“அப்பிடியெல்லாம் என்னால நினைக்கேலாது. எனக்குக் காதலிக்கோணும். காதலிச்சுத்தான் எவனையாவது கட்டுவன்.” என்று அறிவித்தாள் அவள்.
“அப்ப என்னைக் காதலியடி!” சின்னச் சிரிப்புடன் சொன்னான் அவன்.
“நான் காதலிக்கிற ரேஞ்சில எல்லாம் நீங்க இல்ல!” மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உதட்டை வளைத்தபடி சொன்னாள் அவள்.
அந்த முத்தத்தை என்ன நினைப்பில் தந்தாயாம் என்று கேட்க நினைத்தாலும் அவன் கேட்கவில்லை. இன்றைய நிலையில், அதையெண்ணி அவளே தனக்குள் குன்றுவாளாக இருக்கும். அதைவிட, தனக்கானவன் என்கிற உரிமையோடு அவள் செய்த ஒன்றை, அன்றைக்கு, அவன் சொல்லிக் காட்டியதே அழகற்ற செயல். திரும்பவும் அதைப்பற்றிப் பேசித் தவறிழைத்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வை, அவளுக்குக் கொடுக்க அவன் விரும்பவில்லை.
“எந்த ரேஞ்சில எதிர்பாக்கிறாய் எண்டு சொல்லு. நான் மாறப்பாக்கிறான்.” பேச்சை இலகு திசைக்குத் திருப்பினான் அவன்.
“ஓ..!” என்று இழுத்துவிட்டு, “எனக்குப் போலீஸ்காரன் வேண்டாம். அவனுக்கு அம்மா அப்பா இருக்கோணும். தங்கச்சி இருக்கக் கூடாது. கலியாணத்துக்குப் பிறகு எங்கட வீட்டிலேயே வந்திருக்கோணும். இதுக்கெல்லாம் ஓம் எண்டுறவனைத்தான் நான் காதலிப்பன்.” என்று சவால் பார்வையுடன் படபடவென்று அடுக்கினாள்.
இவளை.. அவனுக்குக் கோபம் போய்ச் சிரிப்பு வந்தது. “பேசாம போடி விசரி.” என்று துரத்திவிட்டான். அது என்று வெற்றிப் பார்வை பார்த்துவிட்டு நடந்தாள் அவள்.
உண்மையில், ஆதினி இத்தனை உறுதியாக நிற்பாள் என்று எல்லாளன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவே, அவர்களின் பேச்சினாலும், அகரனின் செய்கையாலும் அவள் அதிகமாகக் காயப்பட்டிருக்கிறாள் என்று சொல்லிற்று. விட்டுப் பிடிப்பது மாத்திரம் தான் இதற்கு இருக்கும் ஒரே வழி என்று எண்ணிக்கொண்டு அவன் மண்டபத்துக்குள் வந்தபோது, இளந்திரையனின் அருகில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவன் பார்வை இளந்திரையனிடம் சென்றது. அவரும் அவனைத்தான் பார்த்திருந்தார். அப்போதுதான் மேடையில் வைத்துத் தான் செய்த செய்கையை ஒருமாதிரியாக உணர்ந்தான் எல்லாளன்.
அவனுடைய பெரும் மதிப்பிற்குரிய மனிதர். அவனை நம்பித் தன் பெண்ணையே தர முன்வந்தவர். அதையும் குழப்பியடித்து இப்போது, வேண்டாம் என்று நிற்கிறவளையும் விடாது பற்றியபடி, அவருக்கு அவன் செய்கிறவைகள் முன்னுக்குப் பின் முரணானவையோ? வேலைகளைப் பார்த்தாலும் சிந்தனை அவரிடமே சிக்குண்டு நின்றது. அவர் பார்வையால் தன்னையே தொடர்வதும் விளங்காமல் இல்லை.
ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் அவரிடமே வந்து நின்றான். “என்ர முடிவில மாற்றம் இல்லை எண்டு எப்பவோ உங்களிட்டச் சொல்லிட்டன் தானே அங்கிள்.” என்றான். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. ஆதினி அவர்கள் இருவரையும் விளங்காமல் பார்த்தாள். “அதவிட, எனக்கானத நான் தானே அங்கிள் பாதுகாக்க வேணும். உங்களிட்டயே அந்த ஆன்ட்டி வந்து கலியாணத்துக்குக் கேட்டவா எல்லா.” என்றான். அப்போதும், அவரின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் போனதில், “கடைசி முடிவு அவளின்ரதான். ஆனா, அந்த முடிவை எனக்குச் சாதகமா மாத்த நான் முயற்சி செய்யலாம் அங்கிள்.” என்றுவிட்டு அங்கிருந்து நடந்தான்.
எதற்கு அவரிடம் வந்து விளக்கம் சொல்லிவிட்டுப் போகிறான் என்று புரிந்ததில், அதைப்பற்றித் தகப்பனிடம் கேட்கவில்லை ஆதினி. மாறாக, “கலியாண வீடு எப்பிடிப் போகுது?” என்று கேட்டு அனுப்பியிருந்த காண்டீபனின் குறுந்தகவலை முறைத்துக்கொண்டிருந்தாள்.
கட்டாயம் வரவேண்டும் என்று எத்தனை தடவை சொல்லியிருப்பாள். அன்று காலையில் கூட, அழைத்துச் சொல்லியிருந்தாள். எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டுக் கடைசியில் வராமலேயே இருந்துவிட்டானே. “உங்களோட நான் இனிக் கதைக்கமாட்டன்!” என்று அனுப்பிவிட்டாள். உடனேயே அழைத்தான் அவன். அவள் எடுக்கவில்லை. மூன்றாவது தடவையும் அழைப்பு வந்து ஓய்ந்துபோக, “ஆரம்மா?” என்று விசாரித்தார் இளந்திரையன்.
