பல்கலைக்கழக வகுப்பில் அமர்ந்திருந்தாலும், அஜய் என்கிற கவனக்கலைப்பான் ஆதினியின் சிந்தை முழுக்க நிறைந்திருந்து, வகுப்பில் கவனம் செலுத்தமுடியாமல் செய்துகொண்டிருந்தான். நல்லவேளையாக, அடுத்தப் பாடவேளைக்கு எந்த வகுப்பும் இல்லை. எப்போதும், தன் கூட்டத்தினரோடு சேர்ந்து காண்டீனுக்குள் கும்மாளம் அடிக்கிறவள், இன்றைக்குத் தனியாக வந்து ஒரு மரத்தின் கீழிருந்த வாங்கிலில் அமர்ந்துகொண்டாள். அதுநாள் வரையிலான ஆதினியின் உலகம் என்பது சீராகப் பராமரிக்கப்பட்ட பூங்கா போன்றது. வண்ணமயமானது. இப்போதோ, திடீரென்று புயலடித்ததைப் போன்று சின்னாபின்னமாகிக் கிடந்தது.
யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று ஒன்றுமே விளங்கவில்லை. கிட்டத்தட்ட பதின்மூன்று பதின்நான்கு வயதிலிருந்து அவளுக்கு அஜய்யைத் தெரியும். அப்படியானவன் பொய்த்துப் போனானே. அவளை விடவும் சின்னப் பெண்ணிடம் போய்..
“என்ன பலமான யோசனை?” அவளின் சிந்தனைக்குள் ஊடு புகுந்தது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தாள். காண்டீபன் நின்றிருந்தான்.
நீண்ட நெடிய வருடங்களாகத் தெரிந்தவர்களே தமக்குள் இன்னொரு முகத்தை மறைத்து வைத்திருக்கையில், திடீரென்று அறிமுகமான இவனை, எந்தளவு தூரத்துக்கு நம்புவது? குழப்பமும் கேள்வியுமாக அவனையே நோக்கினாள்.
“என்ன?” அவள் விழிகளில் தொக்கி நின்ற வினாவினைப் படித்துவிட்டு, மென்முறுவலுடன் வினவினான் காண்டீபன்.
“நீங்க நல்லவரா கெட்டவரா?” எந்த முலாமும் பூசப்படாத அவளின் நேரடிக் கேள்வியில் ஒருகணம் திகைத்துவிட்டுச் சிரித்தான் அவன். திடீரெண்டு ஏன் இந்தச் சந்தேகம்?” அவளருகில் அமர்ந்துகொண்டு அவனொரு வினாவினைத் தொடுத்தான்.
அவள் முகம் வாடிப்போனது. “கனகாலமா நண்பன் எண்டு பழகினவன் முழுக் கெட்டவனா இருக்கிறான். என்னை மாதிரி இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடி இருக்கிறான். அதுதான், ஆர நம்புறது ஆர நம்பக்கூடாது எண்டு தெரியுதே இல்ல.” என்றவள், “உங்கள நான் நம்பலாமா?” என்று, அதையும் அவனிடமே கேட்டாள்.
அதுவரை நேரமும், அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போயிற்று. நீயும் உனக்குள் பலமுகங்களை வைத்திருக்கிறாயா என்று கேட்கிறாள். முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தான். சற்று நேரம் அமைதியிலேயே கழிந்தது.
“தயவுசெய்து நீங்களும் கெட்டவனா இருந்திடாதீங்க அண்ணா. எனக்கு இப்ப எல்லாம் ஆரோட கதைக்கவும் பயமா இருக்கு.” என்றாள் கலங்கிப்போய்.
வேகமாகத் திரும்பி அவள் முகம் பார்த்தான் காண்டீபன். எப்போதும் அவளின் தலையைக் கலைத்துவிடுகிறவன், இன்று, அவளின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான். அதில், கலங்காதே என்கிற செய்தி இருந்தது. ஆதினியின் மனம் தானாக அமைதியடைந்தது.
“இந்த நல்லவன் கெட்டவன எத வச்சுத் தீர்மானிக்கிறது?” இப்போதும், அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இன்னொரு வினாவினைத் தொடுத்தான் அவன்.
இந்தளவுக்கெல்லாம் அவள் எங்கே யோசித்தாள். பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.
“எல்லாருக்கும் நல்லவனா இருக்கிற வரம் எல்லாருக்கும் கிடைக்கிறேல்ல ஆதினி. எனக்கும் கிடைக்கேல்ல.” அதைச் சொல்லும்போது அவன் குரலில் என்ன இருந்தது? அதைக் கண்டுபிடிக்கவும் அவளுக்குத் தெரியவில்லை. விழிகளில் பெரும் குழப்பம்.
