Skip to content
கவியின் பார்வை இலக்கியில் கூர்மையாகப் படிந்தது. மீண்டும் சந்தேகம் வரவா என்றது.
“என்ன இப்பிடிப் பாக்கிறீங்க? உண்மையாவே நான் வேகமா ஏறேக்க அவர் சீற்றில சாஞ்சிருப்பார் எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? அதும் இந்த விடிய வெள்ளன! தவறி இலேசா பட்டத்துக்கு பிடிச்சு இழுத்து அடிச்ச கணக்கில கத்தினா நான் என்ன செய்யிறது?” அவனுக்குக் கேட்கவேதான் சொன்னாள்.
“வாய மூடிக்கொண்டு உங்கட வேலைகள பாருங்க!” அதட்டினார் சுகுணா. பிள்ளைகள் வேந்தனோடு சீண்டுவதை இரசிக்க முடியவில்லை, அவரால்.
“ஏய் இலக்கி இந்த டீ சேர்ட் புதுசாடி? எங்க வாங்கினனி? என்ன நீ புதையல் போல புதுசு புதுசா போடுற! பே வடிவா இருக்கடி. முதலே கண்டிருக்க இதை உனக்குத் தந்திட்டு அதை நான் போட்டிருப்பன்.” கவி சொல்ல, வேந்தன் பார்வை உள்க் கண்ணாடிக்குப் போக, அங்கே அவன் பார்வையை மின்னலாக உரசி மீண்டது, இலக்கியின் பார்வை.
‘அது தெரிஞ்சதால தானே அஜி சித்தி ஆக்களிண்ட ரூமுக்க நிண்டனான் கா!’ மனதுள் சொல்லிக்கொண்ட இலக்கியின் பார்வை தான் அணிந்திருந்த டீ சேர்ட்டில்.
கிரீம் கலர் டீ சேர்ட்டில் சாணிப்பச்சை பெயின்டிங்! மணிக்கட்டிலிருந்து சற்றே மேலே வரையிலான ஆணொன்றினதும் பெண்ணொன்றினதும் இரு கரங்கள் இறுக்கப் பற்றி பிடித்திருந்தன. அக்கைவளைக்குள் ‘forever’ சீக்குயின்ஸ் பளபளப்பில்!
அதே சாணிப்பச்சை ஹாஃப் பாண்ட்ஸ். ‘இதை இப்ப அக்கா போட்டிருந்தா?’ மெல்ல உயர்ந்த பார்வை மீண்டும் ரியர் வியூ மிரருக்குச் சென்றுவிட்டு தமக்கை தன்னையே திரும்பிப் பார்த்திருப்பதையுணர்ந்து விலகியது.
“என்னக்கா நீங்க? எல்லாம் அண்டைக்கு கொட்டெஞ் போயிட்டு வரேக்க வாங்கினதுதான். நீங்க கவனிக்கேல்ல போல!” சமாளித்த வேகத்தில், “நேற்றையான் ஃபோட்டோஸ் எனக்கு அனுப்பினீங்களா? நான் பொறுங்க அனுப்புறன். நிறைய வீடியோஸ் கிடக்கு.” கைபேசியை எடுத்தாள்.
“எனக்கு எண்டா உண்மையா நினைவில்ல போ!” என்ற கவி, மேக் டொனால்டு வந்திருக்க, “மினக்கடாமல் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்.” என்றபடி இறங்கிய நாதனோடு சேர்ந்துகொண்டாள்.
எல்லோருக்குமே நல்ல பசி. இறங்கி விறுவிறுவென்று உள்ளிட கடைசியாக இறங்கிய இலக்கியாவின் கரத்தைப் பற்றி நிறுத்தினான், வேந்தன்.
“விசரே உங்களுக்கு?” ஒரே உதறலில் விடுவித்துவிட்டு பதற்றத்தோடு முன்னால் பார்த்தாளவள்.
“தேங்க்ஸ் டி!” மீண்டும் அவன் கரம் அவள் கரம் நோக்கி நகர, இலாவகமாக விலக்கியவள் முறைத்தாள், கணம்தான். முதல் நாளிரவு பட்ட பாடு நினைவில் உரசியது.
“எனக்கும் உங்களுக்கும் இனிமேல் கதையே வேணாம்!” அவன் நெஞ்சில் கரம் வைத்துத் தள்ளிவிட்ட வேகத்தில் முன்னால் ஓடிவிட்டாள். அக்கணம் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் நிலை புரிந்தாலும் முதல் நாளிரவு பதில் போடாதிருந்தது அவளை மிகையாகவே பாதித்தது. தான் தவிப்பது தெரிந்தும் சும்மா இருந்தானே! மனம் முறுக்கிக்கொண்டது.
