Skip to content
‘வோஷிங்டன் டிசி’யில் கலகலப்பாக உணவை முடித்துக்கொண்டு, தாம் தங்கவுள்ள விடுதியை வந்தடைகையில் இரவு ஒன்பது தாண்டியிருந்தது.
வாகன நிறுத்துமிட அருகிலேயே அடுத்தடுத்து மூன்று அறைகளுமிருந்தன. உள்ளிட்ட வேகத்தில் அறையை ஆராய்ந்துவிட்டு, “அப்பாடா! சூப்பர் அறைகள் என்ன?” நிம்மதியடைந்தார்கள்.
“ஓம், நல்ல பெரிசாவும் இருக்கு! ஒரு ரூமில வடிவா ஐஞ்சு பேர் தங்கலாம்.” அங்கிருந்த இரு குயின் சைஸ் படுகைக்களையும் ஓரமாகப் போடப்பட்டிருந்த கவுச்சையும்(couch) பார்த்துக் கதைத்துக்கொண்டார்கள்.
“நாளைக்கு எட்டு எட்டரை போல வெளிக்கிட்டால் போதும்.” மாறனும் வேந்தனுமாகக் கதைத்துக்கொண்டார்கள்.
“அப்ப நான் போயிட்டு வாறன் அங்கிள். காருக்க எடுக்க வேண்டியது ஏதாவது இருந்தா எடுத்திருங்க. எப்படியும் நேரத்தோட வந்திருவன்.” என்ற வேந்தன், “என்னோட யாராவது வாறது எண்டாலும் வரலாம். எனக்கு டபிள் பெட் ரூம் தான் கிடைச்சிது.” என்றான் ஆரூரன், மாறனைப் பார்த்து.
“இங்க எல்லாருக்கும் போதும் என்ன அண்ணி? நீங்க புக் பண்ண முதலே, இங்க உங்களுக்கு கிடைக்கேல்ல எண்டு சொல்லியிருக்க எங்களோடயே தங்கியிருக்கலாம்.” என்றார் நாதன்.
“அதுதான், ஆம்பளைகள் எல்லாரும் ஒரு அறைக்க தங்கியிருக்கலாம்; இப்ப வேணுமெண்டாலும் இங்கயே தங்குங்கோ தம்பி!” என்ற சுகுணா, “நீங்க நாலுபேருமா ஒரு அறையை எடுங்கோ, எங்களுக்கு மற்ற இரண்டும் போதும்.” தொடர்ந்து சொன்னார். ஏற்கனவே வாகனமோட்டி அலைந்தவன் இன்னும் கொஞ்சத் தூரமேயென்றாலும் ஓடவேண்டுமே என்றிருந்தது, அவருக்கு.
“பக்கம் தானே, கால்மணித்தியால ஓட்டம்; ஒண்டும் பிரச்சினை இல்ல.” என்றவன், “அப்ப எல்லாம் எடுத்தாச்சுத் தானே?” கேட்டபடி விடைபெற, “இல்ல இல்ல, கொஞ்சம் நில்லுங்க வேந்தன்.” இடையிட்டது கவியின் குரல்.
“ஏனம்மா? இறங்கேக்கையே தேவையானதுகள எடுங்க எண்டு படிச்சுப் படிச்சுச் சொன்னன்.” என்ற சுகுணாவுக்குப் பதில் சொல்லவில்லை அவள்.
“இலக்கி எங்க?” தாம் நின்ற அறைக்குள் தேட, “இலக்கிக்கா அஜிச் சித்தியோட பக்கத்தறைக்குள்ள நிக்கிறா.” என்றாள், ராஜியின் மகள்.
“வன் மினிட் வேந்தன்.” விருட்டென்று வெளியேறியவள், “இலக்கி இன்னொரு புது செட் உடுப்பு இருக்கு எண்டவள், காலம. அத எடுத்துக்கொண்டு வந்தாளோ இல்ல காருக்க இருக்கிற பெட்டிக்கையோ தெரியா. அதுக்குத்தான்.” போற போக்கில் சொல்லிச் சென்று, வேந்தன் முகத்தசைகளோடு சேர்த்து மனதையும் இறுக வைத்துவிட்டாள்.
“இந்தப்பிள்ளைக்கு வேற வேலையில்ல!” அலுத்துக்கொண்டே, “அப்பத் தம்பி கவனமாப் போயிட்டு வாங்க, காலம சந்திப்பம்.” உள்ளே திரும்பிய சுகுணா, “பிள்ளைகள் ஒரு ஒரு ஆளா பாத்ரூம் அலுவல்களைப் பாருங்க!” இளையவர்களுக்குச் சொன்னபடி தன் வேலைகளைப் பார்க்க, வெளியில் வந்து கவிக்காக காத்து நின்றான், வேந்தன்.
“அப்பா, அம்மா வரட்டாம்.” கவின் எட்டி அழைக்க மாறனும் சென்றுவிட்டான். நாதன் மட்டும் அவனோடு நின்றார்.
சிலநிமிடங்களும் சென்றிராது, “என்ர செல்லமெல்லா! வந்து எடுத்துத்தாடி!” இலக்கியாவின் கை பிடித்து இழுத்துக்கொண்டு வந்திருந்தாள், கவி.
எவ்வித உணர்வுகளையும் காட்டாது அடக்கிக்கொண்டு நின்றிருந்தான்,வேந்தன். தர்மசங்கடத்தில் தவிப்போடு தத்தளித்துக்கொண்டிருந்த இலக்கியாவின் விழிகள் கணத்திலும் குறைவாக அவன் விழிகளை உரசி விலகினாலும் அவன் நின்ற நிலைகண்டு கலக்கமும் கொண்டது.
