அஜய் கொழும்புக்கு ஓடிவந்து நான்கு நாட்களாயிற்று. தரம் முற்றிலும் குறைந்த விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. எதிர்காலத்தின் நிலை என்ன என்கிற கேள்வி மருட்டியது. இரவுகளில் உறக்கம் இல்லை. பகல்களில் நிம்மதி இல்லை. ஒவ்வொரு நொடித்துளியும் என்னாகுமோ என்று நெஞ்சு நடுங்கிக்கொண்டே இருந்தது. அறைக்கு வெளியே காலடிச் சத்தங்கள் கேட்டாலே இவன் நெஞ்சு தடதடத்தது. ஒழுங்கான உறக்கமில்லை; உணவில்லை. இந்த நான்கு நாட்களையும் கடப்பதற்குள்ளேயே முழு நரகத்தை அனுபவித்திருந்தான்.
இப்போதெல்லாம், இப்படி வந்தது தவறோ, அங்கேயே இருந்து பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க வேண்டுமோ என்று யோசனை ஓடியது. அவன் தலைமறைவாகிவிட்டான் என்று நண்பர்களுக்குச் செய்தி போயிருக்கும்; ஊராருக்குத் தெரிந்திருக்கும். சாகித்தியன் அவனைப்பற்றி என்ன நினைப்பான்? இனி எப்படிப் பல்கலைக்கழகத்தில், அந்த ஊரில் தலை காட்டுவான்? முழு எதிர்காலமும் பாழாகிப் போயிற்றே.
விரலில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்துத்தான் இந்த ஹோட்டல் அறைக்கான செலவையும், இத்தனை நாட்களுக்கான உணவையும் பார்த்தான். இன்னும் சொற்பமே மிஞ்சிக் கிடந்தது. அது முடிந்த பிறகு? எங்கும் போவது என்றால் பஸ்சுக்குக் கூடப் பணமிருக்காது.
ஆக, அதற்குமுதல் ஏதாவது செய்தாக வேண்டும். வேறு வழியற்றுத் தந்தைக்கு அழைத்தான்.
“ஹலோ” அவரின் குரல் நலிந்து ஒலித்தது.
“அப்பா…” என்றவனுக்கு மேலே வார்த்தைகளே வரவில்லை. என்ன செய்து வைத்திருக்கிறான். அவருக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு? அடைத்த தொண்டையைச் செருமிக்கொண்டு, “எனக்கு.. அ..ங்க வரப் பயமா இருக்கு..” என்றான் திக்கித் திணறி.
அந்தப் பக்கத்தில் இருந்து சத்தமே இல்லை. அஜய்க்கு அழுகை வரும்போல் இருந்தது. “அப்பா..” என்றான் மீண்டும். “லைன்ல இருக்கிறீங்களா?”
“ம்.. ம்ம் இருக்கிறன். என்ன செய்யலாம் எண்டு யோசிச்சனான். நீ பேசாம அனுராதபுரத்தில இருக்கிற சித்தி வீட்டுக்கு வா.” ஒட்டாத குரலில் குரலில் சொன்னார் அவர்.
பெற்ற பாவத்துக்கு இதையும் செய்வோம் என்று நினைக்கிறாரோ? “போலீஸ் கண்டுபிடிக்காதா?” உள்ளே போன குரலில் வினவினான். பெற்ற தந்தையிடம் தன்னைக்குறித்து இப்படியெல்லாம் பேசும் நிலை எவ்வளவு மோசமானது?
