வைத்தியசாலை நோக்கித் தன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான் எல்லாளன். சிந்தனை முழுக்க ஆதினி மீதிருந்தது. இதுநாள் வரையில், அவளிடம் தென்பட்ட கோபமெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. இப்போதைய அவளின் ஒதுக்கம், கோபம், விலகல் அனைத்தும் வேறு வகையானது. வலியப்போய்ப் பேசினாலும் ஒதுங்கி நிற்பவளை எப்படி வெளியே கொண்டுவருவது என்று தெரியவில்லை.
அங்கே, அகரன் வேறு இவள் அவனோடு பேசுவதில்லை என்பதில், சியாமளா மீதான கோபத்தை இன்னுமே பிடித்துவைத்துக்கொண்டிருந்தான். அதில், சியாமளா மிகவும் வாடிப்போயிருந்தாள். இவள் சரியாகினால் மாத்திரமே அனைத்தும் சீராகும் என்று இவளுடன் பேச முயன்றால், அசைந்து கொடுக்க மறுக்கிறாள்.
கொஞ்ச நாட்களுக்கு, அவளை, இப்படியே விடுவதுதான் இதற்கான சரியான மருந்து போலும் என்று எண்ணிக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே, அனுமதித்திருந்த இரண்டு மாணவர்களையும் சந்திக்கச் சென்றான். அன்று, அதிகமான போதையில் இருந்தவனை, மூன்று ஆண் செவிலியர்கள் தடுத்துப் பிடித்தபடி நின்றிருந்தனர். காரணம் விளங்காமல் அவர்களைக் கேள்வியாக ஏறிட்டான்.
“ஒரு இடத்தில இருக்கிறார் இல்ல சேர். ஓடப் பாக்கிறார்.” செவிலியர்களில் ஒருவர் சொன்னார்.
அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்தான் எல்லாளன். வைத்தியசாலையின் கட்டிலில் அமர்ந்திருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இடப்புறம் வலப்புறம் என்று முகத்தை மாற்றி மாற்றித் திருப்பிக்கொண்டு இருந்தான். கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. தேகம் முழுவதிலும் ஒரு நடுக்கம். கைவிரல்கள் ஒவ்வொன்றும் அதுபாட்டுக்குக் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. முகத்தில் அளவுக்கதிகமான பதட்டம். அவன் எந்தளவு தூரத்துக்குப் போதைக்கு அடிமையாகி இருக்கிறான் என்று எல்லாளனுக்கே அப்போதுதான் புரிந்தது.
திரும்பி அவனின் பெற்றோரைப் பார்த்தான். கண்ணீருடன் பெரும் துக்கத்தைச் சுமந்தபடி நின்றிருந்தனர். இப்போது அழுது என்ன பிரயோசனம்? அவனை நெருங்கி, “இவனுக்கு என்ன பெயர்?” என்றான் அருகில் நின்ற மற்றவனிடம்.
“அருள் சேர்.”
“அருள்!” சற்றுச் சத்தமாக அழைத்தான்.
அவனும் நிமிர்ந்து, இவனைக் கூர்ந்து பார்த்தான். யார் என்று இனம் கண்டு கொண்டதும் வேகமாக எழுந்து, “எனக்கு இப்ப மருந்து வேணும். ஊசியாவது இருக்கா? ஆர கேட்டாலும் நீங்க வந்தாத்தான் தருவம் எண்டு சொல்லினம். கொண்டு வந்தனீங்களா?” என்று படபடத்தான்.
“நீ முதல் அமைதியா இரு. உனக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?” என்றவனின் பேச்சைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. “எங்க மருந்து? எனக்கு இப்ப வேணும். இல்லையோ என்ன செய்வன் எண்டு தெரியாது. எங்க மருந்து?” என்று கத்தினான்.
இதற்குள், அந்த அறைக்குள் வைத்தியரும் வந்தார். அவரைக் கேள்வியாகப் பார்த்தான் எல்லாளன். அருளின் முன்னே எதுவும் சொல்லாமல், அறைக்கு வெளியே, எல்லாளனை அழைத்துச் சென்றார் அவர். “கிட்டத்தட்ட இருபத்திநான்கு மணித்தியாலமும் ஆள் போதைலயே இருந்திருக்கு எல்லாளன். அது இல்லாம இப்ப அவனுக்கு எதுவுமே செய்யேலாம இருக்கு. அவன் நிதானத்திலேயே இல்ல. இனியும் இப்பிடியே விட்டா ஆபத்தில தான் முடியும்.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, அறைக்குள் களேபரம். என்ன என்று இவர்கள் எட்டிப் பார்ப்பதற்குள், அங்கிருந்த செவிலியர்களை எல்லாம் தள்ளி விழுத்திவிட்டு ஓடிவந்தான் அருள்.
