Skip to content
அடுத்துக் கடந்த இரு மணித்தியாலங்கள் எப்படிப் போனதென்று தெரியாதே கடந்திருந்தது. குளிர்பானங்கள், தின்பண்டங்களும் மாயமாகியிருந்தன.
ஓடியாடிக் களைத்துவிட்டு இளையவர்கள் தொய்ந்தமர, “இனி மெல்ல மெல்ல போவமா?” நாதன் கேட்க, “கீழ கிஃப்ட் ஷொப் இருக்கு போறதெண்டா போகலாம்.” என்றான், வேந்தன்.
“ஓமோம், கட்டாயம் போகவேணும்.” கதைத்தபடி எழுந்து ஆயத்தமானார்கள். தானும் எழுந்த வேந்தன், முதுகுப்பையிலிருந்து தண்ணிபோத்தலை எடுத்துத் திறந்தான்.
வாயில் சரிக்க முனைகையில் சட்டென்று நீண்டது கரமொன்று. பின்னால் திரும்பியவன், குறும்பு கொப்பளிக்கும் விழிகளை மறைத்து முறைக்க முயன்று தோற்றவளாக நின்ற இலக்கியாவை புருவமுயர்த்திக் கேள்வியாகப் பார்த்தான்.
“எங்களிட்ட தண்ணி முடிஞ்சிட்டு, தாங்கோ குடிச்சிட்டு தாறோம்.” தாழ்ந்த குரலில் அதட்டல். இருந்தாலும் அருகில் நின்ற நாதனின் மனைவிக்கு அது கேட்டுவிட, “பச்! அவர் குடிச்சிட்டு தரட்டுமேம்மா.” என்றார்.
“சரியா விடாய்க்குது சித்தி!” சொன்னவள், தம்மை ஒருவரும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துக்கொண்ட கணத்தில் அவன் கரத்திலிருந்த தண்ணீர்போத்தலை பறித்தெடுத்துவிட்டாள்.
“இலக்கியா!” அவனுதடுகள் மெல்ல உச்சரித்தன.
அவர்களுக்கென்றே துளி நேரம் வழங்குவது போலவே இன்னுமொரு ரயில் நுழைய இளையவர்கள் முதல் பெரியவர்கள் கவனமும் அங்கேதான் சென்றிருந்தது.
கடகடவென்று இரண்டு மிடறு குடித்துவிட்டு விழிகளால் எல்லோருரையும் ஆராய்ந்தபடி போத்தலை நீட்டியவள், அதாலேயே அவன் நெஞ்சில் ஒரு இடி கொடுத்தாள்.
“ஏன்டி?” முணுமுணுத்தான். இவ்வளவு நேரமும் முறுக்கிக்கொண்டு நின்றவளாச்சே! இச் செய்கையை மிகையாகவே இரசித்தானவன்.
“மூச்! நேற்று எனக்குச் செய்ததுக்கு இன்னுமிருக்கு!” நசுக்கிடாது சொல்லிவிட்டு, “கவின் குட்டி, வாங்கோ நாம முதல் போவம்.” அவள் நடக்கத்தொடங்க, “இனிப் பார்த்தது போதும், வாங்கோ!” நாதனும் நகர மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.
விறுவிறுவென்று முன்னால் இறங்கிச் செல்பவளை முறுவலோடு பார்த்து நின்றவனோடு கலகலப்போடு இணைந்துகொண்டார்கள், ஆரூரனும் கவியும். மீண்டும் கீழேயிறங்கி வந்தவர்கள் கிப்ட் ஷொப்புக்குள் நுழைகையில் ஏற்கனவே அங்கு நின்றிருந்தாள், இலக்கியா.
இவர்கள் நுழைகையில் வெட்டும் பார்வை வீசியவள் அவன் முறுவலைக் கண்டுகொள்ளவேயில்லை.
அங்கிருந்த பொருட்களைப் பார்க்கும் பாவனையில் மெல்ல மெல்ல நகர்ந்தவன் அவளருகில் வந்து நின்று கொண்டு, அங்கு தொங்கிய சின்ன சின்னக் கண்ணாடியிலான ஹோர்ஸ் ஷு ஹங்கர்சை பார்வையிட்டபடி, “நான் ஒண்ணும் நியாயமில்லாமல் கோவிக்கேல்ல இலக்கி. நேற்றிரவு நானும் வடிவா நித்திரை கொள்ளேள்ள தெரியுமா? விடிஞ்சதும் உன்ர அக்கா இந்த உடுப்போட வந்து நிற்பாவே எண்டு யோசிச்சு யோசிச்சு …” என்றவனை, விசுக்கென்று திரும்பிப்பார்த்தாள்.
