என்றுமில்லாத குதூகல மனநிலையில் தான் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்துத் தயாராகி வந்தான், வேந்தன்.
‘கஃபே ஒண்டு போட்டுக் குடிச்சிட்டுப் போவமா?’ எண்ணிக்கொண்டே நேரத்தைப் பார்த்தவன், “நேரமாச்சு! போற வழியில பார்ப்பம்.” முணுமுணுத்தாலும், விறுவிறுவென்று வெளியேறி அந்தப்பக்கமும் இந்தக்கமுமாக ஏரியைத் தான் நோட்டமிட்டான்.
இன்னுமொருதடவை அவளைக் காணக் கிடைத்தால் கசக்குமா என்ன? மென்முறுவலோடு ஆராய்ந்தான்.
‘கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் ஆகியிருக்குமே!’ மனதுள் முணுமுணுப்போடியது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவளைக் காணவில்லை. மழைத் துளிகள் வேறு சடசடவென்று சிதறி விழத் தொடங்கியிருந்தன.
‘ஒருவேள திரும்பி வந்திட்டாளோ! அப்பிடித்தான் இருக்கும். இந்தக் காத்துக்குள்ள எப்பிடிப் போயிருப்பாள்?’ என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், அவன் விழிகள் மீண்டும் மீண்டும் ஏரியை நன்றாகத் துழாவி விட்டே வீடு நோக்கித் திரும்ப அனுமதித்தன.
“இப்பிடி நிண்டாச் சரிவராது, நேரமாகிட்டு வெளிக்கிடுவம்.” சொன்னபடி உள்ளே வந்தவன் மனம் ஏனோ மிகையாகவே முரண்டியது. அவளைக் காணக் கிடைத்தால் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றம் கொண்டதால் வந்த உணர்வா? சட்டென்று அதுதான் என்றும் வரையறுக்க முடியவில்லை. அங்கு நின்றே மீண்டும் ஏரியைப் பார்த்தவன், யன்னலால் இலக்கியா தங்கியிருந்த வீட்டைப் பார்த்தான். அது இப்போதும் உறக்கத்திலிருந்தது.
‘அவள் இருக்கிறாளா எண்டு போய்ப் பாக்கிறது எப்பிடி!’ இந்த எண்ணம் நிச்சயமாய் அவளை மீண்டும் பார்க்கும் ஆவலில் வந்ததில்லை. தனியாகப் போனவள், அதுவும் காலநிலை இப்படியிருக்கையில்; திரும்பி வந்துவிட்டாளா என்பதை நிச்சயம் செய்ய வேண்டுமென்ற உணர்வில் வந்தது.
கணநேரம் குழம்பி நின்றவன், விறுவிறுவென்று வெளியேறி கால்களை எட்டி எடுத்து வைத்து இறங்குதுறையடிக்குச் சென்றான்.
“சிவப்பு நிறக் கானோ…” அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது. “இல்ல… இங்க இல்லயே!” இருபுறமும் அவதியோடு அலைந்த விழிகள் மீண்டுமொருமுறை அவள் சென்ற திசையில் கூர்ந்து நோக்கி ஏமாற்றம் கண்டன.
‘காற்று இப்பிடி வீசுறது தெரிஞ்சும் விடியவெள்ளன இதெல்லாம் என்ன வேல? அதுவும் புது இடத்தில?’ அவனுக்குச் சுறுசுறுவென்று கோபமேறியது. அவளை முதன் முதலில் சந்தித்த அன்று, நகரும் படிகளில் கால் வைக்க ஓடிய சிறுவனுக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
மனம் கோபத்தில் கடிந்து கொண்டாலும் வேகமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தான், வேந்தன். அடுத்த சில நிமிடங்களில் மோட்டார் விசைப்படகு சீறிப் பாய்ந்து, கொந்தளித்துக்கிடந்த ஏரிநீரை அசட்டை செய்தபடி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது.
இருவர் செல்லக் கூடிய அப்படகில் எழுந்து நின்றிருந்தான் வேந்தன். முகத்தில் கலவரம் அப்பிக்கிடக்க, சுற்றிலும் கூர்ந்து நோக்கியபடி முன்னேறினான்.
புறப்பட்டுச் சில நிமிடங்களின் பின்னர் அந்த ஏரியின் வளைவால் திரும்புகையில், இந்தக் காற்றுக்குள் அந்தக் கானோவை வலித்துக்கொண்டு இத்தூரமாக வந்திருப்பாளா என்ற சந்தேகமும் முளைத்திருந்தது. காற்று வலமாகவே இருந்தாலுமே …
அப்படி வந்திராவிட்டால் அவள் எங்கே? வீடு திரும்பியிருந்தால் கானோ எங்கே?
குழப்பத்தோடே அச்சிறுதீவைக் கடந்து நேரே செல்வதா வளைந்து சென்று பார்ப்பதா என்று வேகத்தைக் கட்டுப்படுத்திய போதுதான், தூரத்தில், அதுவும் சிறு புள்ளியாய் தான் சிவப்புக் கானோ கண்ணில் பட்டது.
“சரியான விசர்க் கேஸ் போல இருக்கே! இவ்வளவு தூரத்துக்கா வருவாள்? இங்க இருந்து எப்பிடித் திரும்பிப் போவாள், அதுவும் இந்த எதிர்க்காற்றில?”
