றாகச் சொன்னார்கள்.

அப்படியே கலகலத்தபடி பஃபே முறையிலான உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு அரைமணித்தியால தூரத்திலுள்ள விடுதி வந்து சேரும் மட்டும் மிக்க கவனமாக வேந்தனைத் தவிர்த்தாள், இலக்கியா. அதேநேரம் அப்பப்போ சீண்டவும் தவறவில்லை. அதுதானே அவள் சுபாவம். அதேநேரம், கவி மனதில் வேந்தன் இலக்கியா தொடர்பில் விழுந்த சந்தேகப்புள்ளி முற்றிலும் அழிந்தே விட்டிருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!