ரோசி கஜனின் இயற்கை – 23 – 2

அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள்  பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வேந்தன் என்ன இங்க?” ஓடிவந்து அவன் கைப்பற்றியிருந்தான், ஒருவன்.

“சுதா!” சந்தோசமாக விளித்தாலும் சட்டென்று சுதாகரித்த பாவனை வேந்தனில். மின்னலென, அருகில் நின்ற நாதன் குடும்பத்தினரை பார்த்துவிட்டு வந்தவனிடம் திரும்பினான்.

“என்ன இங்க, தனியவா வந்த?

 “நான்தான் அந்தக் கேள்வி கேட்கவேணும். நாங்க இருக்கிறது சிக்காகோதான் எண்டு மறந்திட்ட போல! நீ  என்ன இங்க? அம்மா ஆக்கள் கூட இப்படி நீ வரப்போறதா சொல்லவே இல்ல.” என்றபடி, வேந்தன் பின்னால் நின்றவர்களைத் தானும் பார்த்தான் சுதா.

“அது வந்து… யாழ் ட்ராவல்ஸ் காரில இவர்களோட வந்தன்.” என்றவன், அதேவேகத்தில் நாதனிடம் திரும்பினான்.

 “அங்கிள் நீங்க போட் டூர் போயிட்டு வாங்கோவன், நான் இவனோட …” தொடங்கவே, “பிரச்சின இல்ல தம்பி, நீங்க கதையுங்கோ நாங்க போயிட்டு வாறம்.” நகரத் தொடங்கிவிட்டார், நாதன். 

“இதிலதான் நிப்பன் அங்கிள், இல்லையோ வந்திட்டு கோல் பண்ணுங்கோவன்.”  என்றவன், ‘எங்களோடு வரேல்லையா?’ பார்வையால் கேட்டு நின்ற இலக்கியாவைக் கவனித்தும் கவனிக்காது வந்தவனோடு நகர்ந்தான்.

நண்பனோ உறவினனோ இவ்வளவு நெருக்கமான உரையாடலிலிருந்து மிகவும் வேண்டியவன் என்று தெரிந்ததுதான். வந்தவனின் வீட்டாரை வேறு நலம் விசாரிக்கிறான். சரி எவ்வளவு நெருங்கியவனாக இருந்தாலும், ‘நீங்க போயிட்டு வாங்கோ’ என்றுவிட்டு விலகுவது எந்தவகையில் சரியாகும்? 

இலக்கியாவின் மனம் புறுபுறுப்பில் இறங்கியிருக்க நின்று நிதானமாக அவனையே  பார்த்தாள். அவனோ, திரும்பியும் பாராது சற்றே தள்ளிக் கூட்டமாக நின்றவர்கள் நோக்கிச் சந்தோசமாக நகர்ந்தான்.

“டோய்! பின்ன என்னத்துக்கு இந்த ஆறு நாளும் பெரிசா படம் போட்டீர்? உம்மட பகிடி சேட்டைக்கு நானா கிடைச்சன்?” நாவால் வழுவ முனைந்த வார்த்தைகள் தயங்கி நின்றன. 

“இலக்கி வாம்மா ஏன் நிக்கிறீர்?” அஜி அழைக்க, “வாடி, இதில நிண்டு  எடுத்தா பின்னுக்கு ‘ட்ரம்ப் பில்டிங்’  முழுசும் விழும்.” என்ற  கவி, “வேந்தன் வேந்தன் கமரா…” அவனை நோக்கி ஓடினாள். சற்று முதல்  புகைப்படமெடுப்பதற்காக கைமாறியிருந்த கமராவை  மறந்து கொண்டுபோயிருந்தான் அவன்.

“ஓ! மறந்ந்திட்டன்.” என்றபடி அவன் திரும்புவதற்குள் அவர்களை எட்டியிருந்தாள், கவி. 

 அங்கு நின்ற குடும்பத்தினர் முறுவலிக்க, சிலநிமிடங்கள் நின்று கதைத்துவிட்டு வந்தவள், “அது வேந்தண்ட ஒன்றுவிட்ட மாமா  குடும்பமாம்.” விபரம் சொல்லிவிட்டு, எல்லாரையுமழைத்து விதம் விதமாகப் புகைப்படமெடுத்தாள். அதில் நின்றாலும்  இலக்கியாவின் மனமோ அவனருகில்!

