ஆதினி கொழும்பு சென்று ஒரு வாரமாகியிருந்தது. தன் வாழ்வில் முக்கியமான எதையோ இழந்தது போன்று தவித்துப் போனான் காண்டீபன். தினமும் வந்து அவள் அமரும் இருக்கையில் அமர்ந்துகொள்வான். உள்ளம் அவளோடான நாட்களை அசைபோடும். அவளின் செல்லக் கோபம், முறைப்பு, சிரிப்பு, கேள்விகள் என்று எல்லாமே நினைவில் வந்து போகும். அவன் நினைத்திருந்தால் அவளின் மனதை மாற்றி, இங்கேயே தொடர்ந்து கற்க வைத்திருக்க முடியும். அவனாகத்தான் அவளைக் கிளப்பினான். அறிவு போடும் கணக்குகளும் மனதின் விருப்பங்களும் ஒன்றுடன் ஒன்று இயைந்து நிற்பதில்லையே.
அவன் மனது, தன் நிம்மதியைத் தொலைத்துப் பல வருடங்கலாயிற்று. இந்தக் கொஞ்ச நாட்களாகத்தான் அமைதி கொண்டிருந்தது. காரணம் ஆதினி. தாய் மடியில் தலை வைத்துப் படுக்கும் நிறைவைத் தந்திருந்தாள். இப்போது, அதை மீண்டும் இழந்து நிற்கிறான். அவர்களின் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். பசுமரத்து ஆணியாகப் பதிந்துபோன பல காட்சிகள் மனக்கண்ணில் வலம் வந்தன. எல்லாம் போயிற்று. காலம் மாறி, காட்சிகள் மாறி, காயங்கள் கூடி எல்லாமே தொலைந்து போயிற்று. எதையும் புதுப்பித்துக்கொள்ள முடியாத நிலையில் வேறு நிற்கிறானே!
அதற்குமேல் எதையும் நினைக்கப் பிடிக்காமல் வேகமாக எழுந்து விறுவிறு என்று நடந்தான். அடுத்து அவன் சென்று நின்றது மிதிலாவிடம். இப்போதெல்லாம் அவனின் தஞ்சம் அவள்தான். “என்னப்பா? ஆதினி போனதில இருந்து நீங்க நீங்களாவே இல்ல.” தன் மடியில் கிடந்தவனின் தலையைக் கோதி விட்டபடி கேட்டாள் அவள். விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான் காண்டீபன். அவர்களின் தாம்பத்யம் ஆரம்பித்ததில் இருந்து அவளை இன்னுமே உற்சாகமான, தயக்கங்களற்ற, அவனிடம் மனம்விட்டுப் பேசும் பெண்ணாகப் பார்க்கிறான்.
அவன் பார்வையின் பொருள் அறியாமல், “ரெண்டரை வருசம் தானே. அது ஓடிடும். அதைவிட, ஒவ்வொரு நாளும் வீடியோ கோலில கதைக்கிறீங்க தானே. பிறகென்ன?” என்றவள், திடீரென்று தோன்றிய எண்ணத்தில், “லீவு கிடைச்சா நாங்க எல்லாரும் வேன் ஹயர் பண்ணிக்கொண்டு போய் ஆதினியைப் பாத்துக்கொண்டு வருவமா? அம்மாவும் மாமாவும் இந்த வீட்டுக்கையே தானே அடைஞ்சு கிடக்கீனம். அவேக்கும் வெளி இடங்களைப் பாத்தா நல்லாருக்கும். உங்களுக்கும் ஆதினியப் பாத்ததாப் போச்சு.” என்றதும், “ஓம் என்ன! எனக்கு இந்த ஐடியா வராம போச்சே!” என்று துள்ளிக்கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன்.
இங்கே, எல்லாளனின் நாட்களிலும் ஏதோ ஒன்று குறைந்தது. அன்றைக்கு, அவளின் வாயிலிருந்தே அவளின் மனதைப் பிடுங்கிய பிறகு, அவளிடம் வேறு எந்தப் பேச்சும் அவன் வைத்துக்கொள்ளவில்லை. நெருக்க நெருக்க ஒடுங்குவது ஒரு ரகமெனில் வெடிப்பது இன்னொரு ரகம். அவள் இரண்டாம் வகை. ஆக, விலகி நிற்பதுதான் சரி. அதுதான் ஆழமான ஒரு உறவை, அவனுக்கும் அவளுக்குமிடையில் உருவாக்கும் என்று நம்பினான். அவள் புறப்படுகிற வரைக்கும் அவனுக்குள்ளும் பெரிய பாதிப்புகள் எதுவுமில்லை. பொறுப்பு என்பது பருக்கையளவு கூட இல்லாதவள் கொழும்பில் தனியாக இருந்துகொள்வாளா என்கிற ஒரு கவலை மட்டுமே இருந்தது.