“என்ன அப்பிடிப் பார்க்கிற? நீ எடுத்துக்கொடுத்தது வேற உடுப்பு எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? அதோட நீ குடுக்க மாட்ட எண்டும் எனக்கு எப்பிடித் தெரியும்? நேற்றுக் குடுக்கேல்லையா?” கோபத்தோடு வெடுக்கென்றுதான் கேட்டான், விழிகளில் மட்டும் நேசம் தெறித்தது.
அவன் பார்வை அவளுள் நசுக்கிடாது புகுந்துகொண்டது. மனதிலிருந்த சுணக்கமெல்லாம் போகவா என்று நுனி விரலில் நின்று பிடிவாதம் செய்யவும் தொடங்கியிருந்தது. ஆனாலும், அதையும் மீறிக்கொண்டு அவன் குரலிலிருந்த கோபம் எரிச்சலை எழுப்பித் தொலைத்ததைத் தவிர்க்க முடியவில்லை. எரிச்சல் என்பதைவிட ஒருவிதக் குழப்பம் என்றும் சொல்லலாம். எண்ணிச் சிலநாட்கள் அறிமுகத்தில் காதல். அதிலும் ஒவ்வொருநாளும் இத்தனை பிணக்குகள். இது எங்கு கொண்டு சென்றுவிடும்!?
மீண்டுமொருமுறை, ‘என்னை விட்டுத் தள்ளி நின்றுவிடு!’ என்றவகையில் கதைக்கவும் அவளால் முடியவில்லை. இப்பிரச்சனையில் தான் கண்கலங்குவதைக் கூட சகிக்கவும் முடியவில்லை.
வீட்டினருக்கு எப்போது தெரியவருமோ என்று ஒவ்வொரு கணமும் பயந்து பயந்து! மனதுள் எக்கச்சக்கமாக இதம் தூவிய நேசம் மறுபுறமோ ‘களவு செய்கிறாய் பெண்ணே’ என்றளவில் அதிகமாகவே குத்திக் காட்டவும் தொடங்கியிருந்தது.
வேந்தனும் பலநேரங்களில் அவளோடு வெகு இயல்பாகவல்லோ பழக முயல்கின்றான், உன் வீட்டினருக்குத் தெரியவந்தாலென்ன என்றளவில்.
தமக்கை இருக்கையில், இவன் என் வாழ்க்கைத் துணை, நானே தெரிவு செய்துவிட்டேனென்று அவனைக் கை காட்டுவதில் பெருந்தயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சரி, இந்தப் பயணத்தில் சரி அப்படியொரு நிகழ்வு வேண்டாமென்றது அவளுள்ளம். இதுவே, தான் சற்றே ஒதுங்கியிருந்தால் வேந்தனும் அளவோடு நிற்பானே என்ற முடிவுக்குத் தள்ளியது. அவனுனடனான சின்ன சின்ன மோதல்கள் சீண்டல்களை இரசிக்கும் மனம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவள் தள்ளித்தான் நிற்கப் போகிறாள்.
பார்வையை விலத்திவிட்டு மெல்ல நகர்ந்தாள். அவனும் நகர்ந்தான்.
“இலக்கி!” மீண்டும் தொடங்கியவன், “அண்ணா இது உங்களுக்கு!” என்று வந்த ஆரூரன் பக்கம் திரும்ப இவளும் பார்த்தாள்.
“எனக்கா? இதெல்லாம் என்ன ஆரூரன்?” என்றபடி, அவன் கொடுத்த சிறு பையிலிருந்து மிகவும் அழகான அவ்விடத்தைக் குறிக்கும் வகையிலான கீ டாக் ஒன்றை எடுத்தவன், “ம்ம்…நல்ல வடிவா இருக்கு, தாங்க்ஸ்!” ஆரூரனை தோளோடு அணைத்து விடுவித்தான்.
“எங்களுக்கு ஒண்ணும் வாங்கித் தராமல் அதென்ன வேந்தனுக்கு மட்டும்?” கவி, சகோதரனைச் செல்லமாகச் சீண்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.
மீண்டும் அவர்கள் மூவருமாக கலகலக்க அவ்விடத்திலிருந்து மெல்ல நகர்ந்து வந்துவிட்டாள், இலக்கியா.
அடுத்த அரைமணித்தியாலத்தில் வாகனத்தில் ஏறத் தயாராகுகையில் இளையவர்களுக்கென்று தான் வாங்கிய சிறு சிறு நினைவுப் பரிசுகளைக் கையளித்தான் வேந்தன்.
அப்போதுதான் அஜி, கவினோடு வோஷ் ரூம் போய்விட்டு வந்த இலக்கியா இதைக் கவனித்தபடி நகர, ஓரெட்டில் நெருங்கியவன், “இலக்கியா இது உங்களுக்கு, என் நினைவா ஒரு சின்னப் பரிசு!” சொன்னவன் பார்வை அவள் டீ சேர்ட்டில் இறுக்கப் பிணைந்திருந்த கரங்களின் படத்தில்!
