எல்லோரும் வந்தபின்னர் அவரவருக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டமர்ந்து கலகலத்தபடி உண்ட போதும், இலக்கியா, அவளாக இருக்கவில்லை. அவள் விழிகள் சுற்றிச் சுழன்று அவனையே தேடியலைந்தன.
‘ச்சே! பெயரச் சரி கேட்டனா?’ தன்னைத்தானே கடிந்துகொண்டவளுக்கு, பேசாமல் வாட்ஸ் அப்பில் கேட்போமா என்றிருந்தது. அப்போதும் அதற்கான துணிவும் வரேன் என்றது.
‘அதெப்பிடி நான் போற இடமெல்லாம் வேல வரும்?’ இப்படி எண்ணுகையில் எழுந்த பயவுணர்வு, அவனுருவை நினைத்த மட்டில், அவன் முகத்தில், பார்வையில், பேச்சில் கவனமெடுத்தமட்டில் சுயமிழந்துதான் போனது. கயவன், கேடு செய்யக்கூடியவன் என்றதோடு சுலபத்தில் பொருத்துப்படேன் என்கிறானே!
அதன் பயனாக, ‘டிராவல்சில வேல எண்டா சிலவேள உண்மையாவே வேலையாவும் வந்திருக்கலாம்தானே? தற்செயலாத்தான் சந்திக்கிறமோ!’ மனதைச் சமாதானம் செய்ய முயன்றாலும், ‘அதென்ன ஏதோ கனக்கக் காலம் பழகின மாதிரி பார்க்கிறது?’ சிடுசிடுப்போடு எண்ணியதும் அவளேதான்.
அவன் பார்வையில் தெரிந்த நெருக்கத்தை உணர்ந்திருந்தது அவளுள்ளம். அதுவே, அவளை மிகையாகத் தடுமாறவும் வைத்ததெனலாம்.
இப்பவும், அவன் என்னமோ இங்கேதான் இருக்கிறான் என்றது உள்ளணர்வு. பிரதான வாயிலால் அவன் வெளியேறியதைக் காணவில்லையே!
“சரி சரி…இருந்தது காணும் எழும்புங்க, இனிப் போகலாம்.” நாதன் எழுந்துகொள்ள, ஒரொருவராக எழுந்து வாகன நிறுத்தம் நோக்கி நடந்தார்கள்.
அந்த ரெஸ்டாரண்ட் பிரதான வாயிலிலிருந்து பார்த்தால் அவர்கள் வந்த வாகனம் நிறுத்தியிருந்த இடம் சற்றே தள்ளித் தெளிவாகவே தெரிந்தது.
கடைசியாக, அப்போதும் சுற்றி சுற்றிப் பார்த்தபடி வந்த இலக்கியாவுக்கு, அவனைப் போலவே ஒர் உருவம் உள்ளே தென்படவும் அதற்குமேல் ஓரடிகூட நகர முடியவில்லை.
‘இவ்வளவு நேரமும் இல்லாம இதென்ன? அப்ப எங்கயாவது நிண்டுகொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தானோ!’ என்ற எண்ணம் வந்தாலும், பெயரைச் சரி கேட்டுவிட்டு வந்தால் என்றிருந்தது.
“இலக்கியா என்ன? வா!” அவள் அம்மா.
“அம்மா நான் கம் வாங்க வேணும் எண்டு நினைச்சிட்டு, பாருங்க மறந்திட்டன். நீங்க போய்க்கொண்டே இருங்க, வாங்கிட்டு ஓடிவாறன். அஞ்சு நிமிசமம்மா.” என்றவள் திரும்பி ஓட, “ஏய் இலக்கி, என்னட்ட இருக்கு வா!” என்று கவியும், “எங்க எல்லாரிட்டியையும் இருக்கு.” மற்ற இளையவர்களுக்கும் சொன்னதை அவள் கேட்கவேயில்லை.
“கம் தானே எல்லாரிட்டையும் இருக்கே! பிறகு என்னத்துக்கு இப்ப அவசரமா? நேர காலத்துக்குப் போய்ச் சேர்ந்தா கனடாப் பக்கம் நயாகராவில ஆறுதலா நிண்டுட்டு போடர் கடக்கலாம் எல்லா?” என்றபடி, மற்றவர்கள் ஏறிய பின்னர் தானும் ஏறிய நாதன், “தம்பி ஒரு அஞ்சு நிமிசம், பிள்ள வந்திரட்டும்.” ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனிடம் சொல்லிவிட்டுச் சென்றமர்ந்தவர், “நீங்க இனி எங்களோடயே சாப்பிடலாம்; தனியா ஏன்?” என்றார் அவனிடம்.
