அடுத்த நாளின் அதிகாலைப் பொழுது அழகாகப் புலர்ந்திருந்தது. தன் முன் அமர்ந்திருந்த தன் இரு பிள்ளைகளையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார். அகரன் வேலைக்காக வவுனியா செல்லவேண்டும். போனால், அடுத்த வார இறுதியில் தான் வருவான். ஆதினிக்குப் பல்கலைக்கழகம் இருந்தது. அவரும் நீதிமன்றத்துக்குப் போகவேண்டும். ஆக, எல்லோருக்கும் ஏற்ற வகையில் அந்தக் காலைப்பொழுதுதான் பொருந்தி வந்திருந்தது.
அந்த அறையே அவர்கள் மூவரினதும் எண்ணங்களால் கனத்துப்போயிருந்தது. அகரன் சங்கடத்துடன் அமர்ந்திருக்க, நேற்றைய அழுகையின் தடயங்களைச் சுமந்திருந்தது ஆதினியின் முகம்.
“ரெண்டுபேரும் என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, உணர்வுகளைக் காட்டாத குரலில் வினவினார், இளந்திரையன்.
“அப்பா, சொறி அப்பா. எல்லாம் என்னாலதான். நான் தான் யோசிக்காம, அவசரப்பட்டு ஆதிக்கு அடிச்சிட்டன். சியாமியும் பிழையா ஒண்டும் சொல்ல இல்ல. நான்தான்..” சியாமளாவின் மீது கோபம் இருந்தாலுமே தந்தையிடம் அவளை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை அவனுக்கு. அதை உணர்ந்த ஆதினியின் உதட்டோரம் ஒருமுறை வளைந்து மீண்டது. எதிர்காலத் துணைக்காக இவ்வளவு யோசிக்கிறவன் நேற்று அவளுக்கு என்ன செய்தான்? அவன் மனதில் சியாமளாவுக்கான இடம் என்ன, அவளுக்கான இடம் என்ன என்று மீண்டும் அவன் நிரூபித்ததுபோல் உணர்ந்தாள். அழுகை பழக்கமில்லாத ஒன்று என்பதாலோ என்னவோ, அது நேற்றுடனேயே நின்று போயிருந்தது. இப்போது வலித்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவள் புறம் திரும்பி, “அண்ணா, செய்தது பிழைதான் மா. நீயும் வேணுமெண்டா உன்ர கோபம் போறவரைக்கும் அடி. ஆதிம்மா சொறிடா..” என்றவனின் கரமொன்று அவளின் கையைப் பற்றி மன்னிப்பைக் கெஞ்சி யாசித்தது.
இங்கே, அவள் காயப்பட்டு நிற்பது அவன் அடித்ததால் அல்ல. அவளை விட்டுக் கொடுத்துவிட்டதால். அது புரியாதவனின் புறம் ஆதினி திரும்பவுமில்லை, அவனுக்குப் பதில் சொல்லவுமில்லை. நாசுக்காகத் தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.
இன்றைக்கு எப்படியும் அவளின் கோபம் குறைந்திருக்கும், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏன் இப்படி நடந்தாய் என்று கேட்டுத் தன்னுடன் சண்டை பிடிப்பாள் என்று எண்ணியிருந்தவன், அவளின் செய்கையில் காயப்பட்டு நின்றான்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மகனிடம் திரும்பினார் இளந்திரையன்.
