ஆரூரன் அவள் தலையைப் பிடித்து ஆட்டி எதுவோ கேட்பதும், பின்னர், தோளில் கைபோட்டு பாசத்தோடு அணைத்து விட்டதையும் கண்டவனிலிருந்து பெருமூச்சுப் பலமாகவே வெளியேறியது. சட்டென்று அவனைப் பார்த்துவிட்டு திரும்பிய சுகுணா, “போகேக்க இவையள் ஆரிட்டையாவது மாறி ஓடக் குடுங்க தம்பி, நீங்களே ஓடுறது கஷ்டம்.” என்றார், பாசமாக.
“அதெல்லாம் பிரச்னையே இல்ல ஆன்ட்டி!” இலேசாய் முறுவலித்தவன் பார்வை மட்டும் கவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு முன்னால் ஓடுபவளில்.
நாலே எட்டில் அவளை அணுகி அவள் மறுபுறமாய் தோளோடுதோள் உரசியபடி நடக்க வேண்டும் போலிருந்தது. இதுவரை, நினைத்த ஒரு விசயத்தைச் செய்திட இப்படித் திண்டாடியதில்லை. அது நடக்காமல் போனதுமில்லை. அவன் காதலில் மட்டும் பலவேளைகள் மனதோடு எல்லாமே நின்றுவிடுகின்றதே! வலு சோகத்தோடு எண்ணியவன் மறுநொடி தன்னைத் தானே குட்டிக்கொண்டான்.
‘அதென்ன பலவேளைகள்? ஒரு சில நேரங்கள் மனம் ஆவலோட எதிர்பார்க்கிற சில நொடித் தனிமைகள் கூட கிடைக்கிறதில்ல, அவ்வவளவும் தான்.’ எண்ணமோடியது. ‘மின்னல் வேகத்தில் எல்லாமே நடக்க வேணும் என்ற பேராசை வேந்தன் உனக்கு’ மனதின் குரலில் உதடுகளில் உரசிய முறுவலோடு கைபேசியை எடுத்தவன், ‘நானும் வரவா’ குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு அவளையே பார்த்தபடி முன்னேறி நடந்தான்.
அவள் கைபேசியைப் பார்க்கவில்லை. ‘இலக்கி லவ் யூ’ அடுத்தது.
இப்போது எடுத்துப் பார்த்துவிட்டு சரேலென்று திரும்பியவள், அதேவேகத்தில் முன்னால் திரும்பிவிட்டாள், பதிலொன்றும் அனுப்பவில்லை.
‘பார்ரா! அக்காளும் தங்கச்சியும் அடிபட்டுப்போட்டு என்னில கோபம் சாதிக்கிறாள்!’ முறைத்தான்.
அதேநேரம், இவர்களைக் கண்டுவிட்டு முன்னே சென்றவர்கள் நின்று இவர்களோடு சேர்ந்து நடந்தார்கள்.
“என்ன கவி உம்மெண்டு வாறா?” ஆருரனின் அன்னை, சுகுணாவைப் பார்த்துக் கேட்டார்.
“அக்காவும் தங்கச்சியும் கொழுவல்!” என்றவர், “அவள் சும்மா பகிடிக்கு ரெண்டு வார்த்த சொல்ல முதல் இவா குத்திப் போட்டா!” சொன்னவர் குரலில் அப்போதும் வருத்தம்.
“அம்மா என்ன நீங்க, அவள் சும்மாவோ நிண்டவள்?” கவி தொடங்க, “என்ன தான் எண்டாலும் வந்த இடத்தில இதெல்லாம் என்ன கவி?” நாதனும் கண்டிப்போடு கேட்டார்.
“அதான் இலக்கிக்கா கண்ணெல்லாம் சிவந்திருந்தது. கேட்க, ‘பூச்சியப் பார்த்துப் பயந்திட்டன் டா’ எண்டுட்டு ஓடிட்டா!” ஆரூரன் குரலிலும் ஆதங்கம்.
கவிக்கு உண்மையில் கோபம் வந்திட்டு. முகம் இறுக்கிப் போயிற்று.
“என்னவோ நான் அவளக் கொடுமைப்படுத்தினது போல கதைக்கிறீங்க. அதுவும் ஒரே ஒரு தட்டு.” என்றவள், “இறுக்கி எல்லாம் அடிக்க நினைக்கேல்ல, அது ஊண்டிப் பட்டுட்டுது தான்.” இறங்கிய குரலில் சொன்னாள்.
“அதும் வேந்தனிட அம்மா லைனில நிக்கவே யாழ் ட்ரவல்சில சொல்லி வேலைய விட்டுத் தூக்குவன், சரியில்லாத இடத்தில கொண்டுவந்து வேணுமெண்டு நிப்பாடி இருக்கிறீங்க அப்பிடி இப்பிடிக் கதைச்சதில தான்…எனக்குக் கோபம் வந்தது.” படபடத்தாள். இருந்தாலும் தன் செயல் அதிகம் என்ற எண்ணம் அவளுள் வந்துவிட்டது. அதை வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.
