அவர்கள் அவனின் வீட்டை நெருங்கியபோது, பயத்தில் கத்திக் கூக்குரலிடும் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குழப்பத்துடன் திரும்பி அவனை நோக்கினாள் ஆதினி. அதுவரையில், மென் சிரிப்பில் மலர்ந்திருந்த அவன் முகம் இறுகிற்று. நடையை எட்டிப்போட்டு வீட்டுக்குள் விரைந்தான். என்னவோ என்று மனதினில் கலவரம் சூழ, தானும் ஓடினாள் ஆதினி.
அவர்களின் வீட்டு விறாந்தையில், சற்றே வயதான பெண்மணி ஒருவர், தலை கலைந்து, உடை நலுங்கி இருக்க, மிதிலாவிடம் இருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தார். “அம்மா, ஒண்டும் இல்லை அம்மா. பயப்பிடாதீங்க. நான் மிதிலாம்மா..” கண்ணீருடன் அவரைப் பிடித்துவைக்க முயன்றுகொண்டிருந்தாள் மிதிலா. அவள் கைகளில் நகக் கீறல்கள். அதிலிருந்து இரத்தம் மெதுவாகக் கசிய ஆரம்பித்திருந்தது.
“என்னை விடு! நீ என்னைக் கொல்லப்போறாய். விடடி!” ஆக்ரோசம் மிக, மிதிலாவை உதறித் தள்ள அவர் போராடிக்கொண்டிருக்க, எதுவும் செய்யமுடியா கையறு நிலையில், காண்டீபனின் தந்தை சம்மந்தன் பரிதவித்திருந்தார்.
வேகமாகச் சென்று, அந்தப் பெண்மணியை எட்டிப் பற்றினான் காண்டீபன். “மாமி! இங்க பாருங்கோ! நான் காண்டீபன். இந்தா வந்திட்டன். எங்க போகப்போறீங்க?” என்றவனின் கனிந்த குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தார் அவர். அடுத்தக் கணமே, “தம்பி!” என்று கதறியபடி, அவன் மார்பிலேயே தன்னை மறைத்துக்கொண்டார். அவர் தேகம் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கியது.
“ஒண்டும் இல்ல மாமி. ஒண்டுமில்ல. என்னத்துக்குப் பயப்படுறீங்க. அதுதான் நான் இருக்கிறன் தானே.” மென் குரலில் அவரின் பயத்தைப் போக்க முயன்றவனின் ஒரு கை, அவர் தலையை வருடிக் கொடுத்தது. பார்வை அருகில் கண்ணீருடன் பரிதவித்து நின்ற மனைவி மீதினில். அவள் முதுகையும் தட்டிக் கொடுத்தவன் பார்வையால் அவளின் கைகளைக் காட்டிக் கவனி என்றான்.
ஆதினிக்கு அங்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றிருந்தாள்.
காண்டீபன் மெல்ல அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான். அவரைச் சமாதானம் செய்வதும், எதற்கோ பயந்து நடுங்குபவரைத் தேற்றுவதும் கேட்டது. அந்த அறைக்கு மிதிலா உணவு எடுத்துச் சென்றாள். சற்று நேரத்தில், வெறும் தட்டும் உணவு அள்ளிக்கொடுத்தக் கையுமாக வெளியே வந்தான், காண்டீபன்.
இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. விழிகள் விரிய பார்வையால் அவனையே பின்தொடர்ந்தாள்.
“அவாக்குக் கொஞ்சம் புத்தி சுவாதீனம்மா. சில நேரங்கள்ல இப்பிடித்தான். மற்றும்படி சாதாரணமாத்தான் இருப்பா.” அவளை உணர்ந்தோ என்னவோ சொன்னார் சம்மந்தன்.
ஆதினிக்கு வாய் திறக்கவே முடியவில்லை. அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது போலிருந்தது. அமைதியாகச் சம்மந்தனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
காண்டீபன் மீண்டும் அந்த அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் அவர் உறங்கிவிட்டார் போலும். மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு வந்தவனின் புருவங்கள் சுழித்திருந்தன. அவரோடு பட்டுவிட்ட சிரமங்களினால் உண்டான களைப்பு முகத்தில் அப்படியே தெரிந்தது. நாற்காலியில் அமர்ந்து, தலையைத் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.
எல்லோரிடமும் கனத்த மௌனம். ஆதினிக்கு அங்கிருப்பது சங்கடத்தைக் கொடுத்தது. “சேர், நான் வெளிக்கிடப்போறன்.” மெல்லிய குரலில் சொன்னாள்.
நிமிர்ந்து அவளைப் புரியாத பார்வை பார்த்தான் காண்டீபன். அதிலேயே, அவன் இங்கில்லை என்று புரிந்தது. தயக்கத்துடன் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, “வாறன் அங்கிள். வாறன் அக்கா.” என்றபடி எழுந்துகொண்டாள்.
ஒரு பெரிய மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தவன், “அவளுக்குச் சாப்பாடு குடுத்தியா?” என்று மிதிலாவிடம் வினவினான்.
“இல்ல சேர். எனக்குப் பசி இல்ல. அதைவிட, இனி நான் வெளிக்கிடோணும். அப்பா வந்திடுவார்.” அவளுக்கு உணவளிக்கும் சூழ்நிலையில் அந்த வீடு தற்சமயம் இல்லை என்பதை உணர்ந்து, மிதிலாவை முந்திக்கொண்டு பதில் சொன்னாள், ஆதினி.
தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான் காண்டீபன். உண்மையில் நேரமாகித்தான் இருந்தது. “சரி, இன்னொரு நாளைக்குச் சாப்பிட வா.” என்றுவிட்டு, அவளுடன் கூடவே வந்தான். ஹெல்மெட்டை மாட்டி, ஸ்கூட்டியில் அமர்ந்து, அதனைக் கிளப்பும் வரையிலும் தொடர்ந்த அவனது மௌனம், மீண்டும் அவனின் எண்ணங்கள் இங்கில்லை என்று சொல்லிற்று.
“வாறன் சேர்.” மெல்லிய முணுமுணுப்புடன் ஸ்கூட்டியை நகர்த்தினாள்.
அப்போதுதான், அவளைக் கூர்ந்து நோக்கினான் அவன். அவள் முகமே சரியில்லை. “டோய்! என்ன?” என்றான் தனக்கே உரித்தான சிரிப்புடன்.
ஆதினியின் முகம் தானாகவே மலர்ந்தது. இருந்தும், ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.
“பயந்திட்டியா?”
இல்லை என்று முதலில் ஆட்டியவள் பின் தயக்கத்துடன் ஆம் என்று தலையை அசைத்தாள்.
அவனிடத்தில் வருத்தம் மிகுந்த சின்ன முறுவல் ஒன்று உண்டாயிற்று.“அவா என்ர மாமி. மிதிலான்ர அம்மா. திடீர் எண்டு அவாவை அப்பிடிப் பாத்ததால பயந்திட்டாய் போல. எப்பவாவதுதான் இப்பிடி. மற்றும்படி அவாவும் எல்லாரோடையும் நல்லாக் கதைப்பா. நீ இதைப்பற்றி எல்லாம் யோசிக்காம நிம்மதியாப் போ. மனதை எதுலயும் அலைபாய விடக்கூடாது. படிக்கிறதுல மட்டும் கவனமா இரு.” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.
——————
இங்கு, ஆதினியின் மீதான கோபத்தையும் சுமந்தபடி, எல்லாளன் நேரே சென்றது மீண்டும் ஐங்கரன் டியூசன் செண்டருக்கு. அதன் நிர்வாகியை அவரின் அறையிலேயே சந்தித்தான்.
“சொல்லுங்க, இந்த ரெண்டு பெடியலைப் பற்றியும் உங்களுக்கு இதுக்கு முதல் தெரியுமா தெரியாதா?”
“இல்ல சேர், அது.. ரெண்டுதரம் கூப்பிட்டுக் கண்டிச்சு இருக்கிறன். அவங்கள் கேக்கவே இல்ல.” பயத்தில் வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
“கேக்கேல்லை எண்டதும் அப்பிடியே விட்டுட்டீங்க. பெற்றோரைக் கூப்பிட்டாவது கதைச்சீங்களா?”
“இல்ல சேர். அது..”
“என்னத்த அது எண்டு இழுக்கிறீங்க? முதல், ஒரு டியூஷன் சென்டரின்ர நிர்வாகியாப் பொறுப்போட கதைங்க! உங்கள நம்பித்தானே தாய் தகப்பன் பிள்ளைகளைப் படிக்க அனுப்பினம். அந்தப் பிள்ளைகள் பிழையான பாதைல போறது தெரிஞ்சதும் பெற்றோரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்க வேணும். எங்களுக்குத் தகவல் தந்திருக்க வேணும். டியூஷன் செண்டர விட்டு வெளில போட்டிருக்க வேணும். இது எதையும் செய்யாம, இன்னும் நாலு பிள்ளைகளுக்கும் சேத்து போதைய பழக்கிவிடுங்கடா எண்டு விட்டு வச்சீங்களா?”
