அங்கோ, கவி பான் கேக் செய்யத் தொடங்க, முதல் சுட்ட இரண்டையும் அடுத்தடுத்து வாங்கிக்கொள்ள தட்டு நீட்டியது, இரு சீனப்பிள்ளைகள். சிவாவின் பிள்ளைகள் வயதுதானிருக்கும். அமர்ந்திருந்த பெரியவர்களே “ஓடிப்போய் வாங்குங்க!” என்று அனுப்பி விட்டார்கள்.
“இதுக்குத்தான் இந்த வேலை எல்லாம் வேணாம் எண்டு சொன்னனான். கேட்டினமா?” அஜி முணுமுணுக்க, “பொறும் பாப்பம்.” சமாதானமாகச் சொன்னார், ரதி.
கவி மூன்றாவதைச் சுட்டுத் தட்டில் வைக்க அப்போதும் ஒரு சிறுமியின் கை நீண்டது. எப்படிக் கொடுக்காமல் விடுவது?
“கவின் செல்லம் அடுத்தது பிள்ளைக்குத்தான் சரியோ!” என்றபடி நான்காவதைச் செய்ய, இன்னும் இரு பிள்ளைகள் ஓடிவந்து பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.
கவியின் பார்வை ரதி, அஜியில் படிய, “நீ பேசாமல் விட்டுட்டு வாம்மா.” மாறன் எழ முயல, “நீங்க இருங்க நான் சாப்பிட்டாச்சு, என்ன எண்டு பார்க்கிறன்.” என்றெழுந்து சென்றான் வேந்தன். சென்ற வேகத்தில், “கவி நீங்க தள்ளுங்க.” என்றதும் அவள் விலகி நின்றுவிட்டாள்.
அருகில் நின்ற பிள்ளைகளிடம் திரும்பியவன், “உங்கட அம்மா அல்லது அப்பாட்டப் போய்ச் சொல்லுங்க, இதில எல்லாம் இருக்கு, தேவையான மட்டும் செய்து எடுக்கலாம் எண்டு. எங்களுக்கு நேரமாகுதம்மா…சொறி!” சொல்லிக்கொண்டே, எடுத்த பான்கேக்கை கவியிடம் கொடுத்தான், “என்ன இருக்கு? ஜாம் அல்லது சிரப்…கவினுக்குப் பூசிக்குடுங்க!” என்றபடி.
சில சிரப் பக்கட்டுகளை கவியின் கரத்தில் கொடுத்துவிட்டு, “அங்க வைக்க எல்லாம் எடுக்கினம்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள், விடுதி உரிமையாளரின் மகள்.
அந்தப் பிள்ளைகள் வேந்தனைப் பார்ப்பதும் தம் பெற்றோர் இருக்குமிடத்தைப் பார்ப்பதுமாக நின்றார்கள். பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதில் நிற்க நேரம் வேண்டுமே!
“நான் ஆறே ஆறு செய்திட்டு விடுறன், நீங்க செய்யலாம் சரியோ? பாருங்க, இதில நிறையவே மிக்சிங் இருக்கு, இப்படி இந்த கப்பில எடுத்து இந்த மேக்கரில விட்டு மூடிட்டு இந்த லைட் பச்சையா வர எடுத்திரலாம்.” சொல்லி சொல்லி செய்து, “கவினுக்கு இன்னொன்று.” என்று வந்த கவிக்கும் சிவாவின் பிள்ளைகளிருவருக்கும் கொடுத்தான், வேந்தன்,
“இனிக்காணும் வேந்தன்.” நாதன் குரல் கொடுக்க, “சரி நான் முடிச்சிட்டன், நீங்க செய்யலாம்.” அந்தப் பிள்ளைகளின் பெற்றோரைப் பார்த்துச் சொல்லிவிட்டு விலக, குடுகுடுவென்று வந்து செய்யத் தொடங்கினார், அந்தப் பிள்ளைகளின் தந்தை.
இவன் பான் கேக் செய்யத் தொடங்கவே வந்திருந்தாள், இலக்கியா.
“ஏனம்மா லேட்?” ரதி கேட்க, “இலேசாத் தலையிடி சித்தி.” இரவிரவாக நித்திரை வராது புரண்டதில் எரிந்த விழிகளைத் தடவியபடி சொன்னவள், “எனக்கும் பசிக்கேல்ல!” என்றுவிட்டு, வெறும் தேனீரோடு வந்தமர்ந்தாள்.
