ரோசி கஜனின் இயற்கை 4 (2)

தலையை உதறிக்கொண்டு திரும்பி வந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான், அவளை, தூர இருந்தென்றாலும் பார்த்துவிட்டதில் மனதுள் புத்துணர்வு வந்திருந்ததைத் தெளிவாக உணர்ந்தபடியே!

 தன்னையே ஒருவன் பார்த்து நின்றதை, அவனுள், தனக்கே தெரியாது தான் ஏற்படுத்திய தாக்கத்தை அறியாதவளோ, வேறு உலகத்தினுள் அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்து, மெல்ல மெல்ல நகர்ந்து நீரோட்டத்தில் அகப்பட்ட கானோவை பிறகு அவள் வலிக்கவே தேவையிருக்கவில்லை. இடப்புறமாக போக நினைத்துவிட்டு  வலப்புறம் திரும்பிப் பார்க்க, இவளின் அனுமதி கேளாது வலப்புறமாகவே நகரத்  தொடங்கியிருந்தது, கானோ. காற்றின் விளையாட்டது.

   நீண்ட ஒடுங்கிய கானோவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த இலக்கியா, அக்கணம், அப்பெரிய ஏரியில் தத்தித் தவன்று நீந்தும் சிறு மீன் குஞ்சாக உணர்ந்தாள். அவள் முன்னால்  பரந்து  விரிந்திருந்த ஏரியும் சுற்றமும்… “அம்மாடியோவ்!” கரமிரண்டையும் எடுத்துக் கன்னங்களில் பொருத்திக்கொண்டவளின் விழிகள் விரிந்து கிடந்தன.

 ஆங்காங்கே கருமேகங்கள் குறுக்கிட்டாலும் மென்மையான காலைப்பனித்திரையில் பளிச்சிட்டான், செஞ்சூரியன். அவன் செம்மையில் குளித்தபடி தூரத்தில் ஓங்கியுயர்ந்து படர்ந்திருந்த மலைமுகடுகளும், அதைச் செல்லமாக  முட்டிக் கிச்சுக் கிச்சு மூட்டிச் செல்லும் கரும் பஞ்சு மேகங்களும், ஒருவிதமான அகங்கார இறுமாப்பில் சலசலக்கும் ஏரியுமாக அச்சூழல் சொர்க்கலோகமாக காட்சியளிக்க, தான் ஒரு தேவதையாக உணர்ந்தாளவள்.

  மெல்லத்  துடுப்புகளை அதன் கம்பிவளையங்களின் பொறுப்பில் விட்டுவிட்ட அவள் கரமிரண்டும் அகல விரிய வான் நோக்கிப் பார்த்தவள், “யாஹூ” பெரிதாகக் கத்தினாள். அப்படியே எழுந்து நின்று கத்த வேண்டும் போலப் பரபரத்தும் போனாள்.

  அவளுக்குப் பயம் காட்டவில்லை எண்டாலும் கொந்தளிக்கும் கடலில் விழுந்துவிட்ட ரெஜிபோம் போல் அப்படியும் இப்படியும் மிதந்து இழுப்பட்டுச் சென்றது, கானோ.  

   தூரவாகத் தெரியும் இருகரைகளையும்  நோட்டம் விட்டாள். ஏரியின் இருமருங்கிலும் இடைவெளி விட்டு விட்டு விடுமுறைக்கால வீடுகள்  தான், எல்லாமே நல்ல உறக்கத்திலிருந்தன.

   ‘அதோ அந்த ஒண்டில மட்டும் ஆளரவம் தெரியுது’ உற்றுப் பார்த்து நினைத்தவள், பின்னால் திருப்பிப் பார்க்க, தான் எங்கு நின்று புறப்பட்டோம் என்பதைச் சட்டென்று கண்டுகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அதை நினைத்து அவள் கவலை கொள்ளவுமில்லை. 

   ‘அப்பிடித் துலஞ்சா போகப் போறன்? இப்பிடியே திரும்பிப் போக எப்பிடியும் கண்டுபிடிக்கலாம். ஆங்! சிவா சித்தப்பாவின்ர சிவப்பு நிறக்கார் ஏரியிலிருந்து பார்க்கேக்க  நல்லாவே தெரியும். அதுதான் அடையாளம்.’ என்றெண்ணிக் கொண்டவள், ‘இன்னும் கொஞ்சம் முன்னால் போய் அப்பிடியே திரும்பி வருவம்.’ என்ற முடிவோடு மேலும் சிறிது தூரம் சென்றிருப்பாள். 

அங்கேயோரிடத்தில், ஏரி, இடப்புறமாக சிறு தீவொன்றைச் சுற்றிக்கொண்டு கிளைபிரிந்து சென்றதையும் தாண்டி வந்திருந்தாள். அத்தீவடியை நெருங்குகையில் சட்டென்று மோதிய ஏகாந்தம், ஒருவிதமாகத் தாக்கியது என்றதுதான் சொல்ல வேண்டும்.  இருந்தாலும் பெரிதாகக்  கலங்கவில்லை.  என்றாலும், ‘போதும், இப்பவே நிறையத் தூரம் வந்திட்டன் போலக்கிடக்கு, இனித்  திரும்புவம்.’ என்று முயன்று பார்த்தாள்.  முடியவில்லை. பிடிவாதமாக தன்பாட்டில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தது, கானோ. 

