தான், அவனென்று நினைத்து வந்த உரு யாரோ என்றறிந்து தன்னிலேயே கோபம் கொண்டாள், இலக்கியா! எந்தவித முன்னறிவிப்பும் அறிமுகமுமின்றி அவள் வாழ்வில் எட்டிப் பார்த்த அவன்தான் கண்ணாமூச்சி ஆடுகின்றானென்றால், இந்த மனமும் சொல் கேளாது சேர்ந்து ஆட நினைக்கிறதா என்ன?
ஆயிரமாம் முறையாக அவளுள்ளதைக் கடிந்து அடக்கிட முனைந்தாலும் அது முரண்டு பிடிக்கின்றதே! அதுமட்டுமா? விழிகளோடு கைகோர்த்தவண்ணம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தது. தனக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்றுணர்ந்து திரும்ப எண்ணினாலும் கால்களும் ஒத்துழையேன் என்கின்றதே!
அப்படி, அவள் தத்தளித்து நின்ற போதுதான் பேசி கிணுகிணுத்தது.
வீட்டினர் யாரோ என்றொரு எரிச்சல் ஒருபுறமும் குற்றவுணர்வு மறுபுறமும் தாக்க எடுத்தவள், அழைத்தது ‘போட் மேன்’ என்றிருக்கவும் சட்டென்று ஏற்று, பேசியைக் காதுகளில் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.
“இது உம்மட நம்பர் தானோ எண்டு ஒரு சின்னச் சந்தேகம்தான், ம்ம்…அப்ப அண்டைக்கு உம்மட ஃபோனுக்கே தான் போட்டோவ அனுப்பி நாடகம் போட்டீர் என்ன? சரி இப்ப அதைவிடும், என்ன சத்தமே இல்ல? நான் இங்க இருக்கிறன், அங்க நிண்டு தேடி ஒரு பிரயோசனமும் இல்ல” என்றவன் குரலில் ஒட்டிக்கிடந்த நகைப்பில் சுதாரித்திருந்தாள், இலக்கியா!
“ஹலோ ஹலோ! ஆரு கதைக்கிறது? மொட்டையா எடுத்து ஏதேதோ உங்கட பாட்டில கத்திக்கொண்டு போறீங்க!” அதட்டலாகக் கேட்டவள் பார்வை, சுற்றிச் சுழன்றது. ‘இங்க தான் எங்கயோ நிக்கிறான் ராஸ்கல்!’
“அப்ப நான் ஆரெண்டே தெரியாது என்ன? சரி, அப்பிடியே இருக்கட்டும். இப்ப ஓடி வந்து ஏறேல்லையோ காரை எடுத்திருவன். எப்படி வசதி?” அவன் குரல் நகைத்தது, கூடவே சீண்டலும்!
அவன் சொன்னதைக் கேட்டவளோ முழுமையாக அதிர்ந்து போயிருந்தாள். “காரை எடுத்திருவன் எண்டா?” முணுமுணுத்தபடி, கண்ணாடிகள் ஊடாகப் பாய்ந்த பார்வை சாரதியாசனத்தின் கதவைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தவனில்!
“அப்ப…அப்ப…” சொல்லிக்கொண்டே வேகமாக வெளியில் வந்தவள், “நீங்க…” என்றபடி கைபேசியைப் பார்க்க, அழைப்பைத் துண்டித்திருந்தான்.
‘யாழ் ட்ராவல்ஸில வேல பாக்கிறவர் எண்டுதானே அந்த அக்கா அண்டைக்குச் சொன்னவா! அப்ப டிரைவரா எங்களோட வந்தது அவனா? நான் தான் கவனிக்கேல்லையா?’
ஒரே ஓட்டமாக வந்தவளை நல்ல வேளையாக வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள் பார்க்கவில்லை. இளையவர்கள் பார்வை கைபேசியில் என்றால் பெரியவர்களுமே கைபேசியில் தான். சுகுணா சுதர்சனோடும் நாதன் தாயோடும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓடி வந்தவள் எதையுமே கவனிக்கவில்லை; அவள் பார்வை நேராக சாரதியாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டவனில்! அவனும் சும்மா இருக்கவில்லை. அவளின் ஒவ்வொரு அசைவையும் இரசித்துப் படம் பிடித்து மனதுள் சேர்த்துக்கொண்டிருந்தான்.
