கதிரவனை அனுப்பிவிட்டு ஜீப்பிலேயே அமர்ந்திருந்தான், எல்லாளன். அஞ்சலி மூலம் அவன் அறிந்துகொண்டவை அனைத்தும் விடாத நிலநடுக்கங்களாக இன்னுமே, அவனைப்போட்டு உலுக்கிக்கொண்டு இருந்தன.
இதுவரையில், சாகித்தியன், மாதவன், அஞ்சலி என்று எல்லோரிடமிருந்தும் பெற்றுக்கொண்ட நிறையப் பசில் துண்டுகள் அவனிடம் இருந்தன. அவற்றையெல்லாம் பொருத்தியபோது அவன் உணர்வுகளில் கலந்துபோனவனின் பிம்பத்தைத் தவிர, வேறு எதுவும் வரமாட்டேன் என்றது. எவ்வளவு யோசித்தும், எப்படி மாற்றி அடுக்கியும் பிம்பம் மாறவே இல்லை. ஏன் ஏன் ஏன் இப்படி? என்ன வாழ்க்கை இது? நொடியில் தன்னை வெறுத்தான்; தான் பார்க்கும் வேலையை வெறுத்தான்; தன்னுடைய ஆசாபாசங்களை வெறுத்தான். எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு முதலில் இருந்து சிக்கலே இல்லாத கோலம் வரைய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?
ஸ்டேரிங்கை பற்றியபடி, சீட்டில் தலை சாய்த்து, இமைகளை மூடியிருந்தவனின் விழிகள் மாத்திரம், அவன் மனதைப் போலவே, ஓரிடத்தில் நில்லாமல், அலைக்கழிந்துகொண்டு இருந்தது.
இனி என்ன செய்யப் போகிறேன்? அவனுக்குள் சின்னச் சலனம். அடுத்தக் கணமே அவனுடைய இயல்பான மூர்க்கம் தலை தூக்கிற்று. ஒரு முரட்டுப் பிடிவாதம். என்ன ஆனாலும் பரவாயில்லை, மறைந்து கிடக்கிற மலையின் அந்தப் பக்கத்தைக் கண்டே ஆகவேண்டும்.
அவனுடைய கைகளில் போலீஸ் ஜீப் சீறிக்கொண்டு வந்து பல்கலைக் கழகத்தின் முன் நின்றது. அதிலிருந்து குதித்து இறங்கினான். அவனுடைய இடப்புருவம் துடித்தது. கதிர் வீச்சாய் விழிகளை ஒருமுறை தன்னைச் சுற்றிச் சுழற்றினான். பின், ஜீப்பில் சாய்ந்து நின்றுகொண்டான். சற்று முன்னர் அவனிடமிருந்த எந்தத் தடுமாற்றமும் இப்போது இல்லை. கரை ஒதுங்கிவிட்ட படகைப்போன்று மனம் ஒரு நிலையில் நின்றது.
சற்று நேரத்திலேயே தூரத்தில் ஒரு புல்லட் வந்துகொண்டு இருந்தது. எந்த உணர்வு உந்தியதோ அதையே பார்த்திருந்தான். அதற்கான பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு இறங்கினான், காண்டீபன். எதிர்ப்பட்ட மாணவர்களின் காலை வணக்கத்தை ஒற்றைத் தலையசைப்பின் மூலம் ஏற்றபடி வந்தவனின் முன்னே சென்று நின்றான், எல்லாளன்.
