‘ஓ!’ என்று கேட்டுக்கொண்டுவிட்டு, “அந்த வீடியோவை நாங்க அழிச்சிட்டோம். இனி அது ஆரின்ர கையிலயும் சிக்காது. அதால இனி ஒண்டும் நடக்காது. பயப்படாத!” என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டாள். மனத்தில் மட்டும் தீராத வேதனை குடிகொண்டிருந்தது.
இந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் அவள் அறிந்துகொண்ட கௌசிகன் இதை என்றைக்குமே மறக்கமாட்டான் என்றுதான் தோன்றியது. அவனுடைய கோபத்தை ரஜீவன் சம்பாதித்துக்கொண்டது அவளால். இதை எப்படித் தீர்க்கப் போகிறாள்?
அவள் கல்லூரிக்குச் சென்று சேர்வதற்குள் ரஜீவனைச் சந்தித்துவிட்டுத்தான் வருகிறாள் என்கிற செய்தி கௌசிகனை எட்டியிருந்தது.
முகம் கடுக்கத் தன்னை வந்து சந்திக்கும்படி அவளுக்கு அழைப்பு அனுப்பினான்.
‘இன்றைக்கு என்னவோ…’ என்று யோசித்தபடி போனவளிடம், “பெரிய நீதி, நியாயம், நேர்மை எல்லாம் பேசின ஒருத்தி பிழை செய்த ஒருத்தனைக் காப்பாத்துறாள். அவள் எப்படியானவளா இருப்பாள் எண்டு யோசிச்சுப்பார்?” என்றான் காட்டம் நிறைந்த குரலில்.
இதென்ன ஒருமை பேச்சு? “இந்தப் பள்ளிக்கூடத்தில நான் டீச்சர். நீங்க நிர்வாகியா இருந்தாலுமே என்னை ஒருமையில அழைக்கிற அதிகாரம் உங்களுக்கு இல்லை. எனக்கான மரியாதையத் தந்து கதைங்க!” என்றாள் தெளிவான குரலில்.
அவனோ அசையாமல் அமர்ந்திருந்தான். நீ சொன்னதை நான் கேட்டுக்கொண்டேன் என்கிற குறிப்பைக் கூடக் காட்ட மறுத்தான்.
“ரெண்டாவது நான் ஆரையும் காப்பாத்த இல்ல.” என்று அறிவித்தாள்.
“அவன்தான் வீடியோ எடுத்தவன் எண்டு தெரிஞ்சும் அதை மறைக்கிறதுக்குப் பெயர் வேற ஏதுமோ?”
கன்றிவிடப் பார்த்த முகத்தைப் பெரும் பாடுபட்டுச் சாதாரணமாக வைத்துக்கொண்டாள்.
“அவன் வீடியோ எடுத்ததை நீங்க பாத்தீங்களா?”
“அந்தத் தைரியம்தானே துணிச்சலோட எனக்கு முன்னாலேயே நிண்டு இப்பிடிக் கேக்க வைக்குது!” என்றுவிட்டு அவன் பார்த்த பார்வையில் அவளுக்குள் நடுங்கியது!
வேகமாகப் பார்வையை அவள் அகற்றிக்கொண்ட அந்த நொடியில் அவளை நெருங்கியிருந்தான் அவன். அதிர்ந்து நிமிர்ந்தவளை நோக்கி, “என்ன, அவனோட சேர்ந்து விளையாட்டுக் காட்டுறியா? எண்டைக்கு மாட்டுறியோ அண்டைக்கு இருக்கு உனக்கு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
அச்சத்தில் உறைந்து நின்றவளிடம், “இப்ப நீ போகலாம்!” என்றான் எடுத்தெறிந்த குரலில்.
முகம் கன்ற வெளியே ஓடி வந்திருந்தாள் பிரமிளா. அவன் ஒருமையில் அழைத்தது கூடக் கருத்தில் பதியவில்லை.
சற்று நேரத்தில் மாணவிகள் சிலர் அவனுடைய அறையைக் கடந்து, ஆசிரியர்களின் ஓய்வறைக்குள் நுழைவது தெரிய அங்கே கவனித்தான் கௌசிகன்.
ஆசிரியர்களுக்கான அறையில் தலையைப் பற்றியபடி பிரமிளா அமர்ந்திருப்பது தெரிந்தது. யன்னல் வழியே தெரிந்த அந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடக்க முடியாமல் அவளைக் கவனித்தான்.
அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து, கைப்பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கினாள். இந்த விடியற்காலையில் பரசிட்டமோல் எடுக்கும் அளவுக்கா தாக்கப்பட்டிருக்கிறாள். உதட்டைக் கடித்தான் கௌசிகன்.
அவள் நேர்மையான பெண்தான். நிமிர்வானவளும் கூட! அவனால் மனிதர்களைத் துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால்…
அப்போது, அந்த மாணவியர் கூட்டம் அவளிடம்தான் சென்றனர்.
“விடியக்காலம வகுப்புக்குப் போகாம இஞ்ச என்ன செய்றீங்கள் பிள்ளைகள்?” தன்னைச் சமாளித்துக்கொண்டு அவர்களிடம் வினா எழுப்பினாள் அவள்.
“மிஸ், எங்களுக்கு இஞ்ச படிக்கவே பிடிக்கேல்ல. எங்களுக்கு எங்கட பிரின்சிபல்தான் வேணும். புது மாஸ்டர்ஸ் புதுப் பிரின்சிப்பல் புது நிர்வாகம் ஒண்டும் பிடிக்கேல்ல. நாங்க திரும்பப் போராட்டம் செய்வோமா மிஸ். ” கண்கள் கலங்கச் சொன்ன மாணவியரைக் கண்டு அவன் புருவங்கள் சுருங்கிற்று!
அவளோ கண்டிப்புடன் அவர்களை நோக்கினாள். “சும்மா சும்மா தொட்டத்துக்கும் போராடப் போராட்டம் என்ன சின்ன பிள்ளை விளையாட்டு எண்டு நினைச்சீங்களா? இப்ப என்ன பிரச்சனை எண்டு போராட நினைக்கிறீங்க? புதுப் பிரின்சிபல் புது டீச்சர்ஸ் வந்தால் ஆரம்பம் எப்பவுமே அப்பிடித்தான் இருக்கும். டீச்சர்ஸ்க்கு இந்தப் பள்ளிக்கூடம் பழகவேணும். பிள்ளைகளைப் பழகவேணும். அதேமாதிரி அவே உங்களுக்கும் பழகவேணும். உங்கட பிரின்சிபலும் ஒரு காலத்தில இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் புது ஆசிரியரா வந்தவர்தானே? அப்ப, அந்த நேரம் படிச்ச பிள்ளைகளுக்கும் உங்களை மாதிரி அவரை ஏற்றுக்கொள்ள முடியாமத்தான் இருந்திருக்கும். பிறகு பழகிப்போய் அவரைப் பிடிக்கேல்லையா. அப்பிடி உங்களுக்கும் நடக்கிறதுக்குக் கொஞ்ச நாள் எடுக்கும். அதுவரை இப்படித்தான் இருக்கும்.”
‘கெட்டிக்காரி!’ மாணவியரை மிகச் சிறப்பாகக் கையாண்டவளைத் தனக்குள் மெச்சிக்கொண்டான் கௌசிகன்.
அப்போதும் தெளியாத முகத்துடன் நின்றவர்களைக் கண்டு, “எப்பிடியும் அப்… உங்கட பழைய பிரின்சிபல் ரிட்டையர் ஆகத்தான் வேணும். புதுப் பிரின்சிபல் வரத்தான் வேணும். என்ன கொஞ்சம் முதல் நடந்திருக்கு. அவ்வளவுதான். எல்லாத்தையும் விட நிர்வாகமா உங்கட பழைய பிரின்சிபலை வெளியேற்றினது? இல்லையே. அவராத்தானே தன்ர உடல்நிலை சரியில்லை எண்டு விருப்ப ஓய்வு வாங்கினவர். பிறகு எப்பிடிப் போராட்டம் செய்வீங்க?” என்று கேட்டாள்.
பதிலற்று நின்றனர் பிள்ளைகள்.
“இந்தப் பள்ளிக்கூட மாணவத்தலைவிகள் எண்டதும் உங்களுக்கு இப்பிடி ஒரு நினைப்பு வந்திட்டுது போல. அப்ப, பதவி இருக்கு எண்டுற துணிச்சல்தானே உங்களை இப்பிடி யோசிக்க வச்சிருக்கு? அப்ப நீங்க யோசிக்கிற முறை சரியா?” அழுத்தமும் கனிவுமாக அவள் கேட்டபோது மாணவியர் வாயடைத்து நின்றனர்.
