ஆதினிக்கு அவசரமாகத் தனிமை வேண்டியிருந்தது. அந்தளவில், அவள் முகம் சிவந்து தணலெனக் கொதித்துக்கொண்டு இருந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி? தங்கைக்காக அவளை மணக்கச் சம்மதித்தான் என்பதே பெரும் அவமானம். இப்போதோ, சொல்லிவிட்ட சம்மதத்துக்காக மணந்தே தீருவேன் என்கிறான். இதில், அவள் கொடுத்த முத்தமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இது அதைவிடக் கேவலம் இல்லையா?
மனம் கொதித்தது. அந்தளவுக்கு அவள் குறைந்து போனாளா என்ன? யார் முகமும் பார்க்கப் பிடிக்காமல், மண்டபத்தை விட்டு வெளியேறுவதைக் குறியாகக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தவள் யாருடனோ மோதிக்கொண்டாள். “சொறி!” எதிரில் நிற்பது யார் என்று கவனிக்காமலேயே சொல்லிவிட்டு நடந்தாள்.
ஆனால், அவள் மோதிய கதிரவனுக்கு மிகுந்த அதிர்ச்சி. அசையக்கூட மறந்தவனாக நின்று, தன்னைக் கடந்து போகிறவளையே பார்த்துக்கொண்டு நின்றான். கடுத்த முகத்துடன் வேகமாக வந்தவளை முதலே கண்டுவிட்டான். இடித்துக்கொள்ளப் போகிறோம் என்று ஊகித்து ஒதுங்கித்தான் நின்றான். இரு பக்கமும் நாற்காலிகள் போட்டிருக்க, அதில் ஆட்களும் இருந்ததில், ஒரு பக்கமாகத் திரும்பி நின்று அவளுக்கு வழிவிட்டும் மோதியிருந்தாள். தவறு அவள் மீதுதான். ஆனால், அவளின் நீதிமன்றத்தில் அவள் யாரைக் கை நீட்டுகிறாளோ அவன்தானே குற்றவாளி. இத்தனை பேருக்கு மத்தியில், என்ன பேச்செல்லாம் பேசப்போகிறாளோ என்று அவன் பதற, அவளோ மன்னிப்பை வேண்டிவிட்டுப் போகிறாள்.
“என்ன கதிரவன்?”
“அது ஆதினி மேம் தானே?” போனவளின் புறமாகக் கையைக் காட்டிக் கேட்டான் அவன்.
எல்லாளன் முறைத்தான்.
“சொறி சொல்லிப்போட்டுப் போறா சேர்.” இப்போதும், அந்த அதிர்ச்சி நீங்காமல் சொன்னான் அவன். எல்லாளனுக்குக் கோபம் போய்ச் சிரிப்பு வரும் போலாயிற்று. எந்தளவுக்கு மிரட்டியிருந்தால் இந்தளவிற்கு மிரண்டு நிற்பான். “போய்ப் பாக்கிற வேலையப் பாருங்க கதிரவன்!” என்று அவனை அனுப்பிவிட்டு, அவளைத் தேடிச் சென்றான்.
கோபத்தில் முகம் சிவந்திருக்க, கைகளைக் கட்டிக்கொண்டு, எங்கோ வெறித்தபடி நின்றிருந்தாள், ஆதினி.
“இங்க என்ன செய்றாய்?”
‘நிம்மதியாக இருக்க விடவே மாட்டானா?’ நொடியில் சினம் உச்சிக்கு ஏற, விருட்டென்று நடக்க ஆரம்பித்தாள்.
“கதைக்காமப் போனியோ கையப் பிடிச்சு நிப்பாட்டுவன்.”
அவ்வளவுதான். கொதித்துவிட்டாள் ஆதினி. போன வேகத்திலேயே திரும்பி வந்து, “என்னடா சேட்டை விடுறியா? இல்ல, எல்லாத்துக்கும் அமைதியாப் போவன் எண்டு நினைச்சியா?” என்று சீறினாள்.
“மரியாதையாக் கதை ஆதினி!” முகம் இறுக எச்சரித்தான் எல்லாளன்.
“கதைக்கேலாது! என்ன செய்வாய்? உன்னால என்ன செய்யேலும்?”
அவன் முறைத்தான். எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியம் தானே இப்படிப் பேச வைப்பது.