அவன் மனம் கனிந்து போயிற்று. இந்த உலகத்தின் கொடூர முகம் அறியாதவள். அவள் கடந்துவந்த பாதையில் சூறாவளியோ சுழற்றி அடிக்கும் காற்றோ வீசியதே இல்லை. கூடப்பிறந்த தமையன் முதன்முறையாகக் கையை நீட்டியதற்கும், நெருங்கிப் பழகியவர்கள் விட்ட நான்கு வார்த்தைகளிலும் மனமுடைந்து, வெறுப்பின் விளிம்பில் ஓடிப்போய் நிற்கிறவளுக்கு, அவன் சொல்வதில் இருக்கும் உள்ளர்த்தம் விளங்கப் போவது இல்லை.
ஆதூரத்துடன் மீண்டும் அவளின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு, “நிறைய யோசிக்காத. உனக்கு நான் எண்டைக்கும் நல்லவன் தான், சரியா? சரி சொல்லு, என்னவாம் உன்ர எல்லாளன்?” என்று பேச்சை மாற்றினான்.
கண்களில் முறைப்புடன், “அவர் ஒண்டும் என்ர எல்லாளன் இல்ல.” என்று அழுத்திச் சொன்னாள் ஆதினி.
“இத அவனிட்டச் சொல்லி இருக்கிறியா?” என்றதும் சட்டென்று அமைதியானாள்.
“சொல்லி இருக்கிறாய் போல இருக்கே.” கண்ணில் இளநகை துலங்கக் கேலியாகக் கேட்டவனைக் குத்தவேண்டும் போலிருந்தது. அவளைக் கோபத்தின் உச்சிக்கு ஏற்றிவிட அவனிற்கு வார்த்தைகளே தேவையில்லை. உதட்டோரம் நெளியும் அந்தச் சிரிப்பும் கேலிபேசிச் சீண்டும் கண்களுமே போதும்.
“எனக்கு வாற கோபத்துக்கு..” என்று அவனைப் பார்த்துப் பற்களைக் கடித்தவள், “ஏன் எனக்கென்ன பயமா? எப்பவோ சொல்லிட்டன்.” என்றாள் தலையைச் சிலுப்பிக்கொண்டு.
“ஓ…! அதுக்கு அவன் என்ன சொன்னவன்.”
அந்தக் கேள்வியில், ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கே தைரியமா என்ர கன்னத்தில கிஸ் பண்ணேலும் எண்டா, ஆம்பிள நான் என்னவும் செய்வன். விளங்கினதா? செய்ய வச்சிடாத!’ என்ற அவன் வார்த்தைகள், கைபேசியில் வந்து விழும் குறுந்தகவலைப்போல் அவளின் முன்னே வந்து விழுந்தது. உதட்டைப் பற்றியபடி வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள், ஆதினி.
அவன் உதட்டினில் இளநகை நன்றாகவே மலர்ந்தது. “என்னவோ வில்லங்கமாச் சொல்லியிருக்கிறான் போலயே.” என்று சீண்டினன்.
“சேர், நீங்க ஒரு வாத்தி. எழும்பிப்போய்ப் பாடம் எடுக்கிற வேலையப் பாருங்க. போங்க.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத திணறலில் பொய்யாக அதட்டினாள் ஆதினி.
சூடாகிச் சிவந்திருந்த அவள் முகத்தைக் கண்டு கண்களில் நீர் வர வாய்விட்டுச் சிரித்தான் காண்டீபன். “சேர்ர்ர்ர்ர்ர்….” என்று அவள் கண்களை உருட்ட, “சரிசரி விடு! உன்ர ரகசியம் உன்னட்டையே இருக்கட்டும். இப்பச் சொல்லு, என்ன நடந்தது?” என்று அஜய்யைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
அவளின் மனம் ஏன் குழம்பிப்போய் இருக்கிறது என்று அப்போதுதான் விளங்கிற்று. அதில், “அவனைப்பற்றி நிறைய யோசிக்காத. அவன் மட்டுமே இந்த உலகம் இல்ல. நிறைய நல்ல மனுசர் எங்களைச் சுத்தி இன்னும் இருக்கினம். என்ன, எப்பவும் கொஞ்சம் கவனமாவும் விழிப்பாவும் இரு, போதும்.” என்றான் அவன்.


