Skip to content
மறுநாள் காலை, “டோய் பழிக்குப் பழியா? இதெல்லாம் கொஞ்சமும் சரியில்ல சொல்லிட்டன்.” அடிக்குரலில் சொன்ன வேந்தன், உதட்டைக் குவித்து அப்படியும் இப்படியுமாகப் பழிப்புக் காட்டிவிட்டுக் கடந்தவள் பின்னால் செல்ல முடியாது நின்றான்.
“வெளிக்கிடுவம் என்ன வேந்தன்?” என்றபடி, மாறன் வந்து விட்டானே!
“ஓமோம், எல்லாரும் ரெடியெண்டா வெளிக்கிடுவம்.” அவனோடு இணைந்து வாகனம் நோக்கி நடந்தவன், “எப்பிடியும் ஒரு அஞ்சு மணிநேர ஓட்டம், நாம போய்ச் சேர மத்தியானம் ஒரு மணி சரி ஆகும்.” என்றான்.
” ‘ஓஹாயோ கேவர்னஸ்’ல (Ohio Caverns) இருந்து பின்னேரம் அஞ்சு மணிபோல வெளிக்கிட்டாலும் சரிதானே வேந்தன்? அவ்வளவு நேரம் அங்க நிற்கவும் வேண்டிவராதெண்டு நினைக்கிறன்.” என்றான் மாறன்.
“ம்ம்… அங்க இருந்து ‘மௌமி’ ல (Maumee) இண்டைக்கு நாம தங்கப்போற ஹோட்டல் கிட்டத்தட்ட ரெண்டு மணிநேர ஓட்டம் வரும்.” கதைத்துக்கொண்டே காரடிக்கு வந்திருந்தார்கள்.
“எங்க இன்னும் அண்ணியும் உங்கட அம்மாவும் வரேல்ல?” நாதன் ஆரூரனைக் கேட்க, “அம்மாவும் பெரியம்மாவும் வோஷ்ரூம் போயிட்டு வாறன் எண்டவே…அந்தா வருகீனம்.” சொல்லிக்கொண்டே ஏறிய ஆரூரன், “இலக்கி அக்கா நானும் பின்னுக்கு வரவே?” பின்னால் சென்றமர்ந்தான்.
சாரதியாசனத்தை நிறைத்த, வேந்தன் பார்வை, கவினோடு செல்லங்கொஞ்சிக் கொண்டிருந்தவளில் பட்டுவிட்டுத் திரும்பியது.
ஒழுங்காக இருந்த ரியர் வியூ மிரரை சரிப்பண்ணுவதாகப் பெயர் பண்ணியவன் பார்வை மீண்டும் அவளிடமே ஓடிட்டு! அவளுக்கோ, இவன் பற்றிய எண்ணமே இல்லைபோலும்! அதையுணர்ந்தவன், உள்ளச் சிடுசிடுப்போடு வாகனத்தை உயிர்ப்பித்தான்.
“நாதன் சித்தப்பா நான் முன்னால இருக்கவா? அப்பத்தான் வடிவா வீடியோ எடுக்கலாம்.” கவி கேட்க, வேந்தன் பார்வையோ மின்னலாக இலக்கியாவை நாடியது. இலக்கியாவும் பார்த்தாள் தான். அதோடு நின்றாளா?
“ஓம் சித்தப்பா, அக்காவை விடுங்கோ, ஆராவது ஒரு ஆள் வடிவா எடுத்தாச் சரிதானே? முன்னால இருந்தாத் தான் வடிவா எடுக்கலாம்.” சொல்லி, வேந்தன் முகத்தில் கடுகடுப்பை ஏற்றினாள்.
“இல்ல இல்ல, சித்தப்பாவே இருக்கட்டும். தம்பியோட கதைக்கப் பேச அவர் இருந்தால் தான் சரி. பிள்ளைகள் இது விளையாட்டில்ல. பெரிய பிரயாணம். நீங்க முன்னால இருந்து வீடியோ எடுக்கிறன் அது இது எண்டு காரோட்டுற ஆளைக் குழப்பவே!” சுகுணா கண்டிப்போடு சொன்னபடி ஏறியமர்ந்தார்.
