ரோசி கஜனின் இயற்கை – 22 -2

“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல்.

“ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் சிரித்த இலக்கியா, வெகு இயல்பாக வேந்தன் பார்வையைச் சந்தித்தாள். அங்கு ஆராய்ச்சி இருந்ததைக் கண்டவளுக்கு கொஞ்சம் குசியாக இருந்து.

“நீ எங்க இங்க?” ஜாக்கிடம் திரும்பிவிட்டாள்.

“அதை நான் கேட்க வேணும். இதுதானே அம்மாட  ஊர். பத்தாம் வகுப்புக்குப் பிறகு இங்க தான் படிச்சன்.” என்றான் அவன். 

“ஓ! இப்ப என்ன செய்யிற?”

“இடையில சிலவருடங்கள் படிப்பை விட்டுட்டன். இப்ப யுனில ஜியோகிராபி மூன்றாம் வருடம் படிக்கிறன்.  லீவுதானே, இங்க கைட் வேல செய்யிறன். அதனலா தானே  உன்னக் கண்டன்.” என்றவன், “ஆன்ட்டி என்ன நினைவிருக்கா? உங்கட தோசை,  சம்பல்  நான் மறக்கவே இல்ல.” சுகுணாவின் கரம் பற்றிச் சொன்னான். 

“நினைவிருக்கு ஜாக். அதுவும் முன்வீட்டில இருந்தீங்க. எங்கட இலக்கியாட பெஸ்ட் ஃபிரெண்ட எப்பிடி மறப்பம். ” அன்போடு சொன்னார், சுகுணா.

அடுத்தடுத்து எல்லோருடனும் கதைத்தான் ஜாக். வேந்தன், மாறன் குடும்பம் மற்றும் ராஜியின் மகள், மகன் தவிர மற்றவர்களுக்கு அவனை நன்றாகவே நினைவிருந்தது.

அவர்களின் பயணம் பற்றி மிக்க ஆர்வமாகக் கேட்டான். “சான்ஸே இல்ல, கேட்கவே பிரமிப்பா இருக்கு. நிச்சயம் நானும் இப்படியொருமுறைக்குப் போக வேணும்.” என்றவன், “ஹிஸ்டோரிக் டூர் எப்பிடி என்ஜோய் பண்ணிங்களா?” விசாரித்தான்.

“ம்ம்… எல்லாம் புது அனுபவம் தானே!” பதில் சொன்னாள், கவி.

“அப்ப  எல்லாம் பார்த்தாச்சா?” நகர்ந்தபடி கேட்க,  “இனித்தான் நேச்சர் வொண்டர் டூர் போகப் போறம்.” என்றான், ஆரூரன்.

“பிறகென்ன! வாங்க என்னோட.” அழைத்துச் சென்றான், இலக்கியாவுடன் பள்ளி நாட்களை நினைவிட்டபடி.

அவர்களை முன்னால்  விட்டுவிட்டுக் கடைசியாகச் சென்றான் வேந்தன். ‘என்னோட கதைக்க மட்டும் கணக்குப்  பார்ப்பாள். பார், எவ்வளவு சந்தோசமாக் கதைக்கிறாள்!’ மனதினோரம் சிணுக்கம் கண்டுவிட்டது, அவனுக்கு.

அவன் பின்தங்கியதை பார்த்த ஆரூரன், “வாங்கண்ணா…” நின்று அவனோடு சேர்ந்துகொண்டான். கவியும் சேர்த்துக்கொள்ள, அவர்களுடன் கலகலப்பில் கலந்தாலும், அவனுள்ளமோ, இலக்கியாவின் அருகாமையில் அந்த இயற்கையின் அழகை இரசிக்கவே விரும்பியது. 

‘நான் மட்டும் விரும்பி!’ தன்னையும் மீறிப் பெருமூச்செறிந்தான்.

