அந்த நேரம் தான் அனுபவித்த தவிப்பும் பயமும் சேர்ந்து அலைக்கழிக்க, அதேநேரம் பெயர் கூடத் தெரியாத அந்த உருவமும் சேர்ந்து நினைவிலாடியது. அப்படி நினைவில் வரவில்லையென்றால் தானே அதிசயம்? காலையில், அந்தக் கணம் அவள் அனுபவித்த பயங்கரத்திலிருந்து மீட்டது அவன் தானே?
மெல்ல நகர்ந்த கரம் கைபேசியை கைப்பற்றியது. காலையிலிருந்து பலதடவைகள் எடுத்துக் பார்க்க நினைத்துவிட்டு ஏனோ வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு இருந்தவள், இப்போது அப்படியில்லாது வாட்ஸ்ப்பை திறந்தாள்.
அவன் கைபேசியிலிருந்து அனுப்பிய புகைப்படம் மங்கலாகத் தெரிந்தது. புதிய எண்ணாச்சே! இவளின் அனுமதிக்காகக் காத்திருந்தது. கணம் கூடத் தாமதியாது ‘போட் மேன்’ என்று போட்டுச் சேமித்தவள் இதழ்களில் குறுநகை!
அவன் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அந்த நகைப்போ விரிந்தது. புகைப்படம் எடுப்பாள் என்றெல்லாம் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லையே அவன். அந்த அதிர்வும் எரிச்சலுமாக “ஏய்” என்றிருந்தான். அப்போதுதான் புகைப்படம் கிளிக்காகியிருக்க வேண்டும். சிலகணங்கள் பார்த்திருந்தவளுக்கு அப்போதுதான் அவன் ஒன்லைனில் நிற்பது தெரிந்தது.
‘என்ன பெயர் எண்டு சரி கேட்பமா? ஒரு நன்றி கூட சொல்லாமல் வந்திட்டேனே. நன்றி எண்டு போட்டுவிடுவமா?’ தன்னை மறந்து எழுந்த ஆசைக்குக் கடும் மறுப்புத் தெரிவித்த வேகத்தில், கைபேசியை வைத்துவிட்டாள்.
அவன் பார்வைகள் ஒவ்வொன்றாக நினைவில் வர வர அவன் தொடர்பு வேண்டவே வேண்டாம் என்ற எண்ணமே வலுத்தது. அதேநேரம், கைபேசியிலிருந்து அவன் இலக்கத்தைத் தூக்கியெறியவும் முடியவில்லை.
‘பச்! இதில இருந்தா இப்பிடித்தான் கண்டதையும் யோசிக்கச் சொல்லும்.’ எழுந்து, தாய், சித்தி ஆட்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி நடந்தாளவள்.
அன்று மாலையில், பக்கத்துக் கொட்டேஜில் காரொன்று வந்து நின்றது. வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த இலக்கியாவின் பார்வை ஒரே பாய்ச்சலாக அங்கு தாவியது. அவன் தான்! மனதுள் பலத்த எதிர்பார்ப்பு முளைத்திட்டு.
கறுப்புக் கண்ணாடிகளால் உள்ளிருப்போரைப் பார்க்கவியவில்லை. இறங்கும் வரை, ஓட்டுநர் பக்கக் கதவோரமாக நிலைத்து நின்றது, அவள் பார்வை.
“இந்தாத் திரும்பவும் வந்திருக்கீனம்; ஒருவேள அந்தத் தம்பி தானோ! ஒருக்கா நாலு வார்த்தை கதைக்க வேணும்.” சுதர்சன் சொல்ல, “ஓமண்ணா…” என்றார், நாதன்.
இப்படி, அங்கமர்ந்திருந்தவர்களின் பார்வையெல்லாம் அக்காரிலிருக்க, முன்பக்கதிலிருந்து முதலில் இறங்கியது, ஒர் இளம் பெண்.
இலக்கியாவின் நெற்றி சுருங்கியது. ‘அப்ப…கலியாணம் செய்த ஆளோ!’ என்ற எண்ணத்தோடு! ஏனென்றில்லாது இதயம் வேகமாக, அதுவும் அறம் புறமாகத் துடித்தது. விசுக்கென்று எழுந்துவிட்டாள். அவ்வளவு பேருக்கும் இடையில் இயல்பாக இருக்க முடியும் போலத் தோன்றவில்லை.