அதன் பிறகு தாமதிக்காது I-80 W ஊடாக ‘ஓஹாயோ கேவர்னஸ்’ நோக்கி விரைந்தது வாகனம்.
வேந்தன் முகம்தான் மனம் போலவே கடுகடுவென்றிருந்தது, முதல் நாள் போலவே. பின்னாலிருந்து கலகலத்த இலக்கியாவின் குரல் அவனுக்குள் புகைச்சலைத்தான் உருவாக்கிட்டு!
அவள் செய்த வேலைக்குத்தானே கோபித்தான்? இப்போது பார்த்தால் தான் செய்தது சரிபோலவும் இவன்தான் அவளில் அபாண்டமாகக் குற்றம் சாட்டியது போலவும் அல்லவா நடந்து கொள்கிறாள்?
‘போடி போ! நேற்றிரவு எத்தின மெசேஜ் அனுப்பினன். ஒன்றுக்கும் பதில் இல்ல. நான் செய்துக்குப் பழி வாங்கிறாளாம். இனி நீயா வந்து கதைச்சாலொழிய நானாக் கதைக்கப் போறதில்ல.’ சிடுசிடுப்போடு முடிவெடுத்தவன் பார்வை மீண்டுமொருமுறை அவள் முகம் நாடியதுதான். இருந்தாலும், ‘உன் பாராமுகம் என்னைப் பாதிக்கவில்லை’ என்ற கணக்கில் நாதனோடு அளவளாவிக்கொண்டே வாகனத்தைச் செலுத்தினான்.
இருவரினதும் பார்வைகள் உரசுகையில் எல்லாம் மகிழ்வில் திளைக்கும் உள்க்கண்ணாடி சோபையிழந்து போயிற்று!
இடையில் இரு இடங்களில் நிறுத்தினாலும் அவ்வளவாக நின்று மினக்கடவில்லை. மதியம் ஒரு மணியளவில் ‘ஓஹாயோ’ என்னுமிடத்தில் ‘வெஸ்ட் லிபெர்டி’யின் அருகில் அமைந்துள்ள பிரபலமான உல்லாசப்பயணிகள் ஸ்தலமும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கிரிஸ்டல் வடிவங்களை தன்னகத்தே கொண்டதுமான ‘ஓஹாயோ கேவர்னஸ்’ வந்தவர்கள், கணிசமான அளவில் பார்வையாளர் நடமாட்டம் இருப்பதைப் பார்த்தபடியே வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினார்கள்.
” ‘ஹிஸ்டோரிக் டூர்’, ‘நசனல் வொண்டர்ஸ் டூர்’ ரெண்டும் போவம். எப்பிடியும் ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள முடிஞ்சிரும்.” என்றாள் இலக்கியா.
“முதல் ‘ஹிஸ்டோரிக் டூர்’ போகலாம். அங்க நின்று ஷட்டல் பஸ்ஸில போகலாம்.” முன்னே கைகாட்டியபடி சொன்னான், வேந்தன்.
“சரி, வாங்க.” நாதன் நகர, “இல்ல சித்தப்பா!” எல்லோரையும் நிறுத்தினாள், இலக்கியா.
“முதல் ‘நசனல் வொண்டர்ஸ் டூர்’ போவம். பிறகு வந்து மற்றதுக்குப் போகலாம். அதில பெரிசா பார்க்க ஒண்ணும் இல்ல. நான் ரிவ்யூஸ் பார்த்தனான்.” வேந்தனுக்கு ஒரு முறைப்பை வீசிவிட்டுச் சொன்னவளை, முறைத்தாள் கவி, கூடவே அருகில் நின்ற சுகுணாவும்.
“என்னக்கா? உண்மையாவே ஹிஸ்டோரிக் டூர்ல பெரிசா ஒண்ணும் இல்ல. இந்த இடத்திண்ட வரலாறு தான்.” முறுவலோடு சொன்னாள்.