“அந்தா ஒரு வோட்டர் டக்ஸி வருது. அதில போயிட்டு வந்திருவம்.” நாதனும் மாறனும் சொல்ல, அப்படகில் ஏறும் இடத்திற்கு வேந்தனைக் கடந்து தான்  சென்றார்கள். அவனைக் கடந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவன்  பார்வையும் இவள் முதுகில் தான்  இருந்தது போல, இவள் பார்க்கையில் சட்டென்று திரும்பியதை அவதானித்தவளுள் சுறுசுறுவென்று சுணக்கம் ஏறினாலும், மனம் கேட்கவில்லை.

 ‘வேந்தன் நீங்களும் வாங்கோ… ப்ளீஸ்!’ மனதின் சுணக்கம் மீறி விருப்புக்குத் துணைநின்ற விரல்கள் குறுஞ்செய்தியைத் தட்டி அனுப்பியிருந்தன. மீண்டும் வருவானோ திரும்பிப் பார்க்க, கைப்பேசியைப் பார்த்துவிட்டு  மறுபுறமாகத் திரும்பி நின்று கலகலவென்று கதைத்துக்கொண்டு நின்றானவன்.

மெல்லிதாக விழிகள் கலங்கிப் போயின, இலக்கியாவுக்கு. 

‘வரவில்லையோ சரிதான் போ! இதோட எத்தின தரம் வலிய வலிய கதைச்சிட்டன்.’ மனதுள் அவனை நாலு சாத்து சாத்திவிட்டு மேல்தட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“வேந்தனும் வந்திருக்கலாம்.” என்றாள் கவி. 

“அதான், அவர் நம்மட குடும்பத்தில ஒராள் போல பழகிட்டார்.” ஆரூரன் சொல்ல, “உண்மைதான், நல்ல பெடி!” ரதியும் சேர்ந்துகொண்டார்.

‘ஓமோம்! பெரிய நல்ல பெடிதான். பொல்லாத வினை பிடிச்ச சாத்தான்!’ மனதுள் அறம்புறமாகத் தாழித்தாள், இவள்.  

  சில்லென்று மோதிய தென்றல் அவள் மனதின் சுணக்கத்தை விரட்ட முனைய, கூடவே,  “இலக்கி அக்காக்கு பக்கத்தில.” தாயின் பிடியிலிருந்து விடுபட்டு வந்து நெருக்கியடித்தபடி அமர்ந்த கவின், “பிக்கா…” தன் கரத்தலிருந்த கிரீம் பிஸ்கட்டை இலக்கியாவின் வாயில் வைத்தான்.

“வேணாம் வேணாம், நீங்க சாப்பிடுங்க!” அவனை அணைத்துப்பிடித்தபடி கைட் சொல்வதைக் கேட்டுக்கொண்டே விழிகளை சுழற்றியவளில் இருந்து  வேந்தன் மீதான கோபம் சற்றே விலகித்தான் போனது.

  எவ்வித இடையூறுமின்றி நகரின் பெரும்பகுதியை இரசித்துக்கொண்டிருக்க, சிக்காகோவின் பழமைவாய்ந்த வரலாற்றைச் சொல்லியபடி வந்தாள், வழிகாட்டும் பெண்.

 ‘சியர்ஸ் கோபுரம்’ மிகுதி கட்டிடங்களை முந்திக்கொண்டு நிமிர்ந்து நிற்க,  நாங்களும் சளைத்தவர்கள் அல்லவென்று அகன்று நிமிர்ந்து வானை முட்டி நின்றன, உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள்.

நகரின் ஏரிக்கரையின் அருகாமையிளுள்ள பல அடுக்குமாடிக்  குடியிருப்புகளின் நவீன கட்டிடக்கலை எல்லோரினதும் இரசனையான வருடலைத் தமாதாக்கிக் கொண்டன.  

“நியூயோர் போட் டூர் விட இது  வித்தியாசமான அனுபவம்!” கவி சொல்ல, “ஓம், இப்பிடி இரண்டு பக்கத்துக்குக் கரைகளும் கிட்டத்தில பார்க்கக்கூடியதா இருக்கிறது சூப்பர் தான்!” என்றான் ஆரூரன்.

அவர்கள் அப்படிக் கதைக்க, இலக்கியாவினுள்ளோ, நியூயோர்க்கில் சென்ற படகுச்  சுற்றுலாவும் வேந்தன் நினைவும்! அங்கு அவன் நெருங்கி நின்றதை உணர்ந்த உள்ளம், இப்போதும் அவன் அருகாமையை விரும்பி நின்றது. 

