வணக்கம்

அத்தியாயம் 9

ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வளர்த்த நல் நெறிகளும் அவளுக்குள் இல்லாமல் இல்லை.

அதனாலோ என்னவோ செய்த தப்புகள் அத்தனையும் அவளைக் குன்ற வைத்தன. அதுவும், ‘அவளும்தானே என்னோடு பழகினாள்’ என்று மிதுன் கேட்டதும், தான் முறையற்று வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கிற அசிங்கமும் அவளை முற்றிலுமாக ஒடுக்கியிருந்தன.

அப்போதுதான் எந்த நிலையிலும் நமக்கான எல்லை தாண்டாமல், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியதன் முக்கியம் புரிவதுபோல் இருந்தது. கட்டற்ற சுதந்திரத்திற்கு ஆசைப்பட்டு இன்று யாரும் கட்டிப்போடாமலேயே அறைக்குள் தானே அடைந்து கிடக்கிறாள்.

அதுவும் அன்றைக்குப் பிறகு ஒரு வார்த்தை அவள் முகம் பார்த்துப் பேசாத தந்தையின் ஒதுக்கம் இன்னுமே அவளை முடக்கியது.

அவரிடம் மன்னிப்பை வேண்ட எண்ணினாலும் அவர் முகம் பார்க்கும் தைரியம் இல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறாள்.

மிதுன் இரண்டொருமுறை பேச அழைத்தபோதும் சரி, குறுந்தகவல்கள் அனுப்பியபோதும் சரி அவள் பதில் சொல்லப் போகவில்லை.

‘கலியாணம் முடியட்டும் மிதுன்.’ என்று மட்டும் அனுப்பிவிட்டாள்.

சுதாகருக்கு வீட்டில் நடக்கும் எதுவும் புரிவதாக இல்லை. ஆளுக்கு ஒரு மூலையில் என்று முடங்கிக்கிடந்தனர். காரணம் கேட்டால் யாரும் எதையும் அவனிடம் பகிரத் தயாராயில்லை. படிக்கிற வேலையை மட்டும் பார் என்று விரட்டினர்.

கடைசியில் சுவாதியைப் பிடிவாதமாகப் பிடித்துவைத்துக் கேட்டான். மூத்த தமக்கை தம் சொந்தத் தமக்கை இல்லையாம் என்று அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனவன் நேராகத் தந்தையிடம்தான் ஓடி வந்திருந்தான்.

இனியும் எதையும் மறைப்பதில் அர்த்தமில்லை என்பதில், “நல்ல மனம் இல்லாத உங்கட அம்மாக்கு அவாவச் சுமக்கிற பாக்கியத்த கடவுள் எப்பிடி அப்பு குடுப்பார்?” என்று கேட்டார் அவர்.

இதை அறைக்கு வெளியே நின்று
கேட்டுக்கொண்டிருந்த ஜெயந்திக்கு சுரீர் என்றது. அந்தளவிற்கு மோசமானவரா அவர்?

“என்னப்பா சொல்லுறீங்க? அப்ப அக்கா உண்மையாவே என்ர அக்கா இல்லையா?” இன்னும் அதிர்ச்சி நீங்காமல் வினவினான் சுதாகர்.

“கூடப்பிறந்தா மட்டும்தான் அக்காவா தம்பி? இல்ல, ஒருத்தி அக்காவா இருக்க அந்தத் தகுதி மட்டுமே போதுமா?”

சுதாகர் பதினெட்டு வயது நிறைந்தவன்தான். என்றாலும் அந்த வீட்டின் கடைக்குட்டி என்பதாலும், எந்தவிதமான துன்ப துயரங்களையும் இதுவரையில் அனுபவித்தறியாதவன் என்பதாலும் தந்தையின் பேச்சில் மறைந்து கிடந்த சூட்சுமத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. அவரின் கேள்வி புரியாத குழப்பத்துடன் பார்த்தான்.

“அப்பா இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பன் எண்டு தெரியாப்பு. ஆனா அப்பா இருக்கிறனோ இல்லையோ எண்டைக்கும் அவதான் உனக்கு மூத்த அக்கா. நீயாவது அக்காட்ட வேற்றுமை காட்டிராத.” என்று அவனிடம் கண்ணீருடன் வாக்குப் பெற்றுக்கொண்டார்.

அதற்கு மேலும் வெளியே நிற்க முடியாமல் உள்ளே வந்தார் ஜெயந்தி. “ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க குணா? அவளை வயித்தில சுமக்கக் கூடாத அளவுக்குப் பொல்லாதவளா நான்? அப்பிடித்தான் இத்தின வருசமும் நடந்தேனா? கிட்டத்தட்ட 27 வருஷ வாழ்க்கை. அதில ஒரு நாள் அவசரப்பட்டுட்டன். அதுக்காக இப்பிடி எல்லாம் கதைப்பீங்களா?” என்றார் கண்ணீரும் ஆதங்கமுமாக.

“எனக்கு ஆரின்ர முகம் பாக்கவும் விருப்பம் இல்ல. வெளில போகச் சொல்லு சுதா!” மனைவியின் முகத்தைத் திரும்பியும் பாராதவர் மகனிடம் மிகக் கடுமையான குரலில் சொன்னார்.