“கொழும்பிலேயே நிண்டாத்தான் பிடிப்பாங்கள். நீ இங்க கொழும்புக்கு டிக்கட் வாங்கினது, அங்க ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில போனது எல்லாம் கவனிச்சு இருக்கினம். அதால, உன்ன கொழும்பில தான் தேடுவினம். நீ அனுராதபுரம் வாறதுதான் நல்லது. அங்க வந்ததும் சித்தின்ர நம்பர்ல இருந்து கதை. இனி உன்ர ஃபோன பாவிக்காத.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
ஏன் ஓடினாய், அப்படி என்ன செய்தாய் என்று கேட்காத அவரின் செய்கையில் இன்னுமே வெட்கினான் அஜய். அவருக்கும் சேர்த்து எவ்வளவு பெரிய அவப்பெயரை உண்டாக்கிவிட்டான். எப்படியாவது இதிலிருந்து வெளியே வரவேண்டும். எப்படி என்றுதான் புரியமாட்டேன் என்றது. ஆனால், இந்த நான்கு நாட்களும் கும்மிருட்டாகத் தெரிந்த வாழ்வில், தந்தையின் துணையும் இருக்கிறது என்கிற நம்பிக்கை சிறு தெம்பைத் தர, வேகமாகக் குளித்து, கொழும்பில் மாற்றுக்காக வாங்கிய உடையை அணிந்துகொண்டு, அனுராதபுரத்துக்குப் புறப்பட்டான்.
அங்குச் சென்று சேரும் வரைக்கும் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டே இருந்தது. அவனை வரவேற்ற சித்தியின் முகத்திலும் பதட்டம். அவனால் தங்களுக்கும் ஏதும் பிரச்சனை வந்துவிடும் என்று நினைக்கிறாரோ? யாராக இருந்தாலும் அப்படித்தானே நினைப்பார்கள். அதிலொன்றும் தவறில்லையே. முகக் கன்றலை மறைத்து அவரோடு பேசச் சிரமப்பட்டான். குளித்து, உடை மாற்றி, அவன் மாலை உணவை முடித்தபோது, யாரோ வீட்டின் கதவைத் தட்டினார்கள்.
விழுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தவனின் நெஞ்சு படபட என்று அடித்துக்கொண்டது. கதவைத் திறக்கப்போன சித்தியையே மிகுந்த பதட்டத்துடன் பார்த்திருந்தான். பொறியில் இரை வைத்துக் காத்திருந்த எல்லாளன், வீட்டின் உள்ளே நுழைந்தான். அலுங்காமல் குலுங்காமல் அவனை அப்படியே அள்ளிக்கொண்டான். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அஜய். அப்பாவுமா இவர்களுக்கு உடந்தை? அதிர்ந்து, திகைத்து, பயந்து, சிந்திக்கும் திறனை முற்றிலுமாக இழந்திருந்தான்.
யாழ்ப்பாணம் வந்தடைந்து, காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். ஆலைக்குள் சென்ற கரும்பு சக்கையாக வெளிவருவதுபோல், சில மணித்துளிகளில், உடல் முழுவதும் உயிர் வலியைத்தரும் காயங்களைச் சுமந்து, விசாரணை அறையில் எல்லாளனின் முன்னே அமரவைக்கப்பட்டான்.
நடந்தவற்றைப் பார்த்த சாட்சி யாருமில்லை. சாமந்தி எழுந்துவந்தால் கூடச் சொல்லப்போவது இல்லை. அவனாக வாயைத் திறக்காதவரைக்கும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்கிற குருட்டு நம்பிக்கையில், சும்மாதான் கொழும்புக்குப் போனேன் என்றுதான் ஆரம்பத்தில் சாதித்தான்.
ஆனால், ஆதினி அவனோடு மல்லுக்கட்டுவதையும், அவளுக்கு அவன் தழைந்து போவதையும் வைத்து, அவனைச் சாதாரணமாக எடை போட்டுவிட்டோம் என்று அதன்பிறகுதான் உணர்ந்தான். அந்தளவில் அவனைக் கவனித்திருந்தான் எல்லாளன்.
இப்போது, தன் முன்னே அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்க்கவே நடுங்கினான்.
“சொல்லு!” ஒற்றை வார்த்தையில் உயிர்க்கூட்டையே நடுங்க வைத்தான் எல்லாளன்.
அதற்குமேல் எதையும் மறைக்கும் தெம்பு அஜய்க்கு இல்லை. “எனக்கு அவளைப் பிடிக்கும் சேர். சொல்லப் பயம். படிக்கிற பிள்ளையைக் குழப்பக் கூடாது எண்டும் நினைச்சுத்தான் சொல்லேல்ல. எக்ஸாம் முடியட்டும் எண்டு நினைச்சிருந்தன். ஒருநாள்… ஒருநாள்..” என்றவனுக்கு மேலே சொல்லமுடியாமல் அழுகை வந்தது.