ரோசி கஜனின் இயற்கை – 28 – 2

இதுவரையும் என்னதான் வெயில் கொழுத்தினாலும் பார்வைக்கேனும் பச்சைப் பசேல் என வெளிப்புறம் குளிர்மை தந்துகொண்டிருந்தது. இப்போதோ, அது மெல்ல மெல்ல மாறி, காய்வனவான தோற்றத்திலிருந்தது வெளிப்புறம். இந்த மாற்றத்தை மிகத் தெளிவாகவே உணரவும் முடிந்தது.

மதியப் பொழுது ஏற ஏற புகைப்படங்கள் எடுக்கவென்று இறங்கிய வேகத்தில் காரினுள் பாய்ந்தேறினார்கள், இளையவர்கள். 

“என்ன இப்பிடி அனலடிக்குது!” என்ற சுகுணாவிற்கு, “போகப்போக இன்னும் கூடும் ஆன்ட்டி. அதும் ‘லொஸ் வாகேஸ்’ தாண்ட, ஹை வே பாலைவனம் போல எரிக்கும்.” என்ற வேந்தன், தான் சொல்லி முடிக்க முதல், “கூகிள் தொடங்கிட்டார்.” என்று பரிகாசம் செய்யும் இலக்கியாவின் குரலொலிக்காகக் காத்திருந்து ஏமாந்தான்.

 “என்ன இலக்கிம்மா நித்திர போல!” மாறன் சொல்ல, பட்டென்று திரும்பியிருந்தான், வேந்தன்.

கடந்த ஒரு மணிநேரமாக கார் நிறுத்தப்படாது ஓடிக்கொண்டிருக்க அவளும் நல்ல நித்திரைக்குப் போயிருந்தாள்.

“ரோட் ட்ரிப் வாறது, பிறகு தூங்க வேண்டியது!” கேலியாகச் சொன்னபடி அவளை எழுப்ப முனைந்த ஆருரனைத் தடுத்தார், சுகுணா.

“விடுங்க தம்பி, பிள்ள இரவும் வடிவாத் தூங்கேல்ல…ஒரே எழும்பித் திரிஞ்சவள், கொஞ்சநேரம் தூங்கட்டும்.” சொன்ன சுகுணாவின் பார்வை திரும்பிப் பார்த்த மூத்தமகளை முறைத்தது.

“அம்மா! இப்ப ஏன் என்ன முறைக்கிறீங்க? நானா அவளத் தூங்க விடேல்ல?” சிடுசிடுக்கும் தொனியில் கேட்டிருந்தாள், கவி.

“பச் ! நேற்று நீ அப்பிடி நடந்து கொண்ட பிறகு அவள்ட முகமே சரியில்ல.” சுகுணா மனக்குறையோடு சொல்லிகொண்டிருக்க, குறுக்கிட்டிருந்தாள், கவி.

“ஐயோம்மா! அவளே அதையெல்லாம் மறந்திட்டு இருந்தாலும் நீங்க இருக்க விடமாட்டிங்க போல! முதல் நான் ஒண்டும் பிழையாவும் சொல்லேல சரியோ!” அடிக்குரலில் சொன்னவள், “வர வர உங்களுக்கு என்னை விட அவள் தான் முக்கியம்!” ஒருமாதியான குரலில் சொன்னவள் விழிகளுமே தாயில் குறையோடு படிந்து விலகின.

“இவளப்   பாருங்க,  எதையும் எதையும் முடிச்சுப் போடுறாள் எண்டு!”  அருகிலிருந்த ரதியிடம் சொல்ல, “விடுங்க அண்ணி, பயணம் வந்த இடத்தில இப்படியான கதைகள் தேவையே இல்ல.” குரல் கொடுத்திருந்தார், நாதன்.

“பச்!” சலித்தவாறே திரும்பி சின்னமகளைப் பார்த்த சுகுணா வாயினுள் எதையோ முணுமுணுக்க, மீண்டும் பின்னால் திரும்பி முறைத்தாள், கவி.

அதன் பிறகு வாகனத்தில் சிறு அமைதி! அது என்னவோ வேந்தனுள் பெரும் பாரமாக இறங்கியது. வாகனத்தை நிறுத்தி இலக்கியாவைத் தட்டி எழுப்பி அவளின் மனக்கலக்கத்தின் காரணமறிந்து அதைப் போக்கிவிட்டே பயணத்தை தொடர வேண்டும் போல் பரபரத்துப் போனான்.