அதுவே, அவள் போனபிறகு? அந்த நாள் கூட அவனுக்கு எப்போதும் போல்தான் கழிந்தது. இரவு உணவுக்கு என்று அங்குச் சென்றபோதுதான் விழிகள் இயல்பாக அவளைத் தேடிற்று. என்ன முயன்றும், அவள் அங்கில்லை என்கிற அந்த வெற்றிட உணர்வை, அவனால் விரட்ட இயலாமலேயே போயிற்று. இப்போது வரைக்கும், ஏதோ ஒன்று அவனிடம் குறைந்தே இருந்தது.
இளந்திரையன், அகரன், சியாமளா, அவன் எல்லோருமே அவரவர் பாட்டில் இருக்கும் இயல்பு கொண்டவர்கள். அழுத்தமான குணம் கொண்டவர்கள். அவர்கள் எல்லோரையும் உயிர்ப்புடன் வைத்திருந்ததே அவள் தான் என்று, அவள் இல்லாத இந்த நாட்களில்தான் மெல்ல மெல்லப் புரியலாயிற்று. இன்றைக்கு, அவர்களிடம் பேச ஊரில் நடக்கும் குற்றங்களைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லாதது போன்ற ஒரு நிலை.
அவள் போய் இரண்டு வாரங்களாயிற்று. பரீட்சைகளில் சித்தியடைந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்துவிட்டாளாம் என்று அகரன் மூலம் அறிந்து வைத்திருந்தான். அவளும் இளந்திரையனோடு மட்டும் தான் தினமும் பேசுகிறாளாம். சியாமளா இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தானாக அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாளாம். இவர்கள் இருவரையும் அவள் ஒதுக்கி வைத்துவிட்டாளாம் என்று அகரன் புலம்பாத நாள் இல்லை. சின்னச் சிரிப்புடன் கேட்டுவிட்டு, “விடுடா, எங்க போனாலும் இங்க வந்துதானே ஆகவேணும்.” என்று முடித்துவிடுவான் எல்லாளன். ஆனால், நானாக அவளுக்கு அழைப்பதில்லை என்கிற ஒரு முடிவு அவனுக்குள்ளும் இருந்தது.
அன்று, எல்லாளனைச் சந்திக்கத் தன் பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு வந்தான் அருள். அப்போதுதான், அவன் புனர்வாழ்வு மையம் சென்று மூன்று மாதம் ஆகிற்று என்பதையே உணர்ந்தான் எல்லாளன். அருள் மிகுந்த தெளிவுடன் இருந்தான். “நான் செய்த எல்லாப் பிழைக்கும் சொறி சேர். பிடிவாதமா என்னை அங்க அனுப்பி வச்சத்துக்கு நன்றி சேர்.” என்று மன்னிப்பையும் நன்றியையும் ஒன்றாகச் சொன்னான்.
உள்ளத்தில் இருந்து பேசுகிறான் என்று, அவன் விழிகளில் தெரிந்த குற்ற உணர்ச்சியே சொல்லியது. அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி, “உன்ன இப்பிடிப் பாக்கத்தான் ஆசைப்பட்டனான். நீ மாறினதே சந்தோசம். இனி நல்லா படிக்கோணும், சரியா?” என்றான் எல்லாளன்.
“கட்டாயம் சேர்!” என்றவனின் பார்வை எல்லாளனின் முகத்திலேயே இருந்தது. அன்று, வைத்தியசாலையில் இருந்து வலுக்கட்டாயமாக இவனைப் பிடித்துப் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தபோது, தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டியிருக்கிறான். அந்தளவில் போதை அவனை அடிமையாக்கி இருந்தது. அது கொடுத்த ஆக்ரோசம் யார் எவர் என்று பார்க்க விடவில்லை. எல்லாளன் நினைத்திருந்தால் கோபத்தில் நன்றாக நான்கு சாத்துச் சாத்தியிருக்கலாம். அப்படி எதுவும் செய்யாமல் அவனை மனிதனாக்கி விட்டிருக்கிறான். அந்தக் குற்ற உணர்ச்சியில், “சொறி சேர்!” என்றான் மீண்டும்.