    அப்போதுதான் முழுமையாக உள்ள நிலை புரிந்தது, அவளுக்கு. அதுவரை அவளை ஆட்கொண்டிருந்த உவகையும் ஆர்ப்பரிப்பும் சட்டென்று வடிந்து போயிற்று.

  “கடவுளே! போதும் போதும். வர வரக் காற்றும் கூடுது போல இருக்கே! திரும்பிப் போயிருவம். எப்பிடியும் திரும்பவே வேணும்.” வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே கானோவைத் திருப்பும் வகையில் துடுப்புகளைப் போட்டாள். அது எங்கே? அவளுள் அதுவரை இருந்த விளையாட்டுத்தனங்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போயிருக்க,  இப்போது சுற்றிலும் பாய்ந்த அவள் பார்வையில் பயமிருந்தது.

   “இண்டைக்கு நான் துலைஞ்சன். எல்லாரிட்டையும் நல்லா வாங்கிக் கட்டப் போறன்.” சிறுமியாய் முணுமுணுத்தவளுக்கு, ‘முதல் பத்திரமாப் போய்ச் சேர வேணுமே!’ என்றிருந்தது.

 அதுவரையும், தெரியும் என்று மார்தட்டிய நீச்சல், ‘தெரியுமா?’ என்று, சந்தேகத்தோடு கேட்கும் போலிருந்தது, அவள் நிலை.

   வரும் போது முதுகில் தள்ளிய காற்று கரங்களுக்கு அதிகம் வேலை வைக்கவில்லை. இப்போதோ, எதிர்த்துத்  துடுப்பு வலிப்பது  துளியும் சுலபமாக இருக்கவில்லை.

  நான் சொன்னதை நீ கேட்டே ஆக வேண்டுமென்ற கணக்கில் காற்றுத் தள்ள,  காற்றின் காதலியாகிப் போயிருந்தது, கானோ. எதையும் யோசியாது அப்படியே முன்னால் சென்று கொண்டிருந்தது. 

  மீண்டும் மீண்டும் இரு மருங்கிலும் பார்த்தாள், இலக்கியா. யாராவது தென்பட்டால் உதவிக்கு வந்தாலும் வரலாம். இல்லை, கேட்கலாம் என்றெண்ணியவள் சட்டென்று நினைவு வந்தவளாக லைஃப் ஜக்கட்டை அணிந்துகொண்டாள். 

அதுவரையும், கிட்டத்தட்ட ஏரியின் நடுப்பகுதியில் வந்துகொண்டிருந்தவள் அப்படியே ஏதாவது ஒரு கரைக்குச் சரி போவோம் என்று முயலத் தொடங்கினாள், அப்படியே கரைப்பகுதியால் செல்லலாமே என்ற முடிவில். அதுகூட அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை. எங்கிருந்து வந்ததென்று புரியாது திரண்டுவந்து மழை மேகங்கள் வேறு சடசடெவென்று தூத்தல்  போட்டன.

  “அம்மாளாச்சி! நான் தாளப் போறனோ! ஐயோ! ஃபோனையும் விட்டுட்டு வந்திட்டனே! அப்பா! சித்தப்பா!” பெருங்குரலில் கத்திவிட்டுச் சட்டென்று அடங்கினாள்.

 ‘இப்பிடியே அடிபட்டுப் போய் பெரும் பள்ளத்தில பாயிற நீரவீழ்ச்சியில விழுந்து…’ கடுகதி வேகத்தில் ஓடியது, கற்பனை, உண்மையில் அது ஏரியென்பதை அறவே மறந்து போனவள் உடல் வேறு வெடவெடவென்று நடுங்கியது.

  அப்போதும் துடுப்புகளை மாறி மாறிப் போட்டுத் திரும்ப முயல்வதை அவள் நிறுத்தவில்லை. சிறிது நேரப் போராட்டத்திலேயே கைகள் இரண்டும் துவண்டுபோயின. வாயுலர்ந்து நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. 

 பெரிய பெரிய முச்சுகளை  எடுத்துவிட்டவளுக்கு தன் மீதும்  தன் மேதாவித்தனம்  மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்ததது. சொல்லியும் கேளாது வந்தவளாச்சே!

  கண்களிரண்டும் நீரால் நிறைந்து வழிய, “ஐயோ கடவுளே!” என்றபடி, சக்தியெல்லாம் திரட்டித் திருப்ப முனைகையில் தான், அச்சத்தம் செவிகளில் நுழைந்தது. 

  ‘ஏதோ எஞ்சின் போட் சத்தம் போலக்  கிடுக்கே!’ நினைத்து முடிக்கவில்லை, சீறி வந்து கொண்டிருந்தது, நீலமும் வெள்ளையுமாக இருந்த மோட்டார் விசைப்படகு!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock