ஒன்பதாவது நாள் விடியல், அவர்களின் பயணம் கொலரடோ, லாரிமர் கன்ட்ரியில் அமைந்துள்ள ‘எஸ்டஸ் பார்க்’ நோக்கியதாகவிருந்தது.
இதனருகில், மேற்குப் பக்கத்தில், 1915 ம் ஆண்டளவில் பாரிய கண்கவர் பாறை மலைத்தொடர்களுக்கான இடமாக அடையாளப்படுத்தப்பட்ட ‘ரொக்கி மவுன்டன் நஷனல் பார்க்’ நுழைவாயில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இனிய சலசலப்போடு அழகிய ‘பிக் தாம்சன் நதி’யும் அவ்விடத்தைக் கடந்து செல்கிறது.
“ ‘எஸ்டஸ் பார்க்’ போற வழியில, ‘லயன்ஸ்’ல இருக்கிற ‘பட்டன் ரொக் டாம்’ போயிட்டுப் போவமே, மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டரை மூணு மணித்தியாலம் போதும்.” என்று, முதல் நாள் மாலை ஆரம்பித்து வைத்தது வேந்தன் தான்.
உடனே அதைப்பற்றி இணையத்தில் ஆராய்ந்தான் மாறன். “அது நடந்து பார்க்க வேணும் என்ன வேந்தன்? அப்பத்தான் போறதுக்குப் பிரயோசனம். மலைப்பகுதி வேற, கவினோட போறது… அதுதான் யோசிக்கிறன்.” இழுத்தான்.
“ஓம் வேந்தன் அண்ணா, இங்க பாருங்க ‘ஸ்லீப்பி லயன் ட்ரெயில்’ போனாத்தான் வடிவான ரூட்! அது கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீற்றர் எண்டெல்லா கிடக்கு!” என்றான், ஆரூரன்.
“நான் போயிருக்கிறன் ஆரூரன், சின்னப்பிள்ளைகள் குடும்பமா வந்திருந்தவை. ஆறுதலாப் போகலாம். வேணுமெண்டா கவின கொஞ்சத்தூரம் தூக்கலாம், பிரச்சின இல்ல.” என்றவன், “கவின் குட்டி வெரி ஸ்போட்டிவ் போய்!” என்று தொடங்கி அவ்விடம் பற்றி வர்ணித்ததில், “சரி போவம்.” என்று, சம்மதிக்க வைத்துவிட்டான்.
“ஏதாவது தேவையெண்டா சொல்லுங்க போற வழியில் வாங்கலாம் ஆன்ட்டி.” என்ற வேந்தன் கட்டுப்பாட்டில், I-76 W ல், வாகனம் விரைந்து கொண்டிருந்தது.
“எங்களுக்கு இங்க இருக்கிறதே கூட, உங்களுக்குத்தான் வேற ஏதாவது வேணும் போல. எங்களைச் சாட்டி நிப்பாட்டுங்கோ. எது எப்பிடியோ இண்டைய நாள் உங்கட கையில, மலைக்காட்டுக்க நடக்க விட்டு பிறகு காருக்க ஏறினோன்ன நித்திர கொள்ளுறதுதானோ என்னவோ! பாப்பமே!” பின்புற முதல் வரிசையில், வேந்தன் இலேசாகத் திரும்பினாலே பார்க்கும் படி அமர்ந்திருந்த இலக்கியா சொல்ல, வேந்தனின் நகைக்கும் விழிகள் அவளைத் தொட்டு விட்டுத் திரும்பின, ஒரு தோள் குலுக்களுடன்.
அவனுள்ளம், புத்தம் புதுப்பொழுதில் அன்றலர்ந்த மலரென இருந்தவளையே பார்த்திருக்க ஆசைகொண்டது. அதுமட்டுமா? “முன்னுக்க ஏறனடி!” நாக்கில் துருத்தி நின்ற வார்த்தைகளுக்குத்தான் வெளிவரத் துணிவிருக்கவில்லை. தம்முள் ஏற்பட்டுவிட்ட மாறா பந்தத்தை எல்லோரிடமும் வெளிப்படுத்திட, மீண்டும் மீண்டும் உள்ளம் அதீத அழுத்தம் கொடுத்தாலும் அவனால்தான் முடியவில்லை. தடாலடியாக தன் மனதில் பதிந்தவளில் சலனம் உண்டுபண்ணி தன்னுள்ளே இழுத்துக்கொண்டதுபோல, சுலபமாக அது வரவும் இல்லை. முக்கியமாக, சின்னதாகவேனும் அவர்களின் பயணத்தில் சலனம் உண்டாக்க விரும்பவில்லை, அவன்.
