அத்தியாயம் 51
அந்த வாங்கிலிலேயே உடலைத் தளர்த்திக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பிரமிளா. மிக நீண்ட, அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் ஆகிப்போனதில் கால் வலி உயிர் போனது. நாரி(இடுப்பு) வேறு கொதிக்க ஆரம்பித்தது.
நெற்றியில் அடிபட்டதும் தலைவலியைத் தந்தது.
அப்பாவைப் பற்றிய கவலையில் தன்னை மறந்து இருந்தவளுக்கு இப்போதுதான் தன் உடல் உபாதைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கிற்று.
அதையும் விட, “வாறன் வை!” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த கணவன்தான் அவளைக் குடைந்துகொண்டிருந்தான்.
‘நான் இப்பிடித்தான். உன்னால என்ன செய்யேலுமோ செய்’ என்று சொல்லியிருந்தான் என்றால் அவள் பேசாமல் இருந்திருப்பாள்.
அவன் எல்லாம் ஒரு சொல் பொறுக்காதவன். நான் செய்தது தான் சரி என்று சட்டம் பேசுகிறவன். யாருக்கும் அடங்காமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறவன். அப்படியானவனுக்கு அவள் சொன்னவைகள் நிச்சயம் பெரிய அடியாகத்தான் இருந்திருக்கும்.
அதற்காக அவள் ஒன்றும் அவன் செய்யாதவற்றைச் சொல்லவில்லையே. சொன்னால்தானே இனியாவது புரிந்துகொள்வான். எல்லாம் புரிந்தபோதும் அவனின் அமைதி நெஞ்சைப் பிசைந்தது. மெல்ல எழுந்து தந்தையிடம் நடந்தாள்.
அவர் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்க, ரஜீவனுக்கு அழைத்து அப்பாவுக்கான மாற்றுடைகள், டவல், சோப், பற்பசை, பிரஷ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வரச் சொன்னாள்.
அந்த நீண்ட கொரிடோரில் கரையாகப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
சற்று நேரத்திலேயே தன் வேக நடையில் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான் கௌசிகன். பார்த்த நொடியிலேயே மனம் பரிதவித்துப் போயிற்று. அவன் கண்களில் காயப்பட்ட வலி. அதை மறைக்க முகத்தில் கடினத்தைப் பூசியிருந்தான்.
அவனுடைய லேசர் விழிகளும் அவளின் முகத்தில் தெரிந்த களைப்பை, உடலின் இயலாமையை, கால்களின் வீக்கத்தை நொடியிலேயே கவனித்து அவளை ஒரு பார்வை பார்த்தது.
அதிலேயே உள்ளுக்குள் அரண்டுபோனாள் பிரமிளா.
ஆனாலும், “ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்றாள் கவலையோடு.
அதற்குப் பதில் சொல்லாமல், “எங்க மாமா?” என்று கேட்டுத் தனபாலசிங்கத்தைப் பார்க்கச் சென்றான் அவன்.
அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் தெரிந்த விலகல் அவளைச் சுட்டது. மாமாவும் மருமகனும் எதையாவது பேசிக்கொள்ளட்டும் என்று அங்கேயே மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
ஏற்கனவே உடம்பில் மருந்துக்கும் தெம்பில்லை. கணவனின் பாரா முகத்தில் இன்னுமே சோர்ந்துபோனாள்.
இதுவே வழமையான கௌசிகனாக இருந்திருக்க, ‘உனக்கே ஏலாது. இதுல நீ மாமாவைப் பாப்பியா? உன்னை ஆரு இஞ்ச நிக்கச் சொன்னது?’ என்று, அவளை ஒரு வாங்கு வாங்கி இருப்பான்.
அறைக்குள் இருந்த தனபாலசிங்கம், இவன் வரவை வெகுவாகவே எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார் என்பது அவனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்தில் தெரிந்தது.
“வாங்கோ தம்பி!” என்றார் எழுந்து அமர முயன்றபடி.
வேகமாக வந்து அவரைப் பற்றி, “உடம்ப வருத்தாதீங்க மாமா. உங்களுக்கு எது வசதியோ அப்பிடியே இருங்கோ.” என்றான் அவன்.
“இவ்வளவு நேரமும் படுத்துத்தான் இருந்தனான் தம்பி.” என்றபடி, அவன் கைப்பிடியிலேயே எழுந்து, வசதியாக அமர்ந்துகொண்டார் அவர்.
அங்கிருந்த நாற்காலியை எடுத்து அவரின் அருகில் போட்டு அமர்ந்துகொண்டு, “என்ன மாமா இதெல்லாம்? இப்பிடித்தான் டக்கெண்டு உடைஞ்சு போவீங்களா?” என்று உரிமையோடு கடிந்துகொண்டான் அவன்.
“வயசு போயிட்டுதுதானே தம்பி.” என்றுவிட்டுச் சிறிதே தயங்கிப் பின், “தம்பி, பிள்ளை கதைச்சதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். அதையெல்லாம் மனதில வச்சிருக்காதீங்கோ.” என்றார் வேண்டுதல் குரலில்.
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. அவரின் பெண்ணுக்குக் கை நீட்டி இருக்கிறான். அந்தக் கோபம் நிச்சயம் இருக்கும். இருந்தும் அவள் பேசியதற்கு மன்னிக்கச் சொல்கிறார்.
அவரைப் போல அவனால் இறங்கிப்போக முடியாது. எனவே, “அத விடுங்க மாமா. நீங்க எப்பிடி இருக்கிறீங்க? அதச் சொல்லுங்கோ!” என்று பேச்சை மாற்றினான்.
“இந்தப் பிரஷர்தான் திடீரெண்டு கூடிப் போச்சுது. வேற ஒண்டும் இல்ல.” அலுப்புடன் சொல்லிவிட்டு, அவனின் கரத்தைப் பற்றியபடி முகம் பார்த்தார்.
என்னவோ முக்கியமானது பேசப் போகிறார் என்று விளங்க, “சொல்லுங்கோ மாமா.” என்று ஊக்கினான்.
“பெரியவள் தைரியமான பிள்ளை. கெட்டிக்காரி. எதையும் சமாளிப்பாள். சின்னவள் அப்பிடி இல்ல தம்பி. தாங்கமாட்டாள்.” என்றவர் சற்றுத் தயங்கி, “வெள்ளை பேப்பர்ல எந்தச் சித்திரத்தையும் வரையலாம். ஏற்கனவே வரைஞ்ச பேப்பர்ல எதைத் திரும்ப வரைஞ்சாலும் எல்லாமே கலங்கிப் போகும் தம்பி.” என்றார் கலக்கம் நிறைந்த குரலில்.
தீபாவின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடு என்று கேட்காமல் கேட்கிறார். கற்றுத் தெளிந்த மனிதன். அதிபராக இருந்து ஒரு கல்லூரியையே திறம்பட நிர்வகித்தவர். அவரை இப்படிப் பார்ப்பது அவனை என்னவோ செய்தது.
அவரின் கரத்தை இப்போது அவன் பற்றிக்கொண்டான். “நான் இருக்கிறன் மாமா. நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்க.” என்று தைரியம் கொடுத்தான்.
அவரின் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. அதுவரை அவரை ஆட்டிக்கொண்டிருந்த கவலைகள், பயங்கள் எல்லாமே அகன்று போயிற்று. ‘மருமகன் இருக்கிறான்’ என்று மனம் தெளிந்தது.
அந்தத் தெம்பில், “அது மட்டுமில்ல தம்பி. நாளைக்கு எனக்கு ஒண்டு நடந்தா கூட வீட்டுக்கு முத்த மகனைப் போல இருந்து நீங்கதான் அவே ரெண்டு பேரையும் பாக்கோணும்.” என்றதும் அவனுக்கே என்ன பேசுவது என்று தெரியாமல் போயிற்று.
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “என்ன மாமா கதை இது? சாதாரணமா பிரஷர் கூடி ஆஸ்பத்திரில வந்து இருந்தா இவ்வளவுக்கு யோசிப்பீங்களா?” என்று உரிமையோடு கடிவதைப் போலச் சொல்லிவிட்டு, “தீபான்ர வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் வராது. படிப்பை முடிக்கட்டும். தீபனுக்கே கட்டி வைக்கிறது என்ர பொறுப்பு!” என்று திரும்பவும் வாக்குக் கொடுத்தான் அவன்.
அப்போதும் அவன் முகத்தையே பார்த்தார் அவர். ‘மற்ற மகள்?’ என்று அவர் கேளாமல் கேட்பது அவனுக்கு விளங்கிற்று.
அவள்தான் அவனை ஏதாவது செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “உங்களுக்குத் தெரியாதது ஒண்டும் இல்ல மாமா. குடும்பத்துக்க சின்ன சின்ன பூசல் வாறது வழமைதானே. அதுக்காக அவள் என்ர மனுசி இல்லை எண்டு ஆகிடுமா?” என்று, அவருக்குத் தைரியத்தை நன்றாகவே ஊட்டிவிட்டுத்தான் வெளியே வந்தான்.
அவன் வெளியே வந்தபோது ரஜீவனும் வந்திருந்தான். அவனைப் பார்க்க, “சே…சேருக்கு உடுப்புக் குடுக்க வந்தனான்.” என்றான் தடுமாற்றத்துடன்.
‘இதச் சொல்லவே இந்தப் பாடு. பிறகு எப்பிடியடா இவரிட்ட போய் உங்கட தங்கச்சிய எனக்குத் தாங்க எண்டு கேக்கபோறாய்?’ என்று மனச்சாட்சி அவனை ஓங்கிக் குட்டியது.
“வேற ஏதும் அலுவல் இருக்கா உனக்கு?”
வாய் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை இல்லாததால், இல்லை என்று வேகமாகத் தலையை அசைத்தான் அவன்.
