மறுநாள் காலை ஏழுமணிக்கே தயாராகி, விடுதியோடிருந்த உணவுச்சாலைக்கு வந்தவர்களை முறுவலோடு வரவேற்ற வேந்தன் பார்வை, இலக்கியாவைத்தான் தேடிற்று. அவளையும் சுகுணாவையும் தவிர்த்து மற்றவர்கள் வந்திருந்தார்கள்.
அதுவொரு இந்திய விடுதி. முதல் நாள் மாலை ‘செக் இன்’ செய்த சமயம், குஜராத்திலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருந்தார், அதன் உரிமையாளர்.
உடனே எடுத்து உண்ணும் வகையில் பேக்கரி வகையுணவுகள், சான்விச், விருப்பமானவர்கள் தயாரித்துக்கொள்ளும் வகையில் பான் கேக், வாஃபிள் செய்ய மாக்கலவை, தேநீர், கோப்பி, குளிர்பானங்கள் என்றெல்லாமே அங்கிருந்தன.
விடுதி உரிமையாளரின் மனைவியும் மகளும் மேற்பார்வை செய்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
இவர்களைப் போலவே, ஆனால், பெரிய பேரூந்தில் வந்திருந்த சீனர்களால் உணவுக்கூடத்தின் பெரும்பகுதி நிறைந்திருந்தது. காலையுணவு உண்டுவிட்டு, போகும் வழியில் உண்ண, குடிக்கவெனச் சேகரித்துக்கொண்டு போகும் வகையில் அவர்கள் செய்த கூத்தைக் கொஞ்ச நேரமாகவே அவதானித்துக்கொண்டிருந்தான், வேந்தன்.
விடுதியில் தங்கியிருப்பவர்கள் எண்ணிக்கையையைக் கருத்தில்கொண்டுதானே காலையுணவுக்கு ஒழுங்கு செய்திருப்பார்கள்! அப்படியிருக்க, மற்றவர் பற்றிக் கொஞ்சமும் யோசியாது நடக்கின்றார்களே! முகம் சுழித்தாலும், சற்றும் தயக்கமின்றிய அவர்கள் நடத்தை வியப்பையும் கூடவே சிரிப்பையும் வரவைக்காதுமில்லை.
அவர்களைத் தடுக்க வழியில்லாது தாயும் மகளுமாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். பான் கேக், வாஃபிள் தயாரித்தெடுக்க வேண்டுமென்பதால் அந்தப்பக்கம் மட்டும் செல்லவில்லை. இருந்தாலும், பான் கேக்குக்கு அருகில் வைத்திருந்த சிரப், ஜாம் பக்கற்றுகளை அள்ளியெடுத்துப் பைகளில் திணித்துக்கொண்டார்கள். தம்மிடமிருந்த போத்தல்களில் தேனீர், கோப்பி, குளிர்பாணமென்று நிறைத்துக் கொண்டார்கள்.
“நேரத்துக்கே எல்லாரும் வந்தாச்சு போல!” என்றபடி வந்த நாதன் வேந்தனின் முன்னால் அமர்ந்துகொண்டார்.
“உங்களுக்குக் கோப்பியும் ப்ரவுன் பிரெட்டும் எடுத்துக்கொண்டு வாறன் என்ன?” கேட்டு, தமையன் தலையாட்டலோடு நகர்ந்தான், மாறன்.
“நல்லாத் தூங்கினீங்களா தம்பி? நாங்க சும்மா இருக்கிறது நீங்க ஓடிக்கொண்டே எங்களோட அலையிறதும்.” மீண்டும் பேச்சுக்கொடுத்தார், நாதன்.
‘எங்க இவள்?’ வாயிலைப் பார்த்துக்கொண்டிருந்தவன், “அதெல்லாம் பிரச்சின இல்ல அங்கிள், நல்லாத் தூங்கினன்.” என்றுவிட்டு, “ஹோட்டல் பரவாயில்ல என்ன? நெட்டில இருந்த மாதிரியே இருந்திச்சு. இப்பிடி ஹோட்டலை நம்பி வெளிக்கிடேக்க அது சுத்தமா இருந்தாலே போதும்.” என்றவன் பார்வை மீண்டும் வாயிலுக்குத் தாவியோடியது.
“அதுதான்…இதப்போலயே மற்றதுகளும் இருந்திருந்திர வேணும்; நாம சமாளிக்கலாம், பிள்ளைகளும் அண்ணியாட்களும் நம்மக் கடிச்சுத் திண்டிருவீனம்.” என்றபடி, உணவுத் தட்டுகளும் கோப்பியுமாக வந்த மாறன், வேந்தனுக்கருகில் கிடந்த இருக்கையை நிறைத்தான்.