 திரும்பி வந்து இறங்குகையில் மனம் முழுதும் அவன் நினைவாக இருந்தாலும் அங்கிருந்த படிக்கட்டில் தனியே அமர்ந்திருந்துவிட்டு எழுந்தவனைப் பார்க்கவில்லை, இவள்.

“என்ன உங்கட மாமா வீட்டாக்கள் போய்ட்டினமா?” கேட்டபடி நெருங்கினான் மாறன்.

“ஓமோம், அவேட வீட்ட வந்த விசிட்டர்சோட வந்திருந்தவே, போய்ட்டினம்.” என்றவன் இவர்களை நோக்கி வர, “வேந்தன் அப்பிடியே இருங்க இதில எல்லாரும் இருந்து ஒரு ஃபோட்டோ எடுப்பம்.” முன்னால் வந்தாள், கவி.

அங்கு நின்ற பெண்ணொருத்தி தான் எடுத்துவிடுவதாகச் சொல்லி புகைப்படக்கருவியை வாங்கிக்கொள்ள, கொடுத்துவிட்டு வந்த கவி எல்லோருக்கும் முன்னால் கீழிருந்த படியில் கவினுக்கருகில் அமர்ந்து கொண்டாள்.

 எல்லோரும் அமர்ந்த பின் வெகு இயல்பாக நகர்ந்த வேந்தன் இலக்கியாவின் அருகில் அமர்ந்துகொண்டான். சரேலென்று திருப்பி முறைத்தாள், இலக்கியா. மனதில் சுணக்கத்தோடு அவனருகில் அமர முடியவில்லை. அதேவேகத்தில் எழுந்து, “இந்த ஃபோனிலும் எடுங்க!” அப்பெண்மணியிடம் கொடுத்தவள் வெகு இயல்பாக மறுபுறம் சென்றமர, வேந்தன் முகம் அறம்புறமாகக் கோணிப் போயிற்று! நல்ல காலம் இந்த விளையாட்டு மற்றவர்கள் கவனைத்தைப் பெறவில்லை

அடுத்து, மில்லேனியம் பார்க், நோக்கி நடந்தார்கள். இலக்கியா பின்தங்கியே சென்றாள்.

இருவருக்குள்ளும் ஓடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அவள் மனதுக்குள் பெரும் சோர்வைத் தந்து கொண்டிருந்தது. அவனுள்ளும் தான். இருந்தாலுமே அதைத்தானே செய்தார்கள். 

தமக்கை மற்றவர்கள் போல் எவ்விதமான கவலைகளுமன்றி இப்பிராயணத்தை இரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் அவளுக்குள்! 

அவளுக்காகவே இந்தப் பயணம் வந்தவன் அவன். ஆனால், இப்படி முறைத்துக்கொண்டு நின்றாலென்று அவனுள்!

அப்படியே சுற்றத்தை இரசித்தபடி பதினைந்து இருப்பது நிமிடங்களில் ‘ரிங்லி சதுக்கம்’ (Wrigley square) வந்திருந்தார்கள். தன்னை நோக்கி வரும் உல்லாசப்பயணிகளை  ஆசையோடு வரவேற்றுக்கொண்டிருந்தது, ‘ரிங்லி சதுக்கம்’. அவ்வளவு பேர் அங்குமிங்குமாகத் திரிந்தாலும் அவ்விடம் கொஞ்சமும் களைத்திடவில்லை.

  இறுமாந்து நின்ற வானளாவிய கட்டிடங்கள், சிறு குளத்தில் சீறிய நீர் எனப் பின்னணியிலிருக்க, குடும்பமாக அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொருவகையாக இரசிக்க வைத்த நகர அமைப்பைப்  பார்த்தபடி ‘கிளவுட் கேட் த பீன்’ நோக்கி நடந்தார்கள். ஆதவன் சற்றே வெளிப்பட்டதில் சற்றுத்தூரத்திலேயே சிக்காகோ நகரக் கட்டிடங்களின் முழு அமைப்பும் அதில் பிரதிபலித்தது இன்னொருவகை அழகை அள்ளித் தெளித்தது.

