சற்று நேரம் அவனையே பார்த்திருந்தவள், “எனக்கு உங்களைப் பிடிக்கும். உங்கட சிந்தனை, உங்கட பேச்சு எல்லாம் நிறைய யோசிக்க வச்சிருக்கு. கொஞ்சமாவது நானும் இனி உருப்படியான ஒருத்தியா மாறவேணும், இவ்வளவு காலமும் நான் நடந்துகொண்ட முறை பிழை எண்டு என்னை யோசிக்க வச்சதும் நீங்கதான். ஆனா, ஏன் இதெல்லாம்? இங்க என்னைப்போல நிறையப் பிள்ளைகள் இருக்கினம் தானே. அவே எல்லாரையும் விட்டுட்டு, என்னில மட்டும் ஏன் இந்தப் பிரத்தியேகப் பாசம்?” என்றவளின் கேள்வியில், “பெரிய யோசனைதான்!” என்று சிரித்தான் அவன்.
“சிரிச்சுச் சமாளிக்காம உண்மையைச் சொல்லுங்க அண்ணா. நீங்க ஆரு?”
உண்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான் காண்டீபன்.
“உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? முன்ன பின்ன தெரியாத என்னில ஏன் இவ்வளவு பாசம், இவ்வளவு அக்கறை?”
உண்பதை மீண்டும் தொடர்ந்தபடி பேசினான் அவன். “எட்டுச் செலவு வீட்டில வச்சு நீ செய்த சேட்டைகளைப் பாத்து உன்னை ஏனோ எனக்குப் பிடிச்சது. உனக்குப் புத்தி சொன்னது, எல்லாருக்கும் சொல்லுறதுதான். நான் ஒரு வாத்தி. நல்லா படி, படிப்பில கவனம் செலுத்து எண்டு சொல்லுறது எல்லாம் எனக்கு இயல்பா வரும். உன்ன மாதிரியான ஆக்களோட ஒவ்வொரு நாளையும் செலவளிக்கிற எனக்கு உன்னை யோசிக்க வைக்கிறது எல்லாம் பெரிய வேல எண்டு நினைக்கிறியா? சில நேரம் தங்கச்சி இல்லாத குறைய உன்ன வச்சுத் தீர்க்கிறனோ தெரியாது.”
அவன் சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான். என்றாலும்..
அவள் முகம் தெளியாததைக் கவனித்துவிட்டு, “சரி சொல்லு, உன்ர வீட்டில ஒரு பிரச்சினை எண்டதும் என்னை எதுக்காகத் தேடினனி? நம்பர் கூடத் தெரியாம மெயில் அனுப்பிக் கேக்கிற அளவுக்கு, நெருக்கமா உன்ன உணர வச்சது எது?” என்று வினவினான் அவன்.
அவள் முகம் இலேசாகக் கன்றியது. இன்றுவரை, அவளாலேயே காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாத கேள்வி அது.
“இதுக்கெல்லாம் ஏன் முகம் சுருங்கிறாய்?” அவளையே கவனித்திருந்தவன் வினவினான். அவளிடம் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து, வெறுமையாகி இருந்த டிஃபன் பொக்ஸையும், தன் கையையும் கழுவினான். டிஃபன் பொக்ஸை மூடி அவளிடம் கொடுத்தான். அண்ணாந்து கடகட என்று தண்ணீரைப் பருகிவிட்டு, மூடி போத்தலையும் அவளிடம் கொடுத்தான். அவள் எல்லாவற்றையும் தன் பேக்கினுள் பத்திரப்படுத்திக் கொள்வதைக் கவனித்தபடி, “உன்ர வகுப்பில இருக்கிற எல்லாரையுமே உனக்குத் தெரியும். ஆனா, பெஸ்ட் பிரெண்ட்ஸ் எண்டு கொஞ்சப்பேர் தான் இருப்பீனம். ஏன்? ஏதோ ஒரு வகையில உனக்கும் அவேக்கும் ஒத்துப்போகும். அந்த அலைவரிசை சேரும். அதேதான் இங்கயும். உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்குப்போல. சரி, அத விடு! இன்னும் கொழும்புக்குப் போற ஐடியா இருக்கா?” என்று அவளின் கவனத்தை படிப்பின் புறமாகத் திருப்பினான்.
