பதினோராவது நாள், ஆறரைக்கெல்லாம் காரில் ஏறிவிட்டார்கள்.
வேந்தனும் இவர்களோடுதான் தங்கியிருந்தான். பயணம் முடிய இன்னும் சிலநாட்கள் தானே! இவர்கள் தங்கவுள்ள விடுதிகளில் அவனுக்கென்று தனியாக அறை கிடைக்கவில்லை என்றதுமே, தம்முடனே தங்கலாமென்று சொல்லிவிட்டார், நாதன்.
அவன் மறுப்புச் சொல்லவில்லை. சொல்லுவானா என்ன?
“வேந்தன் இண்டைக்கு நான் ஓடுறன்.” வாகனத்தை மாறன் கைவசப்படுதியிருக்க அருகில் அமர்ந்துகொண்டானவன்.
“இதோ…’லொஸ் வேகஸ்’ நோக்கிய பயணத்தில் எங்கள் இளம் வீரர் மாறன் சித்தப்பாவின் கரங்களில் கார் வழுக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. அடுத்து வரும் ஆறு மணிநேரப் பயணமும் அவர் கைகளில் கார் வளைந்து நெளிந்து விளையாடும்!” ஆரூரன் நீட்டி முழங்கியதில் சிரிப்பொலியெழுந்தது.
“டேய்! என்ன சேட்டையாடா?”
“இப்ப நல்லாத் தானே சொன்னன் மாறன் சித்தப்பா! அதோட, இளம் வீரர் எண்டு வேற சேர்த்திருக்கிறன்.” ஆரூரன், குரலில் சேட்டை!
இளையவர்களுக்குச் சமமாக, “நானும் உங்களின்ட தலைமுற தான்; ஒரே ஒரு பிள்ள பிறந்தோன்ன உங்கட அப்பா ஆக்களிட லிஸ்டில சேர்த்திருவீங்களே!” எப்போதுமே சொல்பவன், அவன்.
“சேர்த்தாய் சேர்த்தாய்! நக்கல் என்னடா உங்களுக்கு? டேய்! நீங்க சொன்னாலும் சொல்லேல்ல எண்டாலும் நான் இளம் பெடியன் தான்…என்ன அஜி சொல்லுறீர்?” சந்தர்ப்பம் கிடைத்தால் விடவே மாட்டான்; மனைவியை வம்பிழுத்தான்.
“இவருக்கு வேற வேலை இல்ல.” அருகிலிருந்த சுகுணாவிடம் சொன்ன அஜியின் முகம் சிவந்திட்டு! உள்க்கண்ணாடியில் பார்த்த கணவனை முறைத்தாள்.
“ஹா..ஹா…” சிரித்தபடி காரைச் செலுத்தினான், அவன்.
“எல்லாம் சரிதான் சித்தப்பா, அரிசோனாவுக்குக் கிட்டப் போக வேந்தன்ட்ட குடுத்திருங்கோ ப்ளீஸ்!” திடீரென்று இடையிட்டாள், கவி.
“அது ஏனாம்?”
“இல்ல …அது நெளிஞ்சு வளைஞ்சு போற றோட்டு வேற, ரிஸ்க் வேணாம் எண்டுதான்.” அவள் கிண்டலடிக்க, “ஓமோம், நீங்க எல்லாம் ஓடேக்க பின்னால இருந்தம் பாருங்க, அப்பச் சொல்லுவீங்க தான். என்ன நாதன் ணா?” தமையனையும் உரையாடலுள் இழுத்துவிட்டான், மாறன்.
அவர்கள் இப்படியே மாறி மாறி கலகலத்தபடி வர, வெளிப்புறமாகத் திரும்பிக் கொண்டது வேந்தன் முகம். பின்னால் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்படிப் பார்ப்பதாம்? திரும்பினால் முதலில் நாதனின் பார்வையை அல்லவா சந்தித்திட வேண்டும்!
‘பச்!’ உள்ளத்தினுள் முனகலோட அலுத்துக்கொண்டான்.
முதல் நாள் நடந்த விசயத்துக்குப் பிறகு சகோதரிகள் தம்முள் இயல்பாகிவிட்டாலும் இலக்கியாவின் கலகலப்புக் காணாது போயிருந்ததை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. முகத்தில் யோசனையோடு தான் வளைய வந்திருந்தாள். அதுமட்டுமில்லை, ஒரு நிமிடமாவது தனிமையில் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று இவன் பார்வையால் தொடர, அவளோ, இவன் புறமே திரும்பவில்லை.
இரவு, மாறன், நாதன், ஆரூரன் என்று எல்லோரும் இருக்கையில் குறுஞ்செய்தியனுப்பவும் சங்கடமாக இருந்தது. அப்படியிருந்தும் அழைத்திருந்த அன்னையோடு கதைத்த கையோடு, அறையோடு ஒட்டியிருந்த குட்டி பால்கனியில் நின்றபடியே அழைத்தும் பார்த்தான். மறுபுறமோ, கைபேசி அணைப்பிலிருந்தது.
