ரோசி கஜனின் இயற்கை – 29 -1

“அங்கிள், இனி நாம வெளிக்கிடச் சரியா இருக்கும்.” நேரத்தைப் பார்த்தபடியே சொன்னான், வேந்தன். அடிக்கடித் துளைக்கும் பெரியவரின் ஆராய்ச்சிப் பார்வை, அங்கிருக்க விடாது நெளிய வைத்ததென்றால், இலக்கியாவைக் கண்ணிலேயே காணவும் முடியவில்லையே! இங்கிருந்து கிளம்பினால் போதுமென்றது, அவனுள்ளம்.

“என்ன அவசரம்? சாப்பிட்டது தொண்டையால இறங்க முதல் வெளிக்கிட வேணுமோ? அதெல்லாம் ஆறுதலாப் போகலாம்.” பெரியவர் சொல்ல, நாதனை நாடியது வேந்தன் பார்வை.

 “இப்பவே வெளிக்கிட்டம் எண்டா சரியா இருக்கும். சிட்டிய ஒரு சுத்துச் சுத்திப்போட்டு …” அவர் ஆரம்பிக்க, “ஓம் நாதன் மாமா…” என்று இடையிட்ட பெரியவரின் பேத்தி, எங்கு எங்கு போகலாம் என்று சொல்ல, “இவையள் இந்த ரெண்டு நாளும் நீங்க தங்கட பொறுப்பு எண்டு சொல்லி பிளான் போட்டவை.” முறுவலோடு சொன்ன பெரியவர், “அப்ப சுகுணா இரவைக்கு இங்க வருவீங்களோ?” மீண்டும் கேட்டார். 

“இல்ல பெரியம்மா, இப்ப என்ன இங்க வந்து நிக்காத ஆக்களா என்ன? உங்கட பேத்திட கலியாணத்துக்கு வருவம் தானே, அப்ப நாலைஞ்சு நாட்கள் நிக்கிறது மாதிரி வாறமே!” என்றபடி, “வோஷ் ரூம் போட்டு வந்திருரன்.” எழுந்தாரவர்.

“என்னவோ சொல்லு…சொன்னால் கேட்கிறீங்க இல்ல.” என்றவர், “அப்ப இந்த டிரைவர் பெடி எங்க தங்கும்?” வேந்தனைப் பார்த்தபடி கேட்டார்.

அவர் கேட்ட விதம் வேந்தன் முகத்தைச் சுருங்கச் செய்திட்டு! நாதனுமே முகம் சுருங்க சுகுணாவைப் பார்த்தார். இங்கு வந்ததே பிழையென்று எண்ண வைக்கிறாரே!

“உங்கட பாட்டிக்கு மரியாதை எண்டா என்ன எண்டே தெரியாது!” அருகில் நின்ற பெரியவரின் பேரனை முறைத்தபடி சொல்லிவிட்டு, “கெதியாப் போவம் வாங்க.” விறுவிறுவென்று உள்ளே நடந்தாள், கவி.

“அதென்ன என்ர பாட்டி? உங்களுக்கும் சொந்தம் தானே?” பெரியவர் குணத்தில் பழகிவிட்டவன் முறுவலோடு சொன்ன வேகத்தில் வேந்தனிடம் திரும்பினான். “அண்ணா அவா அப்பிடித்தான், நீங்க வாங்க எங்க எங்க போறது எண்டு சொல்லுறன்.” நடக்க, வேந்தனும் எழுந்தான்.

“இப்ப என்ன கேட்டுட்டன் எண்டு உன்ர மகள் இப்பிடிச் சிலிப்பிப்போட்டுப் போறாள்? இஞ்ச பார் சுகுணா, அவளக் கொஞ்சம் கவனி! பிறகு  கவலைப்பட வேண்டி வந்திரும்!” மீண்டும் எச்சரிக்கையும் விட்டார், பெரியவர். 

 எல்லோருக்கும் முன்னால் இப்படிச் சொல்ல சுகுணாவின் முகம் இரத்தமெனச் சிவந்திற்று. ‘இன்னும் ஏதாவது சொல்லிவிட்டால்… ஒண்டுமே இல்லாத விசயத்துக்கு இவரே பிள்ளையார் சுழி போட்டு விடுவார் போலிருக்கே!’ மனதுள் எரிச்சல் தான் மண்டிட்டு!

அதை அவதானித்துவிட்டு, “வர வர இந்த அம்மாக்கு எங்க என்ன கதைக்கிறது எண்டு விளங்காமல் போகுது. விடு சுகுணா.” பெரியவரின் மகன் சொல்ல, முகம் தொங்கிற்று, பெரியவருக்கு. 

“கிழவி வாயைப் பொத்திக்கொண்டு மூலையில கிட எண்டு சொல்லாமல் சொல்லுறீங்க! ம்ம்…விடுங்க, கவனமா போயிட்டு வாங்க!” என்ற வேகத்தில் உள்ளே நகர, “ஐயோ பெரியம்மா, நில்லுங்க!” எட்டிப்பிடித்து நிறுத்தி தோளோடு அணைத்துக்கொண்டார் சுகுணா.

‘வயசுபோன காலத்தில அதுவும் எப்பவாவது ஒரு முறை வந்து போகையில் மனக்குறை ஏன்’ என்றது அவருள்ளம்.

