KK- 16 – 4

கவினிக்கு அவமானத்தில் முகம் கன்றிட்டு. யாரையும் பார்க்க முடியவில்லை. இவர்களோடு தொடர்புடைய எல்லோருக்கும் தாய்க்கும் மகளுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பது தெரியும். இருந்தாலும்…தேவையே இல்லாமல் சேந்தன் முகம் மனத்தில் வந்து போயிற்று. கலங்க முனைந்த விழிகளை அடக்கிக்கொண்டாள். நிமிர்ந்து மதிவதனியைப் பார்த்தாள்.
அவள் வாய் திறக்க முதல் பரமேஸ்வரி முந்தியிருந்தார்.
“இப்பத்தான் களைச்சுப் போய் வந்தவள் வதனி.”
“தயவு செய்து நீங்க ஆரும் இதில கதைக்க வேணாம் அக்கா.” தொடங்கிய வேகத்தில் முகம் கறுக்க வாய் மூட வைத்துவிட்டார்,மதிவதனி.
‘இது உன்ர வீடில்லை…வந்ததும் வராததுமாக ராட்சசி கணக்கில கதைக்கிற’ வாய் நுனியில் வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு, விசுக்கென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார், பரமேஸ்வரி.
“சரி, சேந்தன் இப்பவரை உன்னோட கதைக்கேல்ல எண்டே வச்சுக்கொள்ளுவம். இனிக் கட்டாயம் கதைப்பான். அந்த நேரம் இது சரிவராது எண்டு உறுதியாச் சொல்லிரு! அவனுக்கு ஆதினியப் பாத்து வச்சிருக்கிறது உனக்குத் தெரியும் . அப்பிடியில்லாமல் ஆட்டம் போட நினைச்சியோ!” விரல் நீட்டி எச்சரிக்க, விசுக்கென்று எழுந்துவிட்டாள், கவினி.
தேனீரை அங்கிருந்த முக்காலியில் வைத்தவள் கரமிரண்டும் இடுப்பில். நிதானமாகத் தாயைப் பார்த்தாள். உதடுகளில் நெளிந்த முறுவல் அவரை எள்ளல் செய்கிறதா? அவர் முகம் இரத்தமெனச் சிவந்திட்டு.
“ஏய் கவினி ..விடப்பா” இனிதன் தான். இங்கு நின்று இழுபறிப்படப் போகினமே என்ற பதற்றம் அவனுக்கு.
“இஞ்ச பாருங்க, உங்களுக்கு உங்களப் பற்றியும் உங்கட மகள் பற்றியும் கவலை. என்னப் பாத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கு இருக்கு. அப்பிடியிருக்க, ஒரு நல்ல இடத்தில கலியாணம் சரிவரும் எண்டால் நான் தேவையில்லாத விசயங்களை எல்லாம் எடுத்து யோசிச்சுக்கொண்டு இருக்க மாட்டன். சந்தோசமாக் கட்டிருவன். அது சேந்தனா இருந்தாலுமே. அவ்வளவும் தான் நான் சொல்லுவன்.” நக்கலாகச் சொல்லிவிட்டு, விருட்டென்று உள்ளே செல்லத் திரும்பியவள் தலை மயிரைப் பற்றி ஒரு அறை விட்டிருந்தார், மதிவதனி.
“அத்த என்ன வேலையிது?” பாய்ந்து அவரை விலக்கி நிறுத்தினான், இனிதன்.
“மதிவதனி என்ன இதெல்லாம். இது என்ன உன்ர வீடு எண்டு நினைச்சிட்டியோ? வெட்கக் கேடு! மரியாதையான மனுசர் வாழுற வீடு இது. அம்மா உன்னப் பற்றிச் சொல்லுறதில என்ன பிழை இருக்கு? பெத்த பிள்ளைகளுக்க இந்தளவுக்கு வஞ்சனை செய்யிற நீயெல்லாம் கதைக்க வந்திட்ட! மரியாதையா வாய மூடிக்கொண்டு கிளம்பு!” இத்தனை ஆண்டுகளில் முதல் முதலாகக் கடுமையாகக் கதைத்திருந்தார், பரமேஸ்வரி.
அந்நேரம் உள்ளே வந்தார், பூங்குன்றன்.
“நான் இங்க விருந்து சாப்பிட வரேல்ல சரியா? இத்தின பேருக்கு முன்னால வச்சி அவமானப்படுத்திட்டீங்க என்ன? இத நல்லா நினைவில் வச்சிருங்க. சாரல் ஆர் உங்களுக்கு? அவளிட வாழ்க்கைக்காகத்தான் நான் கதைக்கிறன். நீங்க இவள மட்டுமே சொந்தம் எண்டு பார்க்கிற சனம். பிறகு ஒர வஞ்சனை பற்றி எனக்குச் சொல்ல வந்திட்டீங்களோ?” பரமேஸ்வரியிடம் கத்திய வேகத்தில் மகளிடம் திரும்பினார்.
“உன்னைப் பெத்த பாவத்துக்கு அடிச்சே கொண்டிருவன்,” அக்கணமே வெளியேறியிருந்தார்.
“என்னாக்கா பிரச்சின?” அதிர்வோடு நின்றார், பூங்குன்றன்.
“என்ன பிரச்சினை எண்டு உனக்கு விளங்கேல்ல என்ன? உன்ர மனிசிய ஆரம்பத்தில கண்டிச்சு இருந்தியோ இந்த நிலையில வந்து நிக்காது. என்ன முறைக்கிற? அம்மாட சொல்ல மீறிக் கலியாணம் செய்யத் தெரிஞ்ச உனக்கு, உன்ர மனிசி விசயத்தில அம்மாவையும் கண்டிச்சிருக்க ஏலுமா இல்லையா? உனக்குப் பிரச்சினை வரக்கூடாது எண்டு ஒதுங்கி ஒதுங்கி…இண்டைக்கு எல்லாம் இவளிட தலையில வந்து விடிஞ்சிருக்கு. ஆனா ஒண்டு தம்பி, இவ்வளவு நாளும் போல நான் வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டன்.” கோபத்தோடு உள்ளே சென்ற தமக்கையைப் பார்த்தவர் கதைக்கவில்லை. மகளிடம் சென்று தலையை வருடினார்.
“உன்ர அம்மாவப் பற்றித் தெரியாதாம்மா. விடு! உனக்குச் சேந்தனப் பிடிச்சிருக்கா? ஓமெண்டால் அப்பா கலியாணம் செய்து வைப்பன். நீ ஒண்டுக்கும் யோசியாத!” அவள் பதிலை எதிர்பாராதே வாக்குறுதி வழங்கியிருந்தார், பூங்குன்றன்.

error: Alert: Content selection is disabled!!