“எனக்கு உன்னோட கதைக்க விருப்பம் இல்ல. நீ வேணாம் எனக்கு. இத நான் உனக்கு எத்தினையோ முறை சொல்லியாச்சு. அத விளங்கி நட. அதை விட்டுப்போட்டுச் சேட்டை விட்டா இதுதான் நடக்கும். நடந்து கொண்டிருக்கிற இந்தக் கலியாணத்திலையோ இல்ல, அவேன்ர வாழ்க்கையிலையோ என்னால எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது எண்டு நினைக்கிறன். உங்க எல்லாரிட்டை இருந்தும் ஒதுங்கி இருக்கத்தான் ஆசைப்படுறன். அதாலதான் மேடைல வச்சு ஒண்டும் செய்யாம விட்டனான். ஆனா, அந்தத் தைரியத்தில இன்னும் விளையாட்டுக் காட்டினியோ பழைய ஆதினிய இல்ல அதைவிட மோசமான ஆதினியப் பாப்பாய்.” என்றுவிட்டு நடந்தவளின் கையை, எட்டிப் பற்றி நிறுத்தி, “நீ என்னை வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்ன அத்தனை முறையும் நானும் சொல்லிட்டன், நீதான் எனக்கு நான்தான் உனக்கு எண்டு. அது விளங்க இல்லையா உனக்கு?” என்று அவனும் சீறினான்.
ஆதினிக்கு இன்னுமே முகம் சிவந்தது. அவனையும் அவன் கையையும் ஒரு பார்வை பார்த்தாள்.
“கையப் பிடிக்கிறதால நீ ஒண்டும் குறஞ்செல்லாம் போகமாட்டாய். நான் சொன்னது விளங்குதா இல்லையா?” என்று மீண்டும் அதட்டினான்.
தன் கையை இழுத்துக்கொண்டு, “உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” என்று, முதல் இருந்த கோபத்தின் சாயல் மருந்துக்கும் இல்லாத நிதானமான குரலில், அவனை நேராகப் பார்த்து வினவினாள், ஆதினி.
அவன் புருவங்கள் சுருங்கிற்று. பதில் சொல்லவில்லை. அவள் உதட்டோரம் மெல்லிய ஏளனச் சிரிப்பு. “உங்கட மனதில நான் இருக்கிறனா எல்லாளன்?” முடிந்தால் பதில் சொல்லிப்பார் என்று சவால் விட்ட அந்த விழிகளையே சற்று நேரம் பார்த்தான் அவன். அவள் எங்கு அடிக்க முயல்கிறாள் என்று புரிந்தது. அவன் உதட்டினிலும் சின்னச் சிரிப்பு. அந்த நிமிடம், அவளை அவனுக்கு மிகவும் பிடித்தது.
“நானும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க இல்ல. எனக்கும் உனக்கும் நடக்க இருந்தது பேச்சுக் கலியாணம். ஒரு பேச்சுக் கலியாணத்தில, இந்தக் குடும்பம் எனக்கு ஒத்துவருமா, இவள் எனக்குப் பொருந்தி வருவாளா எண்டு யோசிச்சு முடிவு சொல்லுறது எல்லாம் வழக்கமா நடக்கிறதுதான். எனக்குச் சொந்தம் எண்டு இருக்கிறது சியாமளா மட்டும் தான். அதால, அவளைப் பற்றியும் கொஞ்சம் கூடுதலா யோசிச்சுத்தான் ஓகே எண்டு சொன்னனான். அதுல காதலைத் தேடினா அது உன்ர பிழை. இப்ப உன்ர முதல் கேள்விக்குப் பதில் சொல்லுறன். உன்னை ஏன் எனக்குப் பிடிக்காமப் போகவேணும்? தொட்டத்துக்கும் கோவப்படுறது, சொல்லுறதைக் கேக்காம இருக்கிறது, நீ நினைச்சதுதான் நடக்கோணும் எண்டு நினைக்கிற உன்ர குணங்கள் எனக்குப் பிடிக்காதுதான். வடிவா விளங்கிக்கொள்ளு, உன்ர இந்தக் குணங்கள் தான் எனக்குப் பிடிக்காது, உன்னை இல்ல. ரெண்டாவது கேள்வி, என்ர மனதில நீ இருக்கிறியா எண்டா நிச்சயமா இருக்கிறாய். இல்லாமையா, நீ இவ்வளவு கேவலப்படுத்தியும் உனக்குப் பின்னாலயே வாறன். உன்ர அண்ணா, அப்பா ரெண்டுபேருமே இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொல்லிட்டினம். நீயும் இப்ப வரைக்கும் அதைத்தான் சொல்லுறாய். என்னால ஈஸியா இதுல இருந்து விலகிப் போகேலும். ஆனாலும், விடாம நீதான் வேணும் எண்டு ஏன் நிக்கிறன் எண்டு யோசி. நீதான் என்ர வாழ்க்கை, நீயில்லாத ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் எண்டு நினைக்கிற ஸ்டேஜுக்கு நான் இன்னும் வரேல்லத்தான். அதுக்கு அவசரமும் இல்ல. உனக்கு நான் சொல்லுறதும், உனக்கெண்டு நான் இருக்கிறன் எண்டுற நினைப்போட படிப்பை முடி எண்டுதான். விளங்குதா?” என்றான் அதட்டல் குரலில்.