அதைச் செய்ய முடியாத தன்னிலையில் வெறுப்பாகவும் இருந்தது. மீண்டும் தன்னையுமறியாது திரும்பிப் பார்த்தான். அவன் சிறு அசைவில் நிமிர்ந்த கவியின் பார்வையில் மோதியது வேந்தன் பார்வை. மறுகணமே திரும்பிவிட்டான்.

வாகனுத்துள் நிலவிய அமைதியைக் கிழித்தபடி இசைத்தது, சுகுணாவின் கைபேசி.

“பெரியம்மா தான் எடுக்கிறா!” ஏற்றவர், “வந்து கொண்டிருக்கிறம், ஒண்டு ஒண்டரை போல வந்திருவம் பெரியம்மா.” கதைக்க ஆரம்பித்தார்.

“இப்ப எந்த இடத்தில நிக்கிறம் ஏண்டா…” வெளியே பார்வை செல்லக் கேட்க, “அரிசோனாக்குக் கிட்ட வந்திட்டம்.” வேந்தன் சொல்ல, அதைச் சொல்லிவிட்டு வைத்தவர், “அங்க, சமையல் எல்லாம் முடிச்சாச்சாம்; நம்மளப் பார்த்துக்கொண்டு இருக்கினமாம்.” என்றபடி வெளியில் விரிந்த அழகில் பார்வை பதித்தவர், “இலக்கிம்மா எழும்பிப் பார், வெளிய நல்ல வடிவாக் கிடக்கு!” பின்னால் திரும்பிக் குரலும் கொடுத்தார்.

ஆரூரன் தட்டியெழுப்ப, பட்டென்று விளித்தவள், “அப்படியே தூங்கிப் போனன்.” மெல்லச் சொன்னபடி, வாகனத்தினுள் விழிகளைச் சுழல விட்டவள், திரும்பிப் பார்த்த வேந்தனின் பார்வையிலும் கணம் உரசிவிட்டே வெளிப்புறம் பார்த்தாள்.

அச் சிறுபொழுது போதுமாகவிருந்தது, வேந்தனுக்கு! நெற்றி மேலேற என்னவென்பதாக விசாரித்தவன் விழிகளில் தெறித்த கரிசனையில் இலக்கியாவின் கண்கள் கலங்குவேனாம் என்று அடம்பிடித்து நின்றன.

நல்லவேளையாக அவள் கவனத்தைத் திசை திருப்பியிருந்தது, கவியின் குரல்.

“நீ அப்பிடியே தூங்கின  சரி, அதுக்கு இங்க எண்ட  தல உருண்டதுதான் மிச்சம்!” என்ற தமக்கையின் குரல் பேதம் இலக்கியாவின் நெற்றியைச் சுருக்கியது. அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“ஏன் அக்கா என்ன நடந்தது?” அவள் ஆரம்பிக்க, “அதொண்டும் இல்ல, நேற்று கவிக்கா அடிச்ச அடியில இரவு முழுசும் நித்தா இல்லாமல் சுத்தினீங்களாமே! பெரியம்மா, கவிக்காக்கு நல்ல டோஸ் விட்டா!” சத்தமாகச் சொன்ன ஆரூரன், “கவிக்கா இப்ப பே விசரில இருக்கிறா எதுக்கும் தள்ளியே நில்லுங்க, மற்ற தோள் மூட்டு கழண்டு வந்தாலும் வந்திரும்!” காதுக்குள் குசுகுசுத்தான்.

“உன்ன…” சகோதரன் தலையில் வலிக்காது குட்டுக் கொடுத்துவிட்டு, “மா, நான் எங்க இரவிரவா எழும்பித் திரிஞ்சன்? ஒருக்கா எழும்பி வோஷ் ரூம் போனன், அவ்வளவும் தான்.” என்றுவிட்டு, “அக்கா நான் அத அப்பவே மறந்திட்டன், சும்மா விடுங்கோ!” என்றவள், “வாவ்!” வெளியில் பார்த்தபடி கைபேசியை எடுத்து வீடியோ மோடுக்கு மாற்றினாள்.

error: Alert: Content selection is disabled!!