ரோசி கஜனின் இயற்கை – 20 -3

அப்போதும் அவன் சீறல் ஏற்படுத்திய கோபத்தில் குடையை விசிறி அடித்ததை நினைக்கையில் அவளிதழ்கள் முறுவலில் நெளியாதில்லை. அதே முறுவலோடு குளித்து முடித்தவள், ‘வேந்தன்…அறைக்குப் போய்ட்டீங்களா?’ தட்டியனுப்பினாள். மறுபுறம், அனுப்பிய செய்தி அனாதையாக நின்றது. ‘இன்னும் போகேல்லையோ! இல்லாட்டி குளிச்சுக்கொண்டு நிற்பாராக்கும்!’  தன்னைத்தான் சமாதானப்படுத்திவிட்டு பற்களைத் தீட்டத் தொடங்கினாள்.

“இலக்கி முடியுதாம்மா? நானும் குளிக்க வேணும்.” சுகுணா கதவில் தட்ட, “இந்தா முடிஞ்சிட்டம்மா, ஐஞ்சு நிமிசம்.” வாயைக்கொப்பளித்த வேகத்தில், ‘வேந்தன் கோவமா ? நான் கோவமே இல்ல.’ தட்டி, சர்ரென்று ஹார்டின்களைச் சேர்த்தனுப்பிவிட்டு இமைக்காது பார்த்து நின்றாள். நிமிடங்கள் கடந்தனவேயொழிய அவளனுப்பிய குறுஞ்செய்திகள் பார்க்கப்படவேயில்லை.

முகம் தொங்கிப்போக வெளியே வந்த வேகத்தில் தமக்கையருகில் சுருண்டுவிட்டாள்.

“இண்டைக்கு எடுத்த ஃபோட்டோஸ் பார்ப்பமா இலக்கி?”

“இல்லக்கா, தூங்கப் போறன்.” 

“அப்ப நீ  தூங்கு. நான் ஆருரனிட்ட போட்டோஸ் கேட்டனான். அனுப்பி இருக்கிறான். உனக்கும் அனுப்பி விடுறன்.” என்ற கவி, “வேந்தனிட்டையும் கேட்டன் அவர் இன்னும் மெசேஜ் பார்க்க இல்ல. தூங்கிட்டார் போல!” சொல்லிக்கொண்டே கைபேசியில் கவனமாக இருக்க, கண்களை மூடிக்கொண்டாலும் உறக்கத்தின் சாயலே இலக்கியாவின் புறம் நெருங்கவில்லை.

அடுத்த ஒருமணித்தியாலம் கடந்திருக்கையில் அறையில் நிசப்தம் குடிவந்திருந்தது புரண்டு படுத்த இலக்கியாவின் விழிகள் இப்போது திறந்திருந்தன. கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.  வேந்தன் பார்த்திருக்கவில்லை.

பதற்றமாக உணர்ந்தாள். ‘பச் போய்ச் சேர்ந்திருப்பார்.’ மெல்ல கட்டிலை விட்டிறங்கி யன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள். மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. அடிமேல் அடிவைத்து குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்தியவள் வேந்தனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவன் எடுக்கவில்லை.

‘ஐயோ வேந்தன்,  நீங்க போய்ச் சேர்த்திட்டிங்க தானே?’ தட்டிவிட்டுக்  காத்திருந்தாள். வேறு என்ன செய்யலாமென்றும் புரியவில்லை. அவன் புறமிருந்து பதிலேயில்லை.

ஏமாற்றத்தோடு வந்து கவுச்சில் சுருண்டுகொண்டவள், ‘வேந்தன் ப்ளீஸ்!’ கடைசித் தடவை என்றெண்ணிக்கொண்டு தட்டினாள்.

‘இப்ப என்னத்துக்கு நொய் நொய் எண்டு மெசேஜ் தட்டுற? பேசாமல் உன்ர அலுவலப்  பார்.  பெரிசா படம் போடாத!’ வந்த செய்தியின் சூட்டில் இவள் விழிகள் தழும்பினாலும் அப்பாடா என்றிருந்தது. சட்டென்று கைபேசியை வைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.

ச்சே அப்படியே தூங்குவதா என்ன? கைபேசியை எடுத்தாள்.

‘டேய் எரும, இத முதலே சொல்லியிருக்க நான் இத்தறிக்குத்  தூங்கி இருப்பனே! 

 படம் போடுறனாமே படம்! போய்ச் சேர்ந்திட்டீரா எண்டா, பதில் சொல்லாமல் படம் போட்டது ஆரு? நானா நீரா? 

 விடிஞ்சோன்ன இதுக்கு வட்டியும் குட்டியுமா உச்சி மண்டை வெடிக்க நாலு குட்டுக் குட்டேல்லையோ நான் இலக்கி இல்ல.’ 

படபடவென்று தட்டிவிட்டுக் கண்களை மூடியவள் இதழ்களில் நெளிந்த சிறு முறுவலோடே கண்ணயர்ந்திருந்தாள்.

மறுபுறம், ஆரூரனருகில் படுத்திருந்த வேந்தன் விழிகள் அவளனுப்பிய குறுஞ்செய்திகளில் ஓடித் திரிந்தன. உதடுகள் தன்பாட்டில் முறுவலில் விரிந்தன. அதுவரை மனதுள் கனன்று கிடந்த கோபம் இதமெனும் சாரலில் நனைந்திருக்க உறங்க முயன்றானவன்.  

 

error: Alert: Content selection is disabled!!