“என்னண்ணா இவ்வளவு பெரிய பெருமூச்சு?” ஆரூரன் கேட்டு முடியமுதலே முன்னால் சென்றுகொண்டிருந்த இலக்கியாவின் தலை திரும்பியிருந்தது. என்னதான் ஜாக்குடன் கலகலப்பாகக் கதைத்தபடி நகர்ந்துகொண்டிருந்தாலும் அவள் புலன்கள் அவனில்தான். அவள் திரும்பிப் பார்த்ததைக்  கவனிக்கவில்லை, வேந்தன். 

“இந்த இடத்தில, நிலத்துக்குக் கீழ உள்ள பனிப்பாறைகள் உருகி உருவாக்கிய ஆற்றுநீரே  இக்குகையிலுள்ள ‘ஸ்டேலாக்டைட்’ (stalactite) மற்றும்  ‘ஸ்டேலாக்மைட்’(stalagmite)  அமைப்புகள் உருவாகக் காரணமாகும்.” ஜாக் சொல்லிக்கொண்டு செல்ல, அக்குகையின் மேல்தளத்திலிருந்து மெழுகுபோல் வெள்ளைநிறத்திலான காரட் வடிவில் தொங்கிக்கொண்டிருந்த  ஸ்டேலாக்மைட்களில் ஆச்சரியத்தோடு பார்வை பதிய நடந்தார்கள். 

வேந்தன் தவிர, மற்றவர்களுக்கு இப்படியொரு குகைக்கு வருவது இதுதான் முதல் அனுபவம். இயற்கை ஒவ்வொரு அடியிலும் ஆச்சரியம் கொள்ள வைத்தது. 

 “இந்த   ஸ்டேலாக்டைட், ஸ்டேலாக்மைட்களில 90 வீதமானவை இன்னும் செயல்பாட்டில் இருக்கு.” சொட்டுக் சொட்டாகக் கசியும் நீர்துளிகள் ஜாக் சொன்னதை ஊர்ஜிதம் செய்தது. 

குகையினுள் சில இடங்களில் பாதைகள் குறுகியதாக மென்னிருட்டில் இருந்தாலும் புகைப்படங்கள் எடுப்பதில் குறை வைக்கவில்லை. 

“அனேக இடங்களில நிலம் ஈரமா இருக்கு என்ன?” மாறன் வினவ, ஆமோதித்த ஜாக், “ஓஹியோவின் மிகப் பெரிய ஸ்டேலாக்டைட்!”  என்று, நான்கு அடிக்கும் மேலான நீளத்தில் தொங்கிய வெண் மெழுகுக் காரட் வடிவ ‘ஸ்டேலாக்டைட்’டைச் சுற்றிக்காட்ட, அவ்விடத்தில் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள்.

மெல்ல, வெகு இயல்பாகச்  சுற்றிப்பார்த்தபடி பின்னால் வந்திருந்தாள், இலக்கியா. 

“என்ன மூஞ்சி அந்த ‘ஸ்டேலாக்டைட்’ட விட நீளமாக் கிடக்கு! ம்ம்.” அடிக்குரலில் கிண்டல் செய்தாள்.

இவன் அறிமுகமானதிலிருந்து அவனைவிட்டுத் தள்ளி நிற்க நினைப்பதும் அவள்தான், பிறகு, தன்னையும் மீறி அவனை நாடுவதும் அவள்தான். 

அவளில் பார்வை இருக்கவே வந்துகொண்டிருந்தவன் அவள் தன்னை நெருங்கவும் மறுபுறமாகப் பார்க்கும் சாட்டில் நின்று கொண்டான்.

“காது அடைச்சிட்டு போல!” அவன் மணிக்கட்டில் இறுக்கப் பற்றினாள்.

சட்டென்று திரும்பியவன், “அங்க உன்ர ஃபிரெண்ட் தேடப் போறான் போ!” என்றான் முறைப்போடு. கரத்தையும் விடுவித்துக்கொண்டான், வெடுக்கென்று. அதோடு விடுவிடுவென்று முன்னேறி ஆரூரனருகில் சென்று எதையோ கதைக்கவும் தொடங்கியிருக்க இலக்கியாவின் முகம்தான் கூம்பிப் போயிற்று.