“இப்ப எனக்கு ஊசி ஏத்தப் போறீங்களா இல்லையா?” என்று கத்தியவன், வேகமாக எல்லாளனின் இடையில் இருந்த துப்பாக்கியினை உருவ முயன்றான்.
அடுத்த நொடியே, ஒரே மடக்கில் அவன் கைகள் இரண்டையும் மடக்கி, முதுகுப் புறமாகக் கொண்டுவந்த எல்லாளன், அவனை அப்படியே சுவரோடு சுவராகச் சாய்த்தான். “என்னடா? படங்களைப் பாத்து உண்மையான போலீசிட்டயும் துவக்க பிடுங்கலாம் எண்டு நினைச்சியா?” அடக்கப்பட்ட குரலில் உறுமினான்.
பதில் சொல்லும் நிலையில் அருள் இல்லை. “ஐயோ அம்மா! நோகுது(வலிக்குது)” வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் முனகினன். அந்தளவில் அவனை மடக்கியிருந்தான் எல்லாளன்.
“நீ ஒழுங்கா இருந்திருந்தா இது நடந்திருக்காது. இனியாவது போய் இரு. இல்லையோ, ஓடுறதுக்குக் காலே இல்லாம முறிச்சு அனுப்புவன்! போதையப் பழகினது காணாது எண்டு துவக்கத் தூக்கிறியா நீ?” என்றவனின் வார்த்தைகளில் தென்பட்ட அதீத கோபத்தில் பயந்து, கண்ணீர் விட்டு அழுதான் அருள். “எனக்கு வேணும் சேர். அது இல்லாம இருக்கேலாது. தொண்ட வரளுது. வயிறெல்லாம் எரியுது சேர்.” என்று கெஞ்சினான்.
“அதுக்கு முதல் நீ அமைதியா இருக்கவேணும்!” என்றான் அப்போதும் கடுமையான குரலில்.
“இருந்தாத் தருவீங்களா?”
“நீ முதல் போ உள்ளுக்கு!”
செவிலியர்கள் வந்து அவனை அழைத்துச் சென்றனர். திரும்பி அவனின் பெற்றோரைப் பார்த்தான் எல்லாளன். “என்னமாதிரி? இப்பிடியே வச்சிருந்து இன்னுமே கெடுக்கப் போறீங்களா? இல்ல..” அவனுக்கு அருளை விடவும் அவர்கள் மீதுதான் மிகுந்த சினம் உண்டாயிற்று. பிள்ளைகளுக்காக ஓடுகிறோம் உழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அந்தப் பிள்ளைகளையே இப்படித் தொலைத்துவிட்டு நிற்கும் இவர்களைப்போன்ற பெற்றோரை என்ன செய்வது?
“ஏதாவது செய்து என்ர பிள்ளையை மாத்தித் தாங்க சேர். ரெண்டுபேரும் வேலைக்குப் போற ஆக்கள். ஒரேயொரு பிள்ளை. நாங்க என்ன சொன்னாலும் கேக்கிறதும் இல்ல. பிரெண்ட்ஸோட வெளில போறான் எண்டு நினைச்சு விட்டம். இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு நினைக்கவே இல்ல.” என்று அழுதார் அன்னை.
“இப்ப அழுது என்னம்மா பிரயோசனம்? இந்தக் காலத்தில ஆர்தான் வேலைக்குப் போகேல்ல. எண்டாலும் பிள்ளைகள் ஆரோட பழகீனம், என்ன செய்யினம் எண்டு கவனிக்கிறது இல்லையா? வித்தியாசமான மணம் கூடவா உங்களுக்குக் காட்டித் தரேல்ல.” என்றவனுக்கு என்ன பதிலைச் சொல்லுவார்கள்? எந்த நேரம் பார்த்தாலும் சுவிங்கத்தை மென்றவன் இப்படி என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே.
“மட்டக்களப்பில இப்பிடி போதைக்கு அடிமையான ஆட்களுக்கு எண்டு ஒரு புனர்வாழ்வு நிலையம் இருக்கு. அங்க அனுப்பவா? கொஞ்சக் காலத்துக்குப் பிரிஞ்சு இருக்க வேணும். ஆனா, திருந்தி வருவான். உங்களுக்குச் சம்மதமா?”
“என்ன எண்டாலும் செய்ங்கோ சேர். எங்கட மகன் எங்கட மகனா திருந்தி வந்தாக் காணும்.”