சிறு முறுவலோடு பார்வையை உயர்த்தியவனின் விழிகள் வியப்பில் விரிந்தது. அவன் முகத்தில், காணவே முடியாத ஒருவனைக் கண்டுவிட்ட பரவசம். அசையக்கூட மறந்தவனாக நின்றான். சிமிட்டினால் மறைந்துவிடுவான் என்று எண்ணினானோ என்னவோ, விழிகளை மூடாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த விழிகளின் ஓரம் மெல்லிய கோடாக நீர்ப்படலம் சேர்ந்தது. அதோடு மெல்லச் சிரித்தான். பாதடி பற்றி வந்தும் பக்கத்தில் போக விரும்பாமல் தூரவே இருந்து தாகம் தீர்த்துக்கொண்டவன் அல்லவோ கண்முன்னே நிற்கிறான். கட்டிப்போட்டிருந்த கன்றை அவிழ்த்துவிட்டால் எப்படித் தாயிடம் பாய்ந்து ஓடுமோ அப்படி, அவனிடம் ஓடிவிட எண்ணி, “எல்லா..” என்றபடி ஓரடி எடுத்து வைத்தவன் அப்படியே நின்றான்.
எல்லாளனின் இரத்தக் கட்டிகளெனச் சிவந்திருந்த விழிகளும் தாடையின் இறுக்கமும் முகத்தில் தெரிந்த கடினமும் அப்போதுதான், அவனது கவனத்திற்கு வந்தது. மெல்ல எதுவோ புரிந்தது. உதட்டோர முறுவல் விரிய, காக்கி உடைக்கே கம்பீரத்தைச் சேர்த்தபடி, அகன்ற தோள்களும் விடைத்த மார்புமாக, நேர்மையும் துணிவும் கொண்ட காவல் அதிகாரியாகத் தன் எதிரில், தனக்கு எதிரான மனநிலையோடு நின்றவனுக்குச் சிறிதாகத் தலையைச் சரித்து, இரண்டு விரல்களை மாத்திரம் கொண்டு சின்னதாய் சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு, “ஒரு நிமிசம் ஏசிபி சேர்.” என்றவன், அவர்களைக் கடந்து நடந்துகொண்டிருந்த மாணவன் ஒருவனை அழைத்தான். அவனிடம் தன் பைக்கின் திறப்பைக் கொடுத்து, தன் மேசையின் இழுப்பறைக்குள் வைக்கச் சொல்லிவிட்டான்.
பின் இவனிடம் திரும்பி, “வாங்க, போவம்!” என்றபடி நடந்தான்.
ஜீப்பில், எல்லாளனின் அருகிலேயே ஏறி அமர்ந்துகொண்டான். அவர்களின் பயணம், அடர்த்தியான மௌனத்தைச் சுமந்தபடி ஆரம்பித்தது. காண்டீபனின் நெஞ்சுக்குள் மெல்ல மெல்ல பெரும் புயல்கள் அடிக்க ஆரம்பித்தன. உதட்டோரம் துடித்தது. குடும்பத்தினரின் நினைவு வந்துவிடவும் முகத்தை வெளிப்புறம் திருப்பிக்கொண்டான். வேகமாக கைபேசியை எடுத்து மிதிலாவுக்கு அழைத்தான். “ஒரு வேலையா போறன் மிது. திரும்பி எப்ப வருவன் எண்டு தெரியாது. அப்பாவையும் மாமியையும் கவனமா பாத்துக்கொள்.” என்றவனின் குரலில் இலேசான கரகரப்பு. “நீயும் பிள்ளையும் வலு கவனம்.” என்றவன், அவளின் கேள்விகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கேட்டிருந்த எல்லாளனின் தேகம் விறைத்தது. அதை உணரும் நிலையில் காண்டீபன் இல்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளின் எழுத்தாளன் அவன் தான். இந்தத் திருப்பங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியாததல்ல. இருந்தாலும்… மேலே யோசிக்கப் பிடிக்காமல் திரும்பி எல்லாளனைப் பார்த்தான். அதே இறுக்கம் சற்றும் குறையாமல் ஜீப்பை செலுத்திக்கொண்டு இருந்தான், அவன்.
“எப்பிடியடா இருக்கிறாய்?” கரகரத்த குரலில் மெல்ல வினவினான்.
எல்லாளனின் தாடை ஒருமுறை இறுகி அடங்கியது. இவன் புறம் திரும்பவே இல்லை அவன்.
“இண்டைக்கு உன்னைப் பாப்பன் எண்டு எதிர்பாக்கவே இல்ல.”
