“இதெல்லாம் நிலக்கரி குவியல்கள் என்ன?” ஆரூரன் சுற்றுபுறத்தை வீடியோ எடுத்தபடி கேட்டான்.
“ஓமடா, கார்பன் கண்ட்ரி ட மெயின் டவுன் தானே ரோலின்ஸ். நிறைய நிலக்கரி இருக்கிற இடமாம் இது. அதுதான் கார்பன் கண்ட்ரி.” கவி சொல்ல, “என்ன இண்டைக்கு கூகிள் வாய் திறக்க முதல் கவிக்கா சொல்லிப்போட்டா!”
இலக்கியாவின் கிண்டலில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள், வேந்தனும் தான்.
“உனக்கு வேந்தனோட தனகாட்டி பொழுது போகாது என்ன?” கவி இயல்பாகச் சொல்ல, “பிள்ள என்ன கத இது?” அடிக்குரலில் கண்டித்தார், சுகுணா.
மீண்டும் பின்னால் பாய்ந்த வேந்தனின் பார்வையில் எக்கச்சக்க நகைப்பு!
இலக்கியாவின் முகத்தில் தான் திரை விழுந்திட்டு! ‘தனகிறது எண்ட ஒரு சொல்லுக்கே அம்மா இப்பிடிக் கண்டிக்கிறாவே, நான் விரும்பிறது தெரியவந்தா?’ வேந்தனுடனான சுமுகத்தில் ஒருவித இதமான மயக்கத்திலிருந்த உள்ளம் தவிப்பில் விழுந்து போயிற்று!
அவளின் மௌனத்தை உணராதே வாகனத்துள் கலகலப்பு!
கரடுமுரடான நிலப்பரப்பு என்றாலும் ஒவ்வோரிடமும் ஒவ்வொருவகையில் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ள, அமெரிக்காவின் பழமை வாய்ந்த வரலாற்றிடங்கள் ஊடாகப் பயணப்பட்டவர்கள் மதியம் தாண்டிய பொழுதில் அன்டலோப் ஐலன்டை அண்மித்தார்கள்.
“நம்மட பண்ணைப் பாலத்தால போறது போல இருக்கு!” வெளிப்புறத்தில் பார்வையிருக்கச் சொன்னார், சுகுணா.
“போங்கம்மா, அங்கயும் இப்பிடித்தான் சுத்தி மலை முகடோ? அங்க பாருங்க உச்சி முகடுகளில மேகங்கள் மூடிக்கிடக்க எவ்வளவு வடிவாக்கிடக்கெண்டு!” சீண்டினாள் கவி, வீடியோ எடுத்தவாறே!
“நான் என்ன அதையோ சொன்னன், ரெண்டு பக்கமும் இப்பிடித் தண்ணி கிடக்க நடுவில பாதை போகுதல்லா, அதச் சொன்னன்.” என்றார் அவர்.
“ஃபார்மிங்டன் பே…” தொடங்கிவிட்டு முறுவலோடு நிறுத்திவிட்டான், வேந்தன். அவன் பார்வை பின்னால் பாய்ந்து மீண்டது.
“எங்கடா கூகிள் இன்னும் சத்தம் போடேல்ல எண்டு பார்த்தன்.” இலக்கியாவின் சீண்டல்.
“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள்.
அவள் சேட்டைகளை உணர்ந்தவனுக்கு காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு …
ஆசையோடு பயணப்படத் துணிந்தது, மனதின் எண்ணவோட்டம்!
‘கல்யாணம் செய்த கையோட அவளோட இப்பிடி எல்லா இடமும் வரவேணும்.’ மீண்டும் மனதுள் தீர்மானம் செத்தவன் பார்வை மீண்டுமொரு முறை அவள் விழிகளைத் தொட்டு வந்தது.
அவள் பார்வை சுற்றத்தைக் கூட இரசிக்கவில்லை… ரிவர் வியூ மிரரில்! நெற்றியை மேலேற்றி இறக்கியவளை என்ன செய்வது!
“என்ன சத்தமே இல்ல? மறந்து போனிங்களோ? அப்பிடியே ஓரமா நிப்பாட்டிப்போட்டு பார்த்திட்டுச் சொல்லுங்க.” விடாது தொடர்ந்தாள்.
“போதும் டி நிப்பாட்டு!” கவிதான்.
“ஹா…ஹா… பரவாயில்ல, நீங்களே ‘அன்டிலோப் ஐலன்ட்’ எண்டு கூகிள்ல தட்டி வாசியுங்கோவன், சும்மா கையைக் கட்டிக்கொண்டு இருக்காம.” வேந்தன் சொல்ல, “ஹலோ ஹலோ…காரை ஓரம் கட்டுங்க, நான் ஓடுறன் நீங்க கையைக் கட்டிக்கொண்டு இருந்து வாங்க.” வெடுக்கென்று சொன்னாள், இலக்கியா.
“இலக்கியா…” நாதன்.
“பகிடி சித்தப்பா! அவருக்கு அந்தளவு விளப்பம் இல்லையா என்ன”” விழிகள் சுருங்க வாயடித்தாள்.
“நீங்க சொல்லுங்க வேந்தன் நாங்க கேட்கிறம், இவைக்கு வேற வேல இல்ல.” ஆருரனின் தாய் இடையிட்டார்.
“இதில பெரிசா என்ன சொல்லக் கிடக்குச் சித்தி? “ ‘ஃபாமிங்டன் பே’ க்கு நடுவால நாம போய்க்கொண்டு இருக்கிறம், அவ்வளவும் தான்.” என்ற இலக்கியா, “சரி சரி முறைக்காதீங்கப்பா! நானும் கூகிள் சொல்லறது போலவே சொல்லவோ!” என்ற வேகத்தில், “யூ எஸ் ஏ ட ஸ்டேஸ் ல ஒண்டு யூட்டா(Utah); அதிண்ட ஹோம் டவுன் தான் ‘சோல்ட் லேக் சிட்டி’. இப்ப சரியோ!” இராகம் இழுத்தாள்.
“அடிவாங்கப் போறா ஒராள்.” அஜி.
“கடவுளே! இதையே கூகிள் சொன்னா வாயைத் திறந்து கொண்டு கேட்பீங்க நான் சொன்னா நக்கல் நையாண்டி!”
“நீ இப்ப என்னட்ட வாங்குவ…அதென்ன கூகிள்?” சிடுசிடுத்தாள் கவி.
“பார்ரா! குடும்பமே நமக்கு எதிரா திரும்புது!” வியந்தவள் முகம் கனிந்தது கிடந்தது. அவன் மீது தன் குடும்பம் காட்டும் அன்பு அவள் மனதுக்கு அத்துணை இதமாகவிருந்தது.