“இதப் பாக்காமல் வேற கத எதுக்குச் சொல்லுங்கோ! கடவுளே! எனக்கு வேற கிரகத்தில நிக்கிறது போலவே இருக்கு! எங்கயாவது நிப்பாட்டினா போட்டோஸ் எடுக்கலாம்.” இதழ்கள் வார்த்தைகளை உதிர்த்தாலும் கண்கள் இயற்கை அதிசயத்தை இரசிப்பதையும் கைபேசியினுள் உள்வாங்குவதையும் இம்மி பிசகாது செய்தன.
“அந்தா அங்க நிப்பாட்டலாம்.” வேந்தன் சொல்ல, பாதையோரமாக நிறுத்தினான், மாறன்.
“கவின கீழ இறக்கி விட வேணாம்.” என்றபடி இறங்கினான், வேந்தன்.
“ஓம் அஜி, நில்லுங்க நான் வாறன்.” இறங்கிய மாறன், மகனைத் தூக்கிக்கொண்டான்.
“நோ அப்பா! இறக்கி விடுங்க!” நெளிந்தான் அவன்.
“டோய்! பக்கத்தில வாகனங்கள் என்ன வேகமாப் போகுது, இதுக்க இவர இறக்கி விடட்டாம்!” வெருட்டல் போட்டாள், கவி.
எல்லோரும் இறங்கி, கழுத்துச் சுளுக்கும் வரை அண்ணாந்து வானுயர்ந்து நின்ற பாறை மலைத்தொடர்களைப் பார்த்தார்கள்.
“இந்த மலைகளைக் குடைந்துதான் ரோட்டுப் போட்டிருக்கு என்ன?” மாறனும் நாதனும் கதைத்துக்கொண்டார்கள்.
இளையவர்கள் ஓடிச் சென்று தொட்டுப் பார்த்தார்கள். அவற்றோடு ஒட்டி நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
“ரொக்கி மவுண்டன் பக்கம் இருக்கிற மலைகள் போலத்தான், அதைத் தூரத்தில கண்டம். இது இப்பிடி பக்கத்தில! அம்மாடியோவ்!” வியப்போடு கூவினாள், கவி.
அவர்களின் சந்தோசம் பார்த்த நாதன் மிக்க மனநிறைவாக உணர்ந்தார்.
“உண்மையா இந்தப் பயணம் வெளிக்கிட எவ்வளவோ யோசிச்சம் தம்பி, அதும் கவின் சின்னவர் வேற. அண்ணாவுக்கும் தம்பிக்கும் லீவும் கிடைக்கேல்ல. அவை இல்லாமலா எண்டும் இருந்திச்சு.” வேந்தனிடம் சொன்னார்.
அவன் பார்வையும் அவர்களில், அதுவும் இலக்கியாவில். போட்டிருந்த குளிர்க்கண்ணாடியின் துணையில் தயங்காது அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தான்.
“ஆனா வந்தது நல்லதாப் போச்சு, பாருங்க அவையிட சந்தோசத்த!” பேச்சில் கலந்து கொண்டான், மாறன்.
“ஓம், என்ன எண்டாலும் இந்தளவுக்கு இந்தப் பயணம் சந்தோசமா போகுதெண்டா அது தம்பியாலதான்!” பாசத்தோடு தொடர்ந்தார், நாதன்.
“இதில நான் என்ன அங்கிள் செய்தன்? நீங்க எல்லாரும் தான் காரணம். எல்லாரும் நேரத்தில நல்ல கவனமா இருக்கிறது பெரிய விசயம்; அதுதான் முக்கியமும். ஒரு நாள் வெளிக்கிடப் பிந்தினாலும் அண்டைக்கு மட்டும் இல்ல, அடுத்தடுத்த நாள்ப் பயணங்களும் பிழைக்கும்.” என்றான், வேந்தன்.
“நீங்க என்ன சொன்னாலும் உங்களோட வந்ததில எனக்குப் பொறுப்பில பாதி குறஞ்ச உணர்வு தம்பி. நன்றி எண்டு எல்லாம் சொல்லிட்டுப் போக ஏலாது, இனி எங்க வெளிக்கிடுறது எண்டாலும் உங்களோட தான்.” அவன் தோளில் கைபோட்டபடி நாதன் சொல்ல, “எனக்கும் உங்களோட வந்ததில என்ர குடும்பத்தோட வந்த உணர்வுதான் அங்கிள்!” முறுவலோடு சொன்னான், வேந்தன்.
“இங்க பாருங்கோவன் இவையல! காரை ஓரங்கட்டிப்போட்டு நல்ல ஆறுதலா ஏதோ பார்க்ல நிக்கிற கணக்கில நிண்டு கதை அளக்கினம்! எங்கள மட்டும் ஒண்டு ஒண்டுக்கும் அவசரப்படுத்த வேண்டியது.” இடையிட்டான் ஆரூரன்.
“எல்லாரும் வாங்கவன் இப்பிடி நிண்டு ஒரு ஃபாமலி போட்டோ எடுப்பம்.” கவி சொல்ல, “சந்தர்ப்பம் கிடைச்சாப் போதும் பிள்ளையல் விடாயினம், நமக்கே கதை சொல்லுவினம்.” என்றபடி, “வாங்கோ தம்பி.” நடந்தார், நாதன்.
