அன்றைய நாள், அகரன், சியாமளா திருமணத்தைக் கொண்டாடுவதற்காகப் புலர்ந்திருந்தது. இளந்திரையன் பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. அவரோடு சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள், நெருக்கமான சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நெருங்கியவர்களுக்கும் முக்கியமானவர்களுக்கும் மாத்திரமே சொல்லியிருந்தார். கூடவே, அகரனின் நண்பர்கள், எல்லாளனின் நண்பர்கள் குடும்பங்களாக வருகை தந்திருந்தனர். அனைவரும் முக்கியப் புள்ளிகள் என்பதில், அந்த மண்டபம் முழுவதும் வர்ண உடைகளைக் காட்டிலும் காவலுக்கு நின்ற காக்கிகளின் நடமாட்டடமே அதிகமாக இருந்தது.
அவர்கள் அனைவருக்கும் ஆதினியைத் தெரிந்திருந்தது. கூப்பிட்டு, அருகிருத்தி, ஆசையோடு பேசினர். அதுவும், மணப்பெண்ணுக்கே சவால் விட்டபடி, கண்ணை நிறைக்கும் அழகுடன் மயில் நீலப் பட்டில் தோகைவிரித்து நின்றவள், திருமணமாகா வாலிப நெஞ்சங்களை உசுப்பிக் கொண்டிருந்தாள்.
அப்படி, எல்லோராலும் கொண்டாடப்படும் அவளைப் பார்த்த சியாமளாவுக்கு, ‘இந்த வீட்டின்ர இளவரசி நான். நீதிபதி இளந்திரையன்ர மகள்!’ என்று, அன்றொருநாள் அவள் சொன்னது பின்னிசையாக ஓடிற்று. அகரனின் முகத்திருப்பலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவளாகவே எடுத்து, அன்று பேசியவற்றுக்காக மன்னிப்புக் கேட்டும் இறங்கி வரவேயில்லை. எல்லாளனுக்கும் அவளுக்கும் நிறுத்தப்பட்ட நிச்சயம் நிறுத்தப்பட்டதாகவே மாறிப்போனதில் மிகுந்த வருத்தமாக இப்போதும் உணர்ந்தாள்.
நெடு நேரமாக ஆதினியையே பார்வையால் பின்தொடர்ந்த ஒரு பெண்மணி, அவளைத் தன் வீட்டுக்கு மருமகளாக்கிவிடும் விருப்புடன் இளந்திரையனை விசாரிக்கவும் செய்தார். அவரின் கணவர் மிகப் பிரபல்யமான வழக்கறிஞர். இளந்திரையனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நேரடியாக மறுக்க முடியவில்லை. கூடவே, மகளின் முடிவு மாறாமலேயே இருந்தால் அவர்களின் மகனும் நல்ல தேர்வுதான் என்பதில், “படிக்கிற பிள்ளைக்கு இப்ப என்னம்மா அவசரம்? முதல் படிப்பை முடிக்கட்டும்.” என்று எந்த நம்பிக்கையையும் கொடுக்க மறுத்தவரின் பார்வை, எல்லாளனின் மீது படிந்தது. அதேநேரம், அவனும் அவரைப் பார்த்துவிட, “என்ன அங்கிள்?” என்றபடி விரைந்து வந்தான்.
சும்மாவே களையும் கம்பீரமும் உடற்கட்டும் நிறைந்தவன் எல்லாளன். அவன் பார்க்கும் உத்தியோகம் அதை எப்போதுமே இரட்டிப்பாய்க் காட்டும். இன்று, பட்டு வேட்டி சட்டையில் நின்று இன்னுமே, இளந்திரையனின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தான். அதைவிட, தன் ஒற்றைப் பார்வைக்கு விரைந்து வந்து, என்ன என்று வினவியனின் செயலில் உதட்டினில் சிரிப்பு மலர்ந்துவிட, “ஒண்டும் இல்ல. ஆதிய பெண் கேக்கினம். படிச்சு முடிக்கட்டும் எண்டு சொன்னனான்.” என்றார் அவர்.
“ஓ..!” என்றவனுக்கு அவர் தன்னைப் பார்த்துச் சிரிப்பது புரியாமல் இல்லை. படித்து முடித்தால் தூக்கிக் கொடுத்துவிடுவாரா? சுறுசுறு என்று ஒரு கோபம் முளைக்க, தன்னிச்சையாக அவன் கண்கள் ஆதினியைத் தேடிற்று. அங்கே, தோழிகளுடன் சேர்ந்து எதற்கோ அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். எல்லாம் இவளால். தன் மனதில் மூண்டுவிட்ட கோபப் பொறியை மறைத்தபடி, “நல்ல குடும்பம், நல்ல பெடியன் எண்டா செய்றதுதானே.” என்றவனின் கண்களில் ஒருவித சவால்.
