அடுத்தடுத்து எல்லாருமாக பெரிய கோனொடு வர, “பிள்ளைகளுக்கு இண்டைக்குச் சாப்பாடு தேவையில்ல.” என்றுவிட்டு நாதன் எழ, எல்லோரும் சேர்ந்து நகர்ந்தார்கள்.
அருட்டிய கைபேசியை காதுக்குக் கொடுத்தபடி பின்தங்கி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான், வேந்தன்.
எல்லோரும் முன்னே போக மெல்லப் பின்தங்கிய இலக்கியா, ‘வேணுமா?’ சைகையால் அவனிடம் கேட்க, ஒற்றை விரலால் பத்திரம் காட்டினான் அவன். நகைப்பில் சுருங்கிக் கிடந்த அவன் விழிகளில் இவள் பார்வை!
“ப்ளீஸ்! என்னால இவ்வளவும் குடிக்க ஏலாது.” சொல்லிக்கொண்டே முன்னால்தான் பார்த்தாள்.
அவனுக்குச் சிரிப்பு வந்தது. “எல்லாத்திலும் வீரம் காட்ட வேண்டியது. பிறகு…” என்று அவன் ஆரம்பிக்க முறைத்தவள், “கேட்க வந்தன் பாருங்க, என்ர எச்சில் வேற…” சொல்லிவிட்டு விருட்டென்று நகர எட்டிக் கரம் பற்றி நிறுத்தியவன், அவள் விழிகளால் மனவாழம் சென்று வந்தான்.
சிலகணங்கள் தான். அவன் தன் சொந்தம் என்ற உணர்வில் சுற்றம் மறந்து நின்றாளவள்.
“நீ வேற எண்டு ஒரு கணம் கூட நான் நினைக்கிறதில்ல, நினைச்சிருக்க இப்பிடி உங்களோட வாகனம் ஓட்டிக்கொண்டு வந்திருக்கவே மாட்டன்.” ஒரு மாதிரிக்குரல் சொல்லிக்கொண்டே, அவள் விரல்கள் பற்றியிருந்த கோனைத் தனதாக்கிக் கொண்டான்.
“இப்பிடியே உன்ர கையைப் பிடிச்சுக்கொண்டே மாறி மாறி இதைக்குடிச்சுக்கொண்டு நடக்கவும் நான் ரெடி!” ஒற்றைப் புருவமுயர அவன் சொன்ன விதத்தில் விதிர்விதிர்த்து, கையை விடுவித்த வேகத்தில் முன்னால் செல்பவர்களைத் தொடர்ந்து ஓடிவிட்டாளவள்.
இலக்கியா ஓடி வந்த வேகத்தில் திரும்பிப் பார்த்தாள், ராஜியின் மகள்.
“இலக்கிக்கா அதுக்குள்ள குடிச்சிட்டிங்களோ?” அவள் கேட்கத் தடுமாறிவிட்டாள், இவள். நல்ல வேளையாக மற்றவர்கள் அங்கிருந்த கடைகளில் வெளியில் தொங்கிய பொருட்களைப் பார்வையிடுவதில் மும்முரமாக நின்றதில், ‘தப்பினேன்’ என்ற எண்ணமோடியது.
“ஓம் குடிச்சிட்டன், கெதியா குடிச்சிட்டு வாவன் உள்ள போய்ப் பார்ப்பம்.”
“ம்ம்… அதெப்படி அவ்வளவு கெதியா குடிச்சீங்க? கொஞ்ச முதல் பார்க்க அரைவாசி அப்பிடியே இருந்திச்சே! பெரியம்மா ஆக்களிட்ட வேணுமா வேணுமா எண்டு கேட்டுக்கொண்டு வந்தீங்க?” விடேன் என்று கேள்விகளைத் தொடுத்தாள்.
“இல்ல…அதுவந்து…ஓம், கடைகளுக்குள்ள போகவேணும் எண்டு கடகடவெண்டு குடிச்சிட்டன்.” தடுமாறினாலும் எதையோ சொல்லிவிட்டாள்.
“இலக்கிக்கா! பொய் கள்ளப்பொய்!” ஆரூரன்.
இவளுக்கு உதறலே வந்துவிட்டது. ‘இவன் பார்த்திட்டானோ!’ தன்னையும் மீறி பின்னால் திரும்பிப் பார்க்க, வேந்தனைக் காணவில்லை.