அறிந்துகொண்ட விடயம் தந்த அதிர்விலிருந்தே இன்னும் வெளிவராத சுதாகர், தாய் தந்தையருக்குள் நடப்பதை புரிந்துகொள்ள இயலாமல் அவர்களை மாறி மாறிப் பார்த்தான்.

“அந்தளவுக்கு வெறுத்திட்டீங்களா குணா? செய்தது பிழைதான். உங்களிட்டயும் உங்கட மக்களிட்டயும் இன்னும் எத்தின தரம்தான் நான் மன்னிப்புக் கேக்கிறது?”

அப்போதும் அவர் பேசவில்லை. அவரைக் கவனித்துக்கொள்ளும் பாலனை அழைத்துத் தன்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்.

பாலனும் என்ன செய்வது என்று தெரியாது பார்க்க, “இல்ல. நானே போறன். ஆனா, நீங்க எனக்குத் தாறது பெரிய தண்டனை குணா.” என்றுவிட்டு ஜெயந்தி வெளியேறினார்.

என்றைக்கு இளவஞ்சி பற்றிய உண்மை வெளியில் வந்ததோ அன்றிலிருந்து குணாளன் ஜெயந்தியின் முகம் பார்ப்பதே இல்லை. அவ்வளவு வெறுப்பும் கசப்பும்.

அவர்களின் திருமணத்தின்போது அவர் ஜெயந்தியிடம் வைத்த ஒரேயொரு வேண்டுதல் இது மட்டும்தான். இதில் விருப்பம் இல்லையென்றால் உனக்குப் பிடித்ததுபோல் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்றும் சொன்னார்.

திருமணத்தின் பிறகும் இளவஞ்சி மட்டுமே போதுமென்றுதான் இருந்தார். அன்னையின் வற்புறுத்தலும் ஜெயந்தியின் ஏக்கமும்தான் அவர் முடிவை மாற்றியவை. இன்று அதற்காகத் தன்னையும் நொந்துகொண்டார்.

சுவாதிக்கு திருமணம் நடந்துவிடும். சுதாகருக்கு வயது இருக்கிறது. இளவஞ்சி? விழிகளை மூடிய கணம் அன்னை வந்துநின்றார்.

உன்னை நம்பித்தானே அவளை விட்டுவிட்டுப் போனேன் என்று கேட்டார். அவளைச் சுற்றி நீங்கள் எல்லோரும் இருந்தும் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டீர்களே என்று கோபப்பட்டார். குணாளனுக்கு நெஞ்சுக்குள் ஒருமுறை சுருக்கென்றது. நீவி விட்டுக்கொண்டார்.

அப்போது அவர் அறையின் கதவு தட்டுப்பட, இப்போது யார் என்று திரும்பிப் பார்த்தார்.

இளவஞ்சி நின்றிருந்தாள்.

சற்று முன்னர் அலுவலகம் கிளம்பிப்போன அவள் திரும்பவும் வந்து நிற்கிறாள் என்றால், தான் திடமாக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் குணாளன்.

எப்போதும் அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு அவர் அருகில் அமர்கிறவள் இப்போதெல்லாம் அமர்வதே இல்லை. வருவாள், அவர் நலன் விசாரிப்பாள், தேவைகள் ஏதும் உண்டா என்று கேட்பாள், போய்விடுவாள். இப்போதும் அவர் முன்னால் ஒரு இருக்கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

அவர் அவள் முகத்தையே பார்த்திருக்க, “எனக்கு என்னைப் பற்றித் தெரியோணும்.” என்றாள் சுருக்கமாக.

அவர் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

“நான் ஆர்?”

“இந்தக் குணாளன்ர மூத்த மகள்.” குரலும் பார்வையும் நெகிழச் சொன்னார் குணாளன்.

ஒரு வினாடி அமைதியாக இருந்தாலும், “நான் கேக்கிறது என்னைப் பெத்த அம்மா அப்பாவைப் பற்றி.” என்றாள்.

“அப்ப நான் உங்கட அப்பா இல்லையாம்மா?” கண்ணோரம் கசியக் கேட்டவரிடம் இல்லை என்று எப்படிச் சொல்லுவாள்?

அவள் அவர் மகள் இல்லை என்று தெரிகிற கணம் வரைக்கும் அவள் அப்படி உணர்ந்ததே இல்லையே. ஜெயந்தி கூட அப்படித்தானே பார்த்துக்கொண்டார். இன்னுமே சொல்லப்போனால் அவள் முடிவின் கீழ்தானே அந்த வீடே இயங்கியது. இப்போதும் அவள்தான் விலகி நிற்கிறாள். அல்லது அப்படி நிற்க முயல்கிறாள்.

அவரையே சில கணங்களுக்குப் பார்த்தவள் அந்த விழிகளில் தெரிந்த பாசத்திலும் பரிதவிப்பிலும் தன் பார்வையை அகற்றிக்கொண்டாள். இதனால்தான் இத்தனை நாள்களும் இதைப் பற்றிப் பேசாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.

காரணம் சொல்லாமல் திருமணத்திற்குச் சம்மதி என்கிற நிலனின் பிடிவாதம்தான் சந்தேகத்தைக் கிளப்பி, அலுவலகத்துக்குப் புறப்பட்டவளை பாதையை மாற்றி இங்கே வரவைத்து அவரோடு பேச வைத்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock