……………………..
வவுனியாவுக்குப் புறப்பட வேண்டும். இப்போதே புறப்பட்டால் தான் அங்கே சரியான நேரத்திற்கு நிற்க முடியும். ஆனாலும், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், தலையைக் கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் அகரன். ஆதினியின் வார்த்தைகளே அவனுக்குள் நின்று சுழன்றுகொண்டு இருந்தது.
அவள் கேட்டதில் தவறு இல்லையே. அவள் தப்பே செய்திருந்தாலும் அவளுக்காக அவன் நின்றிருக்க வேண்டாமா? குறைந்த பட்சமாகச் சியாமளா இல்லாதபோதாவது கோபப்பட்டிருக்கலாம். இதில் எதையும் அவன் செய்யவில்லையே.
அன்று ஒருநாள், புதுக்காதலின் பூரிப்பில், சியாமளாவுக்குப் பிறந்தநாள் என்று, எல்லாளன் இல்லாதபோது, அவர்களின் வீட்டுக்கே சென்று சியாமளாவைச் சந்தித்திருந்தான். அதையறிந்த எல்லாளன் கடிந்துகொண்டபோது, வருங்கால மனைவியைப் போய்ப்பார்த்தால் என்னவாம் என்று அவனுக்காக எல்லாளனிடம் மல்லுக் கட்டியவள் அவள்.
நடுராத்திரியில், யாருமில்லா வீட்டில், அவளைத் தனிமையில் சந்தித்தது தவறென்று அவனுக்கே தெரியும். ‘நீ செய்தது பிழை அண்ணா. என்னை ஆராவது இப்பிடி வந்து பாத்தா சும்மா விடுவியா?’ என்று, தனிமையில் கடிந்துகொண்டவள், கடைசி வரைக்கும் எல்லாளனிடம் அவனை விட்டுக் கொடுக்கவே இல்லை.
“உங்களுக்கு உங்கட நண்பரிலயும் நம்பிக்கை இல்ல, உங்கட தங்கச்சிலையும் நம்பிக்கை இல்ல. அதுதான் இவ்வளவு கதைக்கிறீங்க.” என்று எல்லாளனின் வாயைத்தான் அடைத்திருந்தாள்.
அதுவே, அவளுக்கு ஒன்று என்று வருகையில் அவன் என்ன செய்தான்?
சியாமளாவின் மீதுகூட இப்போது கோபப்படப் பிடிக்கவில்லை. அவன் சரியாக இருந்திருந்தால் யாரால் என்ன செய்திருக்க முடியும்? ஆதினி அறையை விட்டு வெளியேறும் அரவம் கேட்டது. கீழே இறங்குவதற்காக அவள் படியில் கால் வைக்கமுதல் வேகமாக ஓடிவந்து அவளின் முன்னே நின்றான்.
“ஆதிம்மா, அண்ணா செய்தது பிழை தான்டா. எனக்கும் தெரியும். அதுக்காக அதென்னம்மா பாரமா இருக்க விரும்பேல்ல எண்டு எல்லாம் சொல்லுறது. உன்ர அண்ணா அப்பிடி நினைப்பனாம்மா அதுவும் உன்னைப்போய். நீ என்ர செல்லம் எல்லா. அண்ணாவோட கதைக்க மாட்டியா? பிளீஸ்டா. நீ கதைக்காட்டி நான் எப்பிடி நிம்மதியா இருப்பன் சொல்லு?” என்றவனின் விழிகளினோரம் மெல்லிய நீர்ப்படலம்.
அதை அவன் தங்கை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை. அவனைச் சுற்றிக்கொண்டு விறுவிறு என்று படிகளில் இறங்கி, வீட்டை விட்டு வெளியேறியும் இருந்தாள்.
அப்படியே நின்றுவிட்டான் அகரன். இதுவரை இருந்த அவனுடைய செல்லத் தங்கை இனி அவனுக்குக் கிடைக்கமாட்டாளோ என்கிற பயம் வெகுவாகவே உண்டாயிற்று. மனம் நோக வவுனியாவுக்குப் புறப்பட்டான்.
அவன்மூலம் அவர்களின் வீட்டில் நடந்ததை அறிந்துகொண்ட எல்லாளன், பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு வந்திருப்பாள் என்று கணித்து, அன்றே ஆதினியைச் சந்திக்க வந்தான். அவனை வரவேற்று அமரவைத்தார் சாந்தி.
“என்ன குடிக்கத் தர தம்பி? இல்ல, சாப்பிடவே தரவா?” அவனை அவருக்கும் நிறைய நாட்களாகத் தெரியும் என்பதில் இயல்பாக விசாரித்தார்.
“இப்ப ஆதினிய ஒருக்கா கீழ வரச்சொல்லுங்க. பிறகு அவளுக்கும் எனக்கும் தேத்தண்ணியும் கொறிக்க ஏதாவது இருந்தா அதுவும் தாங்க.” என்று அவரை அவளிடம் அனுப்பிவைத்தான் அவன்.
மேலே போன வேகத்திலேயே திரும்பிவந்து அவனைச் சங்கடத்தோடு பார்த்தார் சாந்தி.
“என்னவாம் அக்கா?” அவள் என்ன சொல்லியிருப்பாள் என்கிற ஊகம் அவனுக்கும் உண்டு. அதில், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வினவினான்.
“அது.. எங்கயோ போகப்போறாவாம். இப்ப நேரம் இல்லையாம்.”
“ஓ..!” என்று இழுத்துவிட்டு, “நீங்க வந்து தேத்தண்ணியை ஊத்துங்க. நான் என்ன எண்டு பாக்கிறன்.” என்றவன் அரைவாசிப் படிகளை ஏறி நின்று, “ஆதினி, இப்ப நீ கீழ வரவேணும். எனக்கு உன்னோட கதைக்கோணும். நீ வராட்டி நான் உன்ர அறைக்க வருவன்.” என்று குரல் கொடுத்தான்.
அவள் அசையவே இல்லை. எல்லாளனுக்கு மெல்லிய கோபம் மூண்டது. அதைவிட, அன்று முத்தமிட்ட தினத்திலிருந்து, தன் பார்வையில் படாமல் இருப்பவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதமும் உண்டாயிற்று. அதில், மேலே சென்றான். அவளின் அறையின் கதவு முழுவதுமாகச் சாற்றப்படாமல் இருந்தபோதிலும் வெளியே நின்று கதவைத் தட்டினான்.
சத்தமில்லை.
“நான் திறக்கவா?” அவன் அந்தக் கேள்வியைக் கேட்டு முடிக்க முதல் அவளே வந்து திறந்தாள்.
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”
அவள் விழிகளில் தெறித்த கோபத்தைக் காட்டிலும் விழி மடல்களின் தடிப்பைப் பார்த்தவனுக்கு என்னவோ மாதிரி ஆகிப்போயிற்று. அகரன் சொன்னதுபோல எதற்கும் அழும் ரகம் அல்ல அவள். அப்படியானவள் முகம் வீங்கும் அளவுக்கு அழுத்திருக்கிறாள். நெஞ்சை ஒரு பாரம் வந்து அழுத்தியது. அவள்மீதிருந்த அந்த மெல்லிய கோபம் கூட எங்கோ ஓடிப்போயிற்று. “கதைக்கத்தானே கூப்பிடுறன். கொஞ்சம் வெளில வாவன்.” என்றான் தன்மையாக.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கே, மாடியில் போடப்பட்டிருந்த வட்ட மேசையைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சென்று, முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்தாள் ஆதினி. சாந்தியும் ஒரு தட்டில் தேநீரும் சிற்றுண்டியும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்.
ஒருவாய் எடுத்துப் பருகினான். விழிகள் அவளை அளந்தது. முகத்துக்கான மேக்கப் முடிந்திருந்தது. தலையை வாரிக்கொண்டு இருந்தபோது அவன் வந்திருக்க வேண்டும். விரிந்தபடி கிடந்தது. உண்மையிலேயே எங்கோ வெளியில் செல்லத்தான் போகிறாள் என்றதும், “எங்க வெளிக்கிடுறாய்?” என்றான்.
அவள் முகத்தை அவன் புறமாகத் திருப்பவில்லை. பேச வந்ததை மாத்திரம் பேசு என்பதுபோல் அமர்ந்திருந்தாள். அவனும் இருவருக்குமிடையிலான பேச்சை இலகுவாக ஆரம்பிக்க எண்ணித்தான் அதை வினவினான். அதற்கு விடமாட்டேன் என்று அவள் மௌனம் சாதிக்கவும் வந்த விடயத்தையே ஆரம்பித்தான்.
“நேற்று சியாமளா இங்க வச்சு உன்னைப்பற்றிக் கதைச்சது பிழைதான். அண்டைக்கு நீ எனக்குத் துவக்கு காட்டினதில நல்லாப் பயந்திட்டாள். எந்த விளையாட்டுக்கும் ஒரு அளவு வேணும் எண்டுதான் அகரனிட்டக் கதைச்சிருக்கிறாள். அவனும் யோசிக்காம நடந்து கடைசில என்னென்னவோ நடந்து போச்சுது.” என்றவன் ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டான். பின், “அதையெல்லாம் பெருசா எடுக்காத ஆதினி. சியாமளா இனி அப்பிடி உன்னைப்பற்றிக் கதைக்க மாட்டாள். அகரனும் உன்னட்ட மன்னிப்புக் கேட்டுட்டான். நானும் வேணுமெண்டா உனக்குச் சொறி சொல்லுறன். இதோட அதையெல்லாம் விடு. அகரன் சியாமளாவோட சேர்த்து எங்களுக்கும் நிச்சயம் நடக்கட்டும். இல்ல, உனக்கு இப்ப அது வேண்டாம் எண்டு பட்டாச் சொல்லு நான் அங்கிளோட கதைக்கிறன். நீ படிச்சு முடிச்ச பிறகு எங்கட கலியாணத்தை வைக்கலாம். ஓகேயா?” என்றான்.
என்னவோ பிறந்த குழந்தைக்கு எடுத்துச் சொல்வதைப்போன்று மிகுந்த தன்மையோடு சொன்னவனைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்தாள் ஆதினி. “என்னைப்பற்றி என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எல்லாளன்? உங்களைவிட நான் வயசில சின்னவள் தான். உங்கட தங்கச்சி சொன்ன மாதிரி எனக்குப் பொறுப்பில்லாம இருக்கலாம். பக்குவம் இல்லாம இருக்கலாம். அதுக்காக மானரோசமும் இல்லை எண்டு நினைச்சீங்களோ? இல்ல, உங்களை மாதிரி மனதுக்க ஒண்ட வச்சுக்கொண்டு வெளில வேற ஒண்டக் கதைக்கிற ஆள் எண்டு நினைச்சீங்களா? எனக்கு நீங்க தகுதியான ஆள் இல்ல. அதால நீங்க எனக்கு வேண்டாம். ஓகேயா?” ஆரம்பத்தில் சூடாக ஆரம்பித்து கடைசியில் அவனைப்போலவே வெகு தன்மையாகச் சொல்வதுபோன்று சொல்லி முடித்தாள் ஆதினி.
எல்லாளனின் பொறுமை அத்துடன் வற்றிப்போயிற்று. “எல்லாளனோ? நான் என்ன உனக்குத் தம்பியா? பாவம், தேவையில்லாமக் கதைச்சு, நோகடிச்சு, அழவச்சிட்டம் எண்டு தன்மையாக் கதைச்சா நக்கலா அடிக்கிறாய்? இங்கபார், நீ என்ன சொன்னாலும் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொன்னது சொன்னதுதான். இன்னும் பத்து வருசம் கழிச்சு எண்டாலும் உனக்கும் எனக்கும் தான் கலியாணம். இத நல்லா நினைவில் வச்சுக்கொள்!” என்று உத்தரவிட்டான்.
ஆதினியின் பார்வையில் பொறி பறந்தது. “உங்கட இந்த வாய்க்கே எவனையாவது கூட்டிக்கொண்டு வந்து அவனைத்தான் பிடிச்சிருக்கு எண்டு அப்பாட்டச் சொல்லுறனா இல்லையா எண்டு பாருங்க!” என்றாள் சவாலாக.
“என்னடி வெருட்டிறியா? தைரியம் இருந்தா அப்பிடி ஏதாவது செய்துபார்.” என்றுவிட்டு விருட்டென்று எழுந்துபோனவன், திரும்பி வந்தான். அவளின் முகத்தருகே குனிந்து, “பொம்பிளைப் பிள்ளை உனக்கே தைரியமா என்ர கன்னத்தில கிஸ் பண்ணேலும் எண்டா ஆம்பிள நான் என்னவும் செய்வன். விளங்கினதா? செய்ய வச்சிடாத! ஒழுங்காப் படிக்கிற வேலைய மட்டும் பார்!” என்றுவிட்டுப் போனான்.
ஆதினிக்குக் கோபத்தில் முகம் சிவந்து தணலெனக் கொதித்தது.