“நானே இதுவரைக்கும் உங்க ரெண்டுபேருக்கும் கைநீட்டி அடிச்சது இல்ல தம்பி. அதை நீ செய்திருக்கிறாய். எங்க இருந்து இதைப் பழகினாய் எண்டு எனக்கு தெரியேல்ல. ஆனா, இதுதான் கடைசியும் முதலுமா இருக்கவேணும். ஒரு பிரச்சினையை எப்பிடி அணுகிறது, அதை எப்பிடிக் கையாளுறது எண்டு யோசிச்சு நடக்க உனக்கு வயசு காணும். அந்தப் பிள்ளையும் இந்த வீட்டில வந்து சங்கடம் இல்லாம வாழவேணும். எங்கட வீட்டுப் பிள்ளையும் இங்க நிம்மதியா இருக்கவேணும். இப்ப நீ அவசரப்பட்டு நடந்ததால ஒருத்தர் மற்றவரின்ர முகம் பாக்க சங்கடப்படுற நிலை வந்திருக்கு. நாளைக்கு நான் இல்லை எண்டுற ஒரு நிலை வந்தா அப்பான்ர இடத்தில இருந்தும் தங்கச்சிக்கானதச் செய்யவேண்டியவன் நீ. நீயே இப்பிடி நடந்தா? உன்னட்ட இத நான் எதிர்பாக்கேல்ல தம்பி!” என்றவரின் அவன் மீதான நம்பிக்கையிழந்த பேச்சில் முற்றிலுமாக உடைந்துபோனான் அகரன். “உண்மையா சொறி அப்பா. இனி இப்பிடி நடக்கமாட்டன். சொறி ஆதி!” கையை இழுத்துக்கொண்ட தங்கையின் செய்கையும், கண்டிக்கும் தந்தையின் வார்த்தைகளும் அவனை மிகவுமே தாக்கியதில் குரல் கரகரத்தது.
“கலியாணத்தைப்பற்றி என்ன யோசிச்சு இருக்கிறீங்க?” அடுத்த விடயத்துக்குத் தாவினார் இளந்திரையன். அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே அவர் நுழைய விரும்பவில்லை. என்ன இருந்தாலும், சியாமளா சொன்னதைக்கேட்டு, அவளின் முன்னேயே, ஆதினியிடம் அகரன் அப்படி நடந்திருக்கக் கூடாது. சியாமளா, அகரன், ஆதினி இவர்கள் மூவருக்குமான அந்த உறவை, அவர்கள் மூவருமே மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் மீண்டும் இப்படியான பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதற்கு, இப்போது நடக்கும் இந்த முறுகல் நிலை நல்ல பாடத்தைக் கற்பிக்கும் என்று எண்ணினார். அதில், அதைப்பற்றிப் பேசாமல் திருமணத்தைப் பற்றி வினவினார்.
அகரனுக்கோ அந்தக் கேள்விக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாளனை வேண்டாம் என்ற தங்கை, எனக்கு அவள்தான் என்ற எல்லாளன், அவன் முகம் பார்க்க மறுக்கும் தங்கை, அவளுக்கு அண்ணனாக நீ நடக்கவில்லை என்று அவனையே குத்தும் அவன் நெஞ்சு என்று எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க ஒருவித வெறுப்பு மாத்திரமே மண்டியது. இதில் திருமணம் வேறா? “கொஞ்ச நாள் போகட்டும் அப்பா.” என்றான் பிடிப்பற்ற குரலில்.
“இல்ல அப்பா. கதைச்ச மாதிரியே அவரின்ர கலியாணம் நடக்கட்டும்.” அதுவரை நேரமும் அமைதியாக இருந்த ஆதினி இடையிட்டுச் சொன்னாள். “இவ்வளவு காலமும் என்னால அவே மூண்டுபேரும் பட்ட கஷ்டங்களே போதும் அப்பா. இனியும் நான் ஆருக்கும் தொந்தரவா, பாரமா இருக்க விரும்பேல்ல. நான் படிக்கப்போறன். அவரின்ர நண்பருக்கும் வேற பொம்பிளைய பாக்கச் சொல்லுங்கோ. இவேக்குக் குறிச்சி நாளிலேயே அவருக்கும் நடக்கட்டும்.” என்றவளின் பேச்சில் ஆழமாகக் காயப்பட்டு நின்றான் அகரன்.
“ஆதிம்மா, என்ன இது? நீ எனக்குத் தொந்தரவா? என்னப்பா இப்பிடியெல்லாம் கதைக்கிறாள். நீங்களும் கேட்டுக்கொண்டு இருக்கிறீங்க? அவள் எனக்குப் பாரமா?” அவளின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் பரிதவித்தான் தமையன்.