உள்ளே நுழைந்த வேகத்தில், “கவிக்கா நீங்க வாங்கிறதே எனக்கும்.” அங்கு ஓரமாகவிருந்த இருக்கையொன்றில் அமர்ந்த வேகத்தில், கைபேசியில் கவனமிருப்பதுபோல் பாவனை செய்து தன் கலக்கத்தை மறைத்துவிட்டாள்.
அவளிருந்த அதேமேசையில் எதிரில் வந்தமர்ந்தான், வேந்தன்.
“இலக்கியா” தாழ்ந்தொலித்த அவன் குரலுக்கு அவள் அசையவேயில்லை.
“அவையள் வாங்கிக்கொண்டு வரட்டும்.” நாதனும் வேந்தனருகில் வந்தமர்ந்தார். அதன்பிறகு அவள் புறம் திரும்பும் சந்தர்ப்பம் அவனுக்கு வரவில்லை. மிக இயல்பாக எழுந்து அடுத்த மேசையில் இருந்த தாயினருகில் சென்றமர்ந்துகொண்டாள், இலக்கியா.
அடுத்த முக்கால் மணிநேரத்தில் I-70 W இனுடாக ‘ஹோர்ஸூ கேவ்’ நோக்கி பயணம் ஆரம்பமானது.
“இது கன தூரமில்ல. ரெண்டரை மூண்டு மணித்தியாலத்தில போயிறலாம்.” அஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தான், மாறன்.
“ஓம், வெளிக்கிட்டதில இருந்து ஒரே ஓட்டம்தானே? இண்டைக்குக் கொஞ்சம் ரிலாக்ஸ். ஆனா ஹோர்ஸூ கேவ் ல இருந்து இரவு தங்கிற ஹோட்டல் கிட்டத்தட்ட ரெண்டு மணித்தியாலம்”. முன்னாலிருந்த நாதன்.
“தம்பி உங்களுக்கும் நாங்க தங்கிற ஹோட்டலில் இடம் கிடைச்சிது என்ன?”
“ஓம் அங்கிள்.”
“அதுதான் நல்லம். நாங்க தங்கிறதில கிடைக்காட்டி வேற ஹோட்டல் புக் பண்ண வேணாம் வேந்தன் அண்ணா. எங்களோட தங்கலாம் என்னப்பா.” பின்னாலிருந்த ஆரூரன்.
“ஓம், எல்லாருமா பன்னிரண்டு பேர் வடிவா தங்கலாம் வேந்தன்.” என்றான் மாறன்.
சிரித்தானேயொழிய பதில் சொல்லவில்லை, அவன். ஒரு முகமனுக்காகச் சொல்ல, சரியென்பதா என்றிருந்தது.. அதையும் விட முறைத்துக் கொண்டிருப்பவளைச் சமாதானம் செய்யவிக்க வேண்டுமே!
அவளோ, மறந்தும் அவனைப் பார்க்கவில்லை. ஒருதடவை வோஷ் ரூம் போக நிறுத்திவிட்டு ஏறியவர்கள் மதியபொழுதுக்கு, ஒருநாளுக்கான விடுமுறையைக் குதூகலமும் மகிழ்வுமாகக் கழிக்க மிகப்பொருத்தமான இடமான, ‘அல்டூனா’வில் (Altoona) இருக்கின்ற அமெரிக்க போக்குவரத்துத்துறையின் வரலாற்று மைல் கல்லான ‘ஹோர்ஸூ கேவ்’ வந்தடைந்திருந்தார்கள்.
“ஸ்டெப்சால போவம். ஆறுதலா ஏறலாம்.” என்றான், வேந்தன்.
“ம்ம்ம்… கிட்டத்தட்ட 200 படிகள் இருக்கும். கவின் படியால ஏறுவானோ! டிராம் இருக்கு எண்டு நினைக்கிறன்.” மனைவியை யோசனையாகப் பார்த்தான் மாறன்.
“சித்தப்பா நீங்க ஏறாவிட்டாலும் அவன் ஏறுவான்.” பகிடி செய்தாள், கவி.
கதைத்துக்கொண்டே “வோஷ் ரூமுக்குப் போயிட்டே போவம்.” இளையவர்கள் சொல்ல, நடந்தார்கள்.