பின்புறத்தை நிறைத்த செந்நிற கற்பாறைகளில் மலர்ந்து மினுங்கும் செம்மஞ்சள் மலர்போலவே தெரிந்தவளருகில், சற்றும் யோசியாது சென்று நின்றுகொண்டான், வேந்தன்.
காலையிலிருந்து அவளுடனான சில வார்த்தைகளுக்கு ஏங்கிக் கொண்டிருந்தவனாச்சே! அவள் மனவாட்டம் உணர்ந்து அதைப் போக்க முடியாதும் திண்டாடி நின்றானே! இப்போது, கிடைத்த சில கண நேர நெருக்கத்தை இரு கரம் நீட்டி ஆசையாகத் தழுவிக்கொண்டு நின்றது, அவனுள்ளம்.
“வேந்தன் அண்ணா இன்னும் கொஞ்சம் உள்ள வாங்கோ!” செல்ஃபி ஸ்டிக்கோடு நின்ற ஆரூரன்.
அதன் பிறகு சொல்லவா வேணும்?
அவன், அருகில் வந்து நின்றதும் உள்ளே எழுந்த இதத்தைப் படபடப்பு மறைக்க இயல்பாக நிற்கப் பிரயத்தனம் செய்துகொண்டு நின்ற இலக்கியா, ஒட்டிக்கொண்டு நின்றவனை திரும்பியும் பார்க்கவில்லை. மொத்தக் குடும்பமும் நிற்கையில் அவன் துணிவு அவளுக்கு அவ்வளவு இதம் தந்தது. முதல் நாளிலிருந்து என்ன எல்லாம் நினைத்துக் கலங்கிக்கொண்டிருந்தாள்! அவை வேண்டாத சிந்தனையாகவும் இருக்கலாம், என்ன என்றாலும் ‘இவன் இருக்கிறான்’ என்ற உணர்வில் அத்தனை கலக்கமும் பஞ்செனப் பறந்திட, விழிகள் பட்டென்று கலங்கியும் போயின!
“ம்ம் எடுத்திட்டன்.” ஆரூரன் விலகிய அக்கணம், மின்னலாக அவள் கரம் பற்றி சின்ன அழுத்தத்தோடு, அவன் பார்த்த பார்வையில் கண்ணீர்த் துளிகள் உருண்டு தெறித்தன.
நகர முயன்றவனால் அதன் பிறகு நகர்ந்து செல்லவும் முடியவில்லை. கரத்தை விட்ட கணமே, “என்ன? என்ன நடந்திட்டு? ஏன் இப்ப அழுகிறீர்?” கேட்டே விட்டான்.
எல்லோர் பார்வையும் இலக்கியாவில்! அவள் தான் என்ன செய்வதென்று புரியாது தடுமாறிப்போனாள். இருந்தாலும், “அது…அது…ஒண்டும் இல்ல.” தாமதிக்காது சொன்னபடி உறுத்தாத கண்ணைப்போட்டுத் தேய்த்துக்கொண்டாள். “கண்ணுக்க ஏதோ தூசு விழுந்திட்டு… அதுக்குப் போய் அழுகிறனாம்! சேட்டை ம்ம்…” நிமிர்வும் சற்றே அதட்டலுமாகக் கேட்டவள் பார்வை, அவளையே பார்த்து நின்றவன் கண்களோடு சில கணங்கள் உறவாடவும் மறக்கவில்லை. அவனுதடுகளுள் முறுவல் நெளிந்தது.
“அப்பச் சரிதான். நானும் என்னவோ ஏதோ எண்டு நினைச்சிட்டன்.” சொன்னவன் விடுவிடுவென்று சென்று ஏற, “அதானே! நாங்களும் பயந்திட்டம்.” மற்றவர்களும் உள்ளே ஏறினார்கள்.
முதல் நாளிலிருந்து கடந்த நிமிடம் வரை ஆட்டிவைத்த யோசனையும் உறுத்தலும் சுத்தமாக வெளியேறியிருக்க, தெளிந்த உற்சாக மனநிலையோடு ஏறியமர்ந்த இலக்கியா அதேவேகத்தில், துள்ளிப் பறக்கும் இதயத்தை அவனுக்கு அனுப்பிவிட்டுக் கைபேசியை வைத்தவள், கலகலவென்று கதைக்கத் தொடங்கிவிட, மகள் கண்ணீரை யோசனையாகப் பார்த்த சுகுணா கூட அவள் சொன்ன காரணத்தை ஏற்றுச் சமாதானம் அடைந்துவிட்டார்.
அவள் கண்ணீருக்கு வேந்தனின் பதற்றத்தைக் கண்ணால் பார்த்த கவியின் மனதுதான் அல்லாடிக்கொண்டிருந்தது. திரும்பித் தங்கையை ஊன்றிப் பார்த்துவிட்டு, முன்னால், வேந்தனின் பின்புறத்தையே பார்த்திருந்தவள் மனத்தவிப்புக்கு, எந்தவழியில் சமாதானம் சொல்வதென்பதையே அவளுள்ளம் நினைத்துக்கொண்டிருந்தது.