எதையும் அவன் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை. அதை, அன்று, அவனுமே எதிர்பார்க்கவில்லை. அதுவே, இன்றைக்கு எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது என்று துடித்தான்.
“ஒருநாள் சாகித்தியன தேடி அவேன்ர வீட்டை போனனான். பெல் அடிக்க வந்து திறந்தது சாமந்தி. பாக்கவே வித்தியாசமா இருந்தாள். என்னைப் பாத்துக் கோணலாச் சிரிச்சாள். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஒருநாளும் அவள் அப்பிடி இல்ல. என்னோட கதைச்சதே இல்ல. ஆனா, அண்டைக்கு, சாகித்தியன் எங்க எண்டு கேக்க, வா எண்டு கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு அவளின்ர அறைக்கக் கூட்டிக்கொண்டு போனவள் சேர். பிறகு.. பிறகு.. சத்தியமா நான் அத எதிர்பாக்கவும் இல்ல, பிளான் பண்ணவும் இல்ல. அவள்.. அவள்தான் சேர்.. அது.. பிழை நடந்திட்டுது சேர். அவள் சுயநினைவிலேயே இல்ல. பயத்தில அங்க இருந்து ஓடி வந்திட்டன் சேர்.” என்றவனுக்கு எல்லாளனின் முகம் பார்க்கவே வெட்கமாக இருந்தது.
அவள்தான் சுயநினைவில் இல்லை. ஆனால், அவன் நன்றாகத்தானே இருந்தான். தடுமாறாமல் திடமாக நின்று மறுத்திருக்க வேண்டும். அன்று சறுக்கியது, இன்று, ஒரு உயிரைக் குடித்து, அவன் வாழ்க்கையையும் இந்த நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கிறதே.
“இது அவளுக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரியேல்ல சேர். ஆனா, தெரியாது எண்டு நினைக்கிறன். ஒரு கிழமைக்குப் பிறகு சாகித்தியனோட அவேன்ர வீட்டை போனனான். அவளும் என்னைப் பாத்தவள். ஆனா ஒண்டும் கதைக்க இல்ல.”
“இது எப்ப நடந்தது?”
அவன் சொன்ன திகதி அவள் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முதலாக இருந்தது.
“போதைய அவளுக்கு நீயா பழக்கினது?”
பதறிப்போனான் அவன். “கடவுள் சத்தியமா இல்ல சேர். அவளோட நான் கதைச்சதே இல்ல சேர். அவளும் கதைக்க மாட்டாள். எனக்கு அவளைப் பிடிக்கும் சேர். நிறைய விருப்பம். இது அவளுக்கே தெரியாது. படிச்சு முடிக்கட்டும் சாகித்தியனோட கதைச்சுக் கட்டுவம் எண்டு நினைச்சிருந்தனான் சேர்..” என்றவன் அதற்குமேல் தாங்கமாட்டாதவனாகக் குழுங்கி குழுங்கி அழுதான். “இப்பிடிச் செய்வாள் எண்டு சத்தியமா நினைக்கவே இல்ல சேர். செத்தவீட்டில அவளை உயிர் இல்லாத உடம்பாப் பாக்கவே ஏலாம இருந்தது. அழுகை வந்தது. அதைப் போலீஸ் கவனிச்சிட்டினம். பிடிபட்டா போதையும் நான்தான் பழக்கினது எண்டு சொல்லிப்போடுவினமோ எண்டு பயந்துதான் ஓடி ஒளிஞ்சனான் சேர். நான் செய்தது பிழைதான். ஆனா, வேணுமெண்டு செய்யேல்ல சேர்.”
“நீ ஏன் அவள் வித்தியாசமா நடந்ததைச் சாகித்தியனுக்குச் சொல்லேல்ல?”
“அண்டைக்கு மட்டும் தான் அவளை அப்பிடிப் பாத்தனான். பிறகு வெளில எங்க பாத்தாலும் தெளிவாத்தான் இருந்தவள். அதைவிட, அவளுக்கு எல்லாம் போதைப் பழக்கம் இருக்கும் எண்டு நான் யோசிக்கவே இல்ல சேர். அவ்வளவு நல்ல பிள்ளை. கெட்டிக்காரி. அவள் அவள்..” என்றவனுக்கு மேலே வார்த்தைகள் வர மறுத்தது.