“ஒரு ஆட்டோவைப் பிடிச்சு, உன்ர அக்காவை வீட்டுல கொண்டுபோய்க் கவனமா விட்டுட்டுப் போ.” என்றான் அவளின் முகம் பாராது.
அதுவரை அவனையே பார்த்திருந்த பிரமிளாவின் முகம் சுருங்கிப் போனது. “நீங்க கூட்டிக்கொண்டு போக மாட்டீங்களா?” என்றாள் ஏமாற்றம் நிறைந்த குரலில். “தீபா வருவாள். அது வரைக்கும் ரஜீவன் இஞ்ச நிப்பான்.”
“தீபா வாறவரைக்கும் நான் நிக்கிறன். நீ கூட்டிக்கொண்டு போ!” என்று, இப்போதும் ரஜீவனிடம்தான் உத்தரவிட்டான் அவன்.
இதையெல்லாம் பார்த்திருந்த ரஜீவனுக்கு, ‘இந்த அக்கா இந்த முசுட்டு ஆளோட எப்பிடித்தான் இருக்கிறாவோ தெரியாது’ என்றுதான் ஓடிற்று. அந்தளவில் அவன் பார்வையில் கடினம், குரலில் அதட்டல், முகத்தில் இறுக்கம்.
அதற்குமேல் கேட்க, வற்புறுத்தத் தைரியமற்று, முகமும் உடலும் சோர எழுந்து அவனோடு நடந்தாள் பிரமிளா.
மனத்தின் பாரம் கூடிப்போனதில் நடக்க முடியாத அளவில் உடல் கனத்துத் தெரிந்தது. கணவன் கூட வந்திருக்க, துணைக்கு அவன் தோளை நாடியிருப்பாள். அவன்தான் கோபம் கொண்டு தள்ளி நிற்கிறானே.
“உனக்குக் கார் ஓடத் தெரியுமா?” கௌசிகனின் குரல் அவர்களுக்குப் பின்னிருந்து கேட்டது.
“ஓம். லைசென்சும் வச்சிருக்கிறன்.” என்றான் ரஜீவன்.
ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த காரின் திறப்பை எடுத்துக் கொடுத்து, “கார்ல கூட்டிக்கொண்டு போ.” என்றான் அவன்.
‘பெரிய அக்கறை’ மனம் பொறும அவனை முறைத்துவிட்டு ரஜீவனுடன் நடந்தாள் பிரமிளா.
‘என்னவோ இல்லாததச் சொன்ன மாதிரி ஆகத்தான் ஆடுறான்.’ மனதில் அவனை வறுத்து எடுத்தபடி வீடு வந்து, உடம்பு கழுவி, உடை மாற்றி, அன்னை தந்த உணவைக் கொரித்துவிட்டுப் படுத்தவள் அடித்துப் போட்டதுபோல் உறங்கி எழுந்தாள்.
அதற்குள் பொழுது இரவைத் தொட்டிருந்தது. தீபாவும் அம்மாவும் வீட்டிலேயே இருப்பதைப் பார்த்து, “அப்பாவோட ஆர் நிக்கிறது?” என்று கேட்டாள்.
“தீபனும் ரஜீவனும் அக்கா. அத்தான்தான் நிக்கச் சொன்னவர். அங்க போன என்னையும் திருப்பி அனுப்பிப்போட்டார்.” என்றாள் தீபா.
“ஓ…!” என்று கேட்டுக்கொண்டவளுக்குக் கணவனின் நினைவுதான்.
அவனுக்கும் அங்கே கட்டட வேலைகள் நடந்துகொண்டிருப்பது தெரியும். மாமா எப்படியும் கொழும்பு போயிருப்பார். இவன் கல்லூரி, கடை, ஹோட்டல் என்று நிற்க நேரமில்லாமல் அலைவானாக இருக்கும். இந்த மோகனன் இனியாவது கொஞ்சம் கை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
ரஜீவனுக்கு அழைத்து, “எங்க நிக்கிறாய்?” என்று விசாரித்தாள்.
“ஆஸ்பத்திரிக்க நிக்க விடேல்ல அக்கா. வெளிலதான் நிண்டனாங்க. இருட்டினதும் சேர் வீட்டை போகச் சொன்னவர். அவர்… உங்கட அண்ணாக்கு எடுத்துச் சொல்லிப்போட்டு இப்பதான் வீட்டுக்கு வந்தனாங்க.”
கணவனின் உத்தரவில்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று விளங்கிற்று. சரி என்று கேட்டுக்கொண்டு வைத்தாள். அப்படியே தந்தைக்கும் அழைத்து உடல் நிலையை விசாரித்துக்கொண்டாள்.
அவனுக்கு அழைக்க மனம் உந்தினாலும் அதை அவள் செய்யவில்லை. எப்படியும் அதுவும் ஒரு வாக்கு வாதமாகத்தான் மாறிவிடும். மீண்டும் இருவரில் ஒருவர் நிச்சயம் காயப்பட்டுப் போவார்கள். அவள் சொன்னவற்றைப் பற்றி அவனும் சற்று யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.