குரலை உயர்த்தாமல், அழுத்தம் திருத்தமாக அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும், அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. “இல்ல சேர், பிறகு டியூஷன் செண்டரின்ர பெயர் கெட்டுப் போயிடும் எண்டு..” பேச்சு வராமல் தடுமாறினார்.
“ஓ..! அப்ப எத்தின பிள்ளைகள் நாசமா போனாலும் பரவாயில்ல. உங்கட டியூஷன் செண்டர் பெயர் கெட்டுப் போயிடக் கூடாது. ஆக, உங்களுக்குப் பிள்ளைகள் படிக்கவேணும், உருப்படவேணும் எண்டு விருப்பம் இல்ல. காசு பாக்க வேணும். அவ்வளவுதான் என்ன?”
“இல்ல சேர். அப்பிடி எண்டு இல்ல சேர். நாங்க வெளில போட, அந்தக் கோபத்தில எங்களுக்கோ, செண்டருக்கோ இல்ல இங்க படிக்கிற பிள்ளைகளுக்கோ ஏதாவது செய்துபோட்டாங்கள் எண்டா என்ன செய்றது? ஒரு மிஸ் வகுப்பை விட்டு வெளில போகச் சொன்னதுக்கு ரோட்டில வச்சு அசிங்கமா கதைச்சிருக்கிறாங்கள். அந்த மிஸ் படிப்பிக்கிறதையே விட்டுட்டா.”
“இவ்வளவு நடந்திருக்கு. அப்பவும் எங்களிட்ட வந்து சொல்லேல்ல நீங்க. முதல் உங்களத் தூக்கி உள்ள போடவேணும்!” என்றதும் நடுங்கிப்போனார் அவர்.
“ஐயோ சேர், அப்பிடி மட்டும் செய்து போடாதீங்கோ.”
“வேற என்ன செய்ய வேணும்?” என்று சீறினான் எல்லாளன். “பயமா இருந்தா ரகசியமா வந்து எங்களிட்ட சொல்லியிருக்க வேணும். உங்களுக்கான பாதுகாப்பை நாங்க தந்திருப்பம். ஒரு ஆசிரியை பாதிக்கப்பட்ட பிறகும் வாய மூடிக்கொண்டு இருந்திருக்கிறீங்க. உங்களை எல்லாம்..” அதன்பிறகு அவரின் பேச்சை அவன் கேட்கவில்லை. அங்கிருந்த மாணவர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டினான்.
“பிள்ளைகள், இது படிக்கிற வயது. தேவையில்லாத எண்ணங்களுக்கு, ஆசைகளுக்கு அடிமையாகி உங்கட வாழ்க்கையக் கெடுத்துக்கொள்ளாதீங்க. அப்பிடி ஏதும் நடந்தா, இப்ப கதைக்கிற மாதிரி பொறுமையாவோ நல்ல மாதிரியோ கதைக்கமாட்டன். உங்கள நான் கையாளுற முறையே வேற மாதிரி இருக்கும். அதே மாதிரி, உங்களோட படிக்கிற அல்லது உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்தா போன் பண்ணியோ மெசேஜ் போட்டோ எனக்குத் தெரிவிக்க வேணும். சத்தமே இல்லாம அதைச் செய்துபோட்டு நீங்க உங்க பாட்டுக்கு இருங்க. மிச்சத்தை நாங்க கவனிப்பம். சரியா?” என்றவன், அங்கிருந்த கரும்பலகையில் தன் கைபேசி இலக்கங்களை எழுதிவிட்டுப் புறப்பட்டான்.
காவல்நிலையத்துக்கு அவன் வந்தபோது இரு மாணவர்களினதும் குடும்பத்தினரும் வரவழைக்கப் பட்டிருந்தனர். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க மாட்டீர்களா என்று கேட்டு, இரு தரப்பினரையும் கடிகடி என்று கடித்துத் துப்பினான். வாயைத் திறக்கவே பயந்தபடி நின்றிருந்தனர் இரு குடும்பத்தினரும்.
“ரெண்டுபேரையும் முதல் கொஸ்பிட்டலுக்கு அனுப்பப் போறன். ரெண்டுபேரின்ர நிலைமையும் என்ன எண்டு டொக்டர் சொல்லுறதை வச்சுத்தான் வீட்டுக்கு விடுறதா இல்ல போதைப் பழக்கத்த மறக்க வைக்கிறதுக்கான ஏற்பாட்டைச் செய்றதா எண்டு தெரிய வரும். அதுக்கிடையில எங்கட விசாரணையையும் முடிக்க வேணும். அதுவரைக்கும் உங்கட பிள்ளைகள் எங்கட கட்டுப்பாட்டிலதான் இருப்பினம்.” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான்.