“சரி இருக்கட்டுமே. ரெண்டுமே பார்க்கத்தானே போறம். இது கொஞ்ச நேரமாம், அங்க பாருங்க பஸ் வந்து நிக்குது. போயிட்டு அடுத்ததுக்குப் போவம்.” சொல்லிக்கொண்டே, கவின் கரத்தைப் பற்றியபடி நடக்கத் தொடங்கியிருந்தான், மாறன்.
மற்றவர்களும் தொடர, இவளை நோக்கி ஒற்றைப் புருவ உயர்த்தலோடு சேர்ந்து நடந்தான், வேந்தன்.
“இவர் கார் தானே ஓட்ட வந்தவர்! என்னவோ நம்மளுக்குத் தலைவர் போலவும் எல்லாம் தனக்குத் தான் தெரியும் போலவும் முதலாளி வேல பாக்கிறார்.” புறுபுறுப்போடு கடைசியாகச் சென்றாள், இலக்கியா.
“உனக்கு…நானும் பார்த்துக்கொண்டுதான் வாறன், வேந்தனோட வம்பிழுக்கிறதே பொழுதுபோக்கா வச்சிருக்கிற!” கடிந்துகொண்டாள், கவி.
“அது…சில முகங்களப் பார்த்தாத் தானா வருதக்கா!” அழகாகச் சிரித்தவள், தலையில் குட்டினாள் கவி.
“பாவம் இலக்கி, வேந்தன் நல்ல பெடி! வீணா கொழுவலுக்கு இழுக்காத சரியோ!” தன்மையாகச் சொன்னாள் தமக்கை.
“ஓஓ! நீங்க சொன்னால் சரிதான். இனிப் பார்த்து நடக்கிறன்.” நக்கல் நிரம்பிய குரலில் பணிவுகாட்டிச் சொன்னாலும், மொத்தக் குடும்பத்தின் அபிமானத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டவனை நாடியோடியது அவள் விழிகள், இரகசியமாக.
ஷட்டில் பஸ்ஸில் சென்ற இருபது பேரும் குகைக்குள் செல்லும் படிகளால் கீழே இறங்கினார்கள். “44 படிகள் உண்டு.” முன்னால் சென்ற வழிகாட்டி சொன்னபடி சென்றான். அவ்விடத்தின் வரலாற்றைப் பொறுமையாகக் கேட்கும் ஆவலோடு எடுத்தியப்படி சென்றானவன்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்களில், 38 படிகள் மேலே ஏறி பார்வையாளர் மையத்திற்கு வந்து சேர்க்கையில், “குகைக்க இருந்த டைகர் ஸ்ட்ரைப்பிங் (இரசாயன வைப்புக்கள்) தவிர பெரிசா ஒண்ணும் இல்லத்தான்.” அஜி சொல்ல, “அதான் நான் சொன்னனே, நீங்க தான் கேட்கேல்ல!” என்றபடி வந்த இலக்கியாவின் தோளில் ஓடிவந்து தட்டினான், ஒரு இளைஞன்.
திடுக்கிட்டுத் திரும்பியவள் விழிகள் விரிந்தன.
“ஜாக்! ஜாக் தானே?” ஆங்கிலத்தில் கேட்டவள் கேள்வியிலும் பார்வையிலும் சந்தேகம் ஒட்டி நின்றது.
“அப்ப நீ என்ன மறந்திட்ட என்ன?” முறைத்தான், அவன்.
“சே சே! நீ ஆளே மாறிட்ட அதான். கண்டு எத்தின வருசமாச்சு? என்னவோ எங்களோட தொடர்பில இருக்கிற ஆள் போல கோவிக்கிற!” உரிமையோடு கடிந்துகொண்டாள்.
அவள் இரு கரங்களையும் பற்றிக்கொண்டான், ஜாக். “அப்பப்ப நினைப்பன் இலக்கியா! பிறகு…பச் விடு! அதுதான் இப்ப சந்திச்சிட்டமே. அதுவும் பார்த்தோன்ன உன்ன அடையாளம் கண்டிட்டன்.” சந்தோசமாகக் கதைக்கத் தொடங்கினான்.
error: Alert: Content selection is disabled!!