“ஓம் அண்ணா. எப்பிடி அங்க சேருறது எண்டு தெரியேல்ல. அப்பாவத்தான் கேக்க வேணும்.” என்றவளிடம் சில பேப்பர்களை நீட்டினான்.
வியப்புடன் விழிகளை விரித்தாள் ஆதினி. இணையத்தில் தேடினால் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். இதுநாள் வரையில், அவளுக்கானதை தகப்பனோ தமையனோ தான் செய்வார்கள். சில நேரங்களில் எல்லாளனும் செய்வான். அந்தப் பழக்கத்தினாலேயே அப்பாவிடம் சொன்னால் செய்வார் என்கிற நினைப்புடன் அப்படியே விட்டிருந்தாள். அப்பாவிடம் சொல்வதானால் கொழும்புக்குப் போவதைச் சொல்லவேண்டும். நிச்சயம் அவர் மறுப்பார் என்று தெரியும். ஒரு வாக்குவாதம் உருவாகும். அதில், அவள் வெல்ல வேண்டும். ஆனாலும், தந்தை கவலைப்படுவார் என்றுதான் அவரிடம் சொல்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள்.
அவனானால், அவளுக்காகத் தேடி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறானே.
“என்ன பார்வை?” என்றபடி அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான்.
“பாருங்க ஒரு நாளைக்கு உங்கட கையப் பிடிச்சுக் கடிச்சு விடுறன்!” என்று முறைத்தாள் அவள்.
“பின்ன, இண்டைக்கு வந்ததில விதம் விதமாப் பாத்து வச்சா?” என்று சிரித்தான் அவன். பின், விளையாட்டை விட்டுவிட்டு, “கொழும்பில இருக்கிற பல்கலைக்கழகம் போகாத. அங்க போனா நீ லோயரா வெளில வாறதுக்குக் குறைஞ்சது நாலு தொடக்கம் அஞ்சு வருசம் ஆகும். அதே, இலங்கை சட்டக் கல்லூரில சேர்ந்தா மூண்டு வருசத்தில லோயர் ஆகிடலாம். இலங்கை சட்டக் கல்லூரி என்ட்ரென்ஸ் எக்ஸாம் ஓகஸ்ட் மாதம் வரப்போகுது. அதுக்கான போர்ம் தான் இது. டேட் முடிய முதல் நிரப்பி அனுப்பு. இப்ப நீ இங்க ஒரு வருசம் முடிச்சிருக்கிறாய். அங்க நேரா செக்கண்ட் இயர் போகலாமா இல்ல, அதுக்கு ஏதாவது எக்ஸாம் எழுத வேணுமா எண்டு உன்ர அப்பாவை விசாரி. ஓம் எண்டுதான் கொழும்பில இருக்கிற என்ர பிரென்ட் விசாரிச்சுச் சொன்னவன். எண்டாலும், உன்ர அப்பாக்கு அது இன்னும் வடிவாத் தெரிஞ்சிருக்கும். சோ, அவரிட்ட மறக்காமக் கேட்டு, ஓம் எண்டு சொன்னா, அதுக்கும் ரெடியாகு. அப்பிடிப் பாத்தா இன்னும் ரெண்டு வருசப் படிப்புதான் உனக்கு இருக்கு. ரெண்டாவது வருச முடிவில இறுதியாண்டு பரிட்சை எழுது. பிறகு ஒரு ஆறுமாதம், பயிற்சி சட்டத்தரணியா ஒரு லோயரிட்ட வேலை பார். பிறகு என்ன, உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியா சத்தியப்பிரமாணம் செய்ததும் சட்டப்படியான லோயரா ஆகிடுவாய்!” பெருமிதத்துடன் சொன்னவனை விழிகளில் மெலிதாக நீர் கோர்க்கப் பார்த்திருந்தாள் ஆதினி.
மீண்டும் அதே கேள்வி. இந்தப் பாசம் அவள் மீது எதற்காக? இந்த முறை, அந்தக் கேள்வியை அவள் கேட்கவில்லை. பேசும் அவனையே உதட்டில் மலர்ந்த சின்னச் சிரிப்புடன் ரசித்திருந்தாள்.