“ஒரு சேர் வருவார், உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறன் எண்டு சொன்னேனே அப்பா. அவர்தான். வாறன் எண்டு சொல்லிப்போட்டு வரேல்ல. இப்ப சமாதானத்துக்கு வாறார். நான் இனிக் கதைக்கமாட்டன்.” என்று அவருக்கும் அறிவித்தாள்.
“அவருக்கு என்ன முக்கியமான அலுவல் வந்ததோ தெரியாது எல்லா. வராட்டி அன்பு இல்லை எண்டு அர்த்தமா? எடுத்து என்ன எண்டு கேளு. அவர் சொல்லுற விளக்கம் சரியா இல்லை எண்டாத்தான் கோபப்பட வேணும். என்ன நடந்தது எண்டு தெரிய முதலே இப்பிடிக் கோபப்படக் கூடாது.” என்று சொன்னவரையே பார்த்தாள் ஆதினி.
இளந்திரையனிடத்தில் சின்ன முறுவல். “என்ன பார்வை?” என்று வினவினார்.
“அதுதான் நீங்க எல்லாளனுக்கும் ஒண்டும் சொல்ல இல்லையா?”
முறுவல் விரிய, “அவனைப் பற்றியும் எனக்குத் தெரியும். என்ர மகளைப் பற்றியும் தெரியும்.” என்றார் அவர்.
அப்படி என்ன தெரிந்து வைத்திருக்கிறாராம் என்று ஓடிய அவளின் கேள்வியைக் காண்டீபனின் விடாத அழைப்புத் தடுத்து நிறுத்தியது. தகப்பனின் பார்வையும் எடுத்துப் பேசு என்று சொல்லவும், காதுக்குக் கொடுத்து, “என்ன விசயம்?” என்றாள் கோபமாக.
“எங்கட ஆதினிக்கு அண்ணாவில கோபமா? அப்பிடி, சும்மா வராம இருப்பனாமா?” நயந்த குரலில் வினவினான் அவன்.
“ஏன் வரேல்ல எண்டுற காரணத்தை முதல் சொல்லுங்கோ! அதுக்குப் பிறகு கோபப்படுறதா இல்லையா எண்டு நான் முடிவு செய்றன்.”
“அது.. மாமிக்குக் கொஞ்சம் ஏலாம போயிட்டுது. உனக்குத் தெரியும் தானே, நான் இல்லாம மிதிலா சமாளிக்க மாட்டாள். இப்பவும் ஏலாமத்தான் இருக்கிறா. இல்லாட்டி இப்பயாவது வந்திடுவன்.”
“ஓ..” என்றவளுக்கு அதற்குமேல் கோபப்பட முடியாமல் போனது. சமநிலை குழம்பினால் அவர் என்ன செய்வார் என்று நேரில் பார்த்திருக்கிறாளே. இதனால் தான் முதலில் காரணத்தைக் கேள் என்று தந்தை சொன்னாரா? எல்லாளன் சொன்னதுபோல் அவளின் கோபங்கள் தவறானவையோ? “நீ ஒண்டு செய். உன்ர அண்ணாட்டக் குடு, நான் கதைக்கிறன்.” என்ற காண்டீபனின் குரல் அவளின் சிந்தனைச் சங்கிலியை அறுத்துவிட்டது.
“முதல் அப்பாவோட கதைங்கோ, அண்ணா.” என்று கொடுத்தாள்.
“வணக்கம் சேர். இண்டைக்கு உங்களச் சந்திக்க முடியாமப் போனதில எனக்கும் உண்மையாவே வருத்தம் தான் சேர். இன்னொரு நாளைக்குக் கட்டாயம் வந்து பாக்கிறன். குறை நினைக்காதீங்கோ.” என்று மரியாதையாகப் பேசியவனை, அவருக்கும் பிடித்துப் போனது.
“அதில என்ன இருக்குக் காண்டீபன்? என்ர மகளுக்கு நீங்க இன்னுமொரு அண்ணாவாம் எண்டு சொன்னா. அங்கிள் எண்டே சொல்லுங்க.” என்று, அவரும் அவனோடு நன்றாகவே பேசிவிட்டுத் தந்தார்.
அகரனுக்குக் கொடுப்போம் என்றால் வந்தவர்களோடு நின்று போட்டோ எடுக்க ஆரம்பித்திருந்தான் அவன். ஆட்கள் வேறு அடுத்தடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். “அண்ணா போட்டோ எடுத்துக்கொண்டு இருக்கிறார்.” என்ன செய்வது என்று தெரியாது சொன்னாள் ஆதினி.
“அப்ப விடு. இன்னொரு நாளைக்கு நான் நேர்லயே வாறன், சரியா? நீ எனக்கு மறக்காம போட்டோக்களை அனுப்பிவிடு.” என்றுவிட்டுக் கைபேசியை வைத்தான், காண்டீபன்.
ஆதினியும் வஞ்சகமே இல்லாமல் எடுத்த அத்தனை போட்டோக்களையும் அனுப்பிவிட்டாள்.
திரும்ப திரும்ப அவற்றையே பார்த்திருந்தவனின் விழிகளின் ஓரம் சித்திரக் கோடாகக் கண்ணீரின் தடம்.