KK- 14- 2

KK- 14 -2

சில நாட்கள் என்றாலும் மனத்தில் அடைத்து வைத்திருந்த அவள் மீதான நேசம் பட்டென்று வெளியில் கசிந்துவிட்டதே! இயற்கையின் தழுவலில் மிளிர்ந்த அச்சுற்றம் அவனுக்கு இன்னுமே அழகு கூடித் தெரிந்தது.

நிவேதாவுக்கோ, குளுகுளுவென்றிந்த சுற்றம் பக்கென்று தாக்கிய வெம்மையைக் கொடுத்துவிட்டிருந்தது. அதிர்ந்து நின்றுவிட்டிருந்தார். ஒரு கணம் கூட இந்த வழியில் யோசிக்கவில்லையே!

ஆத்திரமாக மகனைப் பார்த்தார் . “உனக்கு என்ன விசரே? அதும் அடங்காப்பிடாரி அது!” முகச் சுளிப்போடு அவர் சொன்னவிதத்தில் சேந்தன் முகம் இறுகிற்று.

“அம்மா வேணாம்!”

“என்ன வேணாம்? முதல் அந்த வாணனுக்கும் அவளுக்கும் கலியாணம் கட்டி வைக்கிறது மட்டும் தான் எங்கட வேலை எண்டவள் மதிவதனி. நீ என்ன கதை கதைக்கிற?” என்று சொல்லி அவன் முகத்தைக் கல்லாக்கினார்.

“அவா உன்னப் பிடிச்சிருக்கு எண்டாவோ? நீ உன்ர விருப்பத்தைச் சொன்னியா? வெளிநாடு எண்டோன்ன லவ் பண்ணின வாணனக் கழட்டி விட்டுட்டாவோ? நாளைக்கு உன்னைவிடவும் மேல ஒருத்தனக் கண்டா உன்னையும் கழட்டி விட்டிருவா. கடைசிவரை நாங்க இதுக்குச் சம்மதிக்க மாட்டம் தம்பி! ” என்ற தாயை, ஒருபோதுமின்றி எரி பார்வை பார்த்தான், சேந்தன்.

“எங்களிட்டையும் ஒரு பொம்பள பிள்ள இருக்கிறா, நினைவில வச்சிருங்க அம்மா. இப்பிடிக் கேவலமா கதைக்கிறது என்ர அம்மாவா எண்டு கிடக்கு!” கோபமாகச் சொன்னான். உண்மையிலும் தாய் இப்படியெல்லாம் யாரையும் இழிவாகக் கதைத்து அவன் கண்டதில்லை.

“அம்மாவா எண்டு இருக்கோ? இருக்கும் இருக்கும். உங்கட நல்லத்துக்குச் சொல்லுறன் எண்டுறது விளங்காத வரைக்கும் அப்பிடித்தான் இருக்கும்.” நக்கலாகச் சொன்னார், நிவேதா.

மதிவதனி, தன் மகளை எந்நேரமும் நிந்திக்கையில் சினேகிதியைக் கண்டித்திருக்கிறார்தான்.
இருந்தாலும் மகனுக்கென்று ஒருத்தியை வரையறுத்தபின் அது இல்லாது போவதும் பிடிவாதம் பிடித்தவள், தன் மூப்புக்கு நடப்பவள் என்றும் சுட்டப்படுபவள் அவர் மருமகள் என்கையிலும் ஏற்கவே முடியவில்லை. கோபம் மட்டுமே வந்தது.

சேந்தனோ, அவருக்கும் மேலாகக் கோபம் காட்டினான். “எனக்கும் நல்லது கெட்டது பாக்கத் தெரியும் அம்மா. நான் அவவிட்ட இதுபற்றிக் கதைக்கேல்லதான். ஆனா, அவவுக்கு லவ் எல்லாம் ஒண்டும் இல்ல எண்டு எனக்குத் தெரியும். வாணன் அவவிட நல்ல ஃபிரெண்ட். நான் இனிதனோட கதைச்சனான் . சூரியனுக்குமே நேற்றுச் சொன்னனான். நீங்க உங்கட சினேகிதியிட்டக் கதைச்சுக் கலியாணத்துக்கு ஒழுங்கு செய்தால் போதும்!” நறுக்கென்று சொல்லிவிட்டு விருட்டென்று முன்னால் செல்ல முயன்ற மகன் கரத்தைப் பற்றி இழுத்து நிறுத்தினார், நிவேதா.

“ஓ கடவுளே! ரெண்டு பேரும் வரப்போறிங்களா இல்லையா? உள்ளதே சின்ன வழி, அதில போற வாற ஆட்களுக்கும் இடைஞ்சல் செய்துகொண்டு என்னம்மா இதெல்லாம்?” தயங்கி நின்ற இயல் மீண்டும் குரல் கொடுத்தாள்.

