ரோசி கஜனின் இயற்கை – 29 – 2

அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 

அதை அவள் சமாளிப்பாள்… ஆனால் கவி?

‘ச்சே ச்சே… அப்பிடியெல்லாம் இருக்கவே இருக்காது. இந்தப்  பாட்டி சும்மா மனுசரக் குழப்பி விடுறா!’ என்றும் நினைத்தாலும் மனம் சமாதானம் அடையவில்லை. சோர்ந்த முகத்தோடு வெளியில் வந்தவளை எதிர்கொண்ட வேந்தன் பார்வையில் ‘என்ன’ என்ற கேள்வி!

பார்த்ததும் அவள் மனதின் குழப்பத்தை உணர்ந்து கொள்கிறானே! இதமாக இருந்தது. ‘ஒண்ணுமில்ல’  தலையசைத்தபடி காரை நோக்கி வந்தவளையே பார்த்தபடி நின்றான், அவன்.

அவள் தலையாட்டிய ‘ஒண்ணுமில்ல’ எதுவோ இருக்கென்று சொல்லியதே!

இரு வார்த்தைகள் சரி கதைத்துவிட முனைந்தால், அவள் பின்னாலேயே கவியும் மற்றவர்களும் வந்துகொண்டிருந்தார்கள். பேசாமல் சாரதியாசனத்தில் ஏறியமர்ந்து விட்டான்.

“சரி அம்மா கவனமா இருங்க!” பெரியவருக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்ட சுகுணாவின் அண்ணா குடும்பம், “எங்களோட இன்னும் ரெண்டு பேர் வரலாம். ஆர் வாறீங்க? என்றபடி, காருக்குள் ஏறினார்கள்.

“கவி நீ போ!” சட்டென்று சொன்னது, சுகுணா.

“இல்ல, நான் நம்மட காரில வாறன்.” அவளும் பட்டென்று மறுத்துச் சொல்லிவிட்டாள்.

“சரி சரி, ஆராவது வாறது எண்டா வாங்கோ!” அவர்கள் காரைக் கிளப்ப,  “நான்…நான் அவையளோட வாறன்.” இலக்கியா. சட்டென்று திரும்பி நடக்க, வேந்தன் தான் முறைப்போடு பார்த்திருந்தான்.

‘இவ்வளவு பேர் இருக்க இவள் போகவா வேணும்?’ மனதின் எரிச்சலை தாமதியாது தட்டி அனுப்பின விரல்கள்.

அங்கிருந்தும் தாமதியாது பதில் வந்தது… ஒற்றை இதயம்!  

‘இலக்கி இங்க வந்து ஏறு!’ 

‘காரிலயேவா போகப் போறம். இல்லையே! கொஞ்ச நேரம் தானே வேந்தன்.’ 

‘இல்ல…நீ வா!’ 

“நானும் இலக்கி அக்காவோட வாறன்.” முன்பக்கம் ஏறியிருந்த ஆரூரன் இறங்கி ஓடினான்.

“அப்ப நான் முன்னுக்கு இருக்கிறன். அப்பத்தான் வடிவா வீடியோ எடுக்கலாம்.” கவி, வேந்தனுக்கருகில் ஏறியமர்ந்தே விட்டாள்.

“நான் சொன்னன்…” விடைபெற்றுக்கொண்டு நின்ற சுகுணாவின் காதைக் கடித்தார், பெரியவர். “பிறகு யோசிச்சு ஒரு பிரயோசனமும் இல்ல. இப்பவே கவனிச்சு முளையிலையே கிள்ளி எறிஞ்சிடு! ஆரோ எவரோ முதல் டிரைவர்.” சுகுணாவின் முகத்தை இறுக வைத்தார்.

அந்நேரம், “என்ன வெளிக்கிட்டாச்சோ?” என்றபடி, காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான், ஒருவன்.

“வர மாட்டன் என்றீங்க?” தானும் இறங்கினாள், பெரியவரின் பேத்தி.

“ம்ம்…பிறகு என்ர ஹனி கோவிப்பா எண்டு வேலையை எல்லாம் ஒதுக்கிப் போட்டுட்டு வந்தன்.” அவளைச் சீண்டியபடி, “ஹை ஆன்ட்டி…நீங்க சுகுணா ஆன்ட்டி என்ன?” இன்முகமாக உரையாடியவன், தன் மகனின் வருங்கால மாப்பிள்ளை என்று பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார், பெரியவர்.

எல்லோரும் இறங்கி பரஸ்பரம் நலம் விசாரிக்க, வந்தவன் யாரென்று கவனியாது இலக்கியாவுக்குக் குறிஞ்செய்தி தட்டிக் கொண்டிருந்த வேந்தன், “டோய் அண்ணோய்!” தோளில் தட்டு விழ, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

மறுநொடியே, “வினித்! நீ என்ன இங்க?” இறங்கிவிட்டான்.