‘இப்ப அவன் ஆராக இருந்தா என்ன? கலியாணம் செய்திருந்தா என்ன? இல்லையெண்டா என்ன? எனக்கு என்ன விசரா பிடிச்சிட்டு!’ மனதுள் நிலையாக நிற்க முயன்றாலும், அங்கிருந்து அகன்று விறுவிறுவென்று வீடு நோக்கி நடந்தவளுக்கு, அவளையுமறியாது கடைசியாக அவன் தலையில் கைவைத்த கணமும் அவன் பார்வையும் நினைவிலாடின. சர்ரென்று விழிகள் கலங்கிப் போக, தன்னிலே வெகுவாகவே கோபம் கொண்டாளவள்.
“இந்தத் தம்பியா இலக்கி? இப்பவே கதைச்சிருவம்.” என்றெழுந்தபடி கேட்டார் அவள் தந்தை.
முகத்தைச் சரிபண்ணவே முடியாதிருந்தாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில், விழிகளைச் சிமிட்டிச் சுரக்க முயன்ற விழிநீரை உள்ளிழுத்தபடி மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கோ… மனதுள் சட்டென்று தொய்ந்துவிட்டாள், பெரும் ஆறுதல் மூச்சோடு!
“இது…இவர் வேற ஆளப்பா!” அவசரமாக வார்த்தைகள் உதிர்ந்திருந்தன. மறுநொடி, ஒரே ஓட்டமாக உள்ளே புகுந்து எதிர்ப்பட்ட தமக்கையில் மோதி, “ஏன்டி! கண் என்ன பிடறியிலா இருக்கு? எங்க இப்பிடி ஓடுற?” அவளிடம் ஏச்சு வாங்கி, “அது…அவசரமா டொய்லட்டுக்கு அக்கா!” சொல்லிக்கொண்டே அறைக்குள் புகுந்த வேகத்தில் தொப்பென்று கட்டிலில் குப்புற விழுந்திருந்தாள்.
‘எனக்கு உண்மையா விசர் பிடிச்சிட்டு!’ திரும்ப திரும்ப தன்னையே தான் கடிந்து கொண்டாலும், ‘வேணவே வேணாம்; இது எல்லாம் எங்க கொண்டு போய்விடுமோ!’ என நினைத்து ஒதுக்கிடத்தான் முயன்றாள். அது எங்கே? சிறு சந்தர்ப்பம் கிடைத்திட்டாலும் போதுமென்று புதிது புதிதாக உணர வைக்கின்றதே!
அடுத்தடுத்த நாட்களில், “கானோவில போனதோடு எல்லாம் போதுமெண்டு ஆகிட்டுப் போல! இலக்கிம்மா அத மறந்திட்டு வழமைபோல கலகலப்பா இரடா!” பெரியவர்கள் சொல்லும் வகையில் ஒருவிதமான அமைதியில் நடமாடினாள், அவள்.
“அதானே அக்கா…வாங்கோ!” ஒவ்வொன்றுக்கும் இளையவர்கள் வற்புறுத்தி இழுக்க வேண்டியிருந்தது. அதில் ஓரளவுக்கு இயல்பாகினாலும் மனம் மட்டும் பழைய இலக்கியாவாகேன் என்கின்றதே!
இடையில் ஒருநாள் ஒட்டோவா ‘பாலிமண்ட் ஹில்ஸ்’ போய் வந்திருந்தார்கள்.
இன்னுமொருநாள், மொன்றியல் சென்று சுற்றிவிட்டு ‘வைட் சேர்ச்’சுக்கும் சென்று வந்தார்கள். அப்படிப் போகப் புறப்பட்ட போது அத்தம்பதியோடு சில நிமிடங்கள் உரையாடும் சந்தர்ப்பம் வரவே, அன்று நடந்ததைச் சொல்லியிருந்தார், மலர்.
“உங்கட சொந்தக்காரத் தம்பியோ அவர்? பேர் கூடத் தெரியாது. நாங்க நன்றி சொன்னம் எண்டு சொல்லி விடுங்க!” என்றும் கூறியிருந்தார்.
அவர்களும், “ஓ! ‘யாழ் ட்ராவல்’சில வேல செய்யிற பெடியன் போல! இங்க நாங்க வர முதல் ஒழுங்கு செய்ய ஒரு பெடியனை அனுப்ப வேணும் எண்டு சொல்லி இருந்தவே… அவரா இருக்கும்.” என்றிருந்தார்கள்.
வீட்டினர் அதோடு அந்தக்கதையை விட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டுப்பிள்ளை மட்டும் அதை விட்டுவிடவே இல்லையென்றதை மட்டும் அறியவில்லை.