“சரிதான் போடா” அவனைக் கடந்து  செல்கையில் அவள் முணுமுணுத்தது அவன் செவிகளில் விழுந்தது. அதுவரையிருந்த சுணக்கத்தையும் மீறி அவனுதடுகளில் இரகசிய முறுவல் படர்ந்தது. 

இப்படி, இருவரும் முறைத்துக்கொள்ள கொள்ள அவர்களுள் நெருக்கம் அதிகரிப்பது போன்றதொரு உணர்வு அவனுள்! அதை அணுவணுவாக இரசித்தபடியேதான் மிகுதி நேரம் சுற்றி வந்தான்.

இலக்கியாவுக்கோ கோபம். இயல்பாகக் கதைத்தபடியிருந்தாலும் நெற்றியில் விழுந்த முடுச்சும் நகைப்பில்லாத பார்வையுமாக அவன் நின்ற நிலையில் பாவப்பட்டுத்தானே கதைக்கச் சென்றாள். அப்படியிருக்க, ‘வீம்பு! ராஸ்கல்!’ மனதுள் செல்லமாகத்  திட்டியவள், ‘இனி ஆளையே பார்க்கிறேல்ல!’  அவன் வீம்புக்குச் சளைக்காது தீர்மானமெடுத்தபடி, ஜாக்குடன் முன்னால் தங்கிக்கொண்டாள்.

அப்படியே பார்த்து வந்தவர்கள் குவிந்து கிடந்த  ‘சோடா ஸ்ரோ’க்களை’ பார்த்து அப்படியே நின்றுவிட்டார்கள். இயற்கை அளவுக்கு கலா இரசிகனும் கைதேர்ந்த சிற்பியும் யாருளர்!

தலைமீது தொங்கிய சோடா ஸ்ரோக்களை மெல்லத் தொட்டபடி நின்றவளை ஜாக் புகைப்படங்கள் எடுக்க, ‘அவனை விலத்திவிட்டுவிட்டுத்  தானும் சேர்ந்து நின்று கிளிக்கினால்!’ எண்ணாதிருக்க முடியவில்லை, வேந்தனால்.

“வேந்தன் என்னை எடுத்துவிடுங்க.” கவி கமராவைக் கொடுக்க, இலக்கியாவைச் சீண்டும்  விதமாக விதம் விதமாக நிற்கச் சொல்லித் தட்டினான். அதைத் தொடர்ந்து அனைவரையும் எடுத்தவன் நீயும் நில்லேன் என்று இலக்கியாவை மட்டும் சொல்லவில்லை.

இப்படியே குகையைச் சுற்றிவிட்டு வெளிவருகையில், எல்லோர் மனதிலும் திருப்தி! அதிலும் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகவும் இரசனையாகவும் ஜாக் விளக்கமும் கொடுத்திருந்ததில் அவ்விடம் பற்றிய தெளிவையும் பெற்றிருந்தார்கள்.

கவினுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஓயாது கதைத்தபடி வந்தான்.

வெளியே வந்ததும் அங்கிருந்த  பரிசுக்கடைக்கு அழைத்துச் சென்றான், ஜாக். பலவிதமான நினைவுப் பொருட்கள், ஆடைகள், அவ்விடத்தோற்றம் பற்றிய விளக்கங்களுடன் கூடிய பல கவர்ச்சிகரமான வரலாற்றுப் பொருட்கள் என, அருமையாக இருந்தது அக்கடை.

இலக்கியாவுக்குக் குட்டி மெழுக்கிலான ‘ஸ்டேலாக்மைட்’ தொங்கும் வெள்ளிச் சங்கிலி ஒன்றை வாங்கிப் பரிசளித்தான் ஜாக். “அடுத்தமுறை கனடா வரேக்க கட்டாயம் வீட்டுக்கு வாறன், ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமாச் சந்திப்பம்.” என்றவனுக்கு, அழகிய கீ செயின் ஒன்றை வாங்கிக்கொடுத்தாள், அவள்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டு நின்ற வேந்தன், தாயின் அழைப்பு வரவே ஒதுங்கி வந்து விட்டான்.