அவள் முகமும் பாவனையும் சொன்ன செய்தியில் அவன் விழிகள் கூடக் கலங்கிப் போயின! பேசிப்பழகியிராது, பார்த்ததும் தன்னுள் நுழைந்த நேசத்துக்கு எதிரொலி இருப்பது புரிந்த அத்தருணம் அவனையும் முழுமையாகவே ஆட்கொண்டிருந்தது.
ஒரெட்டில் அவளை அணுகித் தன்னுள் அடங்கிவிடும் ஆவல் கொண்ட மனதை கட்டவிழ்த்து விடாதிருக்க பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டியவனான், அவன். அடுத்துக் கடந்த கணங்களில் கட்டுக்குள் வந்துவிட்டான் என்றதை, ஒற்றைப் புருவம் உயர, கண்ணடித்து வெளிப்படுத்தியிருந்தான், அதுவும் கணப்பொழுதில்!
எதிரில் நின்றவள் பாடு?
அவன் கண்ணடித்ததும் பட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டவளால் சட்டென்று உள்ளே ஏறி அமர முடியவில்லை.
அதற்குள் தமக்கையைக் கண்டுவிட்டான் ஆரூரன். “இலக்கியாக்கா என்ன பிளான்? அப்பிடியே அந்த அண்ணாவ இழுத்து வெளில தள்ளிப்போட்டு நீங்க கார் ஒடப்போறீங்களோ! அக்கோய் இங்க வந்து ஏறுங்க!” அவன் மட்டும் தக்க சமயத்தில் நக்கலாகவேனும் சொல்லவில்லையென்றால், என்ன ஏதென்ற கேள்வி வீட்டாக்களிடமிருந்து வந்தேயிருக்கும்.
இருந்த போதும் வாகனத்தில் அப்படியே சாய்ந்து நின்றுவிட்டாள். விழிகள் குபுக்கென்று நிறைந்து போயின. நெஞ்சம் வேறு அறம்புறமாகத் துடித்தது.
இன்னார், யார், எவன் என்றெல்லாமில்லாது தனக்கே தெரியாத வண்ணம் தன்னுள் என்னவிதமான மாற்றம் உண்டு பண்ணிவிட்டான்? நினைக்க நினைக்க தலை கிறுகிறுக்க உடலில் சக்தி வடிந்திட்ட நிலை!
சட்டென்று அவள் அப்படியே சாய்ந்து நின்றதும் தன்னையும் மீறி இறங்க முனைந்தான், வேந்தன்.
“இலக்கிக்கா என்ன? என்ன நடந்திட்டு?” ஆரூரன் இறங்க, அடுத்தடுத்து மொத்த உறவுகளும் சூழ்ந்து அவளைப் பார்வையிலிருந்து மறைத்துவிட அப்படியே ஏக்கம் கொண்ட மனதின் ஆயாச மூச்சோடு அமர்ந்துவிட்டான், அவன்.
“ஒண்ணும் இல்ல சித்தப்பா! என்னால நேரம் போகுதே எண்டு ஓடிவந்தன்…கண்ணுக்க என்னவோ விழுந்திட்டு!” விழிகளிரண்டையும் அழுந்த துடைத்துத் தன்னை நிலைநிறுத்த முயன்றாள்.
“அதுக்காக இப்பிடியா ஓடி வாறது? இப்ப என்ன விட்டுட்டா போகப் போறம்? சரி சரி எல்லாம் போயிருங்க பிள்ளைகள்! நீ ஏறி உள்ள வா இலக்கி.” மாறன் சொல்லிவிட்டு பிள்ளைகளை அவரவர் இடத்தில் அமரச் செய்தான். அதன் பின்னரே, உள்ளே ஏற அடியெடுத்து வைத்தவள் பார்வை அவனை நாடியது.
அவனோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தேவையுணர்ந்து மறுபுறமாகக் குனிந்து எதையோ எடுத்துக்கொண்டிருந்தான்.
“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! அப்பிடியே கண்ணை மூடி காயமண்ட் லேக்கில கானோ ஓட்டிட்டு வாரும், ஃபிரஷ்சா இருக்கும். இந்த ரெண்டு கிழமையும் உம்மோடதானே இருக்கப் போறன்.” அவன்தான், வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டே வாகனத்தை எடுத்தான். பேசிக்கொள்ளாது உணர்ந்த நெருக்கம் அப்படித் தட்ட வைத்திருந்தது.
தன்னிருக்கையில் வந்தமர்ந்தவள் உடனே கைபேசியை எடுத்துக் பார்க்கவில்லை. அவன் உள் கண்ணாடியால் பார்த்த பார்வையும், கைபேசியில் தட்டியதும் அவன்தான் என்னவோ போட்டுள்ளான் என்று புரியவைத்திருந்தது. அருகில் ஆரூரன் இருக்கிறானே, அதுவும் அவளிடமே வளவளத்தபடி. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். ஆரூரன் கவனம் மறுபுறமாகத் திரும்பிய சிறு இடைவெளியில் கைபேசியை உயிர்ப்பித்தவள் அவன் போட்டிருந்த செய்தியை வாசித்ததும்தான் தாமதம், கண்ணிரெண்டையும் உருட்டிகொண்டு ஒரு பார்வையை வீசினாள். அவன் பார்வையும் மின்னலாகத் தொட்டு நகர்ந்தது.
அக்கணம், ‘வரப்போகும் இருகிழமைகளுக்கு நிறையவே வேலை இருக்கும் போலவே’ என்ற உணர்வில் கள்ளச் சிரிப்புச் சிரித்தது உள்க்கண்ணாடி! (ரியர் வியூ மிரர்)
‘யார் என்ன ஏதென்று ஒண்டுமே தெரியாது. பெயர் கூடத் தெரியாது. நான் இப்படியெல்லாம் மனதை அலையவிடுவது சரியா?’ அடிமனம் சீறியதில், ‘என்ன துணிவு இவனுக்கு?’ சற்று முன்னர் தளர்ந்து நின்றது இவளா என்றவகையில் முறுக்கியது, இலக்கியாவினுள்ளம்.
“இங்க பாருங்க கவி, இலக்கி… நீங்கதான் இங்க உள்ள நம்மட பிள்ளைகள் அத்தனைபேருக்கும் வயதில பெரியவவே. உங்களப் பாத்துத்தான் அவையள் வளருவீனம். அவையள் பிழை செய்தா கண்டிக்க நீங்க சரியா நடக்க வேணும் விளங்கிச்சோ! இத எப்பவும் நினைவில வச்சிருக்க வேணும்.” குழைத்து உருட்டி பார்த்துப் பார்த்து ஊட்டிய சோற்றோடு, மலர் ஊட்டியிருந்த சொற்கள் இதயத்தினுள் கல்வெட்டாக ஊன்றியிருந்து, ‘என்னை மறந்துவிடாதே’ என்று, பளிச்சென்று வெளிச்சமிட்டுக் காட்டியது.
அப்படியே இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துவிட்டாள். அதன் பின்னர் நயாகராவில் சென்று பஸ் நின்று எல்லோரும் இறங்க ஆயத்தமாகும் வரை ஒரு வார்த்தை கதைக்கவில்லை, கண்களைத் திறக்கவுமில்லை.
“இரவிரவா பயண ஆயத்தம் செய்ததில இப்ப நல்ல நித்திர கொல்லுறாள்” என்று தாய் சொன்னதும், அருகிலிருந்த ஆரூரன், தன் தலையைப் பரிவோடு தனது தோளில் தாங்கியதும் பார்த்து, முட்டிய கண்ணீரை வழியவிடாதிருக்கப் பெரும் பாடு பட்டுப் போனாளவள்.