கொடுத்துவிடுவீர்களோ என்று கேட்கிறானா? எப்போதும் பணிவுடன் நிற்கிறவன் இன்று, சத்தமே இல்லாமல் தன்னுடன் மோதுவதைக் கண்டு, அவரின் சிரிப்புப் பெரிதாயிற்று. “பிறகென்ன? எல்லாளனே சொல்லிட்டான். உங்கட மகனும் அருமையான பிள்ளை தானே. பிள்ளை படிப்பை முடிக்கட்டும். அவாக்குப் பிடிச்சா எனக்கு எந்த மறுப்பும் இல்ல.” என்று, அந்தப் பெண்மணியிடம் சொன்னார் அவர்.
“சந்தோசம் அண்ணா. இதைவிட வேற என்ன வேணும், சொல்லுங்க?” என்று, அவர் தன் மகன் புராணத்தை ஆரம்பித்திருந்தார். அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் அகன்றுகொண்ட எல்லாளனுக்குக் கண்மண் தெரியாத கோபம் தான் வந்தது.
அவரின் மகனும் ஒரு வழக்கறிஞன். திறமைசாலிதான். நல்ல குண நலன்களோடு நன்றாகச் சம்பாதிப்பவனும் கூட. என்றாலும்.. மனம் புகைந்தது. இளம் வயதில் உண்டான ஈர்ப்பும் பொய்யாகி, நிச்சயம் வரைக்கும் வந்த திருமணமும் ஒன்றுமில்லாமல் போய் என்று, அவன் வாழ்வில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
போதுமான வருமானம், நிறைவான வாழ்க்கை என்று அவர்களுடையது அமைதியான குடும்பம். அவன் தனியார் நிறுவன வகுப்புக்குப் போயிருந்த ஒருநாளில் தான், அவர்களின் குடும்பமே சின்னாபின்னமாயிற்று. கத்திக் குத்துகளால் கோரமாக இறந்து கிடந்த பெற்றோர், புத்தி பிசகிவிட்டவள் போன்று திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்த தங்கை என்று அவன் கண்ட காட்சி என்றைக்குமே மறக்காது. அதிலிருந்து, தன்னையும் மீட்டுத் தங்கையையும் மீட்பதற்காக அவன் பட்டவைகள் ஏராளம். வழக்கு, விசாரணை என்று இன்னொரு பக்கம் நடந்தவை எல்லாம் அவர்களின் வயதை மீறியவை. அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருந்தால் நடந்தவை மறக்காது என்று, அதை விற்றுப் பணமாக்கிக்கொண்டு ஊரை விட்டே வந்திருந்தான். அதன் பிறகான நாட்களில், தன்னை ஈர்த்தவளின் நினைவே அவனுக்கு இருந்ததில்லை. அவர்கள் இருவரும் ஒரு நிலைக்கு வந்தபோது வருடங்கள் பல ஓடிப்போயிருந்தது. அதன்பிறகு, அவளைத் தேடுவோமா என்று நினைத்தாலும் தேடியதில்லை. அவளோடு சேர்த்தே, இப்போது எப்படி இருப்பாள், என்ன செய்கிறாள், திருமணமாகி இருக்குமா, என்னை நினைவிருக்குமா, முதலில் அவளுக்கும் என்னைப் பிடிக்குமா என்று, நிறையக் கேள்விகளும் குழப்பங்களும் சூழ்ந்துவிடும். அப்படியே விட்டுவிடுவான்.
அப்படி அவள்தான் கைநழுவிப் போய்விட்டாள் என்றால் இவளுமா?
மேடையில் இருந்த சியாமளா, ஏதோ சரியில்லை என்று அவன் முகத்தை வைத்தே கண்டுகொண்டாள். விடாமல் அவனையே பார்க்க அவனும் அவளைப் பார்த்தான். என்ன என்று கண்ணால் கேட்டவளின் கேள்விக்கு ஒன்றுமில்லை என்று மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டுப் புன்னகைத்தான். மனதின் சஞ்சலங்களை மீறி அவளும், அவளின் மணப்பெண் அலங்காரமும் நெஞ்சை நிறைத்தது. அவளுக்குப் பிடித்தவனையே மணமகனாக்கிவிட்டானே. மனம் நிறைந்து போயிற்று. அதுவும் அவன் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். இப்போது, அவள் முகத்திலும் மலர்ந்த முறுவல்.