அதைக்காட்டி வேந்தனும் ஆரூரனும் கவியும் கதைத்தபடி ஒன்றாக நடக்க, இலக்கியாவால் அவ்வழகை இரசிக்க முடியவில்லை. சற்றுமுன் அவன் சமாதானமாக வந்தமர வெடுக்கென்று எழுந்து முறைப்பைக் கொடுத்தவள்தான். இருந்தாலும், இந்தப் பாராமுகம் இனியும் தாங்க முடியும் போலிருக்கவில்லை. தொண்டை கனத்து எதுவோ போலிருந்தது. அடிக்கடி அவனையே தான் பார்த்தபடி வந்தாள். அவன் தான் இவள் புறமே பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி, அதுவரையும் இல்லாதவகையில் மிக்க கலகலப்போடும் இருந்தான். ஒருவேளை அவன் முகம் இறுக இருந்திருந்தால் இவளுக்கு இந்தளவு கஷ்டமாக இருந்திராதோ என்னவோ!

 என்னதான் என்றாலும் மீண்டும் அவனை நாடிக் கதைக்கவும் பிடிக்கவில்லை. 

  எல்லோரும் தத்தம் பாட்டுக்கு புகைப்படம் எடுப்பதிலும் இரசிப்பதிலும் முனைந்திருக்க, விலகி முன்னேறிச் சென்றாள், இலக்கியா. அப்படியே வீடியோ எடுத்தவாறே சுற்றி மறுபுறம் வந்தவள் சட்டென்று ஒருகரம் வளைத்துக்கொள்ள கணம் திடுக்கிட்டாலும் யாரென்று உணர்ந்த கணம் அவன் முகம் பார்க்காது அப்படியே தொய்ந்து விட்டாள். அக்கணம், வீட்டினர் பார்வையில் பட்டுவிட்டால் என்றது கூட உணர்வில் இல்லை. விழிகள் கலங்கி நிறைந்திட்டு! 

“டோய் இன்னும் கோபமா? இனி என்னால தாங்கேலா சொல்லிட்டன்” வளைத்த கரத்தால் தன்னை நோக்கி அவள் முகத்தைத் திரும்பியபடி சொன்னான், அவன்.

அவள் கண்ணீரில் அவன் முகமும் கலங்கியது. “சொறி சொறி இனி இந்த விளையாட்டு வேணாம் சரியோ?! சின்னப்பிள்ளைகள் போல தொட்டதுக்கும் முகம் திருப்புறது.”  என்றவனை, கண்ணீர் உருண்டு விழ முறைத்தபடி விலக முனைந்தாள்.

“இப்பிடி முரண்டு பிடிச்சியோ விறுவிறுவெண்டு போய் உன்ர வீட்டாக்களிட்ட எல்லாம் சொல்லுவன்.” முழியை உருட்டியபடி சொன்னவன் மீண்டும் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தபடி, “கொஞ்சம் சிரியும் பா!” செல்பிகளை கிளிக்கினான். இவள்தான் ஈரமான விழிகளோடு அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

“என்ன?” என்றவன் அவள் தலையோடு தன்  தலையைச் சற்றே பலமாகவேதான் முட்டினான். அந்த முட்டல் அவர்களிடையே இதுவரை இருந்த ஊடலை, சுணக்கங்களை முற்றாகவே விலக்கித் தள்ளியிருந்தது.   

‘ஸ்ஸ்’ தலையைத் தேய்ந்தபடி விலகிக்கொண்டவள் மனதுள் வழமையான உற்சாகம். அவள் விழிகளின் ஈரத்தோடு விசமமும் கலந்துகொண்டது. 

 “அதுசரி, இப்ப என்ர வீட்டாக்களிட்ட அப்பிடி என்னத்தச் சொல்லுவீங்களாம்?”  துடித்த உதடுகளோடு வம்பாய் கேட்டவளை சுட்டுவிடும் பார்வை பார்த்தானவன்.

“அண்டைக்கு போட்டில வந்து என்னைக்கூட்டிக்கொண்டு வந்தது நீங்க தான் எண்டதை நான் இப்பவரைக்கும் வீட்டில  சொல்லேல்ல தான், மற்றும் படி சொல்ல என்ன கிடக்கு?! ம்ம்ம்…சொல்லுங்க என்ன கிடக்கு?” 