இவர்கள் கோப்பி வாங்கும் போது இவனுக்கும் வாங்குவதற்காகப் பார்க்க, ஆளையே காணவில்லை. மாறன் கைபேசியில் கதைத்துவிட்டு, “அவர் வாங்கிட்டாராம்.” என்று சொல்லியிருந்தான்.
“அதொண்டும் பிரச்சின இல்ல அங்கிள்.” அவரிடம் முறுவலித்தாலும் அந்தத் தம்பியின் விழிகளில் எக்கச்சக்க நகைப்பு.
‘ஒருவேள என்னை மாதிரி ஆரயும் கண்டுட்டு ஓடினாளோ!’ அவன் மனத்தில் சந்தேகம்.
இவர்கள் வெளியே வர எழுவதற்குச் சில நிமிடங்கள் முன்வரை அவன் அங்குதானே நின்றான். பார்வை அவளில்தான், அது, தத்தளிப்போடு அங்குமிங்குமாக அலைந்ததைப் பார்த்து இரசித்தபடி!
‘நல்லாத் தேடு! கொஞ்ச நஞ்ச நேரமா? ரெண்டரை மணித்தியாலமா நானும் இப்பிடித்தானே இருந்தன்! ஒண்டா ஒரே வாகனத்தில ஒருத்தன் வாறான், அதுவும் இந்தா இப்பப் பார்ப்பாள் அப்பப் பார்ப்பாள் எண்ட ஆர்வத்தோட! அப்ப எல்லாம் அவவுக்குக் கண்ணில தெரியேல்லையாமே! அந்தளவுக்கு கொண்டாட்டமும் குதூகலமும்! இப்ப மட்டும் என்னவாம்? அது மட்டுமா? இடைப்பட்ட எத்தின நாட்கள்? அக்காக்கு ஃபோட்டோ அனுப்புறன் என்றிட்டு சீன் போட்டவாவுக்கு என்ர ஃபோன் நம்பர் தெரியும் தானே? இருந்தும் ஒத்த வார்த்தை? ஒத்த சொல்லு ஹாய் எண்டு நீ தொடங்கி இருக்க நான் தட்டிக்கழிச்சிட்டா போயிருப்பன்?’
அவளிடமிருந்து ஏதாவது செய்தி வருமா என்று மிகையாகவே எதிர்பார்த்திருந்தவன் மனதின் முறுகலிது.
காலையில் வரும்போதே, அன்று தன் புகைப்படத்தைப் பார்த்திருந்த கவியும் அடையாளம் கண்டுகொள்வாள் என்றுதான் நினைத்திருந்தான். அது பார்த்தால், நேரே பார்த்து முறுவலித்த கவி அவனை அறிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. அப்போ, அவள் உண்மையில் தமக்கைக்குத் தன் புகைப்படத்தை அனுபவில்லையோ என்றும் சந்தேகம் இவனுக்கு.
அதேநேரம், சாரதியாசனத்தில் தன்னைக் கண்டதும் எப்படி விழிகளை விரித்தபடி நிற்பாள் என்பதைக் காணும் ஆர்வமும் எக்கச்சக்கமாக இருந்தது.
அதுமட்டுமில்லை, நன்றி சொல்லவேண்டுமென்று அவனை விசாரித்தார்கள் என்றும் சொல்லியிருந்தார்களே! இவர் தான் அவர் என்று சொல்வாளா என்றொரு ஆர்வமும் தான், எதிர்பார்ப்பென்றே சொல்லலாம்.
இப்படி அவனுள் எழுந்திருந்த எந்த ஆசையும் நடக்கவில்லையே! சாரதியாசனத்தில் இருந்தவன் புறமேனும் அவள் விழி சாய்ந்ததா என்ன? ஒருத்தன் உள் கண்ணாடியால் தன்னைப் பார்க்கிறானென்ற உணர்வேயில்லாமல் கலகலத்துக்கொண்டு வந்துவிட்டு இப்ப மட்டும் என்னவாம்?
‘நல்லாத் தேடி அலைஞ்சு போட்டு வந்து சேரட்டும்; அப்பச் சரி என்னைக் காணுறாளா பார்ப்பமே!’ என்று எண்ணினாலும், மெல்ல இயல்பாக வெளியில் இறங்கியவன், கைபேசியை எடுத்து, “ஹலோ கானோ வீராங்கனை!” தாழ்ந்த குரலில் அழைத்தான்.