கவி ஆரூரனும் அவர்களருகில் வந்துவிட்டார்கள்.
“என்னதிது?” வாங்காது விறைப்போடு கேட்டவள், “அத வாங்கிப் பாரன் டி!” சட்டென்று தமக்கை சொல்லவும் வேந்தனைச் சுடு பார்வை பார்த்தாள். அவன் விழிகள் நகைப்பில் சுருங்கிக் கிடந்தன.
“அதானே! கிப்ட் தந்தா, இலக்கி அக்கா இருபத்தியையாயிரம் டொலர் கடன் கேட்ட கணக்கில பார்க்கிறா!” ஆரூரன்.
“இந்த ரெண்டு கிழமைகள் உங்களோட வந்த என்னை மறக்காமல் இருக்கச் சின்ன பரிசு!” அடக்கும் நகைப்போடு வார்த்தைகளை உதிர்த்தான், வேந்தன்.
“அது எதுக்கு உங்கள நினைவில் வச்சிருக்க வேணும்? எனக்கு வேணாம், நீங்களே வச்சிருங்க!” சொன்னவேகத்தில் நகர்ந்தவளைக் கோபமாகப் பார்த்தாள், கவி.
“இந்தப் பயணம் வெளிக்கிட்டதில இருந்து இலக்கி அக்கா ஆளே மாறீட்டாள்.” கவியிடம் சொன்ன ஆரூரன். “அண்ணா குறை நினையாதீங்க! ப்ளீஸ்!” வேந்தன் கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“அவள் வேற ஏதோ அப்செட் போல! வேந்தன் நீங்க பெரிசா எடாதீங்க. தாங்கோ நான் குடுக்கிறன்.” அவனைத் தேற்றும் வகையில் சொன்னபடி கரத்தை நீட்டினாள், கவி.
“ச்சே ச்சே, நான் ஒண்ணும் நினைக்கேல்ல!” இப்படியே கதைத்தபடி வாகனத்தடிக்கு வந்திருந்தார்கள்.
“வேணாம் என்றவாவுக்குக் குடுத்து என்னத்துக்கு விடுங்க.” என்றுவிட்டு அவன் சாரதியானத்தில் ஏறியமர, உள்ளே ஏறிய கவியோ தங்கையை முறைத்தாள்.
“நீ செய்தது கொஞ்சமும் சரியில்ல.” என்றபடி அவள் அமர, “என்ன செய்தவள்?” வினவினார் சுகுணா.
“வேந்தன் எல்லாருக்கும் கிப்ட் தந்தார் மா. இவள் வாங்கேல்ல. அவரிட முகம் விழுந்திட்டு.” அடிக்குரலில் ஒப்புவித்தாள், கவி.
“முகம் விழுந்திட்டோ?! அப்ப எப்பிடி காரோட்டுவார்? ஓடிப்போய் எடுத்துக்கொண்டுவந்து ஒட்டி விடுங்க!” சிரித்தபடி சொன்னாள், இலக்கியா.
“பச்! ஏனம்மா அப்பிடிச் சொன்னனீ? ஒரு நினைவுக்குத் தாறத வாங்கினா என்ன?” தாய்.
“ஆரூரன் அவருக்கு கிஃபிட் கொடுத்தவன் மா. அதுக்குப் பிறகு எல்லாருக்கும் வாங்கித் தந்தா என்ன நினைக்கிறது? இவ்வளவு நாளும் வாங்கித் தந்தவரே? அதுவும் தன்னை நினைவு வச்சிருக்க வேணுமாம். இவர நினைவில வச்சிருந்து எங்களுக்கு என்ன வரப்போகுது? ம்ம்…” ரியர் வியூவில் அவன் பார்வையோடு மோதினாள்.
“பாருங்கம்மா இவளட கதையை. வேந்தன்ட காதில விழுந்தா என்ன நினைப்பார்?” கவி சொல்ல, “அதுதான் இலக்கி? அந்தத் தம்பி பாவம், நல்ல பெடியன். தன்ர குடும்பத்தோட வாறது போல இருக்கு எண்டு சொன்னவர். அந்த விருப்பத்தில வாங்கித் தந்திருப்பார். சரி இனி விடுங்க, இதைக் கதைச்சுப் பெரிசாக்க வேணாம்.” முற்றுப் புள்ளியிட்டார், சுகுணா.
“இண்டைக்கு பிட்சா சாப்பிடுவமோ?” சாப்பாட்டுப் பக்கம் கவனத்தைத் திருப்பியும் விட்டான், ஆரூரன்.
error: Alert: Content selection is disabled!!