“இதென்ன நீங்க கவி? அவா பகிடிக்குக் கதைக்கிறது எண்டு உங்களுக்குமே தெரியும், எனக்கும் தெரியும்.” என்றுவிட்டான், வேந்தன். குரலில் தெளிவாகவே கண்டிப்பு.
கவிக்குக் கண்கள் கலங்கிற்று!
“சரி சரி விடுங்க, பாக்க எவ்வளவு இருக்கு, இதுக்க தேவையே இல்லாமல் பிரச்சனைகள்.” இடையிட்ட மாறன், “அங்க பாருங்க, அன்டிலோப்! அது அன்டிலோப் தானே?” பேச்சை மாற்றிவிட்டான். அதன் பிறகு அச்சுற்றத்தில் தொலைந்துவிட்டார்கள். இருந்தாலும் கவியின் முகத்தில் விழுந்துவிட்ட திரை அகலவேயில்லை.
அங்கே ஓரிடத்தில் கௌ பாய்ஸ் மாடுகளுக்கு கயிறு போடுவது போல செய்து வைத்திருக்க, முன்னே ஓடிவந்த இலக்கியும் கவினும் கயிற்றைச் சுழற்றி அங்கிருந்த மர மாடுகளின் கழுத்தில் போட முயன்று கொண்டு நின்றார்கள். இவர்களும் சென்றவர்கள் அதை ஒரு விளையாட்டாகவே மாற்றி விட்டார்கள்.
அங்கு நின்ற பராமரிப்பாளர்களுள் ஒருவரான வயதான பெரியவர் இலாவகமாக எப்படி கயிற்றை வீசலாமென்று சொல்லிக்கொடுக்க இளையவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுமே அதைச் செய்து பார்ப்பதில் இறங்கிவிட்டார்கள்.
இலக்கியா நகர்ந்து சென்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்க, அவளோடு இருவார்த்தைகள் கதைக்கத் கிடைத்தால் என்று சந்தர்ப்பம் பார்த்திருந்த வேந்தனும் புகைப்படம் எடுக்கும் சாட்டில் நகர நினைத்தான். அதற்குள், நகர்ந்திருந்தாள், கவி.
‘திரும்ப என்னத்துக்குப் போறா?’ அவன் பார்வை அவர்களில்தான். கவியோ, போன வேகத்தில் தங்கையைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
திடுக்கிட்டுவிட்டு, தமக்கையை உணர்ந்ததும் கட்டிப் பிடித்துக்கொண்ட இலக்கியாவுக்கு விழிகள் உடைப்பெடுத்தன. சிறிது நேரம் அவள் மனம் பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும்.
“சொறிடி சும்மா தட்ட அது நல்லாப் பட்டிடுட்டு. சொறி செல்லக்குட்டி!” கண்ணீரோடு சொல்ல, “பச் விடுங்க…இப்ப என்ன நீங்கதானே! வேணும் எண்டா இன்னொரு அடிதாங்கோ வாங்கிறன்.” என்றவளை மீண்டும் அணைத்துக்கொண்டவள், “எனக்கு …எனக்கு ஏனோ தெரியேல்ல சரியாக் கோபம் வந்திட்டு டி…நீ நீ ஒண்ணும் நினைக்க இல்லையே…” என்று ஆரம்பிக்கவும், “சண்டை சமாதானம்!” ஓடிவந்து தமக்கைகளை வளைத்துப் பிடித்திருந்தான், ஆரூரன்.
“ஆரடா சண்ட போட்டது? சின்னதா ஒரு சாட்டுக் கிடைச்சோன்ன என்னை ஒரு வில்லி ரேஞ்சுக்கு ஆக்கப் பார்த்தீங்க என்ன?” கவி வள்ளென்று பாய, “கடவுளே! எண்ட தோள் எனக்கு முக்கியம்!” ஆரூரன், கரத்தால் தோள்களை மறைத்துக்கொள்ள, கலீரென்று சிரித்தாள், இலக்கியா. அவர்களையே பார்த்திருந்த வேந்தனின் விழிகள் அவனையும் மீறி சற்றே கலங்கிப்போயின. சுகுணாவோ, உருண்டு விழுந்த விழிநீரைத் துடைத்தபடி மகள்களையே பார்த்து நின்றார்.
அதன் பின்னர், கவியின் ஆசைப்படி கடைதொகுதியொன்றினுள் புகுந்தவர்கள் ஒருவாறு வெளிவந்து, அருகிலேயே உணவையும் முடித்துவிட்டு, இருள் சூழ்ந்த நேரம் தங்குமிடம் செல்லும் வரை கலகலப்புக்குப் பஞ்சம் இருக்கவில்லை.