“இண்டைக்குப் பே களைப்பு! போனோன்ன நித்திர தான்.” காரைவிட்டு இறங்கும் போதே சொல்லியிருந்தாளே! ‘நித்திரை போல!’ என்றெண்ணி விட்டுவிட்டான்.
காலையிலும் எப்போதடா காணலாமென்று காத்திருக்க, கடைசி நேரத்தில் ஓடி வந்து பின்னால் சென்றமர்ந்து கொண்டாள். அவன் வாயிலோரமாகத்தான் நின்றுகொண்டிருந்தான். அருகில் ஆரூரன் நின்றிருந்தாலும் இவன் பார்வை அவளையே வட்டமிட்டது. அவளோ, அப்படியொருவன் நிற்கிறான் போலவே காட்டிக்கொள்ளவில்லை. தடித்துப் போயிருந்த அவளின் விழிமடல்கள் இவன் கவனத்தில் படிந்து நெற்றியைச் சுருக்கியது.
மறுபுறமாகச் சென்று நின்று கொண்டு விறுவிறுவென்று பேசியில் தட்டி அனுப்பினான்.
காலை வணக்கத்தோடு ஆரம்பித்து, ‘என்ன நடந்திட்டு உமக்கு? இரவு அழுதீரா என்ன?’ என, வந்திருந்த செய்தியைப் பார்த்தவள் பார்வை மறுநொடியே அவன் முதல் நின்ற இடம் நோக்கிப் பாய்ந்து, சுற்றி வந்து அவனில் பட்டுவிட்டுத் தழைந்திட்டு!
ஏதாவது பதில் அனுப்புவாளெனத் தாமதித்தவனுள் காலையின் இதத்தை விரட்டி எரிச்சல் சுரந்தது.
‘ஏன் இலக்கியா? நீயும் உன்ர அக்காவும் பிரச்சனப்பட்டீங்க, இப்ப அவவோட அப்பிடி வழியிற, என்னோட ஏன் முறைக்கிற? நேற்றுப் போட்ட மெசேஜ்க்கு இன்னும் பதில் வரேல்ல. இரவு ஃபோன் எடுத்தா எடுக்கேல்ல.’ விறுவிறுவென்று தட்டி அனுப்பினான். அதே வேகத்தில் நிமிர்ந்து அவளையே பார்த்து நின்றான். அவளோ, கைபேசியைப் பார்க்கவேயில்லை.
பெருமூச்செறிந்தான் வேந்தன்.
“பக்கத்தில சும்மா இருந்து வாறது பஞ்சியா இருக்கோ வேந்தன்? பெருமுச்சு எல்லாம் விடுறீங்க!” திடுமென்று மாறன் கேட்கவும் நினைவுகளிலிருந்து மீண்டு, “இல்ல இல்ல சும்மாதான்.” முறுவலோடு சமாளித்துவிட்டான். அதேவேகத்தில், “கண்ட்ரி சைட் தானே…” வெளியில் பார்வை இருக்கத் தொடங்கினான்.
“ஓம்! ஆனாலும் நீல வானமும் எந்தப்பக்கம் பார்த்தாலும் சுற்றித் தெரியிற மலைத்தொடரும் அத முட்டிப்போற சின்ன சின்ன பஞ்சு மேகத் திட்டும்…அப்பாஆ! வேற உலகம் தெரியுது!” பின்னாலிருந்து பதில் சொன்னாள், கவி. குரலில் சந்தோசமும் கனவும்.
“உண்மைதான்!” மற்றவர்களும் ஆமோதித்தார்கள். அப்போதும் இலக்கியாவின் குரல் எழும்பவேயில்லை. பொறுக்கமுடியாது திரும்பிப் பார்த்தே விட்டான். அவளோ, வெளிப்புறம் பார்வையிருக்க அமர்ந்திருந்தாள். முகத்தில் சிந்தனைச் சுருக்கம்.
“நானும் முன்னுக்கு…” கைக்கெட்டும் தூரத்தில் கவிக்கருகில் அமர்ந்திருந்த கவின் கையை நீட்டினான். தகப்பன் முன்னாலிருக்க அவனால் பின்னாலிருக்க முடியவில்லை.
“நல்லாத்தான் இருக்கும்.” அஜி சமாதானம் செய்ய, எட்டி அவன் தலையில் தடவிவிட்டு முன்னுக்குத் திரும்பிவிட்டான், வேந்தன்.
இடையில் நிறுத்தி காலையுணவை முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தவர்கள் பின்னரும் ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தபடி பயணப்பட்டார்கள்.