6
‘ஃபோன் கைக்குப் போன வேகத்தில என்னையே ஃபோட்டோ எடுத்தாளா?’ அச்செயலை உள்வாங்கி நிச்சயம் செய்துகொள்ளவே சில வினாடிகள் ஆயிற்று!
‘இவள…’ அவன் முகம் கோபத்தையும் எரிச்சலையும் காட்டி நின்றது. வழிந்த மழைநீரை வழித்துவிட்ட பாவனையில் அது தெள்ளளெனப் பளிச்சிட்டது.
“இப்ப ஏன் என்னப் ஃபோட்டோ எடுத்தனீர்?”
“ம்ம்…கொஞ்சம் பொறுங்க…ஃபோட்டோ அனுப்பியாச்சு; இனி அக்காவோட கதைச்சிட்டு வாறன், ஒரு நிமிசம் தான் ஓகேவா?” கைப்பேசியைக் காதில் பொருத்திக் கொண்டாள்.
“அக்கா நான் தான்.”
“…….”
“இல்லக்கா…லேக்கில கொஞ்சத் தூரம் வருவம் எண்டு வெளிக்கிட்டனா…” சிலவரிகளில் நடந்தத்தைச் சொன்னாள்.
மறுபுறம் திட்டும் ஏச்சும் விழுந்திருக்கும் போல என்று எண்ண வைத்தது, “சரி சரி, என்ன கதைக்கிறது எண்டாலும் நேர வந்தோன்ன கத…இப்ப நான் சொல்லுறதக் கவனமாக் கேளக்கா ப்ளீஸ்!” என்று, அவள் சொன்னது.
“இங்க ஒருத்தர்…அதுதான் இப்ப ஒரு ஃபோட்டோ அனுப்பியிருக்கிறன் பாருங்க. அவர்ட எஞ்சின் போட் …ம்ம்… நீலமும் வெள்ளையும் கா. அந்த நமக்குப் பக்கத்துக் கொட்டேஜ்ல நிண்டது போலவே இருக்கு…” சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தவள் விழிகள் விரிந்தன.
‘அப்ப… அங்க நேற்றிரவு காரில வந்தவன் இவனா இருப்பானோ!’ எண்ணம் எட்டிப் பார்த்தது.
“நீங்க…உங்கடையா அந்த கொட்டேஜூகள்? நேற்றிரவு கார்ல வந்தது நீங்களா?” அவனிடம் தான் கேட்டாள்.
அவன்தான் அப்படி முறைத்துக்கொண்டு நிற்கிறானே! பதிலா சொல்வான்? அவளும் பதிலுக்குக் காத்திராது கைபேசியில் தொடர்ந்தாள்.
“இன்னும் அஞ்சு நிமிசத்துக்குள்ள அங்க வந்திருவன் கா. வராட்டி நான் சொல்லத் தேவையில்ல தானே? வைக்கிறன் என்ன? ஐயோ பயப்படாதீங்க! அவரப் பார்த்தாலே வலு டீசன்ட் எண்டு தெரியுது!” என்று சொல்லி, மேலும் அவன் முகத்தை கோபத்தில் ஜொலிக்க வைத்துவிட்டுக் கைபேசியை வைத்தவள், திரும்பவும் அழுத்தி, “அக்கா ஃபோனை வைக்காமல் லைனில நில்லுங்க, நான் அங்க வந்து சேருமட்டும்.” என்றாளே பாருங்க…
அவள் கயிற்றைப் போட்டதுமே கானோவைத் தன் படகில் பிணைத்திருந்தான், வேந்தன். அதை அப்படியே அறுத்தெறிந்துவிட்டுத் தன்பாட்டில் போக வேண்டும் போன்றதொரு கோபம் கணத்தில் எழுந்ததுதான். அடக்கிக் கொண்டான். காரணம், அவன் கோபத்தைப் படித்தவள் விழிகளில் கலக்கம் வந்திருந்தது. ஆமாம்! ‘விட்டுட்டுப் போயிருவானோ!’ என்ற பதற்றமே தான்.
அதையுணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும் மனம் முறுக்கிக் கொண்டேயிருந்தது, வேந்தனுக்கு.
‘அந்தளவுக்கு என்னை நம்ப மாட்டளாமே!’ மறையாத வருத்தத்தோடு, கையொன்றால் அவன் படகில் ஊன்றிக்கொண்டு எழுந்து நின்றவளுக்குக் கைநீட்டினான், “பிடித்துக்கொண்டு கவனமா இங்கால வாரும்!” சொல்லிக்கொண்டே.
“இல்ல, தேவையில்லை; நானே வரு…வன்.” எழுந்த வேகத்தில் கானோ ஆட தொப்பென்று அமர்ந்துவிட்டாள்.
“நீர் என்ன நம்பவும் மாட்டீர்; சொல்லுறதும் கேட்க மாட்டீர் எல்லா? எப்பிடியும் வந்து சேரும், நான் என்ர பாட்டில போறன். ஐயோ பாவமே எண்டு வந்த என்னைச் சொல்ல வேணும்.” சிடுசிடுத்தபடி கானோவை அகற்றிவிட, கயிற்றில் கைவைக்க, “இல்ல…இல்ல இந்தா வாறன்.” தன் கரத்தை அவன் புறமாக நீட்டினாள், இலக்கியா.
நல்ல முறைப்போடுதான் படகினுள் வர உதவினான். உள்ளே இறங்கிய வேகத்தில் தடுமாறி அவனில் மோதி, “சொறி சொறி சொறி…” படபடத்து விலகி ஓரமாகக் குறுகிக்கொண்டு அமர்ந்து விட்டவளைப் பார்க்கையில் பரிதாபமும் சுரந்தது.
‘இதெல்லாம் தேவையா? நானும் வராட்டி…’ என்றெழுந்த கோபத்தில், “இனிமேல்பட்டு இப்பிடி ஒரு விசர் வேல செய்யாதேயும்!” கடித்துக்கொண்டே படகைத் திரும்பியவன், “ஃபோனைத் தாரும்… மழைல நனையுது.” என்றான்.
சட்டென்று கட்டிக்கொண்ட கால்களுக்கு மறைவில் நனையாது பிடித்துக்கொண்டவள், “இல்ல அக்கா லைனில இருக்கிறா, போனோன்ன தாறன்.” நடுங்கும் உதடுகளால் மெல்லச் சொல்ல, அப்படியே அவளைத் தண்ணிக்குள் தள்ளிவிட்டால் என்னவென்றிருந்தது, அவனுக்கு. அதைச் செய்யவும் மனம் இடம் கொடாதே! அந்தக் கோபத்துக்கு வடிகாலாக கண்டபடி சீறிப்பாய்ந்தது படகு.
“கடவுளே! கொஞ்சம் மெல்லப் போகேலாதா?” உரத்துக் கத்தியவளுக்கு தலைசுற்றிக்கொண்டு வந்தது. அப்பவும், அவனையும் ‘எங்க எங்கட கொட்டேஜ்?’ என்ற தேடலுமாக மாறி மாறிப் பார்த்தபடிதான் இருந்தாள்.
‘அவனைப் பார்க்காமல் ஒரேயடியாத் திரும்ப, மயக்க மருந்து போட்ட துணியோ, இல்லாவிட்டால் மயக்க மருந்து ஸ்ப்ரே எண்டு அடிச்சு என்னை மயக்கிப் போட்டால்?’ என்ற எண்ணத்தில் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போலவே அமர்ந்திருந்து வந்தாளவள்.
அவள் தன்னைப் பார்க்கும் விதமே மனதைச் சொல்ல, இரும்பாகிவிட்ட முகத்தோடு வந்து இறங்குதுறையில் நிறுத்திவிட்டு, “இறங்கும்…” என்றவன் குரலில் அதட்டல் இருந்தது.