“கையை விடுங்க அக்கா, அதான் வாறன் தானே?” வெடுக்கென்று கரத்தை உதறியவளை திரும்பிப் பார்த்த கவி, “ஏன்டி? உனக்கு விருப்பம் இல்லையெண்டா விடு வேணாம்! நீயாத்தானே இன்னொரு செட் இருக்குத் தாறன் எண்டனி!” ஒரு மாதிரிக்குரலில் சொன்னாள்.
“அதுக்காக இப்பவே எடுக்க வேணுமா கவி? பார் வெளில மழ பெய்யத் தொடங்கிற்று. அத இன்னொரு நாளைக்குப் போடலாம் தானே? நினைச்சோன்ன செய்ய நிக்கிறது, அதுவும் பிரயாணம் வெளிக்கிட்ட நேரங்களில.” கடிந்து கொண்ட நாதன் முடிக்காது தமையன் மகளை முறைத்தார்.
கவியின் முகம் சுண்டிப்போயிற்று! அதுவும் வேந்தன் முன்னால் வைத்துத் தங்கை கையை உதறியதே அவள் மனதுள் ஒருவிதக் குன்றலைக் கொடுத்திட்டு என்றால், நாதன் இப்படிச் சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் சொன்னது?
“பச்! ஒண்ணும் வேணாம் விடு! நீங்க போங்கோ வேந்தன்.” விருட்டென்று அறைக்குள் சென்று விட்டாள்.
“நல்ல மழையாக்கிடக்கு வேந்தன், நீங்க எங்களோட நில்லுங்க, இனி அலைய வேணாம்.”
“இல்ல இல்ல பரவாயில்ல அங்கிள்.” மறுத்தவன், இலக்கியாவைப் பார்த்து, “எடுக்கப்போறீரா இல்லை…” இழுத்தான், முன்னப் பின்ன தெரியாதவர்களோடு கதைப்பது போலவே நின்று.
“ஓம், மேலால இருக்கு நாதன் சித்தப்பா, நான் எடுத்துக்கொண்டு வாறன்.” நகர்ந்தாள், இலக்கியா.
“அவள்தான் பிறகு பார்க்கலாம் எண்டு போய்ட்டாளே, பிறகென்ன பேசாமல் விடு!” நாதன்.
“இல்ல சித்தப்பா அக்கா பிறகு மூடியா இருப்பா.” நகரத் தொடங்கியவள் பின்னால் நடக்கத் தொடங்கிய வேந்தனையும் நாதனையும் பார்த்துவிட்டு, “நீங்க இங்கயே நில்லுங்க, கார் இதில கண்ணுக்கு முன்னாலதானே நிக்குது, கார்த்திறப்பத் தாங்க நான் எடுத்திட்டு வாறன்.” கையை நீட்ட, முறைத்தான் வேந்தன்.
“எந்தப் பெட்டி வேணும் எண்டு சொல்லும் எடுத்துக்கொண்டு வாறன்.” குரலில் இருந்த எரிச்சலை மறையாது சொன்னவனை அவளும் முறைத்தாள்.
“அதெல்லாம் சொன்னா உங்களுக்கு விளங்காது திறப்பத் தாங்கோவன், இப்ப என்ன உங்கட காரை எடுத்துக்கொண்டு எங்கயும் ஓடவா போறன்?”
“இலக்கி என்ன நீ…முதல் எத்தின மணி பார்; அந்தத் தம்பியும் போய் ஓய்வெடுக்கிறதில்லையா? நாளைக்கு வாகனம் ஓட்ட வேணும். நீங்க சின்னப்பிள்ளை விளையாட்டு விளையிடுறீங்க. இப்பப் பேசாமல் நட, அது நாளைக்கு எடுக்கலாம்.” நாதன் கடிந்து கொண்டிருக்கும் போதே, கொட்டும் மழைக்குள் தாவி இறங்கி, காரைத் திறந்து எதையோ எடுத்துக்கொண்டு திரும்பிய வேந்தன், “இந்தாரும், போய் எடுத்துக்கொண்டு வாரும்.” குடை, கார்க் சாவி இரண்டையும் நீட்டினான். அவன் செயலில் இலக்கியாவுக்கு மட்டும் இல்ல நாதனுக்குமே ஒரு மாதிரியாகிட்டு.
“தம்பி இவை சொல்லுறதுக்கு எல்லாம் எடுபடத் தேவையில்லை.” நாதன் சொல்லிக்கொண்டிருக்கவே அவன் கரத்திலிருந்தவற்றை வாங்கியவள், கார் நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
“குறை நினையாதீங்க தம்பி , விளையாட்டுப்பிள்ளைகள்.” தடுமாறிய நாதன், ” நீங்க எங்களோட இங்கயே நில்லுங்க. இந்த மழைக்க இனிப்போய்…இங்க இடமில்லையெண்டால் தான் யோசிக்க வேணும். நாம ஆம்பளைகள் ஒரு அறைக்க தங்கலாம்.” என்றவர், அவன் மறுப்பை மறுத்து, “உங்கட பேக்க எடுத்துக்கொண்டு வாங்க!” பிடிவாதமாக நின்றார்.
“அறை இல்லாட்டி ஓகே அங்கிள், இப்பதான்…” மீண்டும் தயங்கியவனை, “போங்கோ ஓடிப்போய் பேக்க எடுத்துக்கொண்டு வாங்கோ!” முதுகில் கைவைத்து நகர்த்தினார்.
error: Alert: Content selection is disabled!!