இடுப்பில் கைவைத்து முறைத்த வினித், இறங்கியவனை இறுக அணைத்துக் கொண்டே, “நான் கேட்க வேண்டிய கேள்வி இது? அதோட இங்க வந்திட்டு வீட்ட வராமல் இருக்கிறது எல்லாம் வேற லெவல்! ம்ம்.” முறைப்போடு தொடர்ந்தான்.

“அது…அதடா…” தடுமாறிய வேந்தன் பார்வை தங்களையே பார்த்து நிற்பவர்களில் பட்டு விட்டு வினித்திடம் திரும்பியது.

“என்ன அங்க பார்வை?” இருவரும் கதைத்துக்கொண்ட விதத்திலேயே அவர்களிடையேயுள்ள பழக்கம் புரிந்தது.

“ஏன் தம்பி… அப்ப இந்த டிரைவர உங்களுக்கு முதலே தெரியுமோ!” முன்னால் வந்தார் பெரியவர்.

“என்ன்ன்ன டிரைவரா?” வாயில் கை வைத்துப் பொத்திக்கொண்டான், வினித்.

“டோய் வேணாம், இப்ப இதுக்கு ஏன் இப்பிடி ரியாக்ட் பண்ணுற?” என்ற வேந்தன், “வீட்டில எல்லாரும் சுகம் தானே? நீ எங்க இங்க? வேலையா வந்ததால தான் வீட்ட வரேல்லடா. இப்ப என்ன உன்ர கலியாணத்துக்கு வருவம் தானே? அது சரி,  உன்ர ஆள்ட ஃபோட்டோ ஒண்டு அனுப்படா எண்டு சொல்லி எத்தின மாசம்?! அனுப்பின பார்! இதுக்க எனக்குக்  கதை சொல்லுற!” அவன் முதுகில் ஒன்று போட்டான்.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் தங்களுக்க கதைச்சா?” பெரியவர் குரல் இடையிட்டது.

“பாட்டி, என்ன நீங்க இவனத் தெரியுமா எண்டு கேட்கிறீங்க! அதோட டிரைவர் எண்டு வேற சொல்லுறீங்க, இதுக்கு நான் என்னத்தப் பதில் சொல்ல!?” வினித்.

“டோய் வேணாம்…நான் தான் இவையள ரோட் ட்ரிப் கூட்டிக்கொண்டு வந்தனான்!” இடையிட்டான், வேந்தன்.

“அதான் ஏன்? புதுசா இருக்கே!” ஒரு மாதிரிக் கேட்டான், வினித். 

“பச்! நீ வேற! இவையளுக்கு எண்டு ஒழுங்கு செய்திருந்த டிரைவர்…” என்றாரம்பித்துக் காரணம் சொல்ல,  நம்பாமல் பார்த்தானவன். அது புரிந்தாலும் கவனியாத பாவனையில் தொடர்ந்தான், வேந்தன். 

“உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இப்பிடியான பயணங்கள் சரியான விருப்பம் எண்டு. இதுதான் சாட்டு எண்டு வெளிக்கிட்டுட்டன்.” முறுவலோடு சொன்னவன், “இந்தப் பத்து நாட்களும் நம்மட வீட்டாக்களோட பயணம் செய்யிறது போல அவ்வளவு சந்தோசமாப் போச்சடா!” நாதன் ஆட்களை முறுவலோடு பார்த்தான். அப்படியே, சில கணங்கள் இலக்கியாவில் நிதானித்துத் திரும்பியது, அவன் பார்வை.

அவன், இங்கு வினித் வருவானென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, இப்படித்  தன் குட்டு வெளிப்படும் என்றும்! சமாளிப்பில் இறங்கிவிட்டான். 

பெரியவர் இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றார். ‘பொடிப்பயல்கள்! கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் கதையும் இளிப்பும்!’

 அவர் மனதுள் சிடுசிடுத்தது கேட்டுவிட்டது போல் பார்த்தான், வினித்.

“பதில் சொல்லவில்லையோ பாட்டி உண்டு இல்ல ஆக்குவார்.” சற்றே நக்கலாகச் சொல்லவும் செய்தான்.

“விடு விடு. அவைக்கு நான் டிரைவராவே  இருந்திட்டுப் போறன், இப்ப அதில என்ன இருக்கு?” வேந்தன் சொல்ல, “உனக்கு இந்த மனிசி பற்றி தெரியாது.” அடிக்குரலில் சொன்னவன், “பாட்டி, இவன் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம்; அண்ணா முறை, என்னடா அண்ணா!” அன்போடு தோளில் கைபோட்டுக்கொண்டே, “அதோட, இந்தா  இவையள் வந்த கார் …” யாழ் ட்ராவல்ஸ் வாகனத்தில் தட்டிக் காட்டியவன், “அதிண்ட சொந்தக்காரனே இவன் தான். இதுக்குள்ள நீங்க என்ன ஒரு சாதியா ஆர் எவன் எண்ட மாதிரிக் கேட்கிறீங்க!”  அவர் முதல் கேட்டதை அறிந்தவன் போன்று, அதட்டலாகக் கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!