“அண்ணா தானே எல்லா ஹோட்டலும் புக் பண்ணினவர்; பார்த்து ஸ்டார் ஹோட்டலா புக் பண்ணினவர் நல்லாத் தான் இருக்கும். இல்லாட்டியும் அவரிட்டையே கேளுங்கோ எண்டு சொல்ல வேண்டியதுதான்.” சொல்லிச் சிரித்தார், நாதன்.
“யாழ் ட்ராவலிஸிலயே சொல்லி புக் பண்ணியிருக்கலாம் அங்கிள்.” என்றான் வேந்தன்.
“அது…அது…செய்திருக்கலாம்; நாங்களே செய்தா கொஞ்சம் வில குறைவா இருக்கலாம் எண்டு நினைச்சம்.” நாதன்.
“அதுசரிதான் எண்டாலும், எல்லாம் நல்லதா இருக்கும்; சில இடங்களில யாழ் ட்ராவல்சிட ஹோட்டல்ஸ் இருக்கு. சரி விடுங்க, இனிக்கதைச்சு என்ன பிரயோசனம்? எனக்கு நீங்க நியூயோர்க்கில புக் பண்ணின ஹோட்டல் மட்டும் அவ்வளவு திருப்பதி இல்ல அங்கிள். நேற்றிரவு உங்களிட்ட டீடெய்ல்ஸ் வாங்கி எனக்கும் நீங்க தங்கப்போற ஒவ்வொரு ஹோட்டலிலும் ரூம் போட்டன்.” என்றான், தான் நியூயோர்க்கில் மட்டும் போடவில்லை என்றதைச் சொல்லாது. அருகிலேயே யாழ் ட்ராவல்ஸ் ஹோட்டல் இருக்கே!
“ஓ! இனி என்ன செய்யிறது? போய்ப் பார்ப்பம் …அதுவும் ரெண்டு இரவுக்கு அங்க போட்டிருக்கே!” யோசனையாகச் சொன்னார் நாதன்.
இப்படி அளவளாவியவர்களின் கவனம், “மாறன் கவினப் பாருங்க, அடம் பிடிக்கிறான்.” என்றபடி அஜி வர அங்கு சென்றது.
“என்னவாம்? குட்டியன் அப்பாட்ட வாங்க.” மகனை மடியில் தூக்கிவைக்க முயல, அவனோ திமிறிவிட்டுத் தள்ளி நின்றான். வாய் பிதுங்கி அழுகைக்கு ஆயத்தமாவதைச் சொல்லி நின்றது.
“ஏனப்பு? இங்க அப்பாட்ட வாங்க.” மாறன் எழுந்து சென்று தூக்க, அவனோ நெளிந்தான்.
“என்னவாம்? நல்லாத்தானே வந்தவன்.” மனைவியிடம் வினவினான் மாறன்.
“நான் சாப்பிட்டுட்டன் அஜி சித்தி.” என்றபடி கடைசித்துண்டு பாணை வாய்க்குள் வைத்தபடி வந்த கவி, “நீங்க அக்காவோட வாங்க, பிள்ளைக்குப் பான் கேக் செய்து தாறன்.” என்றதும் அவள் கரத்தைப் பற்றியபடி தாயை முறைத்தான், கவின்.
“இதுதான். நினைக்கிறது எல்லாம் நடத்த நிக்கிறான்.” அடிக்குரலில் சொல்லிக்கொண்டே மகனை முறைக்க, “விடுங்க அஜி சித்தி, சின்ன விசயம்.” அவனோடு நகர்ந்தாள் கவி.
“கவிக்கா அப்ப எங்களுக்கும் பான் கேக்!” சிவாவின் மகளும் மகனும் சேர்ந்துகொள்ள மூவரோடும் பான் கேக் மேக்கர் இருந்த மேசைக்குச் சென்றாளவள்.
“விடும் அஜி, கவி பார்ப்பாள். இல்லையோ காருக்க ஏறினோன்ன சிணுங்குவான்.” என்ற மாறன் தன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டமர்ந்தான்.
“எங்க அண்ணியும் இலக்கியும்?” நாதன் கேட்க, “இப்ப வந்திருவீனம், நாங்க வரேக்க இலக்கி பாத்ரூமுக்க.” என்றபடி நகர்ந்த அஜி, “எனக்கு இந்த வெள்ளன ஒண்ணும் வேணாம், டீ மட்டும் போதும்.” என்று, பிளேன் டீ எடுத்துக்கொண்டு ரதியினருகில் அமர்ந்தவள் கவனம் முழுவதும் பான் கேக் செய்பவர்களில்.