“யோசிச்சுப் பாரு, இன்னும் மூண்டு வருசத்தில, கறுப்புக் கோட்ட மாட்டிக்கொண்டு, கனம் கோட்டார் அவர்களே எண்டு உன்ர அப்பாக்கு முன்னால கம்பீரமா நிண்டா எப்பிடி இருக்கும்?” தன் விழிகளில் அவளைக் குறித்தான பெரும் கனவைச் சுமந்துகொண்டு அவன் சொன்னபோது, அவனின் கையைக் கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் ஆதினி.
“டோய் என்ன?” உதட்டில் தரித்த மென் சிரிப்புடன் அவள் புறம் பார்த்தபடி வினவினான் அவன்.
“தெரியா அண்ணா. உங்கள்ள இன்னுமின்னும் பாசம் வருது.” என்றாள் அவள்.
“நல்ல விசயம் தானே, பெரிய மனுசி!” என்றபடி மீண்டும் அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான் அவன். இந்த முறை, அவனை அவள் முறைக்கவில்லை. அவனின் அந்தப் பாசச் செய்கையை விரும்பி ரசித்தாள்.
“முக்கியமான விசயம், கொழும்பில எங்க தங்குறது, எப்பிடிப் போய்வாறது எண்டுறதைப் பற்றி அப்பாட்டக் கதை. அதே மாதிரி, அங்க இருக்கிற நல்ல லோயர் ஆரிட்டையாவது சும்மா ஹெல்ப்புக்கு இப்பவே போ. அது உனக்கும் இன்னும் ஹெல்ப்பா இருக்கும். நிறைய அனுபவம் கிடைக்கும். கொழும்பில இருந்து திரும்பி வாற ஆதினி சாதாரண ஆதினியா வரக்கூடாது. ஒரு வழக்கறிஞர் ஆதினியாத்தான் உன்ன நான் பாக்க ஆசைப்படுறன், சரியா?” என்றான் அவன்.
“கட்டாயம் நடக்கும் அண்ணா. அந்த எள்ளு வயலின்ர வாய்க்காகவே நான் ஒரு லோயர் ஆகியே ஆகவேணும்!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“அவன் என்ன செய்தவன் உனக்கு?”
“என்ன செய்தவனா? வண்டு முருகனாக் கூட வரமாட்டேனாம் எண்டு சொன்னவன். அவனையெல்லாம்..”
“இதென்ன அவன் இவன் எண்டு? மரியாதையா கதைக்கப் பழகு!” சட்டென்று அதட்டினான் அவன்.
அவள் முகம் கூம்பிப் போயிற்று. “நீங்க என்ன அவனை மாதிரியே சொல்லுறீங்க.”
“பின்ன சொல்லாம? அவன் நல்ல பதவில இருக்கிறவன் எல்லா. இப்பிடிக் கதைச்சா நாளைக்கு அவனை ஆராவது மதிப்பீனமா, சொல்லு?”
“இப்ப எல்லாம் நானா கதைக்கிறேல்ல. அவனா..” என்று ஆரம்பித்தவள் அவனின் கண்டிப்பு நிறைந்த பார்வையில், “ஓகே ஓகே, அவரா சீண்டினாத்தான் கோவத்துல வந்திடும்.” என்றாள்.
“ஒரு லோயர் எந்த இடத்திலையும் நிதானம் இழக்கக் கூடாது. கோபத்தையோ குமுறலையோ காட்டக் கூடாது. நீ இப்பிடி இருந்தா அவன் சொன்ன மாதிரி..” என்றவன் மிகுதியைச் சொல்லாமல் சிரிக்க, “உங்களை..” என்று பல்லைக் கடித்தாள் ஆதினி.
வாய்விட்டுச் சிரித்தான் காண்டீபன். “அதெல்லாம் சும்மா. உன்ர அப்பான்ர வாரிசு நீ. விறைப்பான லோயரா வருவாய். சரியா? இப்ப எழும்பி வகுப்புக்கு நட. நேரமாச்சு!” என்றுவிட்டுப் புறப்பட்டான் காண்டீபன்.