உடலோடு ஒட்டிவிட்ட ஆடையை இழுத்து விட்டுக்கொண்டே ஒரே தாவலாக இறங்கியவள், “இந்தாங்க உங்கட ஃபோன். அப்ப நான் அக்காட்டச் சொன்னதுபோல இந்த கொட்டேஜில நேற்றுத் தங்கினது நீங்கதான் என்ன? அதோட டீசன்டான ஆளும் தான். நான் கானோவில போனதைக் கண்டுட்டு வந்து கூட்டிக்கொண்டு வந்ததுக்கு தேங்க்ஸ் எ லொட்!” என்ற வேகத்தில் திரும்பி ஓடியவளை, “இலக்கியா!” என்ற அவனின் விளிப்பு நின்று திரும்ப வைத்தது, பெரு வியப்போடு!
“என்ர பெயர்…இதெப்பிடி உங்களுக்குத் தெரியும்?” மீண்டும் சந்தேகமெழுந்தது.
“இலக்கியா, இலக்கியாக்கா எண்டு அண்டைக்கு மோலுக்கு வந்திருந்த முக்கால் வாசிப்பேருக்கும் தெரிஞ்ச ஒண்டு எனக்குத் தெரியறதுக்கு என்ன?” என்றவன் முகத்தில் இப்போது சிரிப்பு இருந்தது.
“கானோ இதில நிக்குது. உங்களுக்குத் தேவையெண்டா எடுங்க, அதுக்குத்தான் கூப்பிட்டன்.” சொல்லிக்கொண்டே அவளருகில் வந்துவிட்டவன், “இன்னொருதடவை இப்பிடிச் சின்னப்பிள்ள போல நடவாதேயும் சரியோ!” அவள் தலையில் கரம் பதித்திருந்தான். சில கணங்கள் தங்கி நின்ற கரம் பரிவோடு வருடியதை உணர்ந்தவள் அதிர்ந்து உறைந்தும் நிற்க, அவனோ, அவளைக் கடந்து தன் வீட்டினுள் சென்று மறைந்திருந்தான்.
அவன் சென்று மறைந்த பின்னும் அசைந்தாளில்லை, அவள்.
இப்போ யோசிக்கையில் அவன் பார்வை, பேச்சு, நடத்தை எல்லாமே பலநாட்களாக அறிந்தவர் தெரிந்தவர் போலிருக்கோ? உரிமையோடு? யாரிவன்? சற்றும் அறிமுகம் இல்லாதவனுக்கு என்னை நீ எப்படி நம்பாதிருக்கலாம் என்ற கோபம் எல்லாம் சாத்தியமா என்ன?
எல்லாவற்றையும் மீறி, அன்று கடைத்தொகுதியில் சந்தித்த பிறகு, இச்சந்திப்பு எதேச்சையாக நிகழ்ந்ததொன்று என்பதையே ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. தான் சந்தித்த இச்சூழல் கற்பனைக் கதையொன்றில் வாசிக்கும் நிகழ்வு போலவே இருந்தது.
எவ்வளவு ஆர்வமும் பரபரப்புமாக கானோவை எடுத்தாள்? எவ்வளவு ஆர்ப்பரிப்போடு துள்ளலான மனநிலையோடு வலித்துச் சென்றாள்? எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் கொஞ்சநேரத்தினுள் எவ்வளவு பயந்து நடுங்கினாள்? என்ன என்னவெல்லாம் பயங்கரமாக நினைத்துவிட்டாள்!
ஏன், ஆளரவம் இல்லாப்பகுதியில் அந்தரித்து நின்றவேளையில் அவன் படகோடு அவளைச் சுற்றிவருகையில் கூட முள்ளந்தண்டு சில்லிட்டுப் போகவில்லையா என்ன?
இப்போது, அவை எல்லாம் வடிந்து அவள் நினைவில் அவன், கூடவே ஏகப்பட்ட குழப்பம்! மெல்லத் தன் தலையைத் தடவிக்கொண்டவள் பார்வை அவன் சென்று மறைந்த வீட்டைத் துழாவின. எங்குமே எந்த அரவமும் இல்லை.