“இன்னும் ஏதாவது மறைக்கிறியா?” விழிகள் இரண்டும் கூர் ஈட்டியாக அவன் நெஞ்சைத் துளைக்க வினவினான் எல்லாளன்.
“இல்ல சேர். உண்மையா இல்ல சேர். இதைத்தவிர வேற எதுவும் நான் செய்யேல்ல சேர்.”
இதற்குள் கதிரவன் வந்து எல்லாளனின் காதுக்குள் என்னவோ சொன்னான். அஜய்யையும் அழைத்துக்கொண்டு விசாரணை அறையை விட்டு வெளியே வந்தான் எல்லாளன்.
அங்கே, சாகித்தியன், அஜயின் அம்மா, அப்பா மூவரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வெட்கிப்போனான் அஜய். எவ்வளவு கேவலம். எவ்வளவு பெரிய அவமானம். இனி எப்படி இவர்களின் முகங்களில் விழிப்பான்?
அதுவும் சாகித்தியன். தயக்கத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தான். தாடி வளர்த்து, தலைமுடி சீராக வெட்டப்படாமல், கண்ணெல்லாம் இருண்டு, ஒரு பைத்தியக்காரனைப்போல் இருந்தான். அவனைத் தனியாக நிறுத்திக் கதிரவன் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். நண்பனாகத் துணையாக இருக்கவேண்டியவனே, தங்கையின் வாழ்வைக் கெடுத்தான் என்று அறிந்தால் என்ன ஆவான்? அஜய்யின் இதயம் பயத்திலும் நடுக்கத்திலும் மீண்டும் தொண்டைக்குள் வந்து துடித்தது.
அவன் பயம் சரியே என்பதுபோல், கதிரவன் சொன்னவற்றைக் கேட்டவனின் முகம், தணலில் இட்ட இரும்புத்துண்டாக சிவந்து கொதிக்க, “நீயெல்லாம் மனுசனாடா? நம்பித்தானே நாயே வீட்டுக்க விட்டன். எப்பிடியடா என்ர தங்கச்சிய நாசமாக்க மனம் வந்தது..” என்று ஆவேசம் மிகுந்து அடிக்கப் பாய்ந்தன். விலக முயலவில்லை அஜய். கண்கள் கலங்கிக் கண்ணீராகக் கொட்ட கூனிப்போய் நின்றிருந்தான். அதற்குள், கதிரவன் பாய்ந்து அவனைப் பிடித்திருந்தான்.
“அமைதியா இருங்க சாகித்தியன்.”
“எப்பிடி சேர் அமைதியா இருக்க? அவனுக்கும் ஒரு தங்கச்சி இருக்கு. அவளை மாதிரித்தானே இவளும். நண்பன் எண்டு நம்பினதுக்கு என்ன வேல பாத்திருக்கிறான் எண்டு பாத்தீங்களா? என்ன சேர் இது? என்ர தங்கச்சி சேர். அவளைப்போய் அவளைப்போய்.. நீயெல்லாம்..” என்றவன் எதுவும் செய்ய முடியாமல் போன இயலாமையின் வெறியில், “த்தூ!” என்று அவன் முகத்திலேயே துப்பினான்.
அஜய்யின் அன்னை வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். அப்பா, விழிகளை இறுக்கி முடித்திறந்தார். இருவரும் அஜய் இருந்த புறம் திரும்பவே இல்ல.
எல்லாளனின் கண்ணசைவில், சாகித்தியனை விட்டுவிட்டு அஜய்யைச் சிறைக் கம்பிகளுக்குள் அடைத்தான் கதிரவன். அவனின் பெற்றவர்களிடம் விபரம் சொல்லி, கோர்ட்டில் அவனை ஒப்படைத்தபிறகு, கோர்ட்டின் தீர்ப்பைப் பொறுத்தே அனைத்தும் முடிவாகும் என்று தெரிவித்து அனுப்பிவைத்தான் எல்லாளன்.