அப்போது, கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றது இரயில் தொடரொன்று. சுற்றிலும் உயர்ந்து நின்ற பச்சை மலைத்தொடர்களுள், மஞ்சளும் வெள்ளையும் கலந்த அட்டைபோன்று ஊர்ந்த இரயில் தொடரைப் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகவிருந்தது. அதுவும் 360 டிக்ரி வியூ. சென்று மறையும் வரை பார்த்திருந்தார்கள்
“ஒரு நாளைக்குள் கிட்டத்தட்ட 60 ட்ரெயின்ஸ் போகுமாம். மேல ஏறிப்போனா கிட்ட நின்று பார்க்கலாம்.” அருகில் நின்று சொன்னவனை வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள், இலக்கியா.
“அது எங்களுக்கும் தெரியும்.” என்றபடி நடந்தவளிடம் வந்த கவி, “ஏன்டி திரும்பத் தொடங்குற?” கடிந்து கொண்டாள்.
“பாவம் வேந்தன், முகம் ஒரு மாதிரிப் போயிற்று!” தமக்கை தொடர்ந்து சொல்ல, “அதுக்கு? என்னவோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் எண்டு சொன்னா!” முணுமுணுத்தவள், கடைக்கண்ணால் அவனைப் பார்த்தான். பார்வை இவளிலிருக்க நாதனோடு கதைத்துக்கொண்டு வந்தவன் மின்னலாக கண்ணடித்து இவள் முறைப்பை வாங்கிக் கொண்டான். உள்ளத்திலிருந்து எழுந்த உவகையை, மலரத் துடித்த முறுவலை உதடுகளுள் நெரித்தபடி விடுவிடுவென்று முன்னால் சென்றுவிட்டாளவள்.
அப்படியே படிகளால் மேலேறத் தொடங்கியவர்களுள், மலைத் தொடர்களும் தூரத்தே தெரியும் ஏரிகளுமான சுற்றம் இயற்கையின் இன்னுமொரு பரிமாணமாக இறங்கியது.
உள்ளம் நிறைத்த புத்துணர்வுக் காற்றுடன் சுறுசுறுப்பாக படிகளைக் கடந்து மேலே சென்றடைகையில், இரயிலொன்று நெடிய அட்டையாக மெதுவாகக் கடக்கத் தொடங்கியிருந்தது.
கவின் ஆர்ப்பரிப்போடு ஓட, இளையவர்களும் பின்னால் சென்றார்கள். சுற்றிப்போடப்பட்டிருந்த இரும்பு வேலியைப் பற்றிப் பிடித்தபடி வட்டமடித்துச் செல்லும் இரயிலைப் பார்ப்பது புத்தம் புது அனுபவம்!
கணமும் வீணாக்காது புகைப்படங்களாகப் பத்திரப்படுத்தவும் தவறவில்லை.
ஆங்காங்கே போடப்பட்டிருந்த மர வாங்கில்களோடு கூடிய மேசைகளில் இரண்டை தமக்கெனப் பிடித்துக்கொண்ட பெரியவர்கள், அதுவரை முதுகை அழுத்திய சிறு சுமையை இறக்கி வைத்துவிட்டு அமர்ந்துகொண்டார்கள். இளையவர்களின் குதூகலத்தோடு சேர்த்து அச்சுற்றத்தையும் இரசித்தன, அவர்களின் விழிகள்.
மாறனின் அருகில் அமர்ந்துகொண்டான் வேந்தன்.
“முதல் இங்க வந்திருக்கிறீங்களா வேந்தன்.” மாறன் கேட்க, “இல்ல, இதுதான் முதல் முறை. உண்மையாவே உங்களோடு சேர்ந்து வாறது வித்தியாசமான அனுபவம். என்ர குடும்பத்தோடு வாறது போலவே இருக்கு!” உணர்ந்து சொன்னவன் பார்வை சற்றே முன்னால் நின்று, வளைந்து ஊறும் இரயில் தொடரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இலக்கியாவில்! நேசத்தில் நனைந்திருந்த அவன் பார்வையைக் கவனிக்கவில்லை, மாறன்.
“எங்களுக்கும் தான் வேந்தன்.” அவன் சொல்ல, “வெளியாள் எங்களோட வாறது போல இல்லாமல் இந்தப் பயணம் நிம்மதியாத் தொடர நீங்களும் முக்கிய காரணம் தம்பி.” பாசத்தோடு சொன்னார், நாதன்.
தொடர்ந்து அவர்கள் மூவரும் அளவளாவ, கொண்டு சென்றிருந்த தின்பண்டங்களையும் குளிர்பானங்களை வெளியிலெடுத்து வைத்தார்கள், அஜியும் ரதியும்.
error: Alert: Content selection is disabled!!