அவள் இந்தப்பக்கமாகத் திரும்புவதற்காகப் போராடிக்கொண்டிருப்பது புரிந்தது அவனுக்கு. அந்தக் கணம் ‘இப்ப நான் மட்டும் வரேல்ல எண்டா…’ தொடர்ந்து நினைக்கவே முடியவில்லை. தாறுமாறாகக் கோபமும் வந்து தொலைத்தது. அவளை நோக்கிச் சீறிப்பாய்ந்து சென்றது, படகு.
கானோவைத் திருப்புவது மட்டுமல்ல வீடுவரை வலித்துக்கொண்டு போவதென்பது இயலாதகாரியம் என்றதும் தெள்ளெனப் புரிந்துவிட்டிருந்தது, இலக்கியாவிற்கு. கரங்கள் இரண்டும் சோர்ந்து மனத்தில் பயப்பிராந்தியுடன் அடுத்து என்ன செய்வதென்றறியாது விழித்து நின்றபோதுதான் தன்னை நோக்கி வந்த அந்தப் படகைக் கண்டாளவள்.
அது நேரடியாக அவளருகில் வரவில்லை. ஒருதடவை அப்படியே வட்டமடித்தது. ஏற்கனவே கொந்தளித்துக்கிடந்த நீரில் படகின் வேகம் வேறு அலைகளைக் கிளப்பி விட அப்படியே கவிழ்ந்து விடுவோமா என்றளவில் தத்தளித்தாளவள்.
அதில் இருப்பவன் ஒரு இளவயதானவனென்று தோற்றத்தில் புரிந்தாலும் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவளிருந்த மனநிலை அந்தளவுக்கெல்லாம் போகவுமில்லை.
இதுவரை, யாராவது வரமாட்டார்களாவென்று ஏங்கியவளுள், இப்போது, புதுப்பயம் முளைவிட்டு அசுர வேகத்தில் கிளை பரப்பியது. இப்போதெல்லாம் எங்குமே எந்த வயதினரையும் நம்ப முடியாதே! ஏன், அதில் ஆண் பெண்னென்ற பால் பேதங்கள் கூட இல்லையென்று சொல்லலாம். அப்படியிருக்கையில், புதிய இடம், ஆளரவம் சுத்தமாக இல்லை. தத்தளித்துத் துவண்டு வேறு நிற்கிறாளே!
அக்கணம், அநாதரவாக நிக்கும் தன் நிலை வலு மோசமாக உள்ளதை உணர்ந்தவள் ஏரியில் குதித்து விடுவோமாவென்றுதான் யோசித்தாள்.
அடுத்த சுற்றில், மேலும் அருகால் வந்தது படகு. ‘தமிழ் ஆளோ’ துளி நம்பிக்கை உதிக்கப் பார்த்தவள் நெற்றி சுருங்கியது.
அவள் தன்னையே பார்ப்பதைக் கணக்கெடுத்தபடி நேராக அவளருகில் வந்து எஞ்சினின் இயக்கத்தை நிறுத்தினான், வேந்தன்.
நனைந்த கோழிக்குஞ்சுபோல் பயத்தில் வெளிறிப் போய் அவளிருந்த கோலம் பார்த்ததும் “விசரி! பெரிய துணிச்சலானவள் போல வந்திட்டு இப்பிடி நிக்கிறாளே! ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தா?” வார்த்தைகளை விட்டான்.
இப்பகுதி முழுதுவே விடுமுறைக்கால விடுதிகள் தானே! எங்கெங்கோ இருந்தெல்லாம் வருபவர்கள் குறுகிய காலங்களுக்குத் தங்கி விட்டுச் செல்லும் இடமல்லவா? அப்படியிருக்க, இப்படித் தனியாக நல்ல காலநிலை இருந்தாலுமே வருவதா என்ன?
தாடைகள் இறுக முறைப்போடுதான் பார்த்து நின்றான்.
அவன் சொன்ன வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் அவன் முறைப்பு உறைக்கவே செய்தது.
‘சித்தப்பா ஆட்களோ, அப்பாவோ எண்டா இண்டைக்கு நான் சரி…’ என்ற எண்ணத்தோடு அவனை உற்று நோக்கியவள், ‘இவன்..இவன…எங்க கண்டம்?’ சற்றே தடுமாறினாலும் கண்டு பிடித்துவிட்டாள்.
‘அப்ப…இவன் அண்டைக்கு டிம்கொட்டனில் நிக்கேக்கையும் ஒரு மாதிரிப் பார்த்தவன். இப்ப இங்க எங்க வந்தான்? என்னைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறானோ!’ புதுப்பயத்தில் உடல் வெட வெடத்துப் போயிற்று.
‘வேற வழியில்ல குதிச்சிருவம்!’ அவள் முடிவெடுத்த கணம், “இப்பிடியே எவ்வளவு நேரம் நிக்கிற பிளான்? ம்ம்…அந்தக் கயிற எடுத்து இப்பிடித் தந்திட்டு வந்து போட்டில ஏறும்!” அதட்டியபடி மெதுவாக அவள் கானோவை நெருங்கினான், வேந்தன்.
“இல்ல இல்ல வேணாம்…கிட்ட வர வேணாம்!” கிரீச்சிட்டுவிட்டாள், இலக்கியா. சட்டென்று ஆங்கிலத்தில் தான் வார்த்தைகள் வந்து விழுந்தன.