சீண்டலும் சவாலுமாகக்  கேட்டவளுக்கு, இப்போது, அதே விசமப் பார்வையோடு பதிலிறுகத் தொடங்கினான், வேந்தன். அவளோடு மல்லுக்கட்டுவது தரும் உற்சாகம் போல் இதுவரை அனுபவிக்கவில்லை, அவன்.

“வேணாம் பா , பிறகு இருந்து கண்ணக்கசக்கிப் பிரயோசனம்  இல்ல. வாவன் அப்பிடி என்ன சொல்லக்கிடக்கு எண்டு காட்டுறன். வா!” அவள் கரம் பற்றி நடக்க முனைந்தவன் பட்டென்று விட்டுவிட்டான். என்னவென்று திரும்பிப் பார்த்தவள் தம்மை நோக்கிவந்த கவியைக் கண்டுவிட்டு உதட்டில் ஒட்டி நின்ற முறுவலோடு அவனைப் பார்த்துவிட்டு, “ஓவர் கொன்பிடென்ட்…ம்ம்!” ஒற்றைப்புருவம் உயரச் சீண்டினாள்.

“அப்பிடியே வச்சுக்கொள்ளு! பிறப்பிலயே வந்தது!” என்றவன் பார்வையோ ‘உன்ர மனச நீ வார்த்தையால சொல்லத் தேவையே இல்லையடி.’ சீண்டலாக செய்தி சொன்னது.

“என்ன இங்க நிண்டு ரெண்டுபேரும் வாக்குவாதமோ!” என்றபடி வந்த கவியின் பார்வை ஒரு கணமேயென்றாலும் இருவரையும் உற்று ஆராய்ந்தது.

“இல்லக்கா, போனாப் போகுதெண்டு விட்டுட்டன். பாவமாக் கிடக்கு எண்டு.” தங்கை சொல்ல, “உன்ன… கொழுப்பு!” காதை முறுக்கியவள், “இவள் இப்பிடித்தான் வேந்தன், வம்பிழுக்கிறதில மன்னி!” அவசரமாகச் சொன்னாளவள்.

அதற்குப் பதில் சொல்லாது முறுவலோடு, “இந்தப்பயணம் வெளிக்கிட்டு எனக்கு கவி, ஆரூரன் எண்ட ரெண்டு பேரோடு மூண்டாவதா உங்கட தங்கச்சியும் ஃபிரெண்டா கிடைச்சிருக்கிறா!” என்றுவிட்டு, “ஃப்ரெண்ட்ஸ்” இலக்கியாவை நோக்கிக் கையை நீட்டினான்.

“பிரெண்ட்ஸ்!?” இலக்கியின் விழிகளில் ஏகப்பட்ட சிரிப்பு!

“ம்ம்…இப்போதைக்கு…” அவன் உதடுகளின் மெல்லிய அசைவில் உதிர்ந்தன,  வார்த்தைகள். 

புன்னகையோடு மெல்ல அவன் கரத்தைப் பற்றினாள், அவள். அவனும் அவள் விரல்களைத்தான் ஒன்றாகப் பற்றினான். இருந்தாலும் அப்பிடியில்  அழுத்தம் இருந்தது. அதையுணர்ந்தும் விழிகளோடு விழிகள் பாராது விடுவித்துக்கொண்டாள், இலக்கியா. என்னதான் முயன்றும் முகம் சூடேறிப்போயிற்று! அதுவும் அருகில் கவி நிற்பது உள்ளத்துள் அதிக பதற்றமும் கொடுத்தது.

அப்போது ஆரூரனும் மற்றவர்களும் வரவே அதில் நின்று ஒரு குடும்பப் படத்தை எடுத்துவிட்டு நகர்ந்தார்கள்.

அதன் பின்னர் இத்தாலியன் உணவு விடுதியொன்றில் உணவை முடித்துவிட்டு ‘த மொயின்’ (Des Moines)  பயணப்படுகையில் வாகனத்துள் கலகலப்பு ஏறியிருந்தது. அதுவும், தான் ஓடுகிறேனென்று கவியின் கைக்கு வாகனம் போயிருக்க, “தம்பி பரவாயில்ல நான் முன்னுக்கு இருக்கிறன், நீங்க பின்னால இருங்க.” என்று மாறன் அருகில் வேந்தனை அனுப்பியிருந்தார், நாதன். 

ஆரூரனும் அவனருகில் அமர்ந்துகொள்ள, இருள் பரவும் வரை ஒரே கலகலப்பு!

 

error: Alert: Content selection is disabled!!