வாய் தேனீரை உறிஞ்சினாலும் பார்வை வேந்தனில். அவன் அவளைக் கவனிக்கவில்லை. திரும்பி வருகையில் வந்துவிட்டாளா என்று பார்க்கவே விழிகளை சுழற்றினான். சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள், இலக்கியா. அவளில் சிலகணங்கள் படித்துவிட்டு அப்பால் விலகியது, வேந்தன் பார்வை. தன்னைப் பார்த்ததையுணர்ந்தவள் மனம் அலைக்கழிந்தாலும், அவன் பார்வையைச் சந்திக்கவில்லை, அவள்.
‘கொஞ்சம் விட்டால் அவன் செய்யிற அலும்புகளுக்கு என்னால முடியாது. எப்ப யார் கண்டிருவீனமோ எண்டு பயந்துகொண்டு… வெளிக்கிட்ட பயணத்தில வீண் பிரச்சனை வேணாம்!’ என்ற முடிவோடு அவன் புறமே திரும்பாதிருந்தாள்.
அங்கிருந்து வெளியில் வரும் வரை வேந்தன் பார்வை இயன்றபோதெல்லாம் இலக்கியாவையே சுற்றிவந்தது. அவளின் தடித்துக்கிடந்த விழிகள் அவன் மனதுள் பிசைவை உண்டுபண்ணியது. முகத்தில் கூட மலர்வில்லையே!
‘ஏன் இப்பிடி இருக்கிறாள்?!’ நேரே கேட்டுவிடத் துடித்ததுள்ளம். அருகில் அமர்ந்திருந்த பெரியவர்களுக்காக முயன்று அடக்கியே வாசித்தான். இருந்தபோதும், வாகனத்தில் ஏறுகையில் கடைசியாக வந்தவள் பையை பின்புறம் வைக்க முனைகையில், குட்டியாகவேனும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருந்தவன், “தாரும் நான் வைக்கிறன்.” மூடியிருந்த டிக்கியைத் திறக்க முனைந்தவாறே கேட்டான். அதில் நின்று கதை வளர்க்க விரும்பாது கொடுத்துவிட்டு நகர முயன்றாளவள்.
“இலக்கியா…” மெல்லிய குரலில் அழைத்தான். அவள் திரும்பாது அடியெடுத்து வைத்தாள். இருந்தாலும் பார்வை வாகனத்தினுள். உள்ளே ஏறியிருந்தவர்கள் இன்னமும் ஒழுங்காக அமர்ந்து முடியவில்லை, நீ முன்னுக்கு வா நான் பின்னுக்கு என்ற இழுபறி போய்க்கொண்டிருந்தது.
“ஒரு நிமிசம் இலக்கியா, இப்ப மட்டும் நீர் கதைக்காமல் ஏறினீரோ, நான் உள்ள ஏறிப்போட்டுக் கேட்க நினைக்கிறதக் கேட்பன் சொல்லீட்டன்.” அவன் சொல்லி முடிக்கமுதலே, விசுக்கென்று திரும்பியவள் நெருப்பைக் கக்கினாள், விழிகளால்!
இவன் விழிகளோ மென்மையான நகைப்பில் சுருங்கின. அவள் வதனத்தைத் தழுவக் கிடைத்த சிறுபொழுதையும் வீணாக்க விரும்பவில்லை.
“ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்? வடிவா நித்திர கொள்ளேல்லையா?” அவன் முடிக்கவில்லை, ஒரெட்டில் அவனை அணுகி உள்ளிருப்பவர்களுக்கு முதுகுகாட்டி நின்றுகொண்டவள், “இங்க பாருங்க…நீங்க எதுக்கு எண்டு வந்தீங்களோ அந்த வேலய மட்டும் பாருங்க!” கடும் எச்சரிக்கை! பார்வையும் வார்த்தைகளும் கூர்மையோடிருந்தன.
அவளிடமிருந்து கசிந்த கோபாக்கினியை, அவனோ, வெகு குளிர்மையோடு எதிர்கொண்டான்.
“ஏன் முகமிப்பிடி இருக்குது எண்டு கேட்டன் இலக்கியா!”
“அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம் எண்டுதான் நானும் சொல்லீட்டனே!”
“அதெப்பிடி நீர் அப்பிடிச் சொல்லலாம்? எனக்குத் தேவையில்லாமல் ஆருக்குத் தேவையான விசயமாம்?” கண்ணடித்தபடி, பொறுமையாக வம்பிழுக்க ஆரம்பித்தவன் பார்வை விடுதியின் முன்வாயிலில் படிந்தது. தொடர்ந்தது இவள் பார்வை. மாறனும் நாதனும் வந்து கொண்டிருந்தார்கள். பட்டென்று அவனை நோக்கினாள், இலக்கியா.
“இங்க பாருங்க, சிலவருசங்களா நாங்க எல்லாரும் சரியா ஆசைப்பட்டு வெளிக்கிட்ட பயணம் இது! இதில என்னால எந்தப் பிரச்சனையும் வாறது எனக்கு விருப்பம் இல்ல. அதுமட்டும் இல்ல… உங்களால… என்னால கொஞ்சமும் இந்தப் பயணத்த ரசிக்க முடியேல்ல!” இதைச் சொல்கையில் வார்த்தைகள் தடுமாறி விழிகள் கலங்கிப் போயின. இவனோடு இப்படிக் கதைக்க அவளுக்கென்ன விருப்பமா? கதைத்தால் சரி கொஞ்சம் விலகி நிற்பானா பார்ப்போமே!
வேந்தனுக்கோ, அவள் சொல்ல சொல்ல முகம் சுண்டிப் போயிற்று! சற்றுமுன் அதில் தெரிந்த இலக்குத்தன்மையும் என்னவென்று விசாரிக்கையிலிருந்த கனிவும் துணி கொண்டு துடைத்தாற் போலாகிற்று!
“இலக்கியா!” அதிர்வோடு உச்சரித்துக்கொண்டிருக்கையில் உள்ளே ஏறிவிட்டாளவள்.
‘அவள் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? என்னால அவள்ட சந்தோசம் கெடுதாமோ!’ அவனுள் கோபம்.
‘நேசத்தைச் சொன்னவனுக்குக் காலால் மிதித்தாள் எண்டால் இண்டைக்கு வார்த்தைகளால விளாசிட்டுப் போறாள். அப்ப…அவளுக்கு என்னில விருப்பமில்லையோ!’ அவள் விழிகளில் நேசமுணர்ந்த இவன் விழிகளும் மனமும் தடுமாறிற்று.
“போவமா வேந்தன்?” என்றபடி வந்தேறினார், நாதன். அதன் பிறகெப்படி அதில் நிற்க முடியும்?
அப்படியெல்லாம் சூடாகச் சொல்லவேண்டுமென்று எண்ணியிராதே வார்த்தைகளை விட்டுவிட்டாளே! கடைசி இருக்கையில் சென்றமர்ந்த இலக்கியாவுக்கு அழவேண்டும் போலிருந்தது, வாய்விட்டே! அந்த வார்த்தைகளைக் கேட்டு அவன் முகம் போன போக்கிருக்கே! அது அப்படியே மனதில் பதிந்து கிடந்து வாட்டியெடுத்தது.
அவள் ஒரு கண்ணாடிப்பக்கம் என்றால், மறுபக்கம் கவி; இடையில் ஆரூரன். நான்கு பேர் அமரக்கூடிய பின் வரிசையில் ஒரு இருக்கை வெறுமையாக இருந்தது, அதில் இவர்களின் கைப்பைகள்.
“வேந்தன் என்னடி சொன்னவர்?” திடுமென்று கேட்டாள், கவி. அப்போதுதான் அவனும் உள்ளே ஏற, இவளுள்ளத் துடிப்பு நின்றுவிட்டு அடித்தது.
“நான்தான் நயாகராவில எடுத்த ஃபோட்டோஸ் கேட்டனான் கா, தாறன் எண்டு சொன்னவர்.” கைப்பையைக் குடைந்தபடி சொன்னவள், சிறிது நேரத்துக்கு யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை.
“பாத்தியா நான் மறந்திட்டன், மறக்காமல் வாங்க வேணும்” என்ற கவியும் அதன் பிறகு வேறு கதைக்குத் தாவிவிட்டாள், ஆருரனோடு.