அவன் “அம்மா” என்று கதைப்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்த கவி, “உங்கட அம்மாவோ, நான் கதைக்கலாமா வேந்தன்?” கேட்டவளிடம் மறுப்பதெப்படி? கொடுத்தான். 

வாட்சப்பில் அழைத்திருந்தார் வேந்தனின் அன்னை. மகன் இந்தப் பயணம் தொடங்கிய கணத்திலிருந்து அவர் மனம் அவர் வசமில்லை.  அடிக்கடி அழைத்துச்  சுகம் விசாரிப்பதே வேலை.

திரையில் தெரிந்த தாயோடு அன்பாக சிலவார்த்தைகள் கதைத்தவன்,  ” அம்மா, இவையோடதான் நான் வாறன்.” என்று கவியின் முகத்தைக் காட்டவும் அவர் விழிகளில் சட்டென்று ஒரு சுவாரசியம்!

“என்னடா மதி அவன் சொன்னவன்?” என்று, மதியிடம் குடைந்திருந்தார்.

 “ஒரு கலியாணம், சாதகம் எல்லாம் பொருந்தி வந்திருக்கு. இந்த நேரம் பார்த்து ரெண்டுக்கிழமை பயணம் எண்டு வெளிக்கிட்டு இருக்கிறானே!” தொடர்ந்தவருக்கு, “கலியாண விசயம் எது எண்டாலும் கொஞ்சம் பொறுங்கோ, அவன் வந்து உங்களோட நேர்ல கதைப்பான்.” என்று பூடகமாகக் கதைத்த மதி. அவருள் சின்னதாகவொரு சந்தேகத்தை விதைத்திருந்தான்.

அதுவே கவியை அப்படிப் பார்க்கவும் வைத்தது. கவியும் வளவளவென்று கதைக்கத் தொடங்கியிருந்தாள். அவர் நலம் விசாரித்தவள், “நீங்க சான்பிரான்சிஸ்கோ தானே ஆன்ட்டி?” கேட்டாள்.

“ஓம் மா. நீங்களும் இங்கவரைதானே வாறீங்க.” அவன் தாய். 

“ஓமோம். அங்க நாலைந்து நாட்கள் நிற்பம். கலியாண வீடு ஒண்டு இருக்கு ஆன்ட்டி.” என்றவள், “உங்கட மகன் வீட்ட வாங்கோ எண்டு ஒரு முகமனுக்காகக் கூட ஒத்த வார்த்த சொல்லேல்ல ஆன்ட்டி.” சோகமாக ஆரம்பிக்க, “அவன் என்ன சொல்லுறது, நீங்க எல்லோருமே கட்டாயம் வீட்ட வாங்கோம்மா.” என்றார், அவன் அன்னை.

“அது!” வேந்தனைப் பார்த்துக் கண்ணடித்தாள், கவி. அதையும் அவன் தாய் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். கலகலப்பாக கதைக்கும் கவி முதற்பார்வையில் அவருக்குப் பிடித்தமானவளாகியிருந்தாள். 

“சோ ஸ்வீட் ஆன்ட்டி!” என்ற வேகத்தில், “பொறுங்கோ எல்லாரையும் அறிமுகப்படுத்திறன்.” என்று நகர, “அதெல்லாம் பிறகு  இன்னொருநாளைக்கு.” என்றான் வேந்தன்.

“அது ஏனாம்? பாருங்க ஆன்ட்டி இவரை!” அவனை முறைத்தபடி நகர்ந்தவள், எட்டிப்பார்த்த ஆரூரன் தொடங்கி அடுத்தடுத்து  அனைவரையும்  அறிமுகம் செய்து கொண்டு சென்றவள், “இவள் என்ர தங்கச்சி!” இலக்கியாவைக் காட்டி, “ஹாய் சொல்லு” என்று சொல்ல, ஜாக்கோடு கதைத்தபடி பரிசுப் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக நின்ற இலக்கியா, யார் என்ற கேள்வி எழுந்தாலும் அதைக் கேட்காது “ஹாய்” என்று கையசைத்ததோடு நின்றுவிட்டாள்.

அடுத்து, சற்றே தள்ளி நின்ற தாயிடம் சென்றாள், கவி.  “அம்மா, வேந்தன்ட அம்மா கதையுங்கோ!” என்று சொல்வதைக் கேட்ட இலக்கியா சரேலென்று திரும்பினாள். அவளையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான், வேந்தன்.

ஒரு ஹாய், கையசைப்போடு அவள் மறுபுறம் திரும்பியதைப் பார்த்தவனுள் முழுதாய் ஏமாற்றம் குடிபுகுந்திருந்திருந்தது. அவள் குடும்பத்தினரை அவன் எவ்வளவு ஆவலோடு எதிர்கொண்டான், எதிர்கொண்டுகொண்டிருக்கிறான்! அவளுக்கு முதன் முதல் தன் தாயைக் காண்கையில் அப்படியேதும் இல்லையோ!

அவன் மனம், விழிப்பார்வையில் புரிந்ததோ என்னவோ இலக்கியாவினுள்ளும் பதற்றம் தான். ‘அக்கா இன்னார் எண்டு சொல்லியிருக்க…’ என்றெண்ணியவளுக்குத்  தமக்கையிலும் பிழைக்கான முடியவிலை. அது ஒரு இயல்பான செயல்தானே.

வேந்தனை நோக்கி நகர்ந்தாள். “உண்மையாவே உங்கட அம்மா எண்டு …” அவள் ஆரம்பிக்கையில் கவியை நோக்கி நகர்ந்திருந்தான், வேந்தன். முகம் சுண்டிப்போயிற்று இலக்கியாவுக்கு. ‘தெரிந்திருக்க அப்பிடிக் கதைக்காம விட்டிருப்பனா என்ன? அது விளங்க வேணாம்.’ வேந்தனை முறைத்தாள். அவனோ, கைபேசியை வாங்கிக்கொண்டு விடுவிடுவென்று அவளைக்கடந்து வெளியேறியிருந்தான்.

இலக்கியாவை ஏறிடவில்லை. அவள் தான் முகம் சுருங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அதன் பின்னர் அவர்கள் ரெஸ்டாரண்ட் சென்று உணவருந்திவிட்டு, ‘மௌமி’ ல் தங்கும் விடுதி வந்தது சேர்ந்த பிறகும் வேந்தன் பார்வை இலக்கியாவின் புறமாகத் திரும்பவே இல்லை.

அன்றிரவு, இருவர் கைகளிலும் கைபேசி இருந்தும் தயக்கத்தோடு ஒருவர் மற்றவர் வாட்சப்பை பார்த்தபடி கழிந்ததேயொழிய, அவர்களுள் குறுஞ்செய்திகள் பரிமாறப்படவில்லை.

‘நேற்றிரவு எத்தின மெசேஜ் போட்டன், பதில் இல்ல. இண்டைக்கு எனக்கும் அவளுக்கும் தொடர்பே இல்லை எண்டமாதிரி நின்றாள். எல்லாத்துக்கும் மேல அம்மாவ ஒரு பொருட்டாகவே நினைக்கேல்ல. இப்ப நான் திரும்பவும் மெசேஜ் போட வேணுமோ! போடுறதில்ல.” தன்னுள் தீர்மானித்திருந்தாலும் மனதில் நிம்மதியின்றி உறக்கம் வராது புரண்டான், வேந்தன்.

‘நான் கதைக்க கதைக்க அவர் பெரிய விறுக்கன் கணக்கில முகம் நீட்டினவர், ஒரு ஹாய் போட்டா குறைஞ்சு போவாராக்கும்!’ என்று நினைத்தாலும், தான்  போடத் துணிந்தவள், ‘பச்! போட்டாலும் அந்தாள் பார்த்துப் பதில் அனுப்பிட்டுத்தான் மற்ற வேலை பார்க்கும்.’ கசந்த மனதோடு உறக்கத்தோடு அடிபிடிப்பட்டாள், இலக்கியா.

 

error: Alert: Content selection is disabled!!