பார்த்தவளுக்கும் வேதனைதான். அவர்களின் மனத்தை அவளைக் காட்டிலும் இன்னொருவரால் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியுமா என்ன? ஆனால், இது ஆரோக்கியமான சிந்தனை அல்லவே.
“மனதைக் குழப்பாதீங்கோ பிள்ளைகள். நல்லா படிங்கோ. ஆர் மாறினாலும், என்ன நடந்தாலும் எங்கட படிப்புக் குறையாது எண்டு காட்டுங்கோ. அதுதான் உங்களையும் இந்தப் பள்ளிக்கூடத்தையும் நேசிச்ச உங்கட பிரின்சிபலுக்கு நீங்க குடுக்கிற பரிசா இருக்கும். எப்ப வேணும் எண்டாலும் எங்கட வீட்டுக்கு வாங்கோ. உங்கட பிரின்சிபலை பாருங்கோ. சரியா? இப்ப நேரமாகுது வகுப்புக்குப் போங்கோ!” என்று அனுப்பிவைத்தாள்.
தலையாட்டிவிட்டுப் போன மாணவியர் நின்று திரும்பினர்.
“மிஸ், நீங்களும் இஞ்ச இருந்து போய்டுவீங்களா?”
அவளும் அதைப்பற்றித்தானே யோசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
“என்ன மிஸ், பதில் சொல்லேல்ல நீங்க. நீங்களும் போனா எங்கட பள்ளிக்கூடமே எங்களுக்கு வெறுத்திடும் மிஸ். பிளீஸ் மிஸ். சேர் இல்லாததையே இன்னும் ஏற்க முடியேல்ல. நீங்களும் எங்களை விட்டுட்டுப் போய்டாதீங்க மிஸ்.” என்று கெஞ்சத் துவங்கி இருந்தனர் அவர்கள்.
“ஆர் போனாலும் ஆர் வந்தாலும் இது உங்கட பள்ளிக்கூடம். நீங்க பள்ளிக்கூடத்தை நேசிக்க வேணும். படிப்பை விரும்பிப் படிக்கவேணும். என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கு எண்டுறதை விட, ‘நல்ல ரிசெல்ஸ் எடுத்திருக்கிறோம் மிஸ்’ எண்டு நீங்க சொல்லுறதுதான் எனக்குப் பெரிய சந்தோசத்தைத் தரும்.” மழுப்பலாகப் பதில் சொன்னாள் அவள்.
“அப்ப நீங்களும் எங்களை விட்டுட்டுப் போகப்போறீங்களா மிஸ்? பிறகு எங்களுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வரவே பிடிக்காமப் போய்டும்” என்றவர்களுக்குக் கண்ணீர் உடைப்பெடுத்துக்கொண்டு வந்தது.
நடந்த கலவரங்கள் அனைத்தும் அவர்களை மனத்தளவில் நன்றாகவே காயப்படுத்தியிருப்பதை உணர்ந்துகொண்டாள் அவள்.
அவளின் காயப்பட்டிருந்த நெஞ்சுக்கும் அவர்களின் பாசம் அருமருந்தாக இருந்தது. எனவே, “உங்களை மாதிரி எனக்கும் இந்தப் பள்ளிக்கூடத்தைப் பிடிக்கும். இப்போதைக்குப் போகமாட்டன்.” என்று புன்னகைத்தாள்.
“தேங்க்ஸ் மிஸ்!” முகம் மலரச் சொல்லிவிட்டுப் போனார்கள் மாணவியர்.
அதென்ன இப்போதைக்கு? அவர்களைப் போல மகிழ அவனால் முடியவில்லை. கல்லூரியை நேசிக்கும் ஒரு ஆசிரியையின் மனத்தை மிகவுமே காயப்படுத்துகிறோமோ என்று எண்ணியவன், வேகமாக அவள் கேட்ட விடுமுறையை அடுத்த ஒரு வாரத்துக்கு அனுமதித்து, அதை ஒரு மாணவியிடம் கொடுத்து, அவளிடம் கொடுக்கச் சொன்னான்.