மறுநாள்…
“ரோலின்ஸ் வயோமிங்ல இருந்து சோல்ட் லேக் சிட்டிக்கு!” என்றபடி, முன்னிருக்கையில் ஏறியமர்ந்திருந்தான், ஆரூரன்.
“போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் அண்ணா?”
“நாலு நாலரை மனித்தியாலமாகும். போற வழியில சுத்திப்பார்த்திட்டுப் போகலாம்.” பதில் சொன்னவன், “அங்க ‘அன்டலோப் ஐலன்ட்’ போறது தானே அங்கிள்?” நாதனிடம் கேட்கும் சாட்டில் திரும்பியிருந்தாலும் மனதின் எதிர்பார்ப்பு வேறாகவிருந்ததே! பரிதாபம்! அங்கு கவிதான் அமர்ந்திருந்தாள். வழமையாக அமரும் கடைசி இருக்கைக்குச் சென்றுவிட்டாள், இலக்கியா. முறுவலோடு தலையைத் திருப்பிக்கொண்டான்.
“ஓமோம், அங்க போயிட்டு ஏலுமெண்டா சிட்டியும் சுத்திப் பார்க்கலாம்.” கவிதான் பதிலும் சொல்லியிருந்தாள்.
‘தயவு செய்து பின்னால போயிருந்திரும், அப்பத்தான் இடையிடை ரிவர் வியூ மிரரால் சரி பார்க்கலாம். கைக்கெட்டின தூரத்தில இருந்தாலும் கொஞ்சமாத் திரும்பினாலே உம்மட சித்தப்பா, “என்ன தம்பி?” எண்டு கேட்டு மனிசர உண்டு இல்ல எண்டு ஆக்கிப் போடுவார்!’ முதல் நாளிரவு கேலியாகவே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
‘ஹலோ ஹலோ… எனக்குப் பிடிச்ச இடத்தில தான் நான் இருப்பன். அதென்ன என்ர சித்தப்பா பற்றி இப்பிடிச் சொல்லிப்போட்டிங்க! விடிஞ்சோன்ன அவரிட்ட சொல்லுறன் பொறுங்க!’ கதையை வளர்த்து, மாறி மாறி கடிபட்டபடி அரட்டையைத் தொடர்ந்தும் இருந்தார்கள். ஒருவர் மற்றவரை இப்படிச் சீண்டிக் கதைக்கையில், குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்கையிலெல்லாம் காலா காலமாக ஒன்றாகப் பழகியவுணர்வு, அவர்களுள்!
விழிகளை உள்க்கண்ணாடிக்கு நகர்த்தினான், வேந்தன். ஒற்றைப்புருவமுயர, பார்வையால் சீண்டினாள், இலக்கியா.
‘அவள எதிர்பார்த்துத் திரும்பினன் எண்டு கவனிச்சிருக்கிறாள்.’ உதடுகளில் முறுவல் படர கண்ணிமைப்பொழுதில் கண்ணடித்துவிட்டு பார்வையை விலக்கினான் என்றால், எதிர்பாரா நேரத்தில் அவன் செய்த அச்சிறு அன்புச் செய்கையை உணரவும் முடியவில்லை, அவளால். வேறு யாராவது கண்டிருந்தால் என்று விதிர் விதிர்த்துப் போனாள். பார்வையைப் பட்டென்று வெளிப்புறத்துக்குத் திருப்பியவளால் இயல்பாக உள்ளே பார்க்கவும் முடியவில்லை.
‘அக்காவோ சித்தப்பாவோ கண்டிருப்பினம், இவருக்குச் சேட்ட தானே? முதல் என்ன துணிவு!’ சிடுசிடுத்தவளால் அப்போதுதான் அவன் செய்கையின் இதத்தையே உணர முடிந்தது. பட்டென்று அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தாலும் முடியவில்லை. யன்னலில் நாடியைக் கொடுத்தபடி வெளிப்புறத்தில் ஒட்டி நின்றது, அவள் பார்வை.
தன் சிறு சேட்டையில் அவள் பட்டுவிட்ட அவஸ்த்தை வேந்தனின் முறுவலைத் தாராளமாக்கியது. பார்வை, அவள் பார்வையோடு மோதிவிடும் ஆவலோடு பலதடவை பின்னால் பாய்ந்தாலும் அவள் அசைந்தால் அல்லவா?