“டேய் விடுடா! அதெல்லாம் முடிஞ்ச கதை. பழசை நினைக்கிறத விட்டுப்போட்டுப் புதுசா வாழப்பழகு.” என்றவனுக்குள் திடீரென்று ஒரு எண்ணம். சரியா வருமா என்று யோசித்தான். அருளின் மாற்றம் சரியாக வரும் என்றுதான் சொல்லிற்று. அந்த நம்பிக்கையோடு, “உன்னால எனக்கு ஒரு உதவி செய்யேலுமா?” என்று வினவினான்.
“கட்டாயம் சேர். என்ன செய்யோணும் எண்டு சொல்லுங்க. செய்றன்.”
“போதை மருந்து சப்லை செய்றவங்களைப் பிடிக்கவேணும். புது ஆட்களை அனுப்பினா கண்டு பிடிக்கிறாங்கள். உனக்கு இடம், ஆட்களைத் தெரிஞ்சிருக்கும். உன்னையும் அவங்களுக்குத் தெரியும். சந்தேகம் வராது. சோ, நீ ஹெல்ப் பண்ணினா ஈஸியா பிடிக்கலாம்.”
“ஆக்களைத் தெரியாது சேர். ட்ரக்ஸ் வாங்கிற எங்களுக்குக் கூட முகத்தைக் காட்ட மாட்டினம். ஆனா, எங்க எங்க விக்கிறது, எத்தின மணிபோல வருவினம் எண்டுறது எல்லாம் எனக்குத் தெரியும் சேர். அது நான் காட்டித் தருவன். வாங்கிற மாதிரி நான் நிண்டா நீங்க ஏதாவது செய்து அவேய பிடிக்கலாம் தானே சேர்.” என்றான் அவன்.
“இது போதும்! மிச்சத்தை நான் பாப்பன். ஆனா, பழைய மாதிரி பழக மாட்டியே?”
“இல்ல சேர், இனி எந்தக் காலத்திலயும் பழக மாட்டன். அதுக்குள்ள இருக்கிற வரைக்கும் வெளி உலகம் எண்டு ஒண்டு இருக்கிறதே தெரியிறேல்ல சேர். அது என்னவோ ஒரு மாய உலகம் மாதிரி. அம்மா, அப்பா, நண்பர்கள், எதிர்காலம் எண்டு எதைப்பற்றியும் யோசிக்கிறேல்ல. ஆனா, இப்ப நான் அப்பிடி இல்ல. அது எப்பிடி இருக்கும் எண்டும் தெரியும். அதுக்குள்ள போனா என்ன நடக்கும் எண்டுற தெளிவும் இருக்கு. அதால போகமாட்டன்!” என்றான் உறுதியான குரலில் எல்லாளனின் கண்களைப் பார்த்து.
பெருமையோடு அவன் முதுகில் தட்டிக்கொடுத்தான் எல்லாளன். “நீ கதைக்கிறதைக் கேக்க சந்தோசமா இருக்கடா! எங்கட இளம் பிள்ளைகள் இப்பிடித்தான் தெளிவா இருக்க வேணும். இனி நீ நல்லா வந்திடுவாய், பார்!” மனதிலிருந்து சொன்னவன் அருளின் பெற்றோர்களைக் கேள்வியாகப் பார்த்தான்.
“எங்கட மகனை நல்ல மகனா மாத்தித் தந்தது நீங்கதான் சேர். அதால உங்கட விருப்பம் சேர்.” என்றனர் அவர்கள் இருவரும்.
“நீங்க பயப்பிட ஒண்டும் இல்லை அம்மா. அவனும் இனி வழி மாறிப் போக மாட்டான். நானும் விடமாட்டன். எப்பவும் என்ர ஒரு கண் அவனில இருக்கும்.” என்று அவர்களுக்குத் தைரியம் கொடுத்துவிட்டு, “இவனை மாதிரி எத்தனையோ பிள்ளைகள் விவரம் தெரியாம இதுக்கப் போய் விழுகினம். அதைத் தடுக்கிறதுக்கு டீலர்ஸ பிடிக்கோணும். அதுதான்.” என்றவன் அடுத்து வந்த நாட்களில் தாமதிக்கவில்லை.