ஆதினிக்கு அவனின் துடிப்பு எதுவுமே மனத்தைத் தொடமாட்டேன் என்றது. “இந்த வெளிவேசம் எல்லாம் இனியும் தேவை இல்ல. அதோட, இனி ஆதினி எண்டே கூப்பிடுங்கோ.” என்றாள் அவன் முகத்தை நேராகப் பார்த்து. ‘வெளிவேஷமா?’ திகைப்புடன் அவளை பார்த்தான் அகரன். “கூடப் பிறந்ததாலயே அண்ணா ஆகிடலாமா என்ன? அண்ணாவா இருக்கோணும். அண்ணாவா நடக்கோணும். எனக்கு ஒரு பிரச்சினை வந்தா அண்ணா இருக்கிறார் எண்டுற நம்பிக்கையைத் தந்திருக்க வேணும். அதெல்லாம் இங்க நடந்ததா என்ன?” என்றவளின் உதட்டோரம் வறண்ட சிரிப்பு.
“சந்தோசத்துல மட்டுமே கூட இருக்கிற அண்ணா இருந்தா என்ன இல்லாட்டி என்ன? உங்கட வருங்கால மனுசில இருந்த நம்பிக்கை கூடப்பிறந்த என்னில இல்லாம போயிட்டுதே. நாளைக்கு என்ர வாழ்க்கைல தெரிஞ்சோ தெரியாமலோ நான் ஒரு பிழை செய்திட்டன் எண்டே இருக்கட்டும். அப்ப என்ன செய்திருப்பீங்க. நேற்று மாதிரி கைவிட்டிருப்பீங்க. அப்பிடியான நீங்க எனக்கு என்னத்துக்கு?” என்றவளின் கேள்வியில் வாயடைத்துப்போனது அவனுக்கு.
அவனின் செய்கை அவளை இந்தளவிற்கு யோசிக்க வைத்ததா என்று நம்பமுடியாமல் நின்றான் அகரன்.
ஆதினி தகப்பனின் புறம் திரும்பினாள். “சாமந்தியையும் எனக்குத் தெரியும். சாகித்தியன் அண்ணாவையும் தெரியும். அதால அங்க போனனான் அப்பா. மற்ற பிரண்ட்ஸ் நாங்களும் வரட்டுமா எண்டு கேட்டவே. வாங்கோ எண்டு கூட்டிக்கொண்டு போனனான். அதேமாதிரி, பைக் பழுதாகி இடையில நிக்குது, அவசரமா கொழும்புக்கு போகோணும், ஹெல்ப் பண்ணு எண்டு அஜய் கேட்டான். கூட்டிக்கொண்டுபோய் விட்டனான். என்னளவில நான் செய்தது எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அதுக்குப் பின்னால என்ன இருக்கு எண்டு எனக்குத் தெரியாது. இனி என்ன, ஆராவது அவசரத்துக்கு ஏதாவது உதவி எண்டு கேட்டா, அவேன்ர டீடெயில் எல்லாம் போலீசுக்கு அனுப்பி, அவே ஆபத்தில்லாத மனுசர் எண்டு ரிப்போர்ட் வந்தபிறகுதான் அந்த உதவிய நான் செய்ய வேணுமா?” என்றவளின் கேள்விக்குப் பதில் அவரிடமும் இல்லை.
அவளோ பல்கலைக்கழகத்துக்கு நேரமாவதை உணர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தாள். “அவருக்கு மனுசியா வரப்போற அவாவுக்காவது கடைசிவரைக்கும் நம்பிக்கையான ஒருத்தரா இருக்கச் சொல்லுங்க. என்னால ஆரின்ர கலியாணமும் தள்ளிப்போகக் கூடாது அப்பா. பிறகு, அதுக்கும் நந்தியா நிக்கிறாய் எண்டு என்னைத்தான் குறை சொல்லுவினம்.” என்றவள் விறுவிறு என்று அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
“என்னப்பா இது? இப்பிடிச் சொல்லிப்போட்டு போறாள்?” வேதனையோடு கேட்டான் அகரன்.
“எல்லாம் நீ யோசிக்காம நடந்ததின்ர விளைவுகள் தான் தம்பி. கொஞ்ச நாள் போகட்டும். பிள்ளையின்ர கோபம் குறையட்டும். எல்லாம் சரியாப் போகும். அவா சொன்னதுதான் சரி. அவாக்கு இன்னும் வயசு இருக்கு. படிச்சு முடிக்கட்டும். உங்கட கலியாணத்தைக் கதைச்ச மாதிரியே வைப்பம்.” என்று அவரும் முடித்துக்கொண்டார்.