அவள் பார்வையைத் தொடர்ந்த ஆரூரன் அங்கிருந்த குப்பைத் தொட்டியைக் கண்டுவிட்டு, “நான் சொன்னனே… கள்ளி!” என்று சொல்ல, “என்னடா இங்க பிரச்சினை? குடிச்சிட்டா வாங்க கடைக்க போவம்.” என்று வந்த கவி, அவன் சொன்னதைக் கேட்டதும், “அப்பவும் ஸ்மோல் வேணுமா எண்டு கேட்டனான் எல்லா? வாங்கியிருக்க இப்ப வீசியிருக்கத் தேவையில்லையே! பார் எல்லாரும் குடிக்கீனம், நீ மட்டும் இந்த வேலை பார்த்திருக்கிற.” தங்கையைக் கடிந்தபடி கடைக்குள் நுழைய, ‘வேந்தன்ட வயிறுதான் அந்தக் குப்பைத் தொட்டி. ஐஸ் வேணாம் எண்ட ஆளுக்கு நல்ல பனிஷ்மென்ட்! ஹா..ஹா…’’ கொடுப்புக்குள் நெரிந்த நகைப்போடு பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தாள், இலக்கியா.
“வேந்தன் அந்தக் கடைக்க போன மாதிரி இருந்திச்சு. நான் இதில நிக்கிறன், பார்த்திட்டு வாங்கிறத வாங்கிப்போட்டு வாங்கோ!” கடைக்கு வெளியிலேயே நின்றுவிட்டார், நாதன்.
இவர்கள் கடைக்குள்ளிருந்து வெளிவருகையில் வேந்தனும் அங்குதான் நின்று கொண்டிருந்தான். பார்வை வெளியில் வந்தவளில்! தானே தன்னைக் காட்டிக் கொடுத்திருவாள் போலுணர்ந்ததில் கவனமாக அவன் பார்வையைத் தவிர்த்தாள், இலக்கியா.
அப்படியே இன்னும் சில கடைகளுக்குச் சென்றுவிட்டு, ‘ஸ்டேய்க் அண்ட் சீபுட்’ உணவுவிடுதிக்குச் சென்றவர்கள், கலகலப்பாக உணவை முடித்துவிட்டு வாகனத்தில் ஏறுகையில் மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்ததது.
“இருட்ட முதல் இந்த மலைப்பகுதியை விட்டுப் போயிர வேணும்.” என்றபடிதான் ஏறியமர்ந்தாள், அஜி.
மற்றவர்கள் சிரித்தார்கள். இருந்தாலும் பெரியவர்களுக்கு அந்த எண்ணமே!
மாலை மஞ்சள் வெயிலில் குளித்து நின்ற மலைப்பகுதிகள், காலையில் தந்த காட்சியை விட்டு வேறு வகையில் ஜொலித்து விழிகளைக் கவர்ந்து நிற்க, நன்றாகவே களைத்துவிட்டவர்கள் அந்த அழகைப் பருகியபடி பயணப்பட்டார்கள்.
“எவ்வளவு நேரமெடுக்கும் வேந்தன்.”
“மூண்டரை மணித்தியாலம், எப்பிடியும் பத்து மணி ஆகும் ஆன்ட்டி.” சுகுணாவுக்குப் பதில் சொன்னான்.
“ரோலின்ஸ், ‘வயோமிங் ஹம்டன் இன்’ என்ன?” பின்னால் திரும்பி தந்தையிடம் கேட்டுவிட்டு வேந்தனோடு கதைத்தபடி வந்தான், ஆரூரன். போகப் போக இருள் கவிந்தது போலவே உள்ளேயிருந்தவர்களை உறக்கமும் கவர எஞ்சியிருந்தவர்கள் மட்டுமே மெல்லிய குரலில் கதைத்தபடி, வீசிய தென்றல் காற்றை நுகர்ந்தபடி பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
‘ஏறினதில இருந்து ஆள் என்ன ஒரே அமைதி!’ மெல்லத் திரும்பிப் பார்த்தான், வேந்தன்.
யன்னலோரம் தலைசாய்த்து உறக்கத்திலிருந்தாள், இலக்கியா.
அவன் பார்த்ததைக் கண்ட நாதன், “இண்டைக்கு எல்லாரும் நல்லா களைச்சிட்டம் என்ன தம்பி? பாருங்க நாம நாலு பேரும் தான் முளிச்சிருக்கிறம்.” என்றவர், “அதோட உங்களுக்கு காரும் ஓட கஷ்டமா இருக்குதோ!”
“ச்சே ச்சே… அப்பிடி ஒண்டும் இல்ல.” முறுவலோடு சொன்னவேகத்தில், அமைதியாக உறங்குபவள் முகத்தில் மீண்டுமொருதரம் பார்வை பதித்து மீட்டவன் அதன் பிறகு வாகனத்தைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினான்.