முதல்நாளிரவு கொஞ்ச நேரமென்றாலும் குறுஞ்செய்திகளில் முட்டி மோதி கெஞ்சிக் கொஞ்சியிருந்தார்கள். காலையில் கண்டதும் அவளை நோக்கி இழுத்த கால்களை அடக்கிடவே பெரும்பாடுபட்டவன், அமைதியாக, பார்வையால் அவளைத் தொட்டுவிட்டு மனதின் ஏக்கத்தைக் குட்டி அடக்கிவிட்டு இருந்தால், எப்போதும் கடைசி வரிசை இருக்கையிலிருப்பவள், இன்று, இப்படிக் கைக்கெட்டும் துரத்திலிருந்து கொண்டு வம்பு பண்ணினால்!
வார்த்தைகளை உதிர்க்கும் உதடுகளுக்குப் போட்டியாக அவள் விழிகளோ அவனைச் சீண்டுகின்றதே! அதுவும் மற்றவர் பார்த்திடாத கள்ளத்தனத்தோடு கூடிய பார்வையும் சீண்டலும் எத்துணை இனிமையானது, பாடாய்ப்படுத்தி ஒருத்தரை வீழ்த்தவல்லதென்பதை அனுபவித்தவர்களாலேயே விளங்கிட முடியும்.
‘ராட்சசி! வசமா அம்பிடாமல் போயிருவியா என்ன, அப்ப இருக்கு!’
“பெரியம்மா, இலக்கி அக்காவுக்கு காலச்சாப்பாடு ஒண்டும் குடுக்க வேணாம். வேந்தன் அண்ணாவோட கொழுவிக்கொண்டு வாறதே போதும்.” ஆரூரன் இடையிட, வேந்தனின் மனவோட்டம் அறுந்தது. மீண்டுமொருமுறை திரும்பியவன் தன்னையுமீறி விழிச்சுருக்கங்களோடு புருவமுயர்த்திவிட்டான்.
மின்னலாக, இருளவனின் அணைப்பிலிருந்து விடுபடும் கீழ்வானத்தின் செம்மை அவள் முகத்திலடித்தது.
“டோய் வேணாம்!” பார்வை அவனிலிருக்க ஆரம்பித்துவிட்டு ஏதுமறியா அப்பாவியாக ஆருரனைப் பார்த்தவள், “உன்ர அக்காவ விட்டுட்டு ஒரு கிழமைக்கு முதல் கண்டவருக்காக கதைக்கிற என்ன?” கையில் வைத்திருந்த கேக் பெட்டியால் சகோதரன் தலையில் ஒன்று போட்டாள்.
“அக்காக்கள் எல்லாம் கார் ஓடினவை. அதனால நான் இண்டைக்கு முன்னுக்கு இருக்கப் போறன்.” என்று, வேந்தனருகில் அமர்ந்திருந்தவன், தன் கையிலிருந்த செல்ஃபி ஸ்டிக்கால் அவளுக்கு ஒன்று போட்டான்.
“இங்க பாருங்க பிள்ளைகள், இப்பிடி விளையாடுறது எண்டா ரெண்டு பேரும் கடைசி சீற்றுக்குப் போங்க! காரோட்டுற தம்பிக்கு இடைஞ்சல் தராமல்.” இலக்கியாவினருகில் அமர்ந்திருந்த நாதன் கண்டித்தார்.
“அதான்…” என்ற சுகுணா, “தம்பி உங்களுக்கு பணிசா கேக்கா?” வேந்தனிடம் வினவ, “தன் கரத்திலிருந்த கேக்கை அவன் புறம் நீட்டியபடி “பணிசும் தாங்கோம்மா!” தாமதமின்றிச் சொல்லிவிட்டே சுதாகரித்தாள், இலக்கியா.
வேந்தன் விழியோரச் சுருக்கம் அவன் நகைக்கிறான் என்றது.
“ரெண்டு பேருக்கும் பொதுவா இதில வச்சா வேண்டியதைச் சாப்பிடுவினம் எண்டு சொல்ல வந்தன்.” சொன்னபடி, கர்மசிரத்தையாக, மடி மீது கிடந்த காகிதத் தட்டுகள் கொண்ட பையிலிருந்து ஒன்றை எடுத்து அதில் கேக் துண்டுகளை வைத்துவிட்டு, தாயிடம் கை நீட்டினாள்.
“அதும் சரிதான்.” பணிசோடு சேர்த்துச் சில பிஸ்கட்டுகளையும் கொடுத்தார் சுகுணா. காலையுணவு கலகலப்போடு முடிந்தது.
வெளிப்புறத்தில் பார்வை பதிப்பதும் உள்ளே கலாட்டா செய்வதுமாக உற்சாகத்தோடு பயணம் தொடர்ந்தது.
வெளிப்புற கிராமப்புறப் பாதை, சமவெளியாகப் பரந்து கிடந்தது. இடையிடையே சோளமும் கச்சானும் பச்சைப்பசேல் என்று விளைந்து நிற்க உதயசூரியனில் பச்சைப்பட்டுக் கம்பளமாக மினுமினுத்தது.