அருகிலமர்ந்திருந்த ஆருரனோ, “அண்ணா சொல்லிப்போட்டுச் சிரிச்சா நாங்களும் சேர்ந்து சிரிப்பம்.” என்று சொல்லி வேந்தனையே திடுக்கிட வைத்து விட்டான்.
சரேலென்று உள்ளே பாய்ந்த இலக்கியாவின் பார்வை சிணுங்கல் முறைப்போடு அவனைத் தொட்டு வராமலும் இருக்கவில்லை.
“இல்ல இல்ல ஒண்டும் இல்ல.” அவசரமாக மறுத்தவனைக் காக்கும் வகையில், “எல்லாம் பார்த்திட்டு சொப்பிங் போகலாம்.” இடையிட்டிருந்தாள், கவி.
“வாங்கினதுகள் காணாதா!? இந்த வேகத்துக்கு வாங்கினா வைக்க இடமில்லாமல் திண்டாடப் போறிங்க!” ரதி நக்கலாகச் சொல்ல, முறுவலோடு கவியைப் பார்த்தான், வேந்தன்.
“அப்ப இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு அக்கா.” தாமதியாது ஆரம்பித்து, தமக்கையின் பார்வையை மட்டுமில்லாது வேந்தனின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருந்தாள், இலக்கியா.
தன்னில் மோதிய அவன் பார்வைக்கு ஒற்றைப்புருவம் உயர்த்தி மூக்கைச்சுழித்துப் பழிப்புக்காட்டி அவனை ஒரு வழி பண்ணினாள்.
‘கண்ணடிக்கிறீரோ! இப்ப அடியும் பார்ப்பம், துணிவு இருந்தா?’ பார்வையால் சவால் விட்டபடி, “பேசாமல் இந்தக் காருக்கு டாடா காட்டிப்போட்டு வேற ஒண்டுக்கு மாறுவமே சித்தப்பா?” வலு தீவிரமாகக் கேட்டாள்.
அவன் பார்வை ஒரு கணம் மாறிற்று. இவள்தான் தவித்துப் போனாள். ‘திரும்பவும் கண்ணக்கிண்ண அடிச்சுப் போடுவாரோ!’ இதயம் தடதடத்துப்போனது.
கணத்தில் நகைத்தன அவன் விழிகள்! அவள் தவிப்பைக் கண்டுகொண்டானே!
“வேற கார் எல்லாம் சரிவராது அங்கிள், அந்தா அங்க போற ட்ரெயின் தான் சரிவரும். வேணுமெண்டா ஒழுங்கு செய்து தரவோ?” மீண்டும் பார்வையால் உரசினான்.
பாம்பு போலூர்ந்த சரக்கு ஏற்றும் புகையிரதத்தைக் காட்டி அவன் சொல்ல காருக்குள் சிரிப்பெழுந்தது.
“ஹலோ! இப்ப என்ன சொல்ல வாறிங்க? நாங்க அப்படி என்னத்த வாங்கிக் குவிச்சிட்டம் எண்டு இப்பிடிச் சொல்லுறிங்க?” வேந்தனுக்கு முறைப்போடு சீறலை அனுப்பிய வேகத்தில், “அக்கா என்ன நீங்க பேசாம இருக்கிறீங்க?” தமக்கையையும் துணைக்கழைத்தாள், இலக்கியா.
“அதுதானே வேந்தன், எண்டாலும் உங்களிட்ட இருந்து இத எதிர்பார்க்கேல்ல.” கவி ஒரு மாதிரிச் சொல்ல, “ஐயையோ நான் பகிடிக்கு!” பட்டென்று சொல்லிவிட்டான்.
“உங்கட தங்கச்சி சொன்னதுக்கு சும்மா சொன்னன்.” அவசரமாக அடுக்கினான்.
“ஹா…ஹா…நானும் பகிடிக்குதான் வேந்தன், விடுங்க.” என்ற கவி, “போய்ச் சேர எவ்வளவு நேரமெடுக்கும்?” பேச்சை வளர்த்தாள்.
இலக்கியா வாயைச் சுழித்துக் காட்டிவிட்டு அமர்ந்திருந்தாள்.