அதற்கும் பதில் இல்லை என்றதும் அமைதியாகிப் போனான் காண்டீபன். யார் முன்னும் அவன் உடைந்ததில்லை. அவனை உடைக்கும் சக்தி யாருக்குமில்லை. ஆனால், அருகில் இருக்கிறவன்? அவனுடைய அருகண்மையில் இருக்கிறோம் என்கிற நினைப்பே இறுக்கிக்கிடந்த இவனின் மன அடுக்குகளை மெல்ல மெல்ல இளக்க ஆரம்பித்திருந்தது. சீட்டில் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான்.
காவல் நிலையமும் வந்து சேர்ந்தது. ஜீப்பிலிருந்து இறங்க முதல் திரும்பி எல்லாளனை ஒருமுறை பார்த்தான். பின் இறங்கி அவனோடு கூட நடந்தான். எல்லாளன், பல குற்றவாளிகளை, சந்தேக நபர்களைத் தோளுரித்துத் தொங்க விட்ட அதே விசாரணை அறை. இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருவன் சந்தேக நபராக. இன்னொருவன் காவலதிகாரியாக.
கருநிற ஜீன்சுக்கு வெளிர் நீலத்தில் முழுக்கை ஷேர்ட் அணிந்து, மிகுந்த மரியாதைக்குரிய ஒரு விரிவுரையாளனின் தோற்றத்தில் இருந்தான் காண்டீபன். அடர்ந்த புருவங்களின் கீழே, நீண்ட நாசியில் அவன் அணிந்திருந்த, ‘ரிம்லெஸ்’ மூக்குக் கண்ணாடி கூட, அவன் முகத்துக்கு வெகு கம்பீரமாகப் பொருந்திப் போனது.
இரு ஆண் மகன்களினதும் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன. இறுக்கமாய் ஒருவன். இளக்கமாக மற்றொருவன். ஓராயிரம் கனவுகளையும் கற்பனைகளையும் பகிர்ந்துகொண்ட நாட்களில் எண்ணியே பார்த்திராத ஒரு சூழ்நிலை.
“நீ ஏன் இங்க வந்திருக்கிறாய் எண்டு தெரியுமா?”
மறுத்துத் தலையை அசைத்தான் காண்டீபன். “சொன்னா தெரிஞ்சு கொள்ளுவன்.” என்றான் நிதானமான குரலில்.
“அந்தளவுக்கு நல்லவன்!” என்றவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “அஞ்சலி எல்லா உண்மையையும் சொல்லிட்டாள்.” என்றான் சினத்துடன்.
இதைக் காண்டீபன் ஊகித்துத்தான் இருந்தான். அதில் பதிலேதும் சொல்லாமல் எல்லாளனையே பார்த்தான்.
“நீ ஒரு விரிவுரையாளன். உன்ன நம்பிப் படிக்க வந்த பிள்ளைக்கு போதைய பழக்கி இருக்கிறியே, வெக்கமா இல்லை உனக்கு? இதுல உன்ர அப்பா வேற ஒரு போலீஸ்.”
“தமயந்தி ஆர் எண்டு தெரியுமா?” நிதானமாக வினவினான் காண்டீபன்.
தமிழர் விடுதலைக் கழகக் கட்சியின் அமைச்சரின் மகன், சத்யநாதனின் மனைவிதான் தமயந்தி என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும், பதில் சொல்லாமல் காண்டீபனையே பார்த்தான்.
“எதிர்கால அமைச்சர் சாத்தியநாதனின்ர மனுசி. இன்னும் வடிவாச் சொல்லப்போனா என்னையும் தங்கட மகன் மாதிரி வளத்தை என்ர மாமாவையும் மாமியையும் கொடூரமா கொன்ற சத்தியசீலன் சதீஸ்வரன் குடும்பத்து மருமகள். அதுதான் அவளுக்கு அதைப் பழகினான்.” என்றவனின் பதிலில் எல்லாளனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.