  உள்ளே சென்று கொண்டிருந்த கவிதான் திரும்பி எரிச்சல் மறையாது பார்த்தாள்.

 “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லேல்ல.” அவரோ அதிலேயே நின்றார்.  எல்லோருக்குமே சிரிப்புத்தான் வந்திட்டு!

“மனிசி பொல்லாத விடுப்பு! நீங்க வாங்க தம்பி.” தயங்கி நின்ற வேந்தனிடம் முணுமுணுத்த நாதனும் நகர, “நானும் இவை…” அவருக்குப் பதில் சொல்ல முனைந்தான், வேந்தன்.

“தம்பியும் நாங்க தங்கிற ஹோட்டலில தான்.” முடித்து வைத்தார், சுகுணா.

‘எங்களோட அறையில தங்கிறார் எண்டு சொல்ல அதுக்கும் இவர் ஏதாவது சொல்ல…’ என்று, வேந்தன் வாய் திறந்ததும் தடுமாறி விட்டாரே!

அதே கையோடு, “இந்தா டப்பென்று வாறன்.” உள்ளே நகர்ந்தவர், “எங்க இலக்கி ஆக்கள் கண்ணிலயே படேல்ல?” கேட்டுக்கொண்டே  வர, “நாங்க ரெடியாகிறம்.” அஜி கவினோடு உள்ளேயிருந்தாள், இலக்கியா.

“சரிதான், கெதியா வெளிக்கிடுங்க போயிருவம். இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா உங்கட பெரியம்மாவுக்கும் எனக்கும் பெரிய பிரச்சினை தான் வரும்.” புறுபுறுத்தாள் அங்கு நின்ற கவி. 

“என்ன பழக்கம் இது கவி? வந்த இடத்தில் ஏன் கதை வளப்பான் எண்டுதான் முதலும் பேசாமல் இருந்தன். நீ ஆகத்தான் வாய் காட்டுற!” தாய் அதட்ட, “என்ன நடந்திட்டு அக்கா?” கேட்டாள், இலக்கி. 

“இல்ல…மனுசிக்கு வேந்தனோட ஒரு தனகல். முதல் முழுப் பரம்பரை பற்றியும் விசாரணை. இப்ப டிரைவர் பெடி எங்க தங்குவாராம். இப்ப இவாக்கு என்னத்துக்கு இந்த விடுப்பு? அதென்ன டிரைவர் பெடி!?” அவள் படபடக்க, சுகுணாவின் பார்வை சின்ன மகள் முகத்தில் படிந்து மூத்த மகளிடம் சென்றது.

பெரியவர், கவிக்கு வேந்தனில் விருப்பம் போல் என்று சொல்கையில் இலக்கியாவும் இருந்தாளே. தாய் பார்த்த பார்வையின் அர்த்தம் அதுதானென்று புரிந்தது, இலக்கியாவுக்கு. 

அவர் அப்படிச் சொன்ன நேரத்திலிருந்து அவள் அவளாக இல்லை. தன் தத்தளிப்பை மற்றவர் பார்வையில் படாது மறைக்க, வெளியில் செல்லாது அப்படி இப்படி உள்ளேயே நின்று கொண்டவளுக்கு, இப்போதோ, மூச்சு முட்டிப் போயிற்று.

‘உண்மையாவே அக்காவுக்கு வேந்தனப் பிடிச்சிருக்கோ!’ மனம் எரிய எரிய இப்படி எண்ணாமலிருக்க முடியவில்லை.

 முதல் நாள், வேந்தனுக்காகத் தன்னைக் கண்டித்த கணத்தில் மனதில் விழுந்த குழப்பத்தை, காலையில், பிரத்தியேக அன்பும் பரிவுமாக நடந்து விரட்டி விட்டிருந்தான், வேந்தன். இருந்தாலும் அக்குழப்பத்தின் வாசம் இன்னமும் இருக்கின்றது என்பதை ஊர்ஜிதம் செய்தது கணத்தில் கலங்கிவிட்ட மனசு!

இலக்கியாவின் மனநிலையோ முகமாற்றமோ அறியாது மூத்த மகளிடம் தொடர்ந்தார், சுகுணா.

“அவா அப்பிடித்தான்  எண்டது உனக்கு இண்டைக்கோ தெரியும்? அதையும் விட சும்மா தானே அப்பிடிக் கேட்டா! அதில என்ன இருக்கு? வேந்தன் டிரைவர் தானே?”

“ஏனம்மா நீங்களும்? முதல் டிரைவர் எண்டா இளப்பமா?” சீறினாள், கவி.

“நான் இப்ப அப்பிடிச் சொல்லேல்லையே கவி. டொக்டர் எண்டு  சொல்லுறது போல செய்யிற தொழில வச்சுக் கதைக்கிறது இல்லையா என்ன? அதும் வயசானவா.  அதுக்கு நீ ஓவரா ரியாக்ட் பண்ணாத சரியா!” கண்டிப்போடு சொன்னவர், அதோடு நிறுத்தவில்லை. 

“உங்கட அப்பா தானும் வராமல் நம்பி உங்கள விட்டவர். உங்கட ஆசைக்காகத்தான் இந்தப் பயணமும். அதுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளு!” என்று சொல்லவும், கவியின் முகம் சுண்டிப்போயிற்று. விருட்டென்று வெளியே சென்றுவிட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!