லண்டனில் வைத்தே கவினி, வாணன் பற்றிய கதை வீட்டில் அதிகமாக் கதைக்கப்பட்டது இயலால் தானே.

“அலட்டாமல் நடவடி. எல்லாம் உன்னாலையும்தான்.” மகளிடம் எரிந்து விழுந்த நிவேதா உண்மையில் சுற்றத்தை மறந்தார்.

மகனைத் தீர்க்கமாகப் பார்த்தார். “இஞ்ச பாருங்க தம்பி, கடைசிவரை இது சரிவராது. பெற்ற தாயே அந்தப் பிள்ளைய என்ன எல்லாம் சொல்லுறவா. அந்தத் தலையிடிய நான் சுமக்கத் தயாரில்லை!”

சேந்தன் முகம் கொன்கிரீட் போலாயிற்று.

“தலையிடியாவே இருக்கட்டும் அம்மா. நீங்கள் ஏன் சுமக்க? வாழப்போறது நானும் அவவும் தானே! எனக்கு அந்தச் சுமை பிடிச்சிருக்கு. தயவு செய்து இது சம்பந்தமா இனி ஒண்டும் கதைக்க வேணாம். கல்யாணத்த முன்னிண்டு செய்து வைக்க விருப்பம் இருந்தால் செய்து வைங்க , இல்லையோ நான் பாத்துக் கொள்ளுறன்.” என்றுவிட்டு, விடுவிடுவென்று முன்னால் சென்றவனை வெறித்தபடி நின்றிருந்தார், தாய்.

“நீங்க போங்க தம்பி, நாங்க கூட்டிக்கொண்டு வாறம்.” என்ற விமலா, மதிவதனியோடு சினேகிதியிடம் வந்தார்.

“என்னடி பிரச்சினை உனக்கு?” மதிவதனி தொடங்க, “திரும்ப திரும்ப சொல்லுறன் எண்டு கோவியாத நிவி, சேந்தன் என்ன நல்லது கெட்டது தெரியாத பிள்ளையா? அப்பிடியே ஆதினியைக் கட்டி வைக்க வேணும் எண்டு நினைச்ச எண்டாலும் ரெண்டு நாள் போகவிட்டு ஆறுதலாக் கதைச்சுப் பாரன்.” விமலா தன் பங்குக்குத் தொடர்ந்தார்.

நிவேதா முகம் இறுக இருவரையும் பார்த்தார்.. “அவன் நல்லது கெட்டது விளங்கினவன் எண்டா, இவளே வெறுப்பா ஒதுக்கி வச்சிருக்கிறவள விரும்பிறன், கலியாணம் கட்டி வை எண்டு சொல்லுவானா சொல்லு? தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுவானா சொல்லு?” என்றபோது கண்கள் கலங்கிப் போனார்.

மதிவதனியோ, சினேகிதி சொன்னதைக் கிரகிக்கவே தடுமாறினார். அதுவும் நிவேதா தன்னைச் சுட்டிக் காட்டுகிறாள். மீண்டும் மீண்டும் மனத்தில் ஓட்டிப்பார்த்துக் கிரகித்தவர், கல்லாக இறுகிப் போனார். விமலாவும் தான் நம்பவே முடியாது பார்த்தார்.

யோகன் குரலில் நகர்ந்தவர்கள் மூவரும் கதைத்துக் கொள்ளவில்லை.

பெரும் பள்ளத்தோடு சென்ற ஒற்றையடிப்பாதை அவர்களைப் பயம் கொள்ள வைக்கவில்லை. இறக்கத்தில் இறங்கி பாலத்தின் மீது சென்ற இரயிலைப் பார்த்தவர்கள் கருத்தில் அது பதியவில்லை. அதன் கீழ் பிரமாண்டமாக இருந்த ஒன்பது வளைவுகள் கொண்ட பாலமும் சுற்றத்தில் கொட்டிக் கிடந்த இயற்கையுமே அவர்கள் பார்வைக்கு ரசனை சேர்க்கவில்லை. இளையவர்கள் பாலத்தின் கட்டில் ஏறியிருந்து புகைப்படங்கள் எடுக்கும் போது கூட, யோகனும் பூங்குன்றனும் பதறிய போதும் நண்பிகள் அசையாது நின்றிருந்தார்கள்.

சேந்தனுக்குக் கவினியைப் பிடித்துள்ளது என்ற செய்தி மூவரையும் மூன்று வகையில் தாக்கியிருந்தது. விமலாவின் உதடுகளில் முறுவல். என்னதான் மதிவதனி கரித்துக் கொட்டினாலும் கவினியில் அவருக்குப் பரிவுண்டு.
மதிவதனி முற்றிலும் அதிர்ந்து நின்றார், அதிலும் சினேகிதியின் கோபம